
யதீந்திரா
போராட்டத்தை மறக்கலாமா? எவ்வாறு அப்படிச் சொல்லலாம்? இப்படியான முகநூல் கத்தல்களை பரவலாக காண முடிந்தது. ஒரு ஆண்மீக சொற்பொழிவாளரின் கருத்துக்களை முன்வைத்து, இவ்வாறான சத்தங்களை காண முடிந்தது. ஆனால் தமிழ்த் தேசியத்தை காப்பாற்றப் போவதாக, நெஞ்சு நிமிர்த்தும் அரசியல்வாதிகள் எவருமே இது பற்றி வாய் திறக்கவில்லை. இத்தனைக்கும் குறித்த சொற்பொழிவு நிகழ்வில், அரசியல்வாதிகளும் இருந்தனர். விடுதலைப் புலிகளின் மீதான தடையை நீக்குமாறு கூறும் அரசியல்வாதிகள் கூட மௌனமாக இருக்கின்றனர். அது ஏன் என்னும் ஆச்சரியமும் இந்தக் கட்டுரையாளிரிடம் உண்டு. அது பற்றி ஆராயும் பொறுப்பை உங்களிடமே விட்டு விடுகின்றேன்.
இப்போது அரசியலில் எவற்றை எல்லாம் மறக்கலாம், மறக்கக் கூடாது என்னும் வாதங்களை பார்ப்போம். எல்லோருக்கும் அவர்களின் கருத்துக்களை கூறும் உரிமையுண்டு – அதே போன்று அதனை எதிர்த்துப் பேசுவதற்கும் உரிமையுண்டு. அதுதான் ஜனநாயகம். ஆனால் இந்த விடயம் தொடர்பில் என்ன எழுதலாம் என்னும் கேள்வி எழுந்த போது, கேவலம், ஒரு சொற்பொழிவாளரின் கருத்தால் ஆட்டம் காணுமளவிற்குத்தானா ஈழத் தமிழ்த் தேசிய அரசியலின் நிலைமை இருக்கிறது? – இப்படியொரு கேள்விதான் எனக்குள் எழுந்தது.
போராட்டத்தை மறக்கலாமா என்னும் கேள்வி எழுகின்ற போது, முதலில் கேட்டுக் கொள்ள வேண்டிய, ஒரு அடிப்படையான கேள்வியுண்டு. எந்தப் போராட்டத்தை மறக்க வேண்டும் – எந்தப் போராட்டத்தை மறக்கக் கூடாது? ஏனெனில் போராட்டங்களில் பல்வேறு இயக்கங்கள் ஈடுபட்டன. இவற்றில் விடுதலைப் புலிகள் தவிர்ந்த இயக்கங்களை, ஒட்டுக் குழுக்கள் என்றும், துரோகிகள், அரச முகவர்கள், கூடுதலாக இ;ந்திய முகவர்கள் என்றெல்லாம் தூற்றப்படுவதுண்டு. அவ்வாறாயின் அந்தப் போராட்டத்தின் பெயரால் உயிரிழந்தவர்களின் நினைவுகளின் பெறுமதி என்ன? போராட்டத்தை மறக்கக் கூடாது என்று ஒருவர் வாதிடுகின்ற போது, விடுதலைப் புலிகள் தவிர்ந்த இயங்கங்களின் போராட்டங்களை அங்கிகரிக்கும் மனோநிலையோடு ஒருவர் இருகின்றாரா என்னும் கேள்வியையும் அல்லவா கேட்க வேண்டும். ஒரு வேளை விடுதலைப் புலிகளின் காலத்தை மட்டும்தான் நினைவு வைத்திருக்க வேண்டும் என்றால், ஏனைய இயக்கங்களின் காலத்தை நீங்கள் மறந்துவிட்டிர்கள் என்றுதானே அர்த்தம். இதுதான் நிலைமை என்றால் ஏனைய இயங்கங்களின் காலத்தை மறந்து போனது போன்று, விடுதலைப் புலிகளின் காலத்தையும் மறந்து போங்கள் என்று ஒருவர் சொன்னால் அதில் என்ன தவறுண்டு – என்று ஒருவர் கேட்டகலாம் அல்லவா!
ஈழத் தமிழரின் பெயரால் இடம்பெற்ற போராட்டங்கள் ஒரு புனிதப் பயணமல்ல. உண்மையில் அது பல அசிங்கங்களை தனக்குள் கொண்டிருந்த ஒரு ஆயுத நடவடிக்கை. ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட எந்தவொரு இயக்கமும் – மனித உரிமை மற்றும் ஜனநயாகப் பண்புகளுக்கு மதிப்பளித்த வரலாற்றைக் கொண்டிருக்கவில்லை. இன்று உலகெல்லாம் சென்று ஈழத் தமிழர்களின் மனித உரிமைகளை பாதுகாத்துத் தருமாறு கேட்டுக் கொண்டிருக்கின்றோம் ஆனால் எங்களையே நாங்கள் திருப்பிப் பார்த்தால், மனித உரிமை என்னும் சொல்லை உச்சரிப்பதற்கே எங்களுக்கு தகுதியில்லையே என்னும் உண்மையே மிஞ்சும். ஆயுத நடவடிக்கைகளின் போது கொல்லப்பட்ட தொன்றுவிகிதமான தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், இயக்கங்களின் தலைவர்கள் அனைவருமே தமிழிரின் துப்பாக்கிகளால்தான் வீழ்ந்தனர். இதனை மறுத்து விவாதிக்கும் வல்லமை எவரிடம் உண்டு?
போராட்டம் என்னும் பெயரில் இடம்பெற்ற நடவடிக்கைகள் இவ்வாறான பல அசிங்கங்களின் வழியாகத்தான் நகர்ந்திருக்கின்றது. இவை அனைத்தினதும் விளைவுதான், இன்றைய ஈழத் தமிழரின் அரசியல். இந்த இடத்தில் எழும் அடுத்த கேள்வி – அப்படியென்றால் நமது கடந்த காலத்தை முழுமையாக மறந்துவிட்டுச் செல்வதா? இந்தக் கட்டுரை அவ்வாறு வாதிடவில்லை. இந்த இடத்தில்தான் போராட்டம் என்பதையும் வரலாறு என்பதையும் நாம் பிரித்துப் பார்;க்க வேண்டும். அந்த அடிப்படையில் சிந்திக்க முயற்சிக்க வேண்டும்.
நாம் இன்று ஒரு இடத்தை வந்தடைந்திருக்கின்றோம். வந்து சேர்ந்திருக்கும் இடம் பெருமைப்படும் இடமல்ல. மாறாக, ஈழத் தமிழர் அரசியல் ஒரு கையறு நிலையையே அடைந்திருக்கின்றது. இதற்கு யார் பொறுப்பு? நிச்சயமாக இன்றைய தலைமுறையின் மீது விரல் நீட்ட முடியாது. அவ்வாறாயின் யார் பொறுப்பாளிகள்? இந்த இடத்தில்தான் நமக்கு, நமது வரலாறு முக்கியமாகின்றது. எந்தவொரு மக்கள் கூட்டமும் அதன் வரலாற்றை மறந்துவிடக் கூடாது. மறக்கவும் முடியாது.
எந்த இனம் அதன் வரலாற்றை மறந்து போகின்றதோ, அந்த இனம் அதன் அடையாளத்தையும் இழந்துவிடும். இந்தப் பின்புலத்தில் சிந்தித்தால், நாங்கள் ஒரு வரலாற்று காலகட்டத்தின் வழியாக வந்திருக்கின்றோம். அந்த வரலாற்றிலிருந்து கற்றுக் கொண்டால் மட்டுமே எங்களுக்கு எதிர்காலம் என்று ஒன்று இருக்க முடியும். நான் இங்கு எதிர்காலம் என்று வரையறுப்பது அரியல்ரீதியானது ஏனெனில் அரசியல்ரீதியான வரலாற்றை மறந்து போனால், அதிலிருந்து நாம் எதனையும் கற்றுக்கொள்ளமாட்டோம். அவ்வாறு கற்றுக்கொள்ளவில்லை என்றால், அரசியலில் அடுத்த கட்டம் என்று ஒன்று இருக்காது. அவ்வப்போது முகநூல்களில் பிதற்றுவதுடன் உங்கள் தமிழ்த் தேசியாவாத அரசியல் அருகிப் போகும்.
வரலாற்றில் இருந்து கற்றுக்கொள்வது என்றால் என்ன? இந்த இடத்தில்தான் ஈழத் தமிழரின் பெயரால் இடம்பெற்ற, மிதவாதிகளின் போராட்டம், ஆயுதப் போராட்டம் என்பவற்றில் எதனை மறக்க வேண்டும், மறக்கக் கூடாது என்னும் கேள்விக்கான பதில் அவசியமாகின்றது. நாங்கள் விரும்புவதையே, மற்றவர்களும் விரும்ப வேண்டும் என்னும் அரசியல் புரிதலிருந்துதான் அனைத்து தவறுகளும் நிகழ்ந்திருக்கின்றன. ஒருவரை ஒருவர் வெறுத்திருக்கின்றனர் – கொன்றிருக்கின்றனர். அந்தப் போக்கு இப்போதும், தியாகிகள், துரோகிகள், ஒட்டுக் குழுக்கள் என்னும் பெயரில் தொடர்கிறது. இப்போது துப்பாக்கி இல்லாமையால், வெறும் வார்த்தைகள் மோதுகின்றன. ஒரு வேளை துப்பாக்கி இருந்திருந்தால், இப்போதும் கொலைகளே, ஈழத்-தமிழரின் பிரதான அரசியல் முதலீடாக இருந்திருக்கும்.
2009இற்கு பின்னர் பிறந்த ஒரு பெடியன் கூட, ஒரு இயக்க உறுப்பினரைப் பார்த்து இவர் ஒட்டுக் குழுவைச் சேர்ந்தவர் என்று கூறுமளவிற்கே இன்றைய அரசியல் சீரழிவு நிகழ்ந்திருக்கின்றது. அவனுக்கு தனது தகுதி என்ன – தான யார் என்பது கூடத் தெரியவில்லை. அதனைச் சொல்லிக் கொடுக்கும் அரசியல் பாடசாலையாக தமிழ்த் தேசிய அரசியல் தொழிற்படவில்லை. இந்த அடிப்படையில் நோக்கினால் விடுதலைப் புலிகளின் வழியாக தமிழ் அரசியலுக்குள் நுழைந்த அனைத்து அரசியல் சொற்களும் மறக்கப்படத்தான் வேண்டும். ஏனெனில் விடுதலைப் புலிகளின் அரசியல் சிந்தனை, அணுகுமுறை, நம்பிக்கை, உலகப் புரிதல் அனைத்துமே மறக்கப்பட வேண்டியவைதான் ஏனெனில் அவைகள் அனைத்துமே தவறானவை.
அவைகள் சரியென்றால் விடுதலைப் புலிகள் அமைப்பு வெற்றி பெற்றல்லலா இருக்க வேண்டும். சமாதான உடன்பாடு காலத்தில் பல சந்தர்ப்பங்களில் கிளிநொச்சிக்கு சென்றிருக்கின்றேன் – அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் ஒருவர் என்னிடம் பின்வருமாறு கூறினார் – அதாவது, எங்களுடைய தலைவரின் அணுகுமுறை, தவறு என்றால், நாங்கள் அழிந்தல்லவா போயிருப்போம் – அவர் சரியென்பதால்தானே நாங்கள் இப்போதும் பலமாக இருக்கின்றோம் என்றார். அவர் கூறிய அப்போது சரியாவே இருந்தது ஆனால் இப்போது? அந்தத் தலைவரின், அரசியல் அணுகுமுறைகள் தவறு என்பதால்தானே அனைத்தும் நிர்மூலமாகிவிட்டது, என்பதுதானே இப்போது வரலாறு. இந்த வரலாற்றிலிருந்துதானே ஒரு தலைமுறை கற்றுக்கொள்ள முடியும். எனவேதான் நான் வரலாற்றிலிருந்து கற்றுக் கொள்ளுங்கள் என்று கூறுகின்றேன்.
எனவே அனைத்து நபர்களையும் விட்டுவிட்டு, கடந்த காலத்தை ஒரு வரலாறாக மட்டுமே உற்று நோக்குவோம். அந்த வரலாற்றிருந்து கற்றுக்கொள்ள முயற்சிப்போம். வரலாறு என்பது அடிப்படையில் ஒரு சடம் போன்றது. அது, அதனளவில் இயங்குவதில்லை. அதிலிருந்து மனிதர்கள் கற்றுக்கொள்ள முயற்சிக்கும் போது மட்டும்தான், வரலாறு மனித குலத்திற்கான ஆசானாக மாறுகின்றது. ஆனால் வரலாற்றை ஒரு சடமாக மாற்றுவதா அல்லது ஆசானாக மாற்றுவதா என்பது நமது அணுகுமுறையிலேயே இருக்கின்றது.
விடயங்களை தர்க்கரீதியாக அனுக வேண்டியது மட்டும்தான், இன்றைய தலைமுறையின் முதன்மையான பணியாக இருக்க வேண்டும். தவறுகளை, தவறுகள் என்று உணர முடியாது – அதற்கு முயற்சிக்காது – தவறுகளையே, பெருமையாக காவிக் கொண்டிருக்கும் ஒரு தலைமுறையானது, எப்போதும், சர்வநாசத்திற்கே பங்களிக்கும்.
ஈழநாடு கட்டுரை 15.11.2026







