எமது காணியில் நின்று எம்மையே படம் பிடித்து அச்சுறுத்தும் இராணுவம்!

கேப்பாபுலவு மக்கள் கொந்தளிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவு பகுதியில் தங்கள் பூர்வீக காணிகளை விடுவிக்க கோரி மக்கள் இராணுவ படைத்தலைமையகத்தின் முன்பாக  (24.06.2026) காலை 11.30 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

 

குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை இராணுவ தலைமையகத்திலுள்ள இராணுவத்தினர் கமரா மற்றும் தொலைபேசியை பயன்படுத்தி படம் எடுத்து அச்சுறுத்தியதாக போராட்டத்தில் ஈடுபட்ட கேப்பாபுலவு மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

 

171 ஏக்கர் காணிகளை தொடர்ந்தும் இராணுவத்தின் 59 ஆவது காலால் படைப்பிரிவினர் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். “போர் முடிவடைந்து 17 ஆண்டுகள் ஆகிவிட்டன. எமது சொந்த நிலத்தில் குடியேற முடியாமல் நாம் தவித்து வருகிறோம்.

 

எமது பூர்வீக நிலத்தில் இராணுவம் எமது வளங்களை பயன்படுத்துகிறது. ஆனால் நாம் வீதியில் நின்று போராடி கொண்டிருக்கிறோம். எமது போராட்டத்தை எமது காணியில் நின்று எம்மையே படம் பிடித்து அச்சுறுத்துவது எவ் வகையில் நியாயம் என கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

எனவே எமது காணிகளை விடுவிக்க கோரி இன்றிலிருந்து கேப்பாப்புலவு இராணுவ முகாமிற்கு முன்பாக நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை அடையாள உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுக்க போவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

Share this article