செம்மணி – சித்துபாத்தி மயான சுற்று மதிலுக்கு வெளியேயும் அகழ்வு பணி

செம்மணியில் தற்போது அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படும் பகுதி தவிர்ந்த ஏனைய இடங்களிலும் புதைகுழிகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் புதைகுழியை அண்மித்த பகுதிகளில் இரு இடங்களில் எழுமாற்றாக அகழ்வு பணிகளை முன்னெடுக்கவுள்ளதாக சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

 

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், செம்மணியில் தற்போது அகழ்வு பணிகள் இடம்பெறும் பகுதிக்கு மேலதிகமாக மேலும் புதைகுழிகள் இருக்கலாம் எனும் சந்தேகத்தில் எழுமாற்றாக இரு இடங்களில் தொல்பொருள் பேராசிரியர் ராஜ் செமதவாவினால் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

 

இது தொடர்பிலான இறுதித் தீர்மானங்கள்

அதில் என்புகூடுகள் அடையாளம் காணப்பட்டால் நிலத்தை ஊடுருவி பரிசோதிக்கும் “GPR” (Ground-penetrating radar) பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அகழ்வு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டுமா எனும் முடிவுக்கு வருவதற்காகவே இரு இடங்களில் எழுமாற்றாக அகழ்வு பணிகள் இடம்பெறவுள்ளன.

 

அதேவேளை தற்போது அகழ்வு பணிகள் இடம்பெறும் சித்துபாத்தி மயானத்தின் சுற்றுமதில்கள் அண்மைய காலத்தில் தான் கட்டப்பட்டுள்ளது.

 

ஆரம்ப காலத்தில் இது ஒரு வெட்ட வெளியாக இருந்தமையால், அகழ்வு பணிகள் நான்கு சுற்று மதில்களுக்கு இடையில் நடைபெறாது, அதன் வெளியேயும் நடைபெற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

 

அதன் அடிப்படையில் செய்மதி படங்களின் அடிப்படையில் ஏதேனும் சந்தேகமான இடங்கள் அடையாளம் காணப்பட்டால், அந்த இடங்களிலும் எழுமாற்றாக அகழ்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இவை தொடர்பிலான இறுதி தீர்மானங்கள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள வழக்கின் பின்னர் தீர்மானிக்கப்படும் என மேலும் தெரிவித்துள்ளார்.

Share this article

More News