இலங்கையின் மனிதகுல த்திற்கெ திரான குற்றங்கள் தொடர்பில் ஜெனீவா மீளாய்வு செய்யவேண்டும்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் நீதி நிலைநாட்டல் விவகாரமானது, கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலாக சர்வதேச சமூகத்திற்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான முக்கிய அரசியல் பேசுபொருளாக இருந்து வருகிறது.

குறிப்பாக, முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர், 2012ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் இடம்பெற்ற சர்வதேச மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் நீதியைப் பெற்றுக்கொள்வதற்காக தொடர்ச்சியான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

எனினும், இலங்கையில் ஆட்சிப் பீடமேறிய மாறிமாறி வந்த அரசாங்கங்கள் அனைத்தும் இந்த ஜெனிவா தீர்மானங்களை உள்நாட்டில் தங்களின் அரசியல் இருப்பைத் தக்கவைப்பதற்கும், பெரும்பான்மைச் சிங்கள மக்களின் வாக்கு வங்கியைத் தக்கவைத்துக் கொள்வதற்குமான பிரசாரக்கருவியாகவே பயன்படுத்தி வருகின்றன.

சர்வதேசப் பொறிமுறைகளை ‘நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது’ என்றும், ‘படையினரைக் காட்டிக்கொடுக்கும் சூழ்ச்சி’ என்றும் சித்தரித்து, தென்னிலங்கையில் இனவாத உணர்வைத் தூண்டி அதிகாரத்தைக் கைப்பற்றுவதே கொழும்பின் வழமையான அரசியல் உத்தியாக நீடிக்கிறது.

இத்தகைய பின்னணியில், தற்போதைய ஆட்சியாளர்களும் ஜெனிவா தீர்மானங்களை முற்றாக நிராகரிக்கும் மற்றும் எதிர்க்கும் அதே பழைய நிலைப்பாட்டையே தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டுப் பொறிமுறைகள் மூலமே தீர்வு காண்போம் என்ற காலங்கடத்தும் தந்திரோபாயத்தை முன்வைக்கும் தற்போதைய கொழும்பு அரசு, சர்வதேச விசாரணைகளையோ அல்லது பொறுப்புக்கூறல் நிபந்தனைகளையோ ஏற்பதற்குத் தயாராக இல்லை.

இந்த உள்நாட்டு அரசியல் பிடிவாதங்களுக்கு இணையாக, தற்கால உலக அரசியல் சூழலும் ஈழத் தமிழர்களின் நீதிப்பயணத்திற்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.

உலக அரங்கில் உக்ரேன் – ரஷ்யா போர், மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட பிராந்தியங்களுக்கு இடையிலான தீவிர மோதல்கள் போன்ற உலகளாவிய ரீதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் விவகாரங்கள் முன்னுரிமை பெற்றுள்ளதால், இலங்கை விவகாரம் ஜெனிவாவில் கணிசமான அளவு பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

சர்வதேச ஊடகங்களும் வல்லரசுகளும் தங்களின் புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார நலன்கள் சார்ந்து இந்த பெரும் போர்களை உன்னிப்பாகக் கவனித்து வரும் நிலையில், இலங்கையின் மனித உரிமைப் பிரச்சினையானது ஐ.நா.வில் முக்கியத்துவமிக்க பேசுபொருளாக இல்லாமல், வெறும் விவாதப் பட்டியலின் அங்கமாக மாறிவருகின்றது.

மிக முக்கியமாக, வல்லரசுகளின் தற்போதைய அரசியல் நகர்வுகள் மற்றும் மூலோபாய உத்திகள் காரணமாக, ஜெனிவா தீர்மானங்கள் என்பவை இலங்கை ஆட்சியாளர்களை உண்மையாகப் பொறுப்புக்கூறச்செய்வதற்கான தார்மீகக் கருவியாகப் பயன்படுத்தப்படாமல், அவர்களைத் தங்களின் புவிசார் அரசியல் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கான ‘மூலோபாய அழுத்த உத்தியாக’ மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, அமெரிக்காவில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகத்தின் வருகையானது சர்வதேச மனித உரிமைப் பொறிமுறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ட்ரம்ப் நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கையானது பன்முகத்தன்மை கொண்ட சர்வதேச அமைப்புகளையோ அல்லது மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களையோ முதன்மைப்படுத்துவதாக இல்லை.

மாறாக, அவர்கள் இருதரப்பு வர்த்தகம், பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் நேரடி இராஜதந்திர உறவுகளுக்கே முக்கியத்துவம் அளிக்கின்றனர். அதற்குப் பலகாரணங்கள் இருக்கின்றன.

மனித உரிமைகள் பேரவையை முக்கியமான தளமாகப் பொருட்படுத்தாத ட்ரம்ப் நிர்வாகத்தின் இத்தகைய அணுகுமுறையானது, கொழும்பு ஆட்சியாளர்களுக்கு சர்வதேச அழுத்தங்களில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கான ஒரு தற்காலிக இராஜதந்திர இடைவெளியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

இத்தகைய புதிய உலக ஒழுங்கில், காலாவதியாகிப்போன பழைய ஜெனிவா அணுகுமுறைகளை மட்டுமே நம்பியிருப்பது தமிழ் மக்களுக்கு எவ்விதமான நீதியையும் பெற்றுத்தரப் போவதில்லை என்பதை சிவில் சமூகமும் தமிழ் அரசியல் சக்திகளும் ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

வல்லரசுகளின் இராஜதந்திர ஆட்டங்களுக்குள் சிக்கி, வெறும் தீர்மானங்களின் நீடிப்புகளுக்காகக் காத்திருக்கும் உத்தியைக் கைவிட்டு, பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை நிலைநாட்டுவதற்கான ‘அணுகுமுறை மாற்றத்தை’ நோக்கி நகர வேண்டியது காலத்தின் அவசியமாகும்.

சர்வதேச இராஜதந்திரத் தளத்தில் கதவு மூடப்படும் போது, மாற்றுப் பொறிமுறைகளை நோக்கி நகர்வதே புத்திசாலித்தனமான அரசியல் நகர்வாகும் என்பதை முழுமையாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

இந்த அணுகுமுறை மாற்றத்திற்கான சிறந்த உலக முன்மாதிரியாக, சர்வதேச தீர்ப்பாயம் அல்லது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் மாற்றுப் பொறிமுறைகள் மற்றும் மியன்மார் விவகாரத்தில் சர்வதேச சமூகம் கையாண்ட சுயாதீன புலனாய்வுப் பொறிமுறை போன்ற உலகளாவிய முன்னுதாரணங்களை நாம் உற்றுநோக்கலாம்.

குறிப்பாக, சர்வதேச நீதிமன்றங்களுக்கு அப்பால், உலகளாவிய எல்லை வரம்புரிமையைப் பயன்படுத்தி போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக உலகெங்கிலும் உள்ள உள்நாட்டு நீதிமன்றங்களில் வழக்குகளைத் தொடரும் உத்தி இன்று பல நாடுகளில் வெற்றிகரமாகக் கையாளப்பட்டு வருகிறது.

இதற்கு மிகச்சிறந்த உதாரணம், சிரியா மற்றும் ருவாண்டா போன்ற நாடுகளில் மனிதப் பேரவலங்களை நிகழ்த்திய குற்றவாளிகள், பிராந்திய எல்லைகளுக்கு அப்பாற்பட்டு ஐரோப்பிய நாடுகளின் (உதாரணமாக ஜேர்மன். பிரான்ஸ்) உள்நாட்டு நீதிமன்றங்களின் கீழ் உலகளாவிய அதிகார வரம்பின் மூலம் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டமையாகும்.

இலங்கை விவகாரத்திலும், ஐநா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்கள் கொழும்பினால் நிராகரிக்கப்படும் சூழலில், இந்த ‘உலகளாவிய எல்லை வரம்புரிமை’ என்ற சர்வதேச சட்டக் கோட்பாட்டை தீவிரமாகப் பயன்படுத்தும் அணுகுமுறை மாற்றமே தற்போதைய உலக ஒழுங்கிற்குப் பொருத்தமானதாகும்.

ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் இலங்கைக்கான சான்றாதார சேகரிப்புப் பொறிமுறை ஏற்கனவே போர்க்குற்றங்கள் தொடர்பான பல முக்கிய ஆவணங்களையும் சாட்சியங்களையும் திரட்டி வைத்துள்ளது.

இந்தத் தரவுகளைப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் இணைந்து, உலகளாவிய அதிகார வரம்பைக் கொண்ட நாடுகளின் நீதிமன்றங்களில் இலங்கையின் போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகளைத் தாக்கல் செய்ய வேண்டும்.

இது ஜெனிவாவின் அரசியல் தீர்மானங்களைச் சார்ந்திராமல், சுயாதீனமான சட்டப் பொறிமுறையின் கீழ் குற்றவாளிகளைச் சர்வதேச ரீதியாக முடக்குவதற்கு வழிவகுக்கும் மிக முக்கிய நகர்வாக இருக்கும்.

மேலும், வெறும் மனித உரிமைப் பேச்சுகளுக்கு அப்பால், பொருளாதார மற்றும் மூலோபாயத் தடைகளை தனிநபர்கள் மீது பிரயோகிக்கும் உத்தியை உலக நாடுகள் மத்தியில் தீவிரப்படுத்த வேண்டும்.

ட்ரம்ப் நிர்வாகம் போன்ற மனித உரிமைப் பேரவையைப் பொருட்படுத்தாத அரசாங்கங்களுடன் பேசும் போது, மனித உரிமை மீறல்களைப் பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் வர்த்தக ஸ்திரத்தன்மைக்கு ஏற்படும் அச்சுறுத்தலாகச் சித்திரிக்கின்ற இராஜதந்திர மொழிமாற்றம் அவசியமாகிறது.

இலங்கையில் பொறுப்புக்கூறல் இன்மை மற்றும் நீதியின்மை என்பது ஒட்டுமொத்த இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக அமையும் என்பதை அமெரிக்கா மற்றும் இந்தியாவின் மூலோபாய நிறுவனங்களுக்கு உணர்த்துவதன் மூலமே, புதிய உலக ஒழுங்கில் இலங்கை ஆட்சியாளர்கள் மீதான சர்வதேசக் கட்டுப்பாட்டை இறுக்க முடியும்.

2012ஆம் ஆண்டிலிருந்து கடந்துவிட்ட 14 ஆண்டுக்கால ஜெனிவா வரலாறு என்பது தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளும், கொழும்பு ஆட்சியாளர்களின் திட்டமிட்ட ஏமாற்றுப் படலங்களும் நிறைந்த காலப்பகுதியாகும்.

ஈரான், உக்ரேன் போன்ற உலகளாவிய பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியிலும், அமெரிக்காவின் உள்நாட்டு வெளியுறவுக் கொள்கை மாற்றங்களுக்கு மத்தியிலும், தமிழ் மக்களின் நீதிக்கான குரல் நசுக்கப்படாமல் இருக்க வேண்டுமாயின், நாம் சர்வதேச சட்டங்களின் புதிய வழிகளைத்தேட வேண்டும்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை என்ற ஒற்றைத் தளத்தை மட்டும் நம்பியிருக்காமல், உலகளாவிய நீதிமன்றங்களின் வரம்புரிமை மற்றும் தனிநபர் மீதான பொருளாதாரத் தடைகள் போன்ற உலகளாவிய முன்மாதிரிகளை உள்ளடக்கிய பன்முகப்படுத்தப்பட்ட சட்டப் போராட்டமே தமிழ் மக்களுக்கான நீதியையும், தற்போதைய ஆட்சியாளர்களுக்கான உண்மையான பொறுப்புக்கூறலையும் பெற்றுத்தரும் முன்னேற்றகரமான பாதையாக அமையும்.

ஐ.நா.மனித உரிமைகள் பேரவைiயில் இலங்கை விவகாரத்தை தேவையென்றால் பேசுபொருளுக்காக தொடர்ந்தும் உயிர்ப்புடன் வைத்துக்கொள்ள முடியும். ஆனால் அதனால் கிடைக்கப்போகும் விளைவு என்பது கனதியானதல்ல.

 

ந.சிவசக்தி ஆனந்தன்              முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், செயலாளர் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி 

 

Share this article