தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பதவியேற்றார்!

தமிழ்நாட்டின் முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று காலை 10.15 மணியளவில் பதவியேற்றார்.

தேர்தலில் 107 ஆசனங்களைப் பெற்றிருந்த தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைப்பதற்கு 118 ஆசனங்கள் தேவைப்பட்டது. அதற்காக திமுக கூட்டணியில் அங்கம் வகுத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி,முஸ்லிம் லீக் (ஐ.எம்.யூ.எல்) ஆகிய கட்சிகளிடம் விஜய் உதவி கோரினார். அவர்கள் வெளியிலிருந்து ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தனர். காங்கிரஸ் கட்சி த.வெ.க.வுடன் கூட்டணி அமைத்தது.

அதன் அடிப்படையில் 120 ஆசனங்களைப் பெற்ற த.வெ.க ஆட்சியமைக்க ஆளுனர் அனுமதி வழங்கினார். ஆனால் 13.05.2026க்கு முன்னதாக தனது பெரும்பான்மையை த.வெ.க. நிரூபிக்க வேண்டும் என ஆளுனர் அறிவித்தார்.

இந்நிலையில் பதவியேற்கும் நிகழ்வு இன்று காலை 10 மணிக்கு நேரு உள்ளக விளையாட்டரங்கில் ஆரம்பமானது.

இதன்போது தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதலமைச்சராக, தமிழக ஆளுநர் அர்லேகர் முன்னிலையில் பொறுப்பேற்றார். அத்துடன் 9 பேர் அமைச்சர்களாகவும் பதவியேற்றனர்.

புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், அருண்ராஜ் உள்ளிட்டோருக்கு முக்கிய அமைச்சுகள் வழங்கப்பட்டுள்ளன.

அதேநேரம் விஜய்யின் பதவியேற்பு நிகழ்வில் மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் துறைச்சார்ந்தவர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துக் கொண்டிருந்தனர்.

இந்த நிகழ்வுக்கு 5000 பேருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டது.

விஜய் பதவியேற்பை கொண்டாடும் வகையில் சென்னை முழுவதும் த.வெ.க.வினர் மிகப்பெரிய பேனர்கள், கட்-அவுட்கள் மற்றும் கொடிகளால் அலங்கரித்துள்ளனர். நேரு ஸ்டேடியத்தை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் திரளத் தொடங்கியுள்ளதால் அப்பகுதி விழாக்கோலமாக காட்சியளித்தது.

Share this article

More News