
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி), தமிழ்த் தேசியப் பேரவை என்னும் பெயரில், தமிழ் நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை சந்தித்;து, உதவி கோரியிருக்கின்றனர். ஈழத் தமிழ் மக்கள் சமஸ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை அடைவதற்கு தமிழ் நாடு உதவ வேண்டும் என்பதுதான் கோரிக்கை. இதற்கு முன்னர் முதலமைச்சராக இருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினை சந்தித்த போதும், இதே போன்றதொரு கோரிக்கையையே முன்வைத்திருந்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன்தான், இந்த சந்திப்புக்களுக்கான தரகராக தொழிற்படுகிறார்.
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் அரசாங்கத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அங்கம் வகிக்கும் நிலையில், அதனைப் பயன்படுத்தி விஜயுடனான சந்திப்பை திருமாவளவன் ஏற்பாடு செய்திருக்கின்றார். தனது அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் ஒரு கட்சியின் வேண்டுகோள் என்னும் அடிப்படையில்தான் விஜயும் சந்திப்பிற்கு இணங்கியிருக்கின்றார் என்பதை புரிந்து கொள்வது கடினமானதல்ல. ஈழத் தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு அரசியல் கட்சி என்னும் வகையில் இவ்வாறான சந்திப்புக்களை மேற்கொள்வது அடிப்படையில் ஒரு சாதாரண அரசியல் செயற்பாடு. இதற்கப்பால் இதன் அரசியல் பெறுமதியை எவ்வாறு மதிப்பிடுவது என்பதில்தான், இந்தக் கட்டுரை கவனம் செலுத்துகின்றது.
விடுதலைப் புலிகள் இயக்கம் ஈழ அரசியலை தீர்மானித்த காலத்தில், தமிழ் நாடு ஒரு முக்கிய அரசியல் தளமாக இருந்தது. தமிழ் நாட்டு அரசியலில் விடுதலைப் புலிகள் அமைப்பு முதலீடு செய்திருந்தது. அந்த முதலீட்டின் விளைவுதான் இப்போதும் சில தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் விடுதலைப் புலிகள் ஆதரவு நிலைப்பாட்டை உச்சரித்துவருகின்றனர். தமிழ் நாட்டின் ஈழ ஆதரவு நிலைப்பாட்டை அன்றிருந்த அரசியல் சூழலோடு ஒப்பிட்டு நோக்க வேண்டும். அப்படி நோக்காவிட்டால் – அதன் பின்னணியை அறிந்து கொள்ள முடியாமல் போய்விடும். தமிழ் நாட்டின் அன்றைய ஆதரவு நிலைப்பாட்டுக்கு பின்னால் தமிழ் உணர்வு (தொப்புள்கொடிக் கதை சார்ந்த) என்பதை விடவும், இந்தியாவின் நேரடியான தலையீடுதான், தமிழ் நாட்டின் அன்றைய ஈழ ஆதரவில் பெரும் செல்வாக்குச் செலுத்தியிருந்தது.
தமிழ் நாட்டை ஈழ ஆயுத அமைப்புக்கள் ஒரு பின்தளமாக பயன்படுத்துவதை அன்றைய இ;ந்தியா அனுமதித்திருந்தது. இதன் காரணமாகத்தான் தமிழ் நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் ஈழ ஆயுத அமைப்புக்களுக்கு தாராளமாக உதவினர். இயக்கங்கள் ஒவ்வொன்றும் தங்களுக்கான பயிற்சி முகாம்களை வெளிப்படையாக நடத்தினர். மத்திய அரசின் தடை இருந்திருக்குமாயின் அதனை அவர்கள் செய்திருக்க முடியாது. எனவே அன்றைய தமிழ் நாட்டின் ஈடுபாட்டை, அன்றைய இந்திய மத்திய அரசாங்கத்தின் கொள்கை நிலைப்பாட்டோடு இணைத்துத்தான் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை இப்போது உங்களால் இலகுவாகப் புரிந்து கொள்ள முடியுமல்லவா! ஆனால் இந்த நிலைமை ராஜீவ் கொலையுடன் முற்றுப்பெற்றது. அதன் பின்னர் தமிழ் நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் ஈழ ஆதரவை உதட்டளவு விடயமாக்கிக் கொண்டார்கள் என்பதே உண்மை. பெருமளவிற்கு தமிழ் உணர்வு என்னும் விடயமாகவே நோக்கப்பட்டது.
இலங்கை தமிழ் விவகாரத்தில் இந்தியா நேரடியாக தலையீடு செய்த போது, அப்போது இந்திராகாந்தி கூறிய விடயம் பிரபலமானது. அதாவது, ஆறு கோடித் தமி;ழ் மக்களை கொண்டிருக்கும் இந்தியா, அருகிலிருக்கும் நாட்டில், தமிழ் மக்கள் துன்பப்படும் போது, அதனை பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க முடியாது. இந்த அடிப்படையில்தான் அன்றைய தலையீட்டுக்கான நியாயம் முன்வைக்கப்பட்டது. ஆனால் இறுதி யுத்தத்தின் போது, பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிருக்கு உத்தரவாதமற்ற நிலையில், முள்ளிவாய்க்காலில் முடங்கியிருந்த போதும், இருபது கிலோமீற்றல் தூரத்தில் இருந்த தமிழ் நாட்டால் எதுவும் செய்ய இயலவில்லை. எல்லாம் கண்களுக்கு முன்னாலேயே நடந்து முடிந்தது. அப்போது இரண்டு பிரதான கட்சிகளும் சத்தங்களை போட்டன, கூட்டங்களை நடத்தின, உண்ணாவிரதம் என்னும் காட்சிகள் இடம்பெற்றன என்பதெல்லாம் உண்மைதான், ஆனால் அவற்றால் யுத்தத்தை நிறுத்த முடிந்ததா? மக்களை காப்பாற்ற முடிந்ததா? பேரழிவு ஒன்றை தடுக்க முடிந்ததா? இல்லையே! ஏன்? ஏனென்றால் பதில் மிகவும் சுலபமானது. இந்திய மத்திய அரசாங்கம் தலையீடு செய்யவில்லை. மத்தியின் தலையீடு இருந்திருந்தால், தமிழ் நாட்டின் தலையீடு ஆக்கபூர்வமானதாக இருந்திருக்கும். இந்த இடத்தில்தான் மத்திய அரசின் தலையீடு இல்லாமல், தமிழ் நாடு என்பது எந்தளவிற்கு அரசியல் பெறுமதியற்றதாக இருக்கின்றது என்பதை ஒருவர் புரிந்து கொள்ளவது இலகுவாகின்றது. மத்தியின் தலையீட்டின் நிழலில்தான், தமிழ் நாடும் அதன் முழுமையான ஈடுபாட்டை காண்பிக்க முடியும் – இல்லாவிட்டால் பெருமளவிற்கு பார்வையாளர்தான். இதனால்தான் இறுதி யுத்தத்தின் போது, தமிழ் நாடு வெறும் பார்வையாளராக மட்டுமே இருந்தது.
இதனை சரிவரப் புரிந்து கொண்டால் மட்டும்தான், தமிழ் நாட்டு அரசியல்வாதிகளிடம் மகஜர் கொடுப்பதன் மூலம் எதுவரையில் செல்ல முடியும் என்பதை புரிந்துகொள்ள முடியும். அவ்வாறானதொரு புரிதலோடு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குழுவினர் சென்றிருக்கவில்லை. அவர்களைப் பொறுத்தவரையில் நாங்கள் ஈழத்தில் தமிழ் மக்களின் பிரதான அரசியல் குரல், நாங்கள் மட்டும்தான் உண்மையான பரதிநிதிகள் என்பதை சொல்ல வேண்டும் என்னும் அவாவே அவர்களை ஆட்கொண்டிருக்கின்றது.
இன்று தமிழ் நாட்டு முதலமைச்சரை சந்திப்பதற்கான இடைத் தரகராக தொழிற்படும் தொல் திருமாவளவன், யுத்தத்திற்கு பின்னர், கருணாநிதியின் மகள் கணிமொழியின் தலைமையில் இலங்கை வந்த குழுவிலும் இடம்பெற்றிருந்தார். இந்தக் குழுவினர் அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை (இனப்படுகொலையாளி என்னும் குற்றச்சாட்டுக்குரியவர்) சந்தித்து பேசியிருந்தனர். அப்போது, திருமாவளவனின் தோளில் தட்டி, நீங்கள் பிரபாகரனின் நண்பர்தானே, இங்கிருந்திருந்தால், நீங்களும் பிரபாகரன் போன்று போயிருப்பீர்கள் என்று மகிந்த கூறியது போது, அனைவரும் புன்னகையில் ஒன்றிணைந்தனர். அதே திருமாவளவன்தான் இப்போது ஈழக் கோரிக்கைய வெற்றிகொள்வதற்கான தூதுவராகத் தொழிற்படுகின்றார்.
இந்த இடத்தில் ஒரு கேள்வி குறுக்கிடலாம் – அப்படியென்றால், நீங்கள் தமிழ் நாட்டுத் தலைவர்களை சந்தித்து பேசக் கூடாது என்கிறீர்களா? நிச்சயமாக இல்லை. உரையாடுவதில் பிரச்சினையில்லை. உறவுகளை ஏற்படுத்துவதில் தவறில்லை – ஏற்படுத்தத்தான் வேண்டும் ஆனால் நாங்கள் என்ன கேட்கின்றோம் – அவர்களால் என்ன செய்ய முடியும் என்பதில் தெளிவான பார்வையுடன் பேச வேண்டும். விடுதலைப் புலிகள் அமைப்பு தனிநாட்டுக்கான ஆயுதப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்த போது, ஆயுதப் போராட்டத்திற்கான பின்தளமாக தமிழ் நாட்டை பயன்படுத்தியது. தமிழ் நாட்டை இனியும் பயன்படுத்த முடியாது என்னும் நிலையில்தான் புலம்பெயர் நாடுகளை நோக்கித் திரும்பினர். இப்போது அந்த விடயங்களுக்குள் அதிகம் செல்லுவது பயனற்றது. ஆனால் போர்த் தோல்விக்கு பின்னர், ஈழ அரசியல் மீளவும் ஜனநாயகப் பாதையை நோக்கித் திரும்பிவிட்டது. இந்த நிலையில் தமிழ் நாட்டின் தலையீடு எப்படியிருக்க வேண்டும்? எப்படியிருந்தால் அது ஈழத் தமிழர்களுக்கு நல்லது – சாதகமானது? இந்த அடிப்படையில்தான் சிந்திக்க வேண்டும், செயலாற்ற வேண்டும்.
இந்த இடத்தில் இந்தக் கட்டுரையாளர் உங்கள் சிந்தனைக்காக முன்வைக்கும் கேள்வி – தமிழ் நாட்டு முதலமைச்சரிடம் சமஸ்டியை பெறுவதற்கு உதவுங்கள் என்று கோரினால், அவரால் எவ்வாறு உதவ முடியும்? இலங்கையில் சமஸ்டித் தீர்வை அடைய வேண்டும் என்றால், அதற்கு வெளியிலிருக்கும் எவராலும் உதவவே முடியாது. ஏன் அப்படி? ஏனென்றால், இலங்கையில் சமஸ்டித் தீர்வை அடைய வேண்டுமாயின், அதற்கு சிங்கள மக்களின் இணக்கப்பாடுதான் தேவையே தவிர, தமிழ் நாட்டினதோ ஏன் இந்தியாவினதோ கூட இல்லை. உதாரணமாக இந்தியா சமஸ்டி என்று கூறுகின்றது என்று வைத்துக் கொள்வோம், அதனை எவ்வாறு சிங்கள மக்களின் ஆதரவின்றி இந்தியாவினால் ஏற்படுத்த முடியும்?
இந்தியாவினாலேயே செய்ய முடியாத ஒன்றை எவ்வாறு தமிழ் நாட்டினால் செய்ய முடியும்? ஒரு நாட்டை உடைத்து, புதியதொரு நாட்டை உருவாக்குவதற்கான ஆதரவை அல்லது ஒத்துழைப்பை வேண்டுமானால், பிறிதொரு நாடு, அதன் நலன்களுக்காக செய்ய முடியும்? உதாரணமாக கிழக்கு பாக்கிஸ்தானை இந்தியா உடைத்தமையை எடுத்து நோக்கலாம் ஆனால் ஒரு நாட்டுக்குள், ஒரு அரசியல் தீர்வை ஏற்படுத்த வேண்டுமானால் அதனை வேறு எவருமே, இறக்குமதி செய்ய முடியாது, அந்த நாட்டுக்குள்தான் அதற்கான இணக்கப்பாடு ஏற்பட வேண்டும் – அவ்வாறானதொரு இணக்கப்பாட்டுக்கான ஆதரவாளராக அல்லது அணுசனையாளராக பிறிதொரு நாடு இருக்க முடியும்.
இப்போது தமிழ் நாட்டின் அரசியல் குரல் எவ்வாறிருக்க வேண்டும் என்று கேட்டால் – அது இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில், இந்திய மத்திய அரசாங்கத்திற்கு – அதாவது இந்திய தேசத்திற்குள்ள கடப்பாட்டை சுட்டிக்காட்டுவதாக, அதில் தலையீடு செய்யக் கோருவதாக இருக்க முடியும். 1987 -இந்திய-இலங்கை ஒப்பந்தமானது, இலங்கையில் அமைதியை ஏற்படுத்தி, அனைவரது இணக்கப்பாட்டுடனும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு ஒன்றைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கத்தையே கொண்டிருந்தது. ஒப்பந்தத்தை அமுல்படுத்துவதற்காகவே இந்தியப் படைகள் அனுப்பப்பட்டன. ஆனால் அந்த ஒப்பந்தத்தின் விளைவான மாகாண சபையை திறம்பட இயங்குவதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டிய, முழுமையான அதிகாரமுள்ள சபையாக இயங்குவதற்கான அரசியல் சூழலை, இன்றுவரையில் ஏற்படுத்த முடியவில்லை.
இதில் தமிழ் அரசியல் தரப்புக்களின் தவறுகள் செல்வாக்குச் செலுத்திருந்தது உண்மையாயினும் கூட, தமிழ் மக்களின் நன்மையை கருத்தில் கொண்டு, தலையீடு செய்ய வேண்டிய கடப்பாடு புதுடில்லிக்கு உண்டு என்பதை தமிழ் நாடு வலியுறுத்த முடியும். தமிழ் நாட்டு அரசியல் தரப்புக்களிடம், ஈழ அரசியல்வாதிகள் முன்வைக்க வேண்டிய கோரிக்கை இந்த அடிப்படையில்தான் இருக்க வேண்டும். இதற்கு மாறாக, போக முடியாத ஊருக்கு வழி சொல்லுங்கள் என்பதாகப் பேசுவதும், செயற்படுவதும் – அதற்கு அவர்களும் ஒரு சம்பிராயத்திற்காக தலையாட்டுவதும் பயனற்றது. தமிழ் நாட்டு அரசியல் தலைமைகளால், ஈழத் தமிழர் சார்பில் பேசக் கூடிய ஒரேயொரு விடயம் இருக்கின்றது என்றால், அது இந்திய-இலங்கை ஒப்பந்தம் தொடர்பானது மட்டும்தான்.
யதீந்திரா







