தவிர்க்க முடியாத டில்லியின் தார்மீக கடப்பாடு ந.சிவசக்தி ஆனந்தன்


இலங்கைத் தீவின் அரசியல் வரலாற்றில் தமிழ் பேசும் மக்களின் நீண்டகால இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கான மிக முக்கிய சர்வதேசப் பதிவாக 1987ஆம் ஆண்டு ஜூலை 29 அன்று கையெழுத்திடப்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தம் விளங்குகிறது.

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுப்பூர்வமான பூர்வீகக் தாயகம் என்பதை அங்கீகரித்து, அதிகாரப் பகிர்வுக்கான அடித்தளமாக 13ஆவது அரசியல் அமைப்புத் திருத்தத்தை தோற்றுவித்த இந்த உடன்படிக்கையானது, இந்தியப் பிராந்தியப் பாதுகாப்பையும் ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளையும் சமநிலைப்படுத்தும் ஒரு முக்கிய ஆவணமாகும்.

இருப்பினும், இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி முப்பத்தொன்பது ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையிலும், அது இதுவரையில் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாமல் வெறும் காகித வடிவத்திலேயே முடங்கிக்கிடப்பது தமிழ் மக்களின் நீண்டகாலப் போராட்டங்களுக்கும் தியாகங்களுக்கும் இழைக்கப்படும் தொடர்ச்சியான அநீதியாகும்.

இலங்கையில் ஆட்சிப் பீடமேறிய அடுத்தடுத்த அரசாங்கங்கள் இந்த ஒப்பந்தத்தின் உள்ளடக்கங்களை நீர்த்துப்போகச் செய்யும் வேலைகளையே திட்டமிட்டு அரங்கேற்றின.

குறிப்பாக, தற்போதைய இலங்கை அரசாங்கத்தின் ஆட்சியாளர்கள் மற்றும் அதன் பின்னணியில் உள்ள அரசியல் சக்திகள், கடந்த காலங்களில் இந்த இந்திய – இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிராகவும், அதன் மூலம் உருவான 13ஆவது திருத்தத்திற்கு எதிராகவும் மிகக் கடுமையான பிரசாரங்களையும், இனவாதப் போராட்டங்களையும் வீதிகளில் முன்னெடுத்தவர்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

மாகாண சபை முறையானது நாட்டைத் துண்டிக்கும் ஏற்பாடு என்றும், இந்திய வற்புறுத்தலினால் திணிக்கப்பட்டதென்றும் கூறி தென்னிலங்கை மக்கள் மத்தியில் தீவிரமான எதிர்ப்பலையை உருவாக்கியவர்களே தற்போது நாட்டின் அதிகாரப் புள்ளிகளில் அமர்ந்திருக்கின்றார்கள்.

இத்தகையதொரு அரசியல் பின்னணியைக் கொண்ட தற்போதைய ஆட்சியாளர்கள், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வழங்குவதற்கோ அல்லது இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை அதன் தூய வடிவில் முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கோ தன்னிச்சையாக முன்வருவார்கள் என்று எதிர்பார்ப்பது அரசியல்முதிர்ச்சியற்ற தன்மையாகும்.

சமகாலச் சூழலில், தமிழ் மக்கள் தங்களின் அன்றாட வாழ்விலும் அரசியல் தளத்திலும் மிகக் கடுமையான, பன்முகப்படுத்தப்பட்ட நெருக்கடிகளுக்குத் தொடர்ச்சியாக முகங்கொடுத்து வருகிறார்கள்.
யுத்தம் முடிவடைந்து ஒன்றரை தசாப்தங்கள் கடந்த போதிலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் இயல்பு வாழ்வு இன்னும் முழுமையான சிவில் கட்டமைப்பு மயமாக்கப்படவில்லை.

மாறாக, திட்டமிட்ட கட்டமைப்பு ரீதியான ஆக்கிரமிப்புகள் மிக நுணுக்கமான முறையில் தீவிரமடைந்துள்ளன. குறிப்பாக, தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் பல்வேறு திணைக்களங்களின் ஊடாகவும், அரச இயந்திரத்தின் ஆதரவோடும் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன.
தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகள் என்ற பெயரிலும், வனவளப் பாதுகாப்பு மற்றும் வனவிலங்குத் திணைக்களங்களின் எல்லை மீறல்கள் என்ற பெயரிலும் தமிழ் மக்களின் பாரம்பரிய விவசாய, மீன்பிடி நிலங்கள் மற்றும் வாழ்விடங்கள் அபகரிக்கப்படுவது நாளாந்த நிகழ்வாக மாறியுள்ளது.

இத்தகைய நில ஆக்கிரமிப்புகள் தமிழ் மக்களின் மக்கள்தொகை பரம்பலை மாற்றுவதையும், அவர்களின் வரலாற்றுத் தாயகக் கோட்பாட்டைச் சிதைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.
நிலங்களை இழப்பதன் மூலம் தமிழ் மக்களின் வாழ்வாதாரம் முற்றாக முடக்கப்பட்டு, அவர்கள் தங்களின் சொந்த நிலங்களிலேயே ஏதிலிகளாக்கப்படும் பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களின் அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை அறியாது, பல வருடங்களாக வீதிகளில் இறங்கிப் போராடி வருகிறார்கள்.
இவர்களுக்கான நீதியோ அல்லது முறையான அரசியல் பொறுப்புக்கூறலோ தற்போதைய ஆட்சியாளர்களால் திட்டமிட்டு மறுக்கப்பட்டு வருகிறது.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் தொடர்ச்சியான துஷ்பிரயோகம், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான கண்காணிப்புகள் என்று தமிழ் மக்கள் ஒரு மறைமுகமான அடக்குமுறைக்குள்ளேயே வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமையே நீடிக்கிறது.

இவ்வாறானதொரு இக்கட்டான, ஆபத்தான அரசியல் சூழலில், பிராந்தியத்தின் வல்லரசான இந்தியாவின் வகிபாகம் மிக முக்கியமானதாக மாறுகிறது. தற்போதைய கொழும்பு ஆட்சியாளர்களுடன் புதுடெல்லி பல்வேறு மட்டங்களிலான புவிசார் அரசியல், பொருளாதார, வர்த்தக மற்றும் பாதுகாப்புத் துறை சார்ந்த மூலோபாய உடன்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி காலகட்டத்திலும் சரி, அதற்குப் பின்னரான தற்போதைய கூட்டுறவிலும் சரி, இந்தியாவின் நிதியுதவிகளும், கடன் மறுசீரமைப்புக்கான ஆதரவும், பாரிய முதலீடுகளும் கொழும்பின் இருப்புக்கும் அதன் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கும் வலுச்சேர்த்து வருகின்றன.

இத்தகையதொரு பலமானப் பின்னணியையும், இலங்கையின் மீது பிரயோகிக்கக்கூடிய வியூகச் செல்வாக்கையும் கொண்டுள்ள ஒரே பிராந்தியச் சக்தி புதுடில்லி மட்டுமே ஆகும்.
எனவே, இந்தியா இலங்கை அரசாங்கத்துடன் தான் கொண்டுள்ள இருதரப்புப் பலத்தைப் பயன்படுத்தி, 39 வருடங்களாகக் கிடப்பில் போடப்பட்டுள்ள இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை உடனடியாகவும் முழுமையாகவும் நடைமுறைப்படுத்துமாறு இலங்கை ஆட்சியாளர்களுக்குப் பகிரங்கமான மற்றும் உறுதியான அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும்.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு புதியதொரு அரசியல் அமைப்பின் ஊடாகவோ அல்லது உள்நாட்டு ரீதியிலான நீண்டகாலப் பேச்சுவார்த்தைகளின் ஊடாகவோ தீர்வு காண்பது என்பது தற்போதைய தென்னிலங்கை அரசியல் சூழலில் மிக நீண்ட, சிக்கலான மற்றும் நடைமுறைச் சாத்தியமற்றதொரு செயல்முறையாகவே நீடித்துக் கொண்டிருக்கிறது.

புதிய தீர்வுத் திட்டங்கள் எட்டப்படும் வரை காத்திருக்கச் சொல்வது, தமிழ் மக்களை மேலும் மேலும் பலவீனப்படுத்துவதற்கே வழிவகுக்கும். புதிய உடன்பாடுகள் என்ற மாயைக்குப் பின்னால் கொழும்பு அரசாங்கம் காலத்தைக் கடத்துகின்ற வேளையில், மறுபுறம் தமிழ் மக்கள் தங்களின் அடிப்படை நிர்வாக, நில மற்றும் அரசியல் உரிமைகளை முழுமையாக இழந்து, தங்களின் தாயகப் பகுதிகளில் பேரினவாத ஆக்கிரமிப்புகளுக்கு முகம்கொடுக்க நேரிடுகிறது.

எனவே, ஏற்கனவே இரு நாடுகளுக்கிடையிலான சர்வதேச உடன்படிக்கையொன்றின் மூலம் அங்கீகரிக்கப்பட்டு, இலங்கையின் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தை அதன் முழுமையான அதிகாரங்களுடன் அமுல்படுத்துவது மட்டுமே தமிழ் மக்களுக்கான உடனடியான, அவசியமான மற்றும் முதற்கட்ட முன்னேற்றகரமான அரசியல் நகர்வாக அமையும் என்பதை டெல்லி ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்தியாவின் நேரடித் தலையீடும் அழுத்தமுமின்றி கொழும்பு அரசாங்கம் இந்த ஒப்பந்தத்தை ஒருபோதும் செயற்படுத்தப் போவதில்லை என்பதை கடந்த கால வரலாறு உணர்த்தியிருக்கிறது.
மாகாண சபைகளுக்கான காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்படாமல், மாகாண நிர்வாகங்கள் ஆளுநர்களின் ஊடாக மத்திய அரசாங்கத்தின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் முடக்கப்பட்டுள்ளன.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சுயாதீனமான நிர்வாகக் கட்டமைப்பு சீர்குலைக்கப்பட்டு, திட்டமிட்ட குடியேற்றங்கள் மூலம் தமிழ் மக்களின் வரலாற்றுப் பூர்வீக நிலங்கள் பறிக்கப்படுவதை நிறுத்த வேண்டுமாயின், மாகாண சபைகளுக்குரிய காணி அதிகாரங்கள் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

அதேபோன்று, தமிழ் மக்களின் அன்றாடப் பாதுகாப்பு மற்றும் சிவில் நிர்வாகத்தை உறுதிப்படுத்த மாகாண காவல்துறை அதிகாரங்கள் அமல்படுத்தப்பட வேண்டும். இந்த அதிகாரப்பகிர்வு உடனடியாகச் செயல்பாட்டுக்கு வருவது மட்டுமே தமிழ் மக்கள் தங்களின் தாயகத்தில் தன்னாட்சியுடன் வாழ்வதற்கான ஒரேயொரு உடனடிப் பாதுகாப்புக் கேடயமாகும்.

புதுடில்லி தனது புவிசார் அரசியல் நலன்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஏனைய நாடுகளின் ஊடுருவல்களைத் தடுப்பதற்காகவும் இலங்கையின் தற்போதைய ஆட்சியாளர்களுடன் நெருக்கமான உறவுகளைப் பேணுகின்ற அதேவேளையில், தனது சொந்த வெளியுறவுக் கொள்கையின் அங்கமாக உருவான இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் மாண்பைக் காக்க வேண்டிய சர்வதேசக் கடப்பாட்டைக் கொண்டுள்ளது.

இலங்கையுடனான இந்தியாவின் பொருளாதார மற்றும் மூலோபாய உடன்பாடுகள் அனைத்தும், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் உறுதிப்படுத்தப்படும் பட்சத்திலேயே பிராந்தியத்தில் நிலையான அமைதியையும் நீண்டகாலப் பாதுகாப்பையும் உருவாக்கும்.
தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினையைத் தீர்க்காமல் கொழும்புடன் ஏற்படுத்தப்படும் எந்தவொரு உடன்பாடும் பிராந்தியத்தில் ஒரு நிலையற்ற தன்மையையே நீடிக்கச் செய்யும் என்பதை இந்தியா உணர வேண்டும்.

எனவே, ஒப்பந்தத்தின் முழுமையான அமலாக்கத்தை கொழும்புடனான பேச்சுவார்த்தைகளில் புதுடெல்லி ஒரு முதன்மை நிபந்தனையாக முன்வைக்க வேண்டியது அவசியமாகும்.
முடிவாக, 39 வருடங்களாகக் கடந்துவிட்ட கால தாமதம் என்பது தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியின் கால அளவாகும். தற்போதைய ஆட்சியாளர்களின் கடந்த காலப் பிரசாரங்களையும் அவர்களின் தீவிரமான அரசியல் நிலைப்பாட்டையும் முறியடித்து, தமிழ் மக்களின் உடனடிப் பாதுகாப்பையும் அரசியல் உரிமையையும் உறுதி செய்யக்கூடிய ஒரே வழி இந்தியாவின் உறுதியான தார்மீக மற்றும் அரசியல் அழுத்தமே ஆகும.

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தக் கோருவது என்பது தமிழ் மக்களின் வெறும் அரசியல் கோரிக்கை மட்டுமல்ல, அது இந்தத் தீவில் அவர்கள் தற்போதும் எதிர்கொண்டு வரும் கட்டமைப்பு ரீதியான நெருக்கடிகளில் இருந்து தங்களின் வாழ்வுரிமையையும் அடையாளத்தையும் பாதுகாப்பதற்கான அவசரத் தேவையாகும்.

எனவே, புதுடெல்லி உடனடியாகச் செயல்பட்டு கொழும்புக்கு உரிய அழுத்தங்களைக் கொடுத்து, தமிழ் மக்களின் அரசியல் வாழ்வில் ஒரு முன்னேற்றகரமான திருப்புமுனையை ஏற்படுத்த முன்வர வேண்டும் என்பதே தற்போதைய காலத்தின் கட்டாயமாகும்.

ந.சிவசக்தி ஆனந்தன்                முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வன்னி மாவட்டம்.

Share this article

More News