தேசிய மக்கள் சக்தி ஆட்சி: மாற்றமா? தொடர்ச்சியா?


ஜனதா விமுக்தி பெரமுன (மக்கள் விடுதலை முன்னணி) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி என்னும் பெயரில் ஆட்சியமைத்திருக்கும் இன்றைய அரசாங்கமானது தேர்தல் கோஷமாக ‘மாற்றத்துக்கு’ வாக்களியுங்கள் என மக்களிடம் மன்றாடி வெற்றி பெற்றது. மாற்றம் என அவர்கள் குறிப்பிட்டது, முன்னைய ஆட்சியாளர்கள் இனவாதிகள்இ மதவாதிகள்இ ஊழல்வாதிகள்இ மக்களின் வரிப்பணத்தை தமது வசதியான வாழ்வுக்காக வீணடித்தவர்கள் என்பதும், தாம் ஆட்சிக்கு வந்தால் மதவாதம்இ இனவாதத்தை இல்லாதொழிப்போம்இ ஊழல் பணங்களை இசொத்துக்களை கையகப்படுத்தி இந்த நாட்டின் வெளிநாட்டு கடன்களை கட்டுவோம் மற்றும் வீண்விரய செலவுகளை நிறுத்துவோம் என்பதாகும்.
இந்த நாட்டில் ஏறத்தாழ 80 ஆண்டுகளாக சிங்கள-தமிழ் இனமோதல் தொடர்கின்றது.இங்கு இனமோதல் என்பது சிங்கள-பௌத்த மேலாதிக்கவாதத்திற்கெதிரான சுயநிர்ணய உரித்துடைய தமிழ்த்தேசிய இன போராட்டமாகும்.இதன் விளைவாக ஏறத்தாழ 35 ஆண்டுகாலம் கொடிய ஆயுத மோதல் நடைபெற்றது. ஆயுதப்போராட்ட காலத்தில் பயங்கரவாதத்துக்கெதிரான யுத்தம் என்ற முகமூடியுடன் தமிழ்மக்களும் அவர்களின் சொத்துக்களும் பெருமளவு அழிக்கப்பட்டது.யுத்தம் முடிந்து கடந்த 17 ஆண்டுகளாக மாறிவரும் ஆட்சியாளர்களின் நிறுவனமயப்படுத்தப்பட்டு கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு செயற்திட்டங்கள் உத்வேகம் பெற்றுள்ளன.இதில் மிக முக்கியமாக தமிழர் தாயக பூமிகளை பல்வேறு அரச திணைக்களங்களூடாக சிங்கள ஆட்சியின் ஆக்கிரமிப்பின் கீழ் கொண்டுவருதல்இ நூற்றுக்கணக்கான புத்த கோவில்களை பௌத்தர்களே இல்லாத இடங்களில் நிறுவுதல்இ இதன்மூலம் கலாசாரப்படுகொலை நிகழ்த்தல்இ தமிழர் பிரதேசங்களில் சட்டவிரோத சிங்கள குடியேற்றங்களை வேகப்படுத்தல் என்பவற்றை குறிப்பிடலாம்.இங்கு சிங்களமும் பௌத்தமும் பின்னிப் பிணைந்ததாக இன அழிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்தப்புரிதலின் பின்னணியில் அண்மைய தினங்களில் ஜனாதிபதி தேசிய வீரர்கள் தினத்திலும் பின்னர் ஓர் வெசாக் விழாவிலும் ஆற்றிய உரைகளின் முக்கிய அம்சங்களை ‘மாற்றம்’ எனும்

கண்ணாடியூடாகப் பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

யுத்த வெற்றி விழாவில் ஜனாதிபதி அநுர உரையாற்றும்போது:
1. இரத்த வெள்ளத்திலோ, வெடிகுண்டுகளாலோ நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. அமைதியால் மட்டுமே அபிவிருத்தியடைந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியும்.
2. தற்போது நாட்டில் ஒற்றுமையை விரும்பாத ஒரு பாதையும் ஒற்றுமையை அங்கீகரிக்கும் மற்றொரு பதையும் காணப்படுகின்றன.
எவ்வாறான சவால்களை எதிர்கொண்டாலும் நாம் இரண்டாவது பாதையை மாத்திரமே தெரிவு செய்வோம்.
3. சட்டத்தின் ஆட்சியை மதிக்கும் நாடாக இலங்கையை சர்வதேசத்தில் அங்கீகரிக்கச் செய்துள்ளோம்.
4. வடக்கிலும் தெற்கிலும் அரசியல் லாபம் தேட முற்பட்டவர்களால் தான் இந்த பேரழிவை நாடு எதிர்கொள்ள நேர்ந்தது.
5. சகல பிரஜைகளுக்குமிடையில் ஒரே ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான பாலத்தை நாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். அதில் நாம் வெற்றி பெற வேண்டும்.
ஜனாதிபதியின் மேற்கண்ட கூற்றுக்களின் உண்மைத் தன்மையை தேடுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

1. ‘இரத்த வெள்ளத்திலோ, வெடிகுண்டுகளாலோ நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. அமைதியால் மட்டுமே அபிவிருத்தியடைந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியும்’.

இந்தப் புரிதல் இப்போதாவது ஜனாதிபதிக்கு வந்தது வரவேற்புக்குரியது. இறுதி யுத்தத்திற்கு படையினர் போதாது என்ற போது உங்கள் கட்சியினர் கிராமம் கிராமமாகச் சென்று பல்லாயிரம் உங்கள் உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் படைகளில் சேர்த்து மிகப் பெரும் குண்டு வீச்சுக்களையும் இரத்த வெள்ளங்களையும் ஏற்படுத்தினீர்களே அப்போது இந்த ஞானம் இருந்திருந்தால் அரசியல் தீர்வின் மூலம் அமைதியை உருவாக்கியிருக்கலாம். பெரும் உயிரிழப்பு, சொத்திழப்புகளை தவிர்த்திருக்கலாம். நாடு வங்குரோத்தாவதை தடுத்திருக்கலாம். அபிவிருத்தி உத்வேகம் பெற்றிருக்கும்.
இன்னமும் ஜனாதிபதி யுத்தம் இல்லாத நிலை தான் அமைதி என தவறாகவே புரிந்து கொண்டிருக்கின்றார். இன்று அமைதி நிலவுகிறதா? யுத்தத்திற்கான காரணிகள் தீர்வு காணப்பட்டதா அல்லது உத்வேகம் பெறுகிறதா? யுத்தத்தின் காரணிகள் தீர்வு காணப்படாத வரை இன உறவு என்பது எரிமலையாகவே இருக்கும். வெளித்தோற்றத்திற்கு அமைதிபோல் தோன்றும். ஆனால் உள்ளே கனன்று கொண்டேயிருக்கும். ஜனாதிபதியின் பார்வையிலும் முன்னைய ஆட்சியாளரைப்போலவே உரிமைகளுக்காகப் போராடுவோர் பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள், இனவாதிகள். தமிழ் இனத்தின் உரிமைகளைப் பறித்து அடிமைப்படுத்துவோர். ஒற்றுமைக்காக, சமாதானத்திற்காக, சமத்துவத்திற்காக போராடும் ஜனநாயகவாதிகள் மற்றும் புரட்சியாளர்கள்.
இந்த தலைகீழான புரிதல் இருக்கும் வரை அமைதி, இன ஒற்றுமை சாத்தியமில்லை என்பதை ஜனாதிபதி உணராதவரை எந்த மாற்றமும் ஏற்பட வாய்ப்பில்லை. இலங்கையை சிங்கப்பூராக்குவேன் என கொக்கரித்த ஜே.ஆர். ஜெயவர்த்தனா பயங்கரவாதத் தடைச்சட்டம், பிரிவினைத் தடைச்சட்டங்களை நிறைவேற்றி அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி படையினருக்கு கேள்விக்கு உட்படுத்தமுடியாத அதிகாரங்களைக் கொடுத்து வடக்கு கிழக்கில் மக்களை கொன்று குவிக்க அனுப்பிவைத்தார். விளைவு இலங்கை ஏறத்தாழ ஓர் சோமாலியாவாக மாறியதுதான். மாறாக, அன்றே ஓர் சமஷ்டித் தீர்வுக்கு ஜெயவர்த்தனா முன்வந்திருந்தால் 35 ஆண்டு கால ஆயுத மோதல் தவிர்க்கப்பட்டிருக்கும். எண்ணிலடங்கா உயிர்களும் சொத்துக்களும் பாதுகாக்கப்பட்டிருக்கும். அறிவாளிகள் நாட்டைவிட்டோடுவது தடுக்கப்பட்டு நாடு சிங்கப்பூர்போல ஆகியிருக்கக்கூடும்.
இங்கு ஜனாதிபதி அனுரவின் புரிதலுக்கும், ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் புரிதலுக்கும் ஒரே ஒரு வேறுபாடுதான் காணப்படுகிறது. ஜே.ஆர். இனமோதலை ஆயுதத்தால் அடக்கி அமைதியை உருவாக்கி சிங்கப்பூராக்கலாம் என நம்பினார். இன்று அனுரவும் வடக்கு – கிழக்கை இராணுவத்தின் பிடியில் வைத்துக்கொண்டு ஆட்சியதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி பிரஜாசக்தி, மாகாண நிழல் அமைச்சர்கள் போன்றவற்றின் மூலம் அமைதியை உருவாக்கலாம் என கனவு காண்கிறார். வெளியிலே பிரஜா சக்தியை ஓர் ஜனநாயக நடவடிக்கை போல் சப்பைக்கட்டு கட்ட முயன்றாலும் வடக்கு கிழக்கில் தமது கட்சியை வளர்ப்பதற்கான ஓர் பொறிமுறையாகவே இதனைச் செயற்படுத்துகின்றார் என்பது வெளிப்படையானது. எனவே அமைதி முயற்சி என்பது மக்களிடம் அதிகாரம் என்ற பெயரால் மக்களால் தெரிவு செய்யப்பட்ட, நிர்வாக ரீதியாக செயற்பட்டு வருகின்ற அமைப்புகளையும், பொறிமுறைகளையும் புறந்தள்ளி கட்சி, ஆதிக்கத்தை செலுத்துவது குளிக்கப் போய் சேறுபூசுவதாகவே முடியும்.
2. ‘நாட்டில் ஒற்றுமையை மதிக்கும் பிரிவினர் மற்றும் ஒற்றுமையை விரும்பாத பிரிவினர் உள்ளனர். நாம் (தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்) ஒற்றுமையை மதிக்கும் பிரிவினர்.’ இன ஒற்றுமை பற்றி பேசுகிறோம் என்றால் ஒற்றுமை இல்லாத நிலையே நிலவுகிறது. நாம் ஒற்றுமையை உருவாக்க வேண்டும் என்பதே அர்த்தமாகும். இன ஒற்றுமை எப்போது குலைய ஆரம்பித்தது? எந்தெந்த சட்டங்களாலும் நடைமுறைகளாலும் இனங்களுக்கிடையே பிளவு வளர்ந்தது? கடந்த கால ஆட்சியாளர்கள் ஏன் இவற்றைச் செய்தார்கள்? என்பதற்கு உண்மையான பதில் ஜனாதிபதிக்கு தெரிந்திருந்தால் தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் மாற்றம் வந்திருக்கும். இங்கு ஒற்றுமையை விரும்பாதவர்கள் என்று யாரைக் குறிப்பிடுகிறார்? தெரியவில்லை. ஆனால் எதிர்க்கட்சிகள் அல்லது முன்னாள் ஆட்சியாளர்கள் என்று எடுத்துக்கொண்டால், உங்களுக்கும் அவர்களுக்கும் என்ன வேறுபாடு என்று கூற முடியுமா? அவர்கள் ஆரம்பித்து வைத்த சிங்கள – பௌத்த மேலாதிக்க வேலைத்திட்டங்களில் எவற்றை நிறுத்தியுள்ளீர்கள் என்று கூற முடியுமா? அவர்களது இன உறவு தொடர்பில் அவர்களது அனைத்து மேலாதிக்க செயற்திட்டங்களையும் தொடர்கிறீர்கள். இதுதான் மாற்றமா?

3. ‘சட்டத்தின் ஆட்சியை மதிக்கும் நாடாக இலங்கையை சர்வதேசத்தில் அங்கீகரிக்கச் செய்திருக்கிறோம்’ என்று அனுர கூறியுள்ளார். இது ஜனாதிபதி தன்னைத்தானே ஏமாற்றுவதாக எடுத்துக்கொள்வதா? அல்லது பாவப்பட்ட சிங்கள மக்களை சந்தோசப்படுத்த உதிர்த்த உதட்டளவிலான வார்த்தைகளா என எடுத்துக்கொள்வதா?

இவர்களது ஆட்சியில் சட்ட ஆட்சி நடந்தால் நீதிமன்ற உத்தரவை அலட்சியப்படுத்தி கட்டப்பட்ட குருந்தூர் மலை விகாரையை அகற்றினார்களா? தையிட்டியில் தனியாருக்குச் சொந்தமான காணியையும் பொது வீதியையும் ஆக்கிரமித்து இராணுவம் கட்டிய விகாரையை அகற்றினார்களா? கிழக்கில் சட்டவிரோதமாக நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்படும் ஏராளமான விகாரைகளை நிறுத்தினீர்களா? இங்கு பௌத்தத்தின் பெயரால் தனியார் நிலங்களையும், தொல்லியல் இடங்களையும் ஆக்கிரமிக்க சட்டம் இருக்கிறதா? பல்லாயிரக்கணக்கான ஏக்கர் தனியார் நிலங்கள் வடக்கு – கிழக்கு முழுவதும் படையினர் பல பத்தாண்டுகளாக ஆக்கிரமித்திருப்பது சட்டப்படியானதா? வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை மாவட்டங்களில் தமிழர்களின் விவசாய நிலங்களையும் மன்னார், முல்லைத்தீவில் தமிழ் மீனவர் பாடுகளையும் வேற்று மாவட்ட சிங்களவர்கள் படையினர் ஆதரவோடு ஆக்கிரமித்திருப்பது சட்ட ஆட்சியின்பாற்பட்டதா?
ஆட்சியினரின்; உத்தரவின்றி சுங்கத்திணைக்களம் 313 கொள்கலன்களை திறந்து பார்க்காமல் வெளியே விட்டிருக்க முடியாது. எந்த சட்டத்தின் பிரகாரம் நீங்கள் உத்தரவிட்டீர்கள்? எந்த சட்டத்தின் பிரகாரம் சுங்கம் திறந்து பார்க்காமல் வெளியே விட்டது. எதிர்க்கட்சிகளின் இதுதொடர்பான கேள்விகளுக்கு இன்றுவரை மௌனமே பதிலாக இருக்கிறது.
யுத்தத்தின் பின் படையினரால் கைது செய்யப்பட்டு காணாமலாக்கப்பட்ட பல்லாயிரம் தமிழ் மக்களுக்கு என்ன நடந்தது என்று 17 வருடமாக கண்டுபிடிக்க முடியவில்லை. அல்லது வெளியே சொல்ல முடியவில்லை. சட்டப்படி நடந்திருந்தால் உடனுக்குடன் உண்மைக் வெளிவந்திருக்கும். போர்க்குற்றங்களை இன்றும் நியாயப்படுத்தும் உங்கள் ஆட்சி சட்டத்தின் ஆட்சி என்று சொல்ல உங்களுக்கு நா கூசவில்லை. இதுதான் மாற்றமா?
4. வடக்கிலும் தெற்கிலும் அரசியல் லாபம் தேட முனைந்தவர்களால்தான் இந்த நாடு பேரழிவைச் சந்தித்தது என்றும் புதிய கண்டுபிடிப்பு ஒன்றை ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ளார்;. டி.எஸ். சேனநாயக்க தொடக்கம் இன்றைய ஜே.வி.பி. ஆட்சிவரை தமிழின எதிர்ப்புவாதத்தையும் காழ்ப்புணர்ச்சியையும் பேசியே ஆட்சியைப் பிடித்தார்கள் என்பதே இலங்கை அரசியல் வரலாறாகும். ‘தமிழர்கள் இந்திய விஸ்தரிப்புவாதத்தின் முகவர்கள்’ என்பதுதானே தமிழ் மக்கள் பற்றிய உங்கள் நிலைப்பாடு? இல்லையென்று பகிரங்கமாக உங்களால் மறுக்க முடியுமா? அதனால்தானே இந்திய – இலங்கை ஒப்பந்தத்தையும் தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வையும் எதிர்த்து மிகப்பெரும் வன்முறைப் போராட்டத்தை நடத்தினீர்கள்.
இல்லையென்று மறுக்க முடியுமா? தமிழ் மக்கள் மிகப்பெரும் தியாகங்களையும் இழப்புகளையும் செய்து பெற்ற இணைந்த வடக்கு – கிழக்கை நீதிமன்றத்தினூடாக நீங்கள் பிரித்தீர்களே! இது தமிழ்மக்களின் நலன்களைக் காக்கவா? ஆக தென்னிலங்கை அரசியல் சமூகம் கட்சி வேறுபாடின்றி தமிழர்களுக்கெதிரான காழ்ப்பு அரசியலை வெறும் பேச்சளவில் மட்டுமன்றி அரசியல் யாப்பிலும் சட்டங்களிலும் நடைமுறைகளிலும் மேற்கொண்டு வருவதை மறுக்க முடியுமா? மேற்கண்ட சிங்கள – பௌத்த மேலாதிக்கவாத கொள்கைகளுக்கும் செயற்பாடுகளுக்கும் எதிர்வினையாற்றும் கொள்கைகளும் நிலைப்பாடுகளும், செயற்பாடுகளுமே தமிழ் அரசியல் வரலாறாகும். இதனை உங்களால் மறுக’க முடியுமா? இங்கு வடக்கு – கிழக்கு அரசியல் லாபம் தேட முனைந்ததா? அல்லது சிங்கள அரசியல் சூழ்ச்சிகளிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள நீதிக்காக போராடியதா? ஜனாதிபதியானால் எதை வேண்டுமானாலும் பேசலாம் என நினைப்பது சராசரி அரசியல்வாதிகளின் பண்பு. புரட்சிகர கட்சி என அடையாளப்படுத்த விரும்புபவர்களுக்கு முதலில் புரட்சிகர சிந்தனை வேண்டும். உண்மைகளை ஏற்றுக்கொள்ளும் மனோபக்குவம் வேண்டும். எதிர்ப்புகள் வந்தாலும் உண்மையை உரக்கச் சொல்லி எதிர்ப்பவர்களையும் வெல்லும் மனோ தைரியம் வேண்டும். அது உங்களிடம உள்ளதா?; இல்லை என்பதையே உங்களுடைய உரை வெளிப்படுத்துகிறது.
5. ‘சகல பிரஜைகளுக்குமிடையில் ஒற்றுமை ஏற்படுத்தும் பாலத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்’ என்பது ஜனாதிபதியின் இன்னோர் கூற்றாகும். பாலம் என்று எதனைக் கூறுகிறார்? ஒற்றுமைக்கு தடையாக இருப்பவர்கள் யார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். ஜனாதிபதியின் ஆட்சியின் செயற்பாடுகளே வேற்றுமையை வளர்ப்பதாக இருப்பதையும் பார்த்தோம். அப்படியாயின் பாலம் என்று எதனைக் கூறுகிறார். வடக்கு – கிழக்கில் குறிப்பாகவும், பொதுவாக நாடுதழுவிய வகையிலும் பிரஜா சக்தி மற்றும் மாகாண நிழல் அமைச்சர்களைத் தான் பாலம் என குறிப்பிடுகிறார் என ஊகிக்க முடிகிறது. இவை இரண்டும் மக்கள் பிரதிநிதித்துவத்தை அலட்சியம் செய்து, ஜனநாயக நடைமுறைகளை மலினப்படுத்தி, ஆட்சி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து கட்சி வளர்க்கும் செயற்பாடாகும். இது இனவேற்றுமையை மேலும் ஆழப்படுத்துமேயன்றி ஒற்றுமைக்கான பாலமாக எப்போதும் அமையப்போவதில்லை.
ஒற்றுமைக்கான பாலம் என்பது இணைந்த வடக்கு – கிழக்கிற்கு அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுடன் கூடிய கூட்டாட்சி முறையை உருவாக்குவது மட்டுமே. அதன் முதற்படியாக மாகாண சபைத் தேர்தலை நடத்தி அதற்குரித்தான முழு அதிகாரங்களையும் செயற்படுத்த வழிவகுப்பதேயாகும். இதன்மூலமே ஒற்றுமைக்கான பாலம் உருவாகத் தொடங்கலாம். வறட்டுத்தனமான வெற்றுக்கோசங்களால் ஒற்றுமை ஏற்படாது. நாட்டில் மாற்றம் வரவேண்டுமாயின் முதலில் உங்கள் புரிதலில் சிந்தனையில் உண்மையானதும் தெளிவானதுமான மாற்றம் வர வேண்டும்.

கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன்

Share this article

More News