
வீரகத்தி தனபாலசிங்கம்
போரின் முடிவுக்கு பின்னரான காலப் பகுதியில் தாங்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காண்பதற்கான முயற்சிகளில் தமிழ் அரசியல் கட்சிகளினால் ஒன்றிணைந்து ஒருமித்த நிலைப்பாட்டுடன் செயற்பட முடியாமல் இருப்பது குறித்து தமிழ் மக்கள் பெரும் வேதனையுடன் இருக்கிறார்கள்.
இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அரசியலமைப்பு யோசனைகளை வரையும் செயன்முறைகளைக் கூட தமிழ் அரசியல் சமுதாயம் இரு அணிகளாகப் பிரிந்து நின்றே முன்னெடுக்கிறது.
இத்தகைய பின்புலத்தில், திடீரென்று தமிழ்பேசும் சமூகங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் ஒன்றிணைந்து ‘பொதுத்தளம்’ ஒன்றை உருவாக்கும் திட்டம் குறித்து அறிவிப்பு வந்திருக்கிறது.
கடந்த வாரம் (ஜூலை 13) கொழும்பு ஹோட்டல் ஒன்றில் செய்தியாளர்கள் மகாநாட்டைக் கூட்டிய ஆறு தமிழ், முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் தேசிய இனப்பிரச்சினை உட்பட தமிழ்பேசும் சமூகங்கள் எதிர்நோக்கும் பொதுவான பிரச்சினைகளின் தீர்வுகளுக்காக ஒன்றிணைந்து குரல் கொடுப்பதே இந்த ‘பொதுத்தளத்தின்’ நோக்கம் என்று அறிவித்தார்கள்.
இலங்கை தமிழரசு கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவையே இந்த கட்சிகளாகும்.
வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள் மற்றும் மலையக தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்பவை என்று இந்த ஆறு கட்சிகளும் தங்களை அழைக்கின்ற போதிலும், தமிழ்பேசும் மக்கள் எதிர்நோக்கும் பொதுவான பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கும் நோக்கம் முழுமை பெறுவதற்கு மூன்று சமூகங்களையும் சேர்ந்த வேறு பல கட்சிகளையும் குழுக்களையும் இணைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். அல்லாவிட்டால், இந்த முயற்சிக்கு பக்கச் சார்பான அரசியல் உள்நோக்கம் இருக்கிறது என்ற விமர்சனத்துக்கு இடமளிப்பதாகிவிடும்.
தங்களது சமூகங்கள் எதிர்நோக்கும் பொதுவான பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதையும் கருத்துக்களைப் பரிமாறி இணக்கப்பாட்டை உருவாக்குவதையும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காண்பதையும் நோக்கமாகக் கொண்டதே தங்களது முயற்சி என்று கூறும் இந்த கட்சிகளின் தலைவர்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் மூன்று பிரதான கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறார்கள்.
உச்சபட்ச அதிகாரப் பகிர்வை உள்ளடக்கிய புதிய அரசியலமைப்பு ஒன்றைக் கொண்டுவர வேண்டும்; மாகாண சபை தேர்தல்களை விரைவில் நடத்த வேண்டும்; மூன்று சமூகங்களையும் பாதிக்கும் காணிப் பிரச்சினைக்கு நியாயமானதும் நிலையானதுமான தீர்வுகளைக் காண வேண்டும் என்பவையே அந்த கோரிக்கைகள்.
தங்களது சமூகங்களுக்கு பொதுவானவையாக இருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காண்பதற்கு இந்த கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படும்போது நாளடைவில் ஏற்படக்கூடிய புரிந்துணர்வும் நல்லெண்ணமும் அந்த சமூகங்களுக்கு பிரத்தியேகமானவையாக இருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை நாடுகின்ற கட்டங்களில், கடந்த காலத்தில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு தடையாக இருந்துவந்த முன்னைய நிலைப்பாடுகளில் சாத்தியமான விட்டுக் கொடுப்புக்களைச் செய்வதற்கு கணிசமானளவுக்கு உதவ முடியும்.
அத்தகைய சூழ்நிலை உருவாவது என்பது இந்த கட்சிகளின் தலைவர்கள் வெளிக் காட்டக்கூடிய அரசியல் முதிர்ச்சியிலும் விவேகத்திலுமே முற்றிலும் தங்கியிருக்கிறது. இதற்கு கடந்த காலத்தில் மூன்று சமூகங்களையும் சேர்ந்த அரசியல் தலைமைத்துவங்கள் ஒன்றிணைந்து செயற்பட முடியாமற் போனதற்கு அல்லது கிடைத்திருக்கக்கூடிய ஒரு சில அரிய வாய்ப்புக்களையும் உகந்த முறையில் பயன்படுத்த முடியாமல் போனதற்கான சிக்கலான காரணிகளைப் பற்றிய தெளிவு தலைவர்களுக்கு இருப்பது அவசியம்.
பொதுத்தளத்தின் ஊடாக தொடர்ச்சியான கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கான உறுதிப்பாட்டைத் தெரிவித்த இந்த கட்சிகளின் தலைவர்கள் தங்களது சமூகங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பொதுவான அணுகுமுறை ஒன்றை உருவாக்குவது நல்லிணக்கம், ஜனநாயகத்தின் ஆட்சி மற்றும் சகல சமூகங்களினதும் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு பங்களிக்கும் என்று நம்பிக்கை வெளியிட்டதாக செய்தியாளர்கள் மகாநாட்டின் இறுதியில் விடுக்கப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
முற்றிலும் வேறுபட்ட காலப்பகுதிகளாக இருந்தாலும், இந்த பொதுத்தள முயற்சி கடந்த நூற்றாண்டில் ஒருபுறத்தில் வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் தலைவர்களுக்கும் மலையக தமிழ் மக்களின் முதுபெரும் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானுக்கும் மறுபுறத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்புக்கும் இடையில் நிலவிய உறவுகளை தவிர்க்க முடியாமல் நினைவுக்கு கொண்டு வருகிறது.
தொண்டமான் இலங்கை தமிழ்ச் சமூகத்தின் பிரச்சினைகள் மீது அனுதாபம் கொண்டவராக இருந்த போதிலும் அவர்களின் நலன்களுக்கும் மலையக தமிழ்ச் சமூகத்தின் நலன்களுக்கும் இடையில் ஒரு சீரான பொது அடையாளம் இல்லை என்பதை தெளிவாகப் புரிந்து கொண்டு செயற்பட்ட ஒரு தலைவர்.
1961 ஆம் ஆண்டில் இலங்கை தமிழரசு கட்சி வடக்கு, கிழக்கில் மக்களை அணிதிரட்டி நடத்திய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சத்தியாக்கிரகப் போராட்டத்துக்கு தனது ஒருமைப்பாட்டை வெளிக்காட்டி தோட்டத் தொழிலாளர்களை வேலைநிறுத்தம் செய்யவைத்த தொண்டமான் நீண்டநாட்களுக்கு அதை தொடராமல், தனது கருத்தை வலியுறுத்திய பிறகு விரைவாக நிறுத்திக் கொண்டார்.
1972 ஆம் ஆண்டில் தமிழர் ஐக்கிய கூட்டணி உருவாகுவதற்கு தமிழ் அரசியல் கட்சிகளுடன் தொண்டமான் ஒத்துழைத்தார். அந்த கூட்டணி 1976 ஆம் ஆண்டில் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியாக மாறி தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்தபோது எஸ்.ஜே.வி. செல்வநாயகம், ஜீ.ஜீ பொன்னம்பலம் ஆகியோருடன் சேர்த்து அதன் தலைவர்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்ட போதிலும், அவர் அதிலிருந்து விரைவில் விலகிவிட்டார்.
தமிழீழம் மலர்வது மலையக தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு உதவாது என்பதே தொண்டமானின் நடைமுறைச் சிந்தனையாக இருந்தது. 1977 ஜூலை பொதுத்தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணிக்கு ஆதரவாக அவர் பிரசாரம் செய்த போதிலும், நுவரேலியா — மஸ்கேலியா தொகுதியில் தனது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு மூன்றாவது உறுப்பினராக பாராளுமன்றத்துக்கு தெரிவானார்.
1983 கறுப்பு ஜூலை இனவன்செயலுக்கு பிறகு நாட்டுப் பிரிவினைக் கோரிக்கையை தடை செய்து ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவின் அரசாங்கம் கொண்டு வந்த ஆறாவது அரசியலமைப்புத் திருத்தத்தை தொடர்ந்து தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் தலைவர்கள் பாராளுமன்ற ஆசனங்களை இழந்தனர். அவர்களில் பலரும் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்திருந்த காலப்பகுதியில் தொண்டமான் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டிய தனது பொறுப்பை உணர்ந்து செயற்பட்டார்.
ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அரசாங்கத்தில் ஒரு அமைச்சராக இருந்த வேளையில் தொண்டமான் தேர்தல் எதையும் நடத்தாமல் வடக்கு, கிழக்கின் நிருவாகத்தை ஒரு பத்து வருடங்களுக்கு விடுதலை புலிகள் இயக்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று துணிச்சலாக யோசனையை முன்வைத்தார். அதற்காக அவர் தென்னிலங்கை இனவாதிகளின் கடுமையான கண்டனத்துக்கு உள்ளானார்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப்பை பொறுத்தவரை, அவர் தனது அரசியல் வாழ்க்கையை கிழக்கின் பல முஸ்லிம் தலைவர்களைப் போன்றே, தமிழரசு கட்சியின் தலைவர் செல்வநாயகத்தின் தீவிர ஆதரவாளராகவே தொடங்கினார். தமிழரசு கட்சியின் மேடைகளில் உரையாற்றிய அவர், பிறகு தனிநாட்டுக் கோரிக்கையை ஏகமனதாக ஏற்றுக் கொண்ட தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் 1976 வட்டுக்கோட்டை மகாநாட்டில் பங்கு பற்றினார்.
1977 ஆம் ஆண்டில் புதிதாக அமைக்கப்பட்ட முஸ்லிம் ஐக்கிய முன்னணியின் உந்து சக்தியாக விளங்கிய அஷ்ரப், தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்துடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டார். கல்முனை, சம்மாந்துறை, மூதூர் மற்றும் புத்தளம் தொகுதிகளில் கூட்டணியின் சூரியன் சின்னத்தில் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டனர்.
1977 ஜூலை பொதுத் தேர்தலில் அஷ்ரப் நேரடியாகப் போட்டியிடாவிட்டாலும், கூட்டணிக்காக தீவிரமாகப் பிரசாரம் செய்தார். “அண்ணன் அமிர்தலிங்கத்தினால் தமிழீழத்தைப் பெற்றுத்தர முடியாமல் போனால், தம்பி அஷ்ரப் அதைச் செய்வான்” என்று கூட அவர் மேடைகளில் பேசினார்.
அன்று அவர் ஒரு தமிழ் – முஸ்லிம் அரசியல் பார்வையை பகிர்ந்து கொள்ள விரும்பிய போதிலும், கிழக்கு முஸ்லிம்கள் வேறுபட்ட சிந்தனைகளைக் கொண்டிருந்தனர் என்பதை தேர்தல் முடிவுகள் காட்டின. கூட்டணியின் சின்னத்தில் போட்டியிட்ட முஸ்லிம் ஐக்கிய முன்னணி வேட்பாளர்களை முஸ்லிம்கள் நிராகரித்தனர்.
அதற்கு பின்னரான காலப் பகுதியில் தமிழ்ப் போராளி இயக்கங்களின் ஆயுதப் போராட்டம் உள்நாட்டுப் போராக மாறியதையடுத்து அரசியல் கோலங்களில் ஏற்பட்ட மாற்றங்களும் அதனால் தமிழ் — முஸ்லிம் உறவுகளுக்கு நேர்ந்த கதியும் அண்மைய பல தசாப்தங்களின் வரலாறு.
இத்தகைய ஒரு பின்புலத்தில், நீண்ட காலத்துக்கு பிறகு தமிழ்பேசும் சமூகங்களின் பிரச்சினைகளுக்காக ஒன்றிணைந்து குரல் கொடுப்பதற்கான பொதுத்தள முயற்சி முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து நேர்மறையானதும் எதிர்மறையானதுமான பெருவாரியான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. பெரும்பாலான எதிர்மறை விமர்சனங்களும் சந்தேகங்களும் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் மத்தியில் இருந்து வருவதே முக்கியமாகக் கவனிக்க வேண்டிய அம்சமாகும். இது கடந்தகால முரண்பாடுகளில் இருந்து விடுபடுவதில் உள்ள பிரச்சினைகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
பொதுத்தளத்தின் முன்னோக்கிய நகர்வு அடிமட்ட அளவில் நிலவும் பிராந்திய ரீதியான சந்தேகங்களையும் முரண்பாடுகளையும் தமிழ்பேசும் கட்சிகள் எவ்வாறு கையாளப் போகின்றன என்பதிலேயே முற்றிலும் தங்கியிருக்கிறது.
மலையக தோட்டத் தொழிலாளர்களின் முன்னுரிமைக்குரிய பிரத்தியேகமான சமூக — பொருளாதாரப் பிரச்சினைகளையும் வடக்கு, கிழக்கு தமிழ் அரசியலின் அதிகாரப் பகிர்வு சார்ந்த பிரச்சினைகளையும் கிழக்கு மாகாணத்தில் நிலவும் காணி மற்றும் நிருவாக எல்லைகள் தொடர்பாக தமிழ்பேசும் சமூகங்களுக்கு இடையில் பல தசாப்தங்களாக நிலவும் முரண்பாடுகளையும் ஒற்றைத் தளத்தில் கையாளுவது என்பது பெருமளவு விட்டுக் கொடுப்புகளையும் நல்லெண்ணத்தையும் வேண்டிநிற்கும் மிகவும் சிக்கலான -. சவால் மிகுந்த பணியாகும்.
ஒவ்வொரு கட்சியினதும் கடந்தகால அணுகுமுறைகளையும் செயற்பாடுகளையும் நெடுகவும் பகுப்பாய்வு செய்து கொண்டேயிருந்தால், நடைமுறைச் சாத்தியமான முறையில் எந்த காரியத்தையும் ஒருபோதுமே சாதிக்க முடியாமல்போகும்.
இந்த கட்சிகள் மாறிவிட்ட அரசியல் சூழ்நிலைகளில் தற்போது எத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றன என்பதையும் பயன்தராத முன்னைய அணுகுமுறைகளைக் கைவிட்டு நிலைவரம் வேண்டிநிற்பதற்கு இசைவான முறையில் செயற்படுவதற்கு தங்களைத் தகவமைத்துக் கொள்ளத் தயாராயிருக்கின்றனவா என்பதையும் சற்று பொறுத்திருந்து பார்ப்பதே விவேகமானது.
மாகாணசபை தேர்தல்களை மேலும் தாமதிக்காமல் நடத்த வேண்டும் என்று மூன்று தமிழ்பேசும் சமூகங்களும் ஒன்றிணைந்து கோருவதற்கான வாய்ப்பாக அமைவது இந்த பொதுத்தளத்தின் ஒரு உடனடி பயன் என்று கருதமுடியும். இதன் மூலம் அரசாங்கத்துக்கு தெளிவான ஒரு செய்தி கொடுக்கப்படுகிறது.







