நெருக்கடிகளில் இருந்து தப்பிக்கவே கன்னியா விவகாரத் திசைதிருப்பல் – அரசு மீது சுரேஷ் பிரேமச்சந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் செம்மணி மனிதப் புதைகுழி விவகாரங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில், அரசு எதிர்கொள்ளும் அந்தப் பிரச்சினைகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே கன்னியா வெந்நீரூற்றில் புத்த கோயில் அமைக்கும் விவகாரத்தை ஒரு பேசுபொருளாக மாற்றித் திசைதிருப்புகின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனநாயக தேசியக் கூட்டணியின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, வாவிக்கரை வீதியில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்த முக்கிய கருத்துகள் வருமாறு:

“நீர்கொழும்பு சிறைப்படுகொலைகளைத் தொடர்ந்து நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளதோடு, மறுபுறம் ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர்கள் யாழ். செம்மணி மனிதப் புதைகுழிகளைப் பார்வையிட்டுள்ளனர்.

450 இற்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள், தலையற்ற எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வரும் இந்த இனப்படுகொலைச் சாட்சியத்தில் இருந்து தப்பிக்கவே அரசு முற்படுகின்றது.

ஏற்கனவே கன்னியா விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்பு உள்ள நிலையிலும், அங்கு புதிய கட்டுமானங்களுக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. நாட்டில் பாரிய பிரச்சினைகள் எழும்போதெல்லாம் சிங்கள – தமிழ் தரப்புகளை வேறு விடயங்களில் திசைதிருப்பிவிட்டு, இனவாதப் போக்கைத் தூண்டும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டுள்ளது.

குச்சவெளி பிரதேச சபை எல்லைக்குள் சிறுபான்மை மக்கள் வாழும் பகுதியில் 28 புத்த கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. மதவாதத்துக்கும் இனவாதத்துக்கும் இடமில்லை என்று கூறிக்கொண்டே இவை அனைத்தும் அரசின் ஆதரவுடன் நடைபெறுகின்றன.

தமிழ், முஸ்லிம், மலையக தேசிய இனங்களைச் சேர்ந்த 6 கட்சிகள் ஒன்றுசேர்ந்து ஒரு தளத்தை உருவாக்கியுள்ளன. மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துவது, எல்லை நிர்ணயக் குழுவினால் தேர்தலைப் பிற்போடும் அரசின் தந்திரங்களை முறியடிப்பது மற்றும் ஆளுநர்களை வைத்து வடக்கில் நடைபெறும் அத்துமீறல்களைத் தடுப்பது தொடர்பில் இராஜதந்திரிகளுடன் பேசியுள்ளோம்.

தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க அனைவரும் ஒரு கட்டமைப்புக்குள் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் இது தொடர்பாகத் தொடர்ந்து பேசி வருகின்றோம். ஏனைய தரப்பினருடனும் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்துக்கொண்டு இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளோம்.” என்றார்.

 

Share this article

More News