அரசாங்கம் முன்னெடுத்துவரும் நாணயக் கொள்கை நடவடிக்கைகளால் மாத்திரம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாது என மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் கலாநிதி டபிள்யூ.ஏ. விஜேவர்தன தெரிவித்துள்ளமை, பொருளாதாரத்தை நிர்வகிப்பதற்கும் கையாள்வதற்கும் அரசாங்கம் மேலும் பல நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றது என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
நெத்திலி, கருவாடு ஆகியவை மக்களின் பிரதான உணவுப் பொருட்களாகும். அவை புரதச் சத்துத் தேவையைப் பூர்த்தி செய்வதுடன், பொதுமக்கள் தங்களது அன்றாட உணவுத் தேவைகளை நிறைவு செய்துகொள்வதற்கும் பெரிதும் உதவுகின்றன. இவற்றைத் தனித்தனியாகப் பார்க்கும்போது அவற்றுக்குத் தனியான பெறுமதி இருந்தாலும், மக்கள் உட்கொள்ளும் உணவுடன் சேர்த்துப் பயன்படுத்தும்போதே அவற்றின் பயன் அதிகரிக்கின்றது. எனவே, இப்பொருட்களின் விலைகள் குறைவதால் கிடைக்கும் நிவாரணம் மக்களின் உணவுத் தேவைகளை மேம்படுத்துவதற்கு உதவும்.
மக்களின் உணவுப் பாதுகாப்பு என்பது புரதச் சத்துடன் மாத்திரம் தொடர்புடையதல்ல் குடும்பங்கள் தங்களுக்குக் கிடைக்கும் வருமானத்துக்குள் போதுமான உணவைப் பெற்றுக்கொள்ளும் ஆற்றலுடனும் தொடர்புடையதாகும். அன்றாட உணவில் சேர்க்கப்படும் இத்தகைய பொருட்களின் விலை குறைவது குடும்பச் செலவுச் சுமையைக் குறைப்பதுடன், உணவின் தரத்தையும் மேம்படுத்தும். எனவே, விலைக் குறைப்பின் பயனை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான நடவடிக்கைகளும் அவசியமாகும்.
வரி விதிப்பின் தாக்கம் எல்லா வருமானப் பிரிவினருக்கும் ஒரே அளவில் இருப்பதில்லை. ஆகவே, கொள்கைத் தீர்மானங்களை மேற்கொள்ளும்போது குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாங்கும் திறனையும் அன்றாடத் தேவைகளையும் அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
தற்போது பணவீக்கம் ஒன்பது சதவீதத்தை நோக்கி அதிகரித்துள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையேற்றமும் ஏனைய பொருட்களின் விலை உயர்வுமே இதற்கான முக்கிய காரணங்களாகும். எனவே, நாணயக் கொள்கையை மாத்திரம் கொண்டு இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியாது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த நாணயக் கொள்கை மட்டும் போதாது என மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் கலாநிதி டபிள்யூ.ஏ. விஜேவர்தன கூறியுள்ளார். அவரது கருத்து, பொருளாதாரத்தை நிர்வகிப்பதில் அரசாங்கம் மேலும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதைத் தெளிவுபடுத்துகின்றது.
அவற்றில் ஒன்று, குறைந்த வருமானம் பெறும் மக்களால் தாங்கிக்கொள்ளக்கூடிய அளவுக்கு வரிச்சுமையைக் குறைப்பதாகும். அதிக வருமானம் பெறும் 30 அல்லது 40 சதவீத மக்களுக்கு பெறுமதி சேர் வரி பெரிய சுமையாக இல்லை. ஆனால், குறைந்த வருமானம் பெறும் 60 அல்லது 70 சதவீத மக்களுக்கு அந்த வரியைத் தாங்கிக்கொள்வது கடினமாக உள்ளது. எனவே, பெறுமதி சேர் வரியைக் குறைப்பது, நீக்குவது அல்லது அதன் வீதங்களைக் குறைப்பது என்பது மக்களின் முக்கிய எதிர்பார்ப்பாக இருந்தது. அந்த எதிர்பார்ப்பு நிறைவேறாததால் அரசாங்கம் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
இதற்கு முன்னர் ஆட்சியிலிருந்த அரசாங்கங்களும் பொருட்களின் விலையேற்றம், பணவீக்கம், மக்கள் எதிர்கொண்ட பொருளாதாரச் சுமைகள் தொடர்பில் விமர்சிக்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், தற்போதைய அரசாங்கத்திடம் பாரிய பொருளாதார அபிவிருத்தியையும் பொருளாதார விரிவாக்கத்தையும் நோக்கிய திட்டம் இருப்பதாகக் கருதுகின்றேன். மக்கள் தொலைநோக்குப் பார்வையுடன் அந்தத் திட்டத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.
அதேவேளை, மக்கள் தற்போது மிகவும் சிரமத்துடனேயே வாழ்க்கையை முன்னெடுத்து வருகின்றனர். அவர்களின் சிரமங்களைக் குறைத்து நிவாரணம் வழங்கக்கூடிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்றார்.







