
இலங்கையில் மாகாண சபைத் தேர்தல் நீண்டகாலமாக நடத்தப்படாமல், மாகாணங்களுக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சி இல்லாமல், மாகாண நிர்வாகம், ஜனாதிபதியின் நேரடி கண்காணிப்பில் உள்ள ஆளுனரின் ஆட்சியில் இருக்கும், பின்னணியில், இலங்கை அரசாங்கம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள ‘பிரஜா சக்தி’ திட்டம் மக்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.
இத்திட்டமானது, மத்திய அரசின் கொள்கைகளை, நிர்வாக முடிவுகளை ,நேரடியா கிராம சேவையாளர் பிரிவு வரை, கொண்டு செல்வதன் மூலம் மாகாண சபைகளுக்கும், பிரதேச சபைகளுக்கும் வரையறுத்து கொடுக்கப்பட்ட அதிகாரங்களை நீர்த்து போக செய்வதற்கு வழி கோலுகின்றதா என்பது அரசியல் செயற்பாட்டாளர்கள் பலரது கேள்வியாகின்றது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தீவிர ஆதரவாளர்கள் சிலர் பிரஜாசக்தி திட்டம் பற்றி கூறுகையில், இத் திட்டத்தின் பிரதான நோக்கம் கிராமப்புற வறுமையை ஒழித்தல், சமுகங்களை வலுவூட்டுதல் ( empowerment) , அபிவிருத்தி திட்டங்களில் கீழ்மட்ட மக்களின் பங்குபற்றலை ஊக்குவித்தல் ,அப் பிரதேச மக்களின் தேவைகளை அறிதல், ஏற்றவாறான திட்டங்களைத் தீட்டுதல், இதனை அரச நிர்வாகங்களுடன் இணைந்து செயல்படுத்துதல் ஆகிய நோக்கங்களைக் கொண்டுள்ளது என கூறுகின்றனர்.
ஆனால், மே்குறிப்பிட்ட நோக்கங்களை எய்துவதற்கு, ஏற்கனவே ஒவ்வொரு கிராமசேவையாளர் பிரிவிலும், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், கமநல உத்தியோகத்தர்கள், சுகாதார உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர் என பலர், பிரதேச செயலரின் நிர்வாகத்தின் கீழ் பணியாற்றுகின்றனர். மேற்படி உத்தியோகத்தர்களுக்கு, மத்திய அரசின் வறுமை ஒழிப்பு , அபிஙிருத்தி போன்ற திட்டங்கள் தொடர்பான வழிகாட்டுதல்களை வழங்கி நெறிப்படுத்துவதன் மூலமாக அந்த நோக்கங்களை இலகுவாக எய்த முடியும்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை கொண்ட பிரதேச்சபைகள் இருக்கின்றன. இப்பிரதேச சகைகள் நிறைவேற்றுகின்ற தீர்மானங்களுக்கு இசைவாகவே , பிரதேச செயலகமும் அதன் கீழ் கடமையாற்றும் ஊழியர்களும் மக்கள் நலதிட்டங்களை முன்னெடுத்து செல்கின்றனர்.
நிலமைகள், இவ்வாறு இருக்க, மேலதிகமாக 20 பேர் கொண்ட பிரஜாசக்தி சபை , ஒவ்வொரு கிராமசேவையாளர் பிரிவுக்கும் அவசியமா ? இது பிரதேச்சபைகளின் செற்பாட்டு திறனை நீர்த்து போக செய்கின்றதா ? அப்படியாயின் இது ஜனநாயகப் பண்புகளுக்கு முரணானதா? என்ற கேள்விகள் இன்று அரசியல் செயற்பாட்டாளர்கள் மத்தியில் முதன்மை பெற்றுள்ளன.
இப் பிரஜாசக்தி அமைப்பு எப்படி உருவாக்கப்படுகின்றது, செயற்பட இருக்கின்றது என பார்த்தோமாகில், ஒவ்வொரு கிராமசேவையாளர் பிரிவிலும் 20 பேர் பிரஜாசக்தி அமைப்பினுள் உள்வாங்கப்படுகின்றனர். இந்த 20 பேரும் தமக்குள் ஓர் தலைவரை தெரிவு செய்வர். இவர்கள் பிரதேச செயலகங்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் ஊடாகத் கிராமிய மட்டத்திலான அபிவிருத்திக்கான தமது நிர்வாகச் செயல்பாடுகளை முன்னெடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிராமியமட்ட அபிவிருத்திக்கு பிரஜாசக்தி அவசியம் என அவர்கள் சொல்லி கொண்டாலும், அதற்காக ஏற்கனவே, சொல்லபட்ட வகையில் பிரதேச செயலக ஊழியர்களும், பிரதேச சபையும் இருக்கின்ற நிலையில், மேலதிகமாக உருவாக்கப்படுகின்ற, இப் பிராஜாசக்தி சபைக்கான 20 உறுப்பினர்கள் எப்படி தெரிவு செய்யப்படுவர் ? யார் தெரிவு செய்வார்கள் என்ற பிரதான கேள்விக்கு எவரும் சரியான பதிலை கொடுப்பதற்கு தயாராக இல்லை.
இத்திட்டம் மத்திய அரசின் அமைச்சரவை தீர்மானத்துக்கு அமைவாக செயற்படுத்தப்படும் திட்டம் என்ற வகையில், நடைமுறையில் ஆளும் தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட அமைப்பாளர்களே , ஆளுனரின் உதவியுடன் இவர்களை தெரிவு செய்வர். ஆகவே இந்த உறுப்பினர்கள் நிட்சியமாக தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், ஆதரவாளர்களாகவே இருப்பதற்கு 99.9 % வாய்புகள் உண்டு. இப்படியான அரசியல் சார்பு உள்ளவர்கள், பிரதேச செயலக ஊளியர்கள், ஊள்ளூராட்சி மன்ற ஊளியர்களை கட்டுபடுத்துவது அல்லது ஆளுமை செய்வது என்பது அரசியல் துஸ்பிரயோகத்துக்கே வழிவகுக்கும். ஆகவே இது ஐனநாயக விரோதமானதும் ஆகும்.
உதாரணமாக வலிகாமம் கிழக்கு பிரதேச செயலகத்தை எடுத்து கொண்டால் அங்கு 31 கிராமசேவையாளர் பிரிவுகள் உள்ளன. எனவே அப்பிரதேச செயலகத்தில் மொத்தம் 620 (31×20) பிரஜாசக்தி உறுப்பினர்கள் உள்வாங்கப்படுவார்கள். இப்பிரதேச செயலகத்துக்கான, வலிகாம்ம் கிழக்கு பிரதேச சபைக்கு 36 உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்த 36 மக்கள் பிரதி நிதிகளும் கவனிக்க வேண்டிய கிராமிய அபிவிருத்தி பணிகளை ஆளும் கட்சியால் நியமிக்கப்படுகின்ற 620 உறுப்பினர்களும் செய்கின்றபோது, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் செய்வதற்கு ஏதும் இல்லாத நிலை உருவாகும். அத்தோடு மக்கள் மத்தியில் பிரஜாசக்தி உறுப்பினர்களின் செல்வாக்கே அதிகமாகும். இதனால் அடுத்து வருகின்ற பிரதேச சபை தேர்தல்களில், இப்பிரஜா சக்தி உறுப்பினர்கள் போட்டியிட்டால் அவர்களே வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் என்பது வெள்ளிடை மலை. ஆகவே தான் , பிரஜாசக்தி திட்டம் என்பது, தேசிய மக்கள் சக்தி, தனது கட்சியை கிராமிய மட்டத்தில் கட்டி எழுப்ப, அரச வளங்களையும், அரச அதிகாரிகளையும் பயன்படுத்தும் ஜனநாக விரோத திட்டம் என அரசியல் செயற்பாட்டாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கிராம மட்ட அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள பிரதேச சபைகள் இருக்கின்ற பொழுது, அச் சபைகள் செய்ய வேண்டிய பணிகளை இவ்வாறான ஒரு நியமிக்கப்பட்ட கட்டமைப்பு முன்னெடுப்பது ஒரு வலுவான ‘நிழல் நிர்வாகத்தை’ உருவாக்குவதாகவே அமைகிறது.
இத்திட்டத்தை ஒரு ஜனநாயக விரோதச் செயலாகப் பார்ப்பதற்குக் கனமான காரணங்கள் உள்ளன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதேச சபை உறுப்பினர்களுக்குப் பதிலாக, அரசாங்கத்தால் நேரடியாக நியமிக்கப்படுபவர்கள் தீர்மானங்களை எடுப்பது மக்களின் ஓட்டுரிமையை மதிக்காத செயலாகும்.
உள்ளூராட்சி மன்றங்கள் எனப்படும் பிரதேச சபைகள்,13-வது அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம் மாகாணசபைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்கள் ஆகும். ஆகவே மாகாணசபைகளின் ஆட்சி அதிகாரத்துக்கு உட்பட்ட, பிரதேச்சபைகளுக்கு,இணையாக ஒரு நிழல் நிர்வாகமாக பிரஜாசக்தி சபைகளை உருவாக்குவது என்பது மீண்டும் மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் மாகாணசபைக்கு பகிரப்பட்ட அதிகாரங்களை கொண்டு வரும் ஒரு தந்திரோபாயமாக இது பார்க்கப்படுகிறது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள். ஆனால், நியமிக்கப்பட்ட நபர்கள் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு, கட்டுப்பட்டவர்களாகவே இருப்பர். நிர்வாக ரீதியான மாற்றங்கள் என்ற பெயரில் அதிகாரப் பரவலாக்கத்தைச் சிதைப்பது , ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானதல்ல.
‘பிரஜா சக்தி’ போன்ற திட்டங்களின் ஊடாக அதிகாரங்களை முடக்குவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமாயின், மாகாண சபைத் தேர்தல்களை உடனடியாக நடத்த வலியுறுத்துவது ஒன்றே தீர்வாகும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிகளின் ஆட்சி மாகாணசபையில் இருக்குமானால், மத்திய அரசு தன்னிச்சையாக , மத்திய ஆளும் கட்சிக்கு சார்பான திட்டங்களை பிரதேச சபைகளுக்கு இணையாக உருவாக்க முடியாது. அரசியலமைப்பு ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட மக்களின் அதிகாரத்தை மீண்டும் நிலைநாட்டவும், அடிமட்ட மக்களின் குரல் நிர்வாகத்தில் ஒலிக்கவும் தேர்தலும், அத்தேர்தல் மூலம் தேர்ந்து எடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சி ஒன்று மட்டுமே நிரந்தர தீர்வை வழங்கும்.
எனவே , மாகாணசபை தேர்தலை நடாத்துவதற்கான, மக்கள் விழிப்புணர்வும், பிரச்சார இயக்கங்களை அனைத்து தமிழ், முஸ்லிம் ,மலையக கட்சிகள் மிக தீவிரமாக முன்னெடுக்க வேண்டியது ,தற்போதைய காலத்தின் கட்டாயமாகும். இல்லையெனில், பிரஜாசக்தி எனும் கவர்சிப் பொறியினுள் சிறுபான்னை இன மக்கள் சிக்கி, சிங்கள பெரும் தேசியவாத த்தினுள் கரைந்து விடுகின்ற நிலமையே ஏற்படும்.
யோகா வளவன்







