அண்மைய வாரங்களில் இலங்கையின் அனைத்து ஊடகங்களிலும் பௌத்த பிக்குகளின் தொடர்ச்சியான சட்டவிரோத, சமூகவிரோத குற்றவியல் செய்திகளும் அவை பற்றியவிமர்சனங்களும் கணிசமான முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.
1.இருபத்தியொரு பிக்குகள் தாய்லாந்திலிருந்து போதைவஸ்துகளை கடத்திவந்து கொழும்பு விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டனர். (பின்னர் என்ன நடந்தது என்பது வெளிவரவில்லை) இந்த செய்தியின் பேச்சுக்கள் அடங்குவதற்குள், 2.அட்டமஸ்தாதிபதி பல்லேகம ஹேமரத்தின தேரர் பதின்மூன்று வயது சிறுமியை தொடர்ச்சியாக பல நாட்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார். இதுபற்றிய விமர்சனங்கள் அடங்குமுன்னே , 3. கண்டியில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக 25 வயதான பிக்கு உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4. இதைவிட 14 வயதுடைய இளம் பிக்குவை தொடர்ச்சியாக துஸ்பிரயோகம் செய்த 41 வயதுடைய பிக்கு தலைமறைவாகியிருந்த நிலையில், அம்பாறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவை இலங்கை பௌத்த பிக்குகளின் அண்மைக்கால குற்றவியல் நடவடிக்கையாகும். இலங்கை பிரித்தானியரிடமிருந்து ஆட்சி கைமாற்றப்பட்டதை தொடர்ந்து பௌத்த பிக்குகள் அரசியலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் செல்வாக்கு செலுத்தும் சக்திகளாக வளர்ந்து வந்திருக்கின்றனர்.
பிக்குகள் கிராம மட்டத்தில் விகாரைகளை மையப்படுத்தி பாமர மக்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்தும் சக்திகளாக இருந்ததால் அரசியல்வாதிகள் அதிகாரத்தை கைப்பற்ற பிக்குகளின் உதவியையும் ஆதரவையும் நாடினர். இப்போக்கு விரைவிலேயே பிக்குகள் அரசியல் கொள்கைகள்,நடவடிக்கைகள் மீது ஆதிக்கம் செலுத்தும் நிலைக்கு இட்டுச்சென்றது.
1957ம் ஆண்டு யூலைமாதம் கையெழுத்தான, இலங்கையில் தமிழ் மக்களுக்கு வடக்குகிழக்கில் பிராந்திய சபையூடாக தீர்வு காணும் நோக்கில் பண்டாரநாயக்கா செல்வநாயகம் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இவ்வொப்பந்தமானது புத்தபிக்குகளின் ஆக்ரோசமான எதிர்ப்பினாலும் நிர்ப்பந்தத்தாலும் கிழித்தெறியப்பட்டது. இது இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரம் பகிரப்படக்கூடாது என்ற சிங்களபௌத்த பிக்குகளின் மேலாதிக்க மனோநிலையின் வெளிப்பாடாகும்.
இதனைத்தொடர்ந்து 1959ம் ஆண்டு நவம்பர் 26 ஆம் திகதி மபிதிகம புத்தராகித தேரர் என்பவரால் பண்டாரநாயக்க அவரது வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த பிக்குவும் இன்னோர் செல்வந்தரான எச்.பி.ஜெயவர்த்தன என்பவரும் இணைந்து, பர்மா மற்றும் தாய்லாந்திலிருந்து அரிசி இறக்குமதி செய்வதற்கு அனுமதி கோரினர். ஆனால் பண்டாரநாயக்க அதற்கு மறுத்து அரசாங்க திணைக்களத்துக்கு அதனை வழங்கியதால் பண்டாரநாயக்கா கொல்லப்பட்டதாக விசாரணை முடிவுகள் தெரிவிக்கின்றன.
அதாவது பிக்குவின் இறக்குமதி வியாபாரத்துக்கு பண்டாரநாயக்க ஒத்துழைக்க மறுத்ததால் அவர் கொல்லப்பட்டார். இங்கு அன்பை, அஹிம்ஷையை போதிக்க வேண்டிய பிக்கு அதைவிடுத்து பெரும் வியாபாரத்தில் ஈடுபட்டமையும் அதனால் பிரதமரையே கொலை செய்யும் எல்லைக்கு போனதையும் காணமுடிகிறது.
இதனைத்தொடர்ந்து 1965 இல் பிரதமர் டட்லி சேனநாயக்கவுக்கும் செல்வநாயகத்திற்கும் இடையில் கையெழுத்தான ஒப்பந்தம் மாவட்ட சபைகளூடாக சில அதிகாரங்கள், நிர்வாக மொழியாக தமிழை செயற்படுத்தல் மற்றும் வடக்குகிழக்கு அரச நிலங்களை தமிழர்களுக்கே பகிர்ந்தளித்தல் போன்ற விடயங்களை உள்ளடக்கியிருந்தது.
இவ்வொப்பந்தமும் பிக்குகளின் மூர்க்கத்தனமான எதிர்ப்பால் கைவிடப்பட்டது. அதாவது தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வை எதிர்ப்பது என்ற கொள்கையில் பிக்குகள் தீவிரமாக செயற்பட்டனர். ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க தலைமையில் இடதுசாரிகளும் இணைந்து பிரபலமான ‘தோசே வடே அப்பிட்ட எப்பா’ சுலோகத்துடன் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் ஓர் பகுதியாகவே பிக்குகள் மிகவும் மோசமான எதிர்ப்புகளை தெரிவித்து டட்லியை வற்புறுத்தி ஒப்பந்தத்தை செயற்படுத்த விடாமல் தடுத்தனர்.
1968 இல் டட்லி தலைமையிலான தேசிய அரசாங்கத்தில் இலங்கை தமிழரசு கட்சியும் பங்குதாரராக இருந்தது. தமிழரசு கட்சி சார்பில் செனேட்டர் மு.திருச்செல்வம் Q.C அவர்கள் உள்ளூராட்சி அமைச்சராக இருந்தார். அவர் கோணேசர் கோவில் அமைந்திருக்கும் பிரடெரிக் கோட்டையை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்தினார். புத்த பிக்குகள் டட்லி சேனநாயக்கா மீது மிகுந்த அழுத்தத்தை பிரயோகித்து இப்புனித பிரதேச பிரகடனத்தை இரத்து செய்ய வைத்தனர். இச்செயற்பாடுகள் புத்த பிக்குகளின் மத மேலாதிக்கவாதமும் சிறுபான்மை மதங்களை அழிக்கும் கொள்கை நிலைப்பாடும் தெளிவாகிறது. மேற்கண்டவை அனைத்தும் பகிரங்க தளத்திற்கு வந்த பிக்குகளின் இன மத மேலாதிக்கவாத செயற்பாடுகள் ஆகும்.
மேற்சொன்ன பிக்குகளின் செயற்பாடுகள் யாவும் பின்வரும் கொள்கை நிலைப்பாடுகளை தெளிவுபடுத்துகின்றன. 1.பிக்குகள் இலங்கையில் சிறுபான்மை மக்களுக்கான அதிகாரப்பகிர்வை அடியோடு எதிர்ப்பவர்கள்.
சிறுபான்மை மக்களை இரண்டாம் தர பிரஜைகளாக நடத்த வேண்டும் என்பதில் உறுதியான நிலைப்பாட்டை கொண்டவர்கள். 2.சிறுபான்மை மதங்களை ஒடுக்கவேண்டும் என்பதிலும் பௌத்தமே இந்த நாட்டின் அரச மதமாக மேலாதிக்க அதிகாரம் வாய்ந்ததாக இருக்கவேண்டும் என்பதிலும் உறுதியான நிலைப்பாட்டை கொண்டவர்கள். 3.இரண்டு பெரிய கட்சிகளும் தமது அரசியல் தேவைகளுக்காக பிக்குகளை பயன்படுத்தவும் பலப்படுத்தவும் தயங்கவில்லை. மறுதலையாக பௌதத்தை அரசமதமாக உயர்த்துவதற்காக புத்தபிக்குகளும் இவ்விரு கட்சிகள்மீது ஆதிக்கம் செலுத்தின. நாட்டு நலனை விட கட்சி நலனையும் நாட்டின் சுபீட்சத்தை விட கட்சியின் சுபீட்சத்தையுமே முன்னிலைப்படுத்தி வந்துள்ளனர்.
அரசியல் தூரநோக்கற்ற கட்சிகளின் இச்செயற்பாடுகளின் உச்சமே 1972 குடியரசு அரசியல் யாப்பில் பௌத்தத்துக்கு அரசமதம் என்றளவிற்கான உயரிய இடம் வழங்கப்பட்டமையும்,பௌத்த சாசனத்தை பாதுகாப்பது என்பது எந்த ஓர் ஆட்சியாளரின் கடமை என்ற உயரிய அந்தஸ்தும் வழங்கப்பட்டமையாகும்.
இதன் விளைவாக பௌத்த பிக்குகளுக்கு அனைத்து இடங்களிலும் முன்னுரிமை வழங்கப்பட்டது. உதாரணமாக பொதுப்போக்குவரத்து பஸ்களில் முதல் ஆசனம் மதகுருமாருக்கு என்ற சட்டம் உருவானது. மதகுருமாருக்கு என்றால் எந்த மத குருவையும் குறிக்கும். ஆனால், நடைமுறையில் ஏனைய மதகுரு எவரும் அந்த ஆசனத்தில் அமர்வதில்லை.அப்படி அவர்கள் அமர்ந்திருக்கும் போது ஓர் பௌத்தபிக்கு அந்த வண்டியில் ஏறினால் உடனேயே நடத்துனர் அந்த ஆசனத்தை பிக்குவுக்கு விட்டுக்கொடுக்கும்படி உத்தரவிடுவார். அப்படி அவமதிப்பை சந்திப்பதை விட சாதாரண பயணிகள் இருக்கையையே ஏனைய மதகுருக்கள் பயன்படுத்துவதை காணலாம்.
இதுபோன்றே விமான நிலையங்களில் வெள்ளை விரித்த தனி ஆசனங்கள் பிக்குகளுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் எந்த விழாக்களுக்கோ பொது நிகழ்வுக்கோ சென்றால் முன்வரிசையில் வெள்ளைத்துணி விரிக்கப்பட்ட பிரத்தியேகமான கதிரைகள் இருக்கும், இருக்கவேண்டும். இவற்றுக்கு மேலாக பல்கலைக்கழகங்களில் பிக்குகள் படிக்கலாம். அவர்கள் பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற வரும் போது பட்டம் வழங்குபவர் எத்துணை மேதையாக, உயரிய இடத்தில் இருப்பவராயினும் பட்டம்பெறும் பிக்கு வந்ததும் அவருக்கு மேடையில் கதிரை போட்டு வெள்ளை துணி விரித்து அந்த மாணவப் பிக்கு உட்கார்ந்திருக்க பட்டமளிக்கும் வேந்தர் பட்டச்சான்றிதழை கொண்டு சென்று வளைந்து பணிந்து வணங்கி வழங்க வேண்டும் என்கிற அளவிற்கு பிக்குகள் என்பவர்களுக்கு அதீத மரியாதை வழங்கப்படுகிறது.
எந்த நாட்டிலும் தகுதி தராதரங்களுக்கப்பால் அனைவரும் அரசியல் யாப்புக்கு கட்டுப்பட்டவர்கள். சட்டங்களுக்கு கட்டுப்பட்டவர்கள். இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் பிக்குகள் இருந்துள்ளனர்.
நாடாளுமன்றத்தினுள் சபாநாயகர் பிரவேசிக்கும் போது அவர் முன்னால் செங்கோல் எடுத்துச்செல்லப்படும். அப்போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்ய வேண்டும். ஆனால் நாடாளுமன்ற உறுப்பினரான பிக்குகள் எழுந்து நிற்பதில்லை என்று செய்திகள் உண்டு. அதாவது தங்களை செங்கோலுக்கும், அரசியல் யாப்புக்கும் மேலான, கடவுளைப் போலவே நினைத்துக் கொள்கின்ற, தேசத்திற்கு ஆபத்தான உயரத்தில் பிக்குகள் வைக்கப்பட்டுள்ளார்கள். அதுமட்டுமன்றி பௌத்தத்திற்கும், பிக்குகளுக்கும் வழங்கப்பட்டுள்ள கேள்விக்கிடமற்ற அதீத கௌரவம், மரியாதை என்பன பௌத்தத்தை பாதுகாப்பதை விட பௌத்தம் இலங்கையின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தங்குதடையற்ற விஞ்ஞானபூர்வமான அபிவிருத்தி, மற்றும் இனங்கள், மதங்களுக்கிடையேயான நல்லுறவு ஆகியவற்றுக்கு மேல் தொங்கும் தூக்குக்கயிறாகவே பார்க்க முடிகிறது.
ஆனால் சிங்கள பௌத்த அரசியல் சமூகம் எந்தளவிற்கு இதனை உணர்ந்திருக்கிறது என்று நோக்கினால், இடதுசாரி வலதுசாரி வேறுபாடின்றி அனைவரும் மதவாத சகதிக்குள் மூழ்கி முத்தெடுக்கலாம் என நம்புபவர்களாகவே தெரிகின்றனர்.
ஒருபுறம் வடக்கு கிழக்கு பெருமளவுக்கு புத்த பிக்குகளின் ஆதிக்கத்தின் கீழ் நிர்வகிக்கப்பட இடமளிக்கும் அதேவேளை, பிக்குகளின் அண்மைக்கால சட்டவிரோத செயற்பாடுகளின் வளர்ச்சிப் போக்கையடுத்து பல்வேறு சிங்கள கட்சிகள் சார்ந்த அரசியல் தலைவர்களின் கருத்துக்களானது, பௌத்தம் நற்பெயரை இழக்கக்கூடாதென்றால் பௌத்த பிக்குகளின் பெயர் கெட்டுவிடக்கூடாது அல்லது அவர்களது சட்டவிரோத சமூக விரோத நடவடிக்கைகள் வெளிச்சத்திற்கு வந்துவிடக்கூடாது என்பதையும், பல்மத நாடான இலங்கையின் தேசிய அடையாளம் பௌத்தமே என்றளவுக்கு அமைந்துள்ளமையைக் காணலாம்.
அவற்றில் இதை வெளிப்படுத்தும் சில சிங்கள தவைர்களின் கருத்துகள்
1. இலங்கை பௌத்தத்தை தேசிய அடையாளத்தின் இதயமாக கருதுகிறது என ஐ.நா. சபையின் வெசாக் விழாவில் இடது சாரியான வெளியுறவு அமைச்சர் விஜிதஹேரத் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இலங்கை பௌத்தம், சைவம், கிறீஸ்தவம், இஸ்லாம் ஆகிய நான்கு மதங்களும் கொண்ட நாடு. இலங்கையின் ஆதிமதம் சைவம். இலங்கையில் பௌத்தம் அறிமுகப்படுத்தப்படும் போது இங்கு சைவ மதமே நிலவியிருந்தது. இந்த உண்மைகளை மறைத்து மறுத்து ஓர் இடது சாரித்தலைவர் பௌத்தத்தை மட்டுமே தேசிய அடையாளத்தின் இதயமாக உயிர்நாடியாக கருகிறார் என்றால் அவர் எந்தளவுக்கு இனவாதியாக, மத மேலாதிக்க வாதியாக இருப்பார் என்பதை புரிந்து கொள்வது கடினமல்ல.
2. பௌத்த பிக்குகள் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றம் அழைத்துச் செல்லப்படுவதனைக் காண வருத்தமளிக்கிறது என்கிறார் இடதுசாரித்தலைவரான ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கா அவர்கள். இதனால் பௌத்த தேரர்களின் பௌத்த நெறிக்கெதிரான செயற்பாடுகளை விசாரிக்க ‘தம்ம நீதிமன்றம்’ உருவாக்கும் சட்ட ஏற்பாடுகள் பூர்த்தியாகிவிட்டதாகவும் ஜனாதிபதி தெரிவிக்கிறார். இதன்மூலம் ஜனாதிபதி பிக்குகளின் சட்டவிரோத செயற்பாடுகளை மறைக்க முயல்கிறாரா? அல்லது சட்டவிரோத செயற்பாடுகளை ஊக்குவிக்க முனைகிறாரா? அல்லது சட்டவிரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த இதனைச் செய்கிறாரா? இக்கேள்விகளுக்கு ஜனாதிபதி மக்களுக்கு விளக்கம் அளிப்பாரா?
இங்கு சிறுபான்மை இனங்கள், மதங்களுக்கெதிராக அரச ஆதரவுடன் செயற்பட்டு வரும் பிக்குகள் இன்று மோசமான சட்டவிரோத செயற்பாடுகளை பயமின்றி மேற்கொள்ளத் தூண்டியது அல்லது அதிகாரம் வழங்கியது தாம் கேள்விக்கப்பாற்பட்டவர்கள் என்ற அவர்களின் அதிகாரத் தோரணையான உள்ளுணர்வுதான்.
எங்கள் பிரச்சனையை நாமே (பிக்குகளின் பிரச்சனையைப் பிக்குகளே) பார்த்துக்கொள்வோம். யாரும் தலையிடத் தேவையில்லை என்ற ஞானசாரதேரரின் அடாவடித்தனமான கருத்தும் இதனைப் பெரிதாக்குவது, பௌத்தத்தையும் பௌத்த சாசனத்தையும் பலவீனப்படுத்தும் என இத்தவறுகளை பௌத்த சாசன போர்வைக்குள் மறைக்க முயல்வதும் பிக்குகளுக்கு வழங்கப்பட்ட அதீத கௌரவத்தின், அதிகாரத்தின் விளைவே.
மதம் அரசியலில் கலப்பதென்பது அரசியல் கொள்கைகளில் மதக்கருத்துகள் செல்வாக்கு செலுத்த அல்லது ஆதிக்கம் செலுத்த வழிவகுக்கும். பல்லின பல்மத தேசங்களில் பெரும்பான்மை மக்கள் பின்பற்றும் மதத்தின் அரசியல் மீதான செல்வாக்கும் ஆதிக்கமும் அந்த நாட்டின் ஏனைய மதங்களை அடக்க, அடிமைப்படுத்த அழிக்க வழிவகுக்கும். அரசின் மீதான மத ஆதிக்கம் ஆழமான இனமோதல்கள், மதமோதல்கள் மதங்களுக்கிடையேயான வெறுப்புகள் காழ்ப்புணர்ச்சிகளை வளர்க்கும். மத மேலாதிக்கமும், காழ்ப்புணர்ச்சியும், மதங்களுக்கிடையிலான முறுகல் நிலைகளும் பல்மத நாடுகளில் கனல் போன்று எரிந்து கொண்டிருக்கும். அங்கு அரசியல் ஸ்திரத்தன்மை இருக்காது. அரசியல் ஸ்திரத்தன்மை இல்லையேல் அபிவிருத்தி இருக்காது. மதத்தின் நம்பிக்கை மீதான கற்பனையான கருத்துக்கள் நாட்டை ஆளும். விஞ்ஞான ரீதியான, அறிவுபூர்வமான, பகுத்தறிவின் பாற்பட்ட உண்மையான கருத்துக்கள் அலட்சியப்படுத்தப்படும். இது உண்மையான தொடர்ச்சியான விஞ்ஞானபூர்வமான வளர்ச்சிகளுக்கு தொடர்ச்சியான தடையாக அமையும்.
எனவே அரசியலில் மதம் கலப்பதென்பது அல்லது ஆதிக்கம் செலுத்துவதென்பது எந்த நாட்டையும் வளர்ச்சிப்பாதை நோக்கி கொண்டு செல்லாது. பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல இஸ்லாமிய நாடுகளாயினும் சரி, பர்மா, தாய்லாந்து உள்ளிட்ட பௌத்த நாடுகளாயினும் சரி இதற்கான சில உதாரணங்களாகும்.
மேற்கத்திய நாடுகள் எதுவும் மதத்தை முன்னிலைப்படுத்தவில்லை. ஜனநாயக விழுமியங்களை, மனித உரிமை மாண்புகளை முன்னிலைப்படுத்துவதால் அந்த நாடுகள் வளர்ச்சியடைந்துள்ளன. அந்த நாடுகளை சொர்க்கமாக நினைத்து இலங்கையர்கள் மதவேறுபாடின்றி சென்று குடியேற விரும்புகிறார்கள் என்றால், இலங்கையை வாழத்தகுதியில்லாத நாடாகப் பார்ப்பதே அர்த்தமாகும். ஓர் நாட்டை சொர்க்கமாகவும் நரகமாகவும் ஆக்குவது, அந்த நாட்டின் பிரஜைகள் அனைவரின் உரிமைகளும் உத்தரவாதப்படுத்தப்படுதல், பாகுபாடற்ற கொள்கைகளும் செயற்பாடுகளுமாகும். அடக்குமுறை எந்த வடிவத்திலாயினும் உடைக்கப்பட வேண்டும் என்பதும் அடக்குமுறையாளர்கள் எப்போதும் நிம்மதியாக வாழ்ந்ததில்லை, வாழ முடியாது என்பதும் மாக்சீயவாதிகளின் புரிதலாகும்.
இலங்கையை ஆளும் இன்றைய மாக்சீய வாதிகள் மதத்தை அரசியலிலிருந்து தனிமைப்படுத்த, மதம் அரசியலில் செல்வாக்குச் செலுத்தும் ஒன்றாக இல்லாதொழிக்க உருப்படியான நடவடிக்கைகளை எடுக்காதவரை இலங்கை எந்த வகையிலும் முன்னேறப் போவதில்லை. ஜே.வி.பி.யால் மட்டுமே இதற்கான அடித்தளங்களை இடமுடியும். செய்வார்களா?
கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன்







