
பலாலி வசாவிளான் பகுதிகளில் ” எமது பூர்வீக காணிகளை எங்களுக்கு தா!” என்ற கோஷத்துடன் வாராவாரம் ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் ஜனநாயக ரீதியிலான போராட்டத்தினை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். அவர்களின் போராட்டத்துக்கு அரசு செவி சாய்ப்பதாக இல்லை.
பலாலி வசாவிளான் பகுதிகளில் உள்ள போராட்ட இடங்களுக்கு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன்
சென்றிருந்தார்.

அங்கு அவர் கருத்து தெரிவிக்கையில்.
யுத்தம் முடிவுக்கு வந்து 17 வருடங்கள் ஆகின்றது. இக்காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, கோத்தபாய ராஜபக்ச, ரணில் விக்கிரமசிங்க, அனுரகுமார திசநாயக்க என ஐந்து ஜனாதிபதிகள் ஆட்சிக்கு வந்துள்ளனர். இவர்கள் எல்லோரும் காணிகளை விடுவிக்கிறோம் என்று சொன்னாலும் இன்னும் முழுமையாக காணிகள் விடுவிக்கப்படவில்லை. இறுதியாக அனுரகுமார குமார திசநாயக்க தாம் ஆட்சிக்கு வந்தால் காணிகளை விடுவிப்போம் என்று கூறினார். ஆனால் எதுவும் நடக்கவில்லை. விடுவிக்கப்படாமல் இருக்கும் மக்கள் காணிகளில். வைத்தியசாலை, விவசாயம், விளையாட்டு அரங்கு என சட்டவிரோத முறையில் செயற்பாடுகள் நடைபெறுகின்றன.

சில காணிகள் விடுவிக்கப்படாமைக்கு தேசிய பாதுகாப்பு காரணமாக கூறப்பட்டது மேற்கூறப்பட்ட வைத்தியசாலை, விவசாயம், விளையாட்டரங்கு தேசிய பாதுகாப்பில் எந்த வகையில் அடங்குகிறது என்பது புரியவில்லை.

ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கா அவர்கள் கூறினால் காணிகள் விடுவிக்கப்படும். பலாலி, வசாவிளான், மயிலிட்டி, கேப்பாப் புலவு என மக்கள் தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு போராட்டங்களை நடத்துகின்றனர். இந்த காணிகள் எப்போது விடப்படும் என அரசு வெளிப்படையாக சொல்ல வேண்டும். மக்களின் பூர்வீக காணிகளை மக்களுக்கு கொடுங்கள் என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.







