மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு கொழும்பை வலியுறுத்துவோம்!இந்திய வெளிவிவகாரச் செயலாளர் தெரிவிப்பு

“இந்தியப் பங்களிப்போடு உருவாக்கப்பட்ட அதிகாரப் பரவலாக்கலுக்கான மாகாண சபைகளை இயங்கக்கூடிய விதத்தில் அதற்கான தேர்தல்களை விரைவில் நடத்துமாறு கொழும்பு அரசை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தும்.”

இவ்வாறு இன்று பிற்பகல் தன்னைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களிடம் இந்திய வெளிவிவகாரச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.

தமிழர் தாயகப் பிரதேசத்தில் இன்னமும் கைவிடப்படாமல் படையினரின் ஆக்கிரமிப்பில் இருக்கும் நிலங்கள் பற்றிய விவரங்களை அவர் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களிடம் கேட்டறிந்துகொண்டார்

இன்று பிற்பகல் 2 மணி முதல் சுமார் ஒரு மணி நேரம் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

இந்தச் சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் அதன் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன், நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சாணக்கியன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான மருத்துவர் ப. சத்தியலிங்கம், கவீந்திரன் கோடீஸ்வரன் ஆகியோர் பங்கேற்றனர்.

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி.யும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி சார்பில் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி., தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரும் பங்கேற்றனர்.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து இந்திய வெளிவிவகாரச் செயலாளர் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களிடம் கேட்டறிந்துகொண்டார்.

தேர்தலை இப்போதைக்கு நடத்தும் எண்ணம் அரசுக்கோ, அரசு தலைவருக்கோ இல்லை என்பதை தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் எடுத்துரைத்தனர்.

இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்கள் மக்களால் கைவிடப்பட்டவை என்ற சாரப்படக் கருத்து கூறப்படுவது குறித்து இந்திய வெளிவிவகாரச் செயலாளர் தமிழ்த் தலைவர்களிடம் கேட்டார்.

அதற்கு தமிழ்த் தலைவர்கள்,

> “ஜனாதிபதியினாலும் பிற தென்னிலங்கைத் தலைவர்களாலும் அத்தகைய கருத்து கூறப்படுவதாக அறிகின்றோம். ஆனால் அது தவறு. சம்பந்தப்பட்ட காணிகளை இராணுவம் ஆக்கிரமித்து நீண்ட காலமாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாலேயே அந்த மக்கள் வேறு இடமின்றி இடம்பெயர்ந்து வாழ்கின்றனர். சிலர் வெளிநாடுகளிலும் உள்ளனர். அதனால் அவை கைவிடப்பட்ட காணிகள் என்று கூறுவது அர்த்தமற்றது.”

என்று சுட்டிக்காட்டினர்.

மக்கள் குடியிருக்காத தமிழர் தாயக நிலங்களை கபளீகரம் செய்ய கொழும்பு ஆட்சிப்பீடம் முயல்கிறது என்று சுட்டிக்காட்டிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி., ஏற்கனவே அரசு அப்படியொரு முயற்சியை எடுத்தபோது அதனை மேற்கொள்ள மாட்டோம் என்று பிரதமர் உறுதியளித்திருந்தாலும் பின்னர் அதனை மீறி நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும், அந்த முயற்சியை சுமந்திரன் வழக்குத் தொடர்ந்து முறியடித்தார் என்றும் தெரிவித்தார்.

மேலும் சுமந்திரன்,”மக்களின் காணிகளை அவர்களிடமே விடுவிக்க வேண்டும் என்பது அரசின் தேசியக் கொள்கை என்று ஜனாதிபதி அறிவிக்கிறார். ஆனால் மறுநாள் நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அந்தக் காணிகளை விடுவிக்க மாட்டோம் என்று அறிவிக்கிறார்.”

என சுட்டிக்காட்டினார்.

இன்றைய கலந்துரையாடலில் செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், சாணக்கியன் உள்ளிட்டோரும் தங்களது கருத்துகளை வெளியிட்டனர்.

கொழும்புக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவும் இந்தச் சந்திப்பில் பங்கேற்றார்.

Share this article

More News