
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்கள் தனது அரசாங்கத்தின் மூன்றாவது வரவு செலவுத் திட்டத்தை கடந்த நவம்பர் 12ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார். இதில் மொத்த செலவீனமாக 7,057 பில்லியன் ரூபாவும் மொத்த வருமானமாக 5,300 பில்லியன் ரூபாவும் துண்டு விழும் தொகையாக 1,757 பில்லியன் ரூபா என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 2027ஆம் ஆண்டு கட்ட வேண்டிய கடன் தொகையையும் சேர்த்தால் மொத்த செலவு 8,980 பில்லியன் ரூபாவாகும். எனவே மொத்த துண்டு விழும் தொகை ஏறத்தாழ 3,680 பில்லியன் ரூபாவாகும்.
இந்தத் துண்டு விழும் 3,680 பில்லியன் ரூபாவையும் இந்த அரசாங்கம் எந்த வழியில் பெற்றுக்கொள்ளப் போகின்றது என்பதற்கு எவ்வித அறிவுறுத்தல்களும் இல்லை. அது புதிய வரிகள் மூலம் பெற்றுக்கொள்ளப்படுமா? அல்லது சர்வதேச நிறுவனங்களிடமிருந்து கடன்கள் மூலம் பெற்றுக்கொள்ளப்படுமா? அல்லது வேறு வழிமுறைகள் ஏதேனும் இருக்கின்றதா என்பது தொடர்பாக வரவு செலவுத் திட்டத்தில் எந்தக் குறிப்புகளும் இல்லை. இந்த இலட்சணத்தில்தான் பல்வேறுபட்ட அபிவிருத்தி அறிவிப்புகள் அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டிருக்கின்றன.
இவர்கள் முன்மொழிந்த அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமாக இருந்தால் துண்டு விழும் தொகைக்கான நிதியை உடனடியாகத் திரட்ட வேண்டியிருக்கும். இல்லாத பட்சத்தில் இந்த வரவு செலவுத் திட்டமானது வெறும் காகிதத்தில் வரையப்பட்ட எழுத்துக் குவியல்களாகவே இருக்கும்.
அன்பிற்கினிய தமிழ் மக்களே!
தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இந்த வரவு செலவுத் திட்டமானது அவர்களது பிரதேசத்தில் எந்தவிதமான மாற்றங்களைக் கொண்டுவரும் என்பதே அவர்களது கேள்வியாகும். வடக்கு-கிழக்குக்கென புதிய அபிவிருத்தித் திட்டங்கள் எதுவும் முன்மொழியப்படவில்லை. மாறாக வீதி அபிவிருத்தி, மீன்பிடி, நீர் வழங்கல் போன்ற விடயங்களுக்கு சொற்பத் தொகையே ஒதுக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணசபைக்கு என ஒதுக்கப்பட்ட நிதியில் மீண்டெழும் செலவாக 75 வீதமான நிதியும் மூலதனச் செலவாக 25 வீதமான நிதியுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
இங்கு முக்கியமான விடயம் என்னவென்றால் மாகாணசபை தேர்தல்களை அடுத்த வருடம் நடத்துவோம் என்று கூறியவர்கள் மாகாணசபை தேர்தல்களுக்கான எந்த நிதியையும் ஒதுக்கவில்லை. தேர்தல் நடக்குமா நடக்காதா என்பது தொடர்பாகவும் எந்தக் கருத்துகளும் முன்வைக்கப்படவில்லை.
மாறாக, மாகாணசபைகளுக்கு ஒதுக்கப்பட்ட அதிகாரங்களில் சுகாதாரத்துறைக்கென ஒதுக்கப்பட்ட அதிகாரங்களில், வடக்கு மாகாணசபைக்கு உட்பட்டிருந்த மாவட்ட வைத்தியசாலைகள் அனைத்தையும் குறிப்பாக கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்ட வைத்தியசாலைகளை மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவோம் என்ற அறிவிப்பை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார். இவற்றை மத்திய அரசின் கீழ் கொண்டுவருவதினூடாக இவ்வைத்தியசாலைகளின் அபிவிருத்தியானது பன்மடங்கு அதிகரிக்கும், அதுவே வடக்கில் உள்ள மக்களின் கோரிக்கையும் ஆகும் என்று கூறியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், அவர் முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தின் பிரகாரம், அவர் பதவிக்கு வந்து ஒரு வருடத்திற்குள் மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் இரண்டு வருடங்கள் முடிந்தும் மாகாணசபைக்கான தேர்தல்கள் தொடர்பாக எவ்வித அறிவிப்பும் இல்லை.
அதே சமயம், தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதியதொரு அரசியல் சாசனம் வரும்வரையில் இப்பொழுது இருக்கக்கூடிய பதின்மூன்றாவது அரசியல் சாசனம் அப்படியே தொடரும் என்று உறுதியளிக்கப்பட்டது.
ஆனால் மாகாண ஆட்சி அதிகாரத்திற்குட்பட்ட மாவட்ட வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான அளவு நிதியை மாகாண நிர்வாகத்திற்கு அளிப்பதை விடுத்து, மாகாணத்திற்கு உரித்தான அதிகாரங்களை மத்திய அரசு பறிமுதல் செய்வதென்பது அதிகாரப் பகிர்வு என்ற அடிப்படைக்கே விரோதமானது.
அது மாத்திரமல்லாமல், தாய்ச்சட்டம் என்று கூறப்படும் அரசியல் சாசனத்திற்குட்பட்ட அதிகாரத்தை மீளப்பெறுவதற்கு அதற்கென வழிமுறைகள் இருக்கின்றன. ஆனால் அரசாங்கம் சட்டவிரோதமான முறையிலும் அரசியல் சாசனத்தை மீறும் முறையிலும் முன்னர் இருந்த அரசாங்கங்கள் மாகாணத்திற்குரிய அதிகாரங்களை சுற்றுநிருபங்கள் ஊடாகவும் சாதாரண சட்டங்கள் ஊடாகவும் எவ்வாறு பறித்தெடுத்ததோ அதனையே இந்த அரசாங்கமும் தொடர்கின்றது.
இதுதான் அனுரகுமார திசாநாயக்க அவர்கள் முன்வைத்த மாற்றமா என்ற கேள்வியும் எழுகின்றது.
அன்பிற்கினிய தமிழ் மக்களே!
வடக்கு மாகாண அபிவிருத்திக்கு இரண்டு விடயங்கள் அடிப்படையானவை.
ஒன்று: காங்கேசன்துறை துறைமுகத்தின் அபிவிருத்தி.
இரண்டு: பலாலி சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி.
இந்த அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படுமாக இருந்தால் வடக்கு மாகாணத்தின் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகங்கள் பல மடங்கு முன்னேறும் என்பதுடன், பொருட்கள் சேவைகளின் விலைகளும் நியாயமான அளவுக்குக் குறைவடையும்.
அது மாத்திரமல்லாமல், பலாலி சர்வதேச விமான நிலையம் சர்வதேச விமானங்கள் வந்து இறங்கக்கூடிய வகையில் அபிவிருத்தி செய்யப்படுமாக இருந்தால் எமது சுற்றுலாத்துறை பல மடங்கு முன்னேறுவதுடன் வடக்கிற்கான முதலீடுகளும் அதிகரிக்கும்.
பல வருடப் போராட்டத்திற்குப் பின்னர் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கென ஐம்பது கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் துறைமுக அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்ட தொகை எந்தளவுக்குப் போதுமானது?
பலாலி சர்வதேச விமான நிலையத்தைப் பொறுத்தவரையில் எவ்வித நிதி ஒதுக்கீடும் செய்யப்படவில்லை. மாறாக, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஓர் உள்நாட்டு முனையத்தை உருவாக்கி, உள்நாட்டு விமான சேவைகளை ஒழுங்குபடுத்துவதற்காக எண்ணூறு மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பலாலி தவிர்ந்த ஏனைய பல உள்நாட்டு விமான நிலைய அபிவிருத்திக்கும் ஓரளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் ஒன்று தெளிவாகின்றது. மிகப்பெரிய அழுத்தங்கள் வற்புறுத்தல்களின் காரணமாக பலாலி விமான நிலையம் திரு. ரணில் விக்கிரமசிங்க அவர்களால் சர்வதேச விமான நிலையமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. இப்பொழுது சென்னை, திருச்சிக்கென நாளாந்தம் இரு விமான சேவைகள் நடைபெறுகின்றன. வர்த்தக ரீதியில் இவ்விமான சேவைகள் இலாபத்தில் நடைபெறுவதாகவும் அறியப்படுகின்றது.
இவ்வாறிருக்கையில், பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு ஒதுக்கும் நிதி என்பது வர்த்தக ரீதியில் பிரயோசனமற்றது என்றும் இது மத்தள விமான நிலையத்தைப் போன்ற வர்த்தக ரீதியாக சாத்தியமற்றது என்றும் காரணம் கூறப்படுகின்றது.
ஆகவே, பதினைந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட எமது புலம்பெயர் தமிழ் மக்களோ அல்லது சுற்றுலாப் பயணிகளோ பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக உருவாக்கப்படவுள்ள உள்நாட்டு விமான சேவையைப் பயன்படுத்தி வடக்கிற்குப் பயணிக்கலாம் என்ற கருத்தே முன்னிலைப்படுத்தப்படுகின்றது.
அன்பிற்கினிய தமிழ் மக்களே!
பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தியை இலங்கை அரசாங்கம் விரும்பவில்லை என்றும் அது வர்த்தக ரீதியாகத் தோல்வியடையும் என்று ஆரூடம் கூறுவதும் தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கே என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
இலங்கையின் பால் உற்பத்தியில் மிகப்பெருமளவிலான பங்கை வகிக்கக்கூடிய மட்டக்களப்பு மாவட்டத்தின் கால்நடைகளுக்கு உரித்தான மேய்ச்சல் நிலங்கள் என்பது பலாத்காரமான சிங்கள குடியேற்றத்தின் மூலம் பறிபோய்க்கொண்டிருக்கின்றது.
மேய்ச்சல் தரைக்குப் போகும் கால்நடைகள் பலாத்காரமாகக் குடியேறிய சிங்கள விவசாயிகளால் சுட்டுக்கொல்லப்படுகின்றன. இவை தொடர்பாக எவ்வித நடவடிக்கையையும் அரசோ, பொலிஸோ எடுப்பதில்லை என்ற நிலவரம் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. கால்நடை உரிமையாளர்கள் பல வருடங்களாகப் போராடியும் கூட அரசாங்கம் இதற்கான தீர்வை எட்டமுடியாமல் உள்ளது.
அன்பிற்கினிய தமிழ் மக்களே!
பால் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைய வேண்டுமாக இருந்தால் இந்த மேய்ச்சல் தரைப் பிரச்சினை ஓரிரண்டு மாதங்களுக்குள் தீர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
வடக்கு-கிழக்கின் அபிவிருத்தி குறித்து வாய்கிழியப் பேசும் இவ்வரசாங்கமானது, இத்தகைய சிறு பிரச்சினைகளைக்கூடத் தீர்க்க முடியாமலிருப்பது சிங்கள வாக்கு வங்கியைக் காப்பாற்றிக்கொள்வதற்கே அன்றி அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்டதாகத் தெரியவில்லை.
இதனைப் போன்றே வடக்கு மாகாணத்தின் மீள்குடியேற்றத்திற்கும் சில நூறு மில்லியன்களை ஒதுக்கி இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
ஆனால் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் ஆங்காங்குமாக ஐந்து ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டனவே அன்றி, இன்னும் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் முப்படைகள், மகாவலி அபிவிருத்தி சபை, தொல்லியல் திணைக்களம், வனவளப் பாதுகாப்புத் திணைக்களம் போன்றவற்றின் கட்டுப்பாட்டில் இருக்கின்றனவே தவிர மக்களுக்குச் சொந்தமான காணிகள் இந்த அரசாங்கத்தினால் விடுவிக்கப்படவில்லை என்பதே யதார்த்தமாகும்.
மக்களுக்குச் சொந்தமான காணிகள் விடுவிக்கப்படாமல் அவற்றை சட்டவிரோதமான முறையில் அபகரித்துக்கொண்டு, அந்தக் காணிகளில் சட்டவிரோதமான முறையில் இராணுவக் கட்டுமானங்களை மேற்கொண்டுள்ள அதேநேரம், தொல்லியல் பிரதேசங்கள் என்று சொல்லக்கூடிய இடங்களில் இராணுவமும் பெளத்த பிக்குகளும் இணைந்து புதிய கட்டுமானங்களை உருவாக்கி வருகின்றமையும் எல்லோருக்கும் தெரிந்த விடயமாகும்.
இந்தக் கட்டுமானங்களைத் தடுத்து நிறுத்துவதற்கோ கட்டுப்படுத்துவதற்கோ எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளாத இந்த அரசாங்கம் மீள்குடியேற்றத்திற்கு நிதி ஒதுக்குவதாகக் கூறுவது சிரிப்புக்குரிய விடயமாகவே உள்ளது.
புலம்பெயர் உறவுகளுக்கும் அவர்களது வாரிசுகளுக்கும் இலவச இரட்டைக் குடியுரிமை என்ற ஒரு சலுகையையும் வடக்கு-கிழக்கு தமிழ் மக்களுக்கான சில சலுகைகளையும் காட்டித் தமிழ் மக்களுக்கும் வடக்கு-கிழக்கு அபிவிருத்திக்கும் பாரிய பங்களிப்பு ஒன்றைச் செய்கின்றோம் என்பதைக் காட்டித் தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கான ஒரு வரவு செலவுத் திட்டமாகவே இது இருக்கின்றது.
தமிழ் இளைஞர்கள், யுவதிகள், கற்றறிந்த புத்திஜீவிகள் இந்த வரவு செலவுத் திட்டமானது சர்க்கரை தடவிய விஷம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
தமிழ் மக்களின் நீண்டகாலப் போராட்டமானது தமது மொழி, கலாசாரம், பண்பாடு, தமது பிரதேசத்தின் பொருளாதார அபிவிருத்தி போன்றவற்றைத் தாமே முன்னெடுக்க வேண்டும் என்ற ஓர் அடிப்படையில் அதற்கான அதிகாரங்களைப் பெற்றுக்கொள்வதற்காகத்தான் நீண்ட போராட்டம் நடைபெற்றது.
ஆனால் குறைந்தபட்சமாக எமக்குக் கிடைத்த அதிகாரங்களைக்கூட தமிழ் மக்கள் ஆண்டு அனுபவிக்க இலங்கை அரசாங்கம் மறுப்பதுடன், வடக்கு-கிழக்கு என்பது மீண்டும் மீண்டும் அரசினால் புறக்கணிக்கப்படும் ஒரு பிரதேசமாகவே இன்றும் இருந்து வருகின்றது.
இதனைப் புரிந்துகொண்டு தமிழ் மக்கள் தமது அதிகாரங்களை நிலைநிறுத்திக்கொள்வதற்காக ஒற்றுமையுடன் குரல் கொடுப்பதே எமக்கு முன்னால் உள்ள ஒரே வழியாகும்.
மீண்டும் மடலில் சந்திக்கும்வரை…அன்புடன்,சுரேஷ் க.பிரேமச்சந்திரன்







