யாழ். மாவட்ட மக்கள் சிறுகச் சிறுக சேர்த்த சேமிப்புக்கள் எல்லாம் மிகச் சூட்சமமான முறையில் கொள்ளையிடப்படுவதாக சுட்டிக்காட்டிய சமூக ஆர்வலர் இரானியேஸ் செல்வின், இந்த பாரிய பொறிக்குள் எமது பெண்களே அதிகம் சிக்கிக் கொள்வதாகவும் தெரிவித்தார்.
அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைற்ற “நெகிழ்ச்சிமிக்க பெண்கள் தேசத்தின் பெருமை” என்ற நிகழ்வில் பசுமை மற்றும் நீலப் பொருளாதாரம் தொடர்பில் உரையாற்றும் போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பெண்களின் இறைமை என்பது வேறு. பெண்களின் பொருளாதார இறைமை என்பது வேறு. இந்த இரண்டிலும் சிக்குண்டு முன்னேறிச் செல்ல முடியாது எமது பெண்கள் தள்ளாடிக் கொண்டிருக்கின்றனர்.
இதேநேரம் இலங்கையில் உள்ள வங்கிக் கட்டமைப்புகளூடாக பெறும் நிதி வசூலிப்பில் யாழ். மாவட்டம் முதல் நிலையில் இருக்கின்ற போதும் வங்கிக் கடன் வழங்கலில் யாழ்ப்பாணம் 25 ஆவது நிலையில் இருக்கின்றது
இது எமது நிதியை எம்மிடமிருந்து வங்கிகள் சுரண்டி தென்னிலங்கை மாவட்டங்களில் உள்ளவர்கள் தாரைவார்க்கும் செயலாக நாளாந்தம் நடந்தேறுகின்றது. அதேநேரம் வங்கிகள் எமது மாவட்ட மக்களின் நலன்களில் அக்கறை கொள்ளாதிருப்பது வேதனைக்குரியது.
மேலும் பச்சைப் பொருளாதாரம் மற்றும் நீலப் பொருளாதாரம் என்று பேசுகின்றனர். ஆனால் அந்த பொருளாதாரங்களூடாக மக்களுக்கான நன்மைகள் எதுவும் இதுவரை கிடைத்திருக்கவில்லை.
பெண்கள் தமக்கான முன்னேற்றத்துக்கு நிறுவனங்களை உருவாக்க வேண்டுமே தவிர, சுரண்டும் நிறுவனங்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது. இவை எமது சேமிப்புக்களை கொள்ளை இடுகின்றன.
குறிப்பாக இந்த நிறுவனங்களுக்கு மிக உறுதியான நம்பிக்கை இருக்கின்றது. தங்கத்தை கொண்டுவந்து அடகு வைத்துவிட்டு மீள எடுக்க மாட்டீர்கள், அதனால் அந்த தங்கம் எல்லாம் தங்களுக்கு சொந்தமாகிவிடும் என்றுதான் மின்கம்பங்கள் தோறும் விளம்பரங்களை காட்சிப்படுத்தி வருகின்றனர்.
அன்று எமது பிரதேசங்களில் மக்கள் வங்கியும் கிராமிய வங்கியும் ஒரு சில தனியார் வங்கியும் செய்த அடகு மற்றும் இலகு கடன் சேவையை இன்று பினான்ஸ் நிறுவனங்கள் செய்கின்றன.
தற்போது யாழ்ப்பாணத்தில் பினான்ஸ் நிறுவனங்களின் பெருக்கம் பல நூறுகளாய் அதிகரித்துவிட்டன. இதன் நோக்கம் எமது சேமிப்புகளை கொள்ளையிடுவதாகவே இருக்கின்றது.
இந்த சுரண்டலுக்கு பலியாகிக் கொண்டிருப்பவர்கள் எம்வீட்டுப் பெண்கள்தான் என்பதே வருத்தமான செய்தி.
இதேநேரம் அந்த பெண்கள் யாரென்று பார்த்தால் முதன்மை பொருளாதாரம் என்று கூறும் விவசாயம், கால்நடை உள்ளிட்ட நாளாந்த தொழிலை செய்யும் பெண்கள் தான் இதில் சிக்கவைக்கப்பட்டுள்ளார்கள்.
இந்நிலைமையில் தான் நாம் நீலப் பொருளாதாரம், பசுமை பொருளாதாரம் பற்றிப் பேசுகின்றோம்.
நாங்கள் புரியத் தவறியுள்ள விடயம் என்னவென்றல் நீல மற்றும் பசுமைப் பொருளாதாரம் என்பது என்ன அதை எவ்வாறு பயன்படுத்துவது, வளங்களை நாம் எவ்வாறு அறுவடை செய்ய வேண்டும் என்பதாகும்.
இதை வழங்காத எமக்கான நிறுவனத்தை உருவாக்காது இருப்பதால்தான் வடபகுதி உற்பத்தியாளர்காள் வேறு நபர்கள் நிறுவனங்களால் முழுமையாக சுரண்டப்படுகின்றார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.







