தோற்கக் கூடாத போரில், தோற்கும் போது…!

கடந்த காலத்தை உற்றுநோக்காமல் இன்றைய அரசியல் சிக்கல்களை புரிந்துகொள்ள முடியாது. எப்போதேல்லாம் நாம் கடந்த காலத்தை புனிதமாக்க முற்படுகின்றோமோ, அப்போதெல்லாம் நிகழ்காலத்தின் நெருக்கடிகளை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறுவோம். ஏனெனில் புனிதவாதங்கள் சவால்களை எதிர்கொள்ளும் வழிகளை ஒரு போதும் காண்பிக்காது. ஈழத் தமிழர் அரசியலின் இன்றைய அனைத்து சிக்கல்களும் அதன் கடந்த காலத் தோல்வியின் விளைவு. தோல்விக்கு எவ்வாறான காரணங்களையும் கூறலாம் – மற்றவர்கள் மீது விரல் நீட்டலாம் – அவர்களை அனியாயக் காரர்களாக கதைகள் புனையலாம் ஆனால் அவற்றால் எவ்வித பயனும் ஏற்படப் போவதில்லை ஏனெனில் வரலாறு வென்றவர்களுக்குரியது. தோற்றவர்கள் எவ்வாறான கதைகளையும் கூறலாம் ஆனால் அந்தக் கதைகளுக்கு பெறுமதியிருக்கப் போவதில்லை. இதனால்தான் போருக்குச் சென்றால் எப்படியாவது வெல்ல வேண்டும் என்பது ஒரேயொரு தெரிவாகின்றது. வெல்ல முடியாத போர் என்று தெரிந்து கொண்டால், போரிலிருந்து விலகிக் கொள்வதும் ஒரு போரியல் தந்திரம்தான்.

யோசி கோஹன் இஸ்ரேலிய உளவுத்துறையான மொசாட்டின் முன்னைநாள் தலைவர் ஆவார். 2016-2021 வரையான காலப்பகுதியில் பொறுப்பில் இருந்தார். “சுதந்திரத்தின் வாள் : இஸ்ரேல், மொசாட் மற்றும் இரகசியப் போர்” என்னும் தலைப்பில் தனது அனுபவங்களை ஒரு நூலாக வெளியிட்டிருக்கின்றார். ஒரு வேளை, அவர் எதிர்காலத்தில் இஸ்ரேலின் பிரதமராக வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த நூலின் ஆரம்பத்தில் அவர் இவ்வாறு எழுதுகின்றார். அனைத்து யுத்தங்களும் முழுமையான வெற்றியில் முடிவடைவதில்லை அதே போல் முழுமையான சரணடைவிலும் முடிவுறுவதில்லை – ஆனால் இஸ்ரேல் ஒரு யுத்தத்திற்கு சென்றால் அதில் வெற்றிபெற்றே ஆக வேண்டும். ஏன் அப்படி – ஏனெனில் வெற்றிபெற்றால் மட்டும்தான் இஸ்ரேல் என்னும் ஒரு நாடு மத்திய கிழக்கில் இருக்க முடியும்.

ஈழத் தமிழர் அரசியல் எதிர்கொண்ட இறுதி யுத்தத்தின் நிலையும் இப்படியான ஒன்றாகத்தான் இருந்தது. மேற்குலக தரகர் அரசியலின் விளைவான சமாதான உடன்பாட்டிற்கு பின்னர், மீண்டுமொரு யுத்தத்திற்கு செல்வதற்கு எவ்வித சாத்தியங்களும் இருந்திருக்கவில்லை. அதனையும் மீறி, யுத்தத்திற்கு சென்றால் வென்றேயாக வேண்டும் – இல்லையேல் இருப்பதை அப்படியே பேணிக்கொண்டு தப்பித்துக்கொள்ளும் தந்திரம் புரிந்திருக்க வேண்டும். விடுதலைப் புலிகளின் தலைமை யுத்தத்தை தெரிவு செய்தது. அதன் பின்னர் விடுதலைப் புலிகளுக்கு முன்னால் ஒரேயொரு தெரிவு மட்டுமே இருந்தது. அதாவது, வெற்றிபெற்றே ஆக வேண்டும். ஏனெனில் வெற்றி இல்லையேல் புலிகள் இருக்க மாட்டார்கள். இறுதியில் அதுதான் நடந்தது.

இறுதி ஈழப் போரைப் பொறுத்தவரையில் விடுதலைப் புலிகளின் தோல்வி என்பது ஈழத் தமிழர் அனைவரதும் தோல்விதான். இன்று ஒரு மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குக் கூட அரசாங்கத்திடம் இரந்து நிற்க வேண்டியிருக்கின்றது. அவர்கள் முடியாது என்று கூறினால், அரசாங்கத்தை இறங்கிவரச் செய்வதற்கு தமிழரிடம் எதுவுமில்லை. இந்த எதுவுமில்லை என்பதுதான் அரசியலிலேயே மிகவும் மோசமான கையறு நிலை. இந்த இடத்திலிருந்து தமிழர் அரசியலை உற்று நோக்கினால், இது எந்தளவிற்கு மீண்டு எழ முடியாத தோல்வி என்பதை புரிந்து கொள்வது கடினமானதல்ல. ஒரு தோல்வியின் பின்னரான பழங் கதைகள் அனைத்துமே இயலாமையின் வெளிப்பாடாக இருக்குமே அன்றி, செயலுக்கான தூண்டுதலாக இருக்காது. ஏனெனில் செயல் மீது அச்சம் கொண்ட ஒரு தலைமுறையைத்தான் தோல்வி உற்பத்தி செய்யும். இன்று தமிழ்த் தேசிய அரசியல் உரையாடல்கள் எவ்வாறு வெளிப்படுகின்றது என்பதை நோக்கினால் இதனை புரிந்து கொள்வது கடினம் அல்ல.

பல அரசியல் கட்சிகள் – அந்த அரசியல் கட்சிகளின் செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே அரசியல் உரையாடல்கள் இடம்பெறுகின்றன. இந்தக் கட்சிகள் சரியான பாதையில் பயணிக்கவில்லை என்னுமடிப்படையில் அறிவுரைகளும் இடம்பெறுகின்றன. ஆனால் ஒட்டுமொத்தமாக நோக்கினால் எவரிடமும் எங்கு செல்வது என்னும் திசைகாட்டி இல்லை. திசைகள் பற்றிய கற்பனையே இருக்கின்றது. ஒரு தோல்வியின் பின்னரான அரசியல் இப்படித்தான் இருக்கும். இதுதான் தோற்கக் கூடாத அரசியலில் தோற்றதன் விளைவு.

ஈழத் தமிழர் அரசியலில் எப்போதுமே படித்தவர், பாமரர் என்னும் இரண்டு புரிதல் இருந்தது. அரசியல் கோட்பாடுகள் அறிந்தவர்கள் தங்களை முன்னேறிய பிரிவினர் என்றும் அடையாளப்படுத்திக் கொண்டனர். மிதவாத அரசியலைப் பொறுத்தவரையில்; சட்டம் பயின்றவர்கள், ஆங்கிலப் புலமை உள்ளவர்களே முன்னேறியவர்கள். அவர்களே அரசியலை வழிடநடத்தும் ஆற்றல் கொண்டவர்கள். ஏனையவர்கள் அனைவரும் பாமரர்கள். ஆனால் அவ்வாறான படித்தவர்கள் அனைவருமே சிங்கள ராஜதந்திரத்திற்கு முன்னால் படுமோசமாகத் தோற்றுப் போனதே இதுவரையான வரலாறு.

அப்புக்காத்துக்களின் தோல்வியானது, புதிய முன்னேறிய பிரிவினரின் உருவாக்கத்திற்கு வழிவகுத்தது. சட்டப் புத்தங்களுக்குள்ளால் அரசியலை புரிந்து கொண்ட ஒரு தமிழ் தலைமுறைக்கு பதிலாக, சோவியத் பாணி சிகப்பு மட்டைப் புத்தகங்கள், பாலஸ்தீன, லத்தீன் அமெரிக்க, ஆபிரிக்க புரட்சியாளர்களின் சிந்தனைகளின் வழியாக உலகத்தை புரிந்து கொள்ள முற்பட்ட தலைமுறையொன்று உருவாகியது. அந்தத் தலைமுறை, ஒரு புரட்சியின் ஊடாக அனைத்தையும் தலைகீழாக்கலாம் என்னும் நம்பிக்கையை, தெருக்கள் தோறும் பரப்ப முற்பட்டது. அதுவும் தோல்வியில்தான் முடிவுற்றது. அன்றைய சூழலில், இலங்கை இராணுவத்தில் இருந்தவர்களின் எண்ணிக்கையை விடவும் தமிழ் இயக்கங்களில், இருந்தவர்களின் எண்ணிக்கை பல மடங்காக இருந்தது. ஆனாலும் போர் வெற்றியை பறைசாற்ற முடியவில்லை. ஆங்காங்கே தாக்குல்களில் சாகசங்கள் காண்பிக்கப்பட்டதே அன்றி, யுத்தத்தை வெல்ல முடியவில்லை. இறுதியில் தனித்து தங்களால் முடியும் என்னும் அடிப்படையில் செயற்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கமும், யுத்த களங்களில் வென்று, யுத்தத்தில் தோல்வி அடைந்து, முள்ளிவாய்க்கால் அவலத்தை விட்டுச் சென்றது.

முள்ளிவாய்க்காலுக்கு பின்னரான சூழலில் உண்மையில், போராட்ட வகைப்பட்ட தனித்துவமான அரசியலொன்றை முன்னெடுப்பதற்கான வாய்ப்புக்கள் முற்றிலும் இல்லாமால் போய்விட்டது. இதனை சரிவர புரிந்திருந்தால், இன்று பல கட்சிகளாக, பல நிலைப்பாடுகளாக சிதறிப் போகும் அரசியலை முளையிலேயே கிள்ளியெறிந்திருக்கலாம் ஆனால் ஆரம்பம் சறுக்கியதால், தொடர்ந்தும் சறுக்கிக் கொண்டிருக்கும் அரசியலே, தமிழர் அரசியலாக இருக்கின்றது. ஒரு வாய்ப்பிருந்தது – அதாவது, 2009இல் ஒரு பேரவலம் ஏற்பட்ட போது, விடுதலைப் புலிகள் அமைப்பு மற்றும் அதன் கதைகளை முற்றிலுமாக தமிழர் அரசியலில் நீக்கிவிட்டு, ஒரு புதிய ஜனநாயக முகத்தை வழங்கும் வகையிலான மக்கள் அரசியலை முன்னெடுத்திருந்திருந்தால் ஒப்பீட்டடிப்படையில் இன்று ஆரோக்கியமான அரசியல் சூழலை எதிர்கொண்டிருக்கலாம். ஏனெனில் விடுதலைப் புலிகள் அமைப்பு போன்றதொரு அமைப்பு வெற்றிபெற்றால் மட்டுமே, அதனால் சீவிக்க முடியும் – இல்லாவிட்டால் ஒரு சிறிய வாய்ப்பும் அவர்களுக்கு இருக்காது.

விடுதலைப் புலிகள் அமைப்பின் கடந்தகால நடவடிக்கைகளும் அதன் விளைவுகளும் எக்காலத்திற்குமான தடையாகவே இருந்திருக்கும். ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தாக்குப்பிடித்திருந்தால், அதன் பின்னர் ஏற்படும்; பிராந்திய மற்றும் உலகளாவிய மாற்றங்களின் கீழ் தப்பிப்பிழைப்பதற்கான வாய்ப்புக்கள் கிடைத்திருக்கலாம்; அதற்கான உத்தரவாதங்கள் இல்லாவிட்டாலும் கூட, அதற்கு எதிர்காலம் உண்டு – சில வேளை ஒரு புதிய அரசியல் நகர்விற்கான சூழலை கனியச் செய்திருக்கலாம். புலிகளின் வீழ்ச்சியோடு, அதுவரையான தனிநாடு, உள்ளக வெளியக சுயநிர்ணய மற்றும், சமஸ்டிக் கதைகள் அனைத்துமே முடிவுற்றுவிட்டன.

2009இற்கு பின்னர், இந்த நிலைமையை புரிந்து கொண்டு செயலாற்றக் கூடிய ஆளுமை மிக்க தலைமைகள் இருந்திருக்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்னும் பெயரில் இருந்தவர்களிடம் அதற்கான ஆற்றல் இருந்திருக்கவில்லை – அவர்கள் நாடாளுமன்றத்தை மட்டுமே ஒரேயொரு தெரிவாகக் காணும் நிலையில் இருந்ததால் அவர்களால் அதற்கப்பால் சிந்திக்க முடியவில்லை. மேலும் சம்பந்தன் போன்றவர்களிடம் வெகுசன அரசியலுக்கு தலைமை தாங்கும் ஆற்றலோ, அரசியல் வாழ்க்கையோ இருந்திருக்கவில்லை – உண்மையில் அப்படியான அரசியல் பார்வை, சம்பந்தன் போன்றவர்களின் அரசியல் மரபணுவிலேயே இல்லாததொரு விடயமும் கூட.

எனவே விடயங்களை பின்நோக்கி பார்த்தால், விடுதலைப் புலிகள் தோற்கக் கூடாத போரில் தோற்றதன் விளைவுதான் இன்றைய அரசியல். இந்தப் புரிதலின்றி அரசியலை அணுகினால் அதன் விளைவு எப்போதும் பூச்சியம்தான். இந்தப் புரிதலின்றி அரசியலை கையாள முற்பட்டதன் காரணமாகத்தான் கடந்த பதினேழு ஆண்டுகளாக போகுமிடம் தெரியாத அரசியலுக்கு தலைமை தாங்குவதற்காக பல கட்சிகளாக பிளவுற்றிருக்கின்றனர். ஒரு பெரும் தோல்விக்கு பின்னரான அரசியல் சூழல் என்பது அடிப்படையில் இப்போது என்ன இருக்கின்றது, ஏதாவது இருக்கின்றதா என்பதிலிருந்தே அதன் அடுத்த கட்டத்தை ஆராய வேண்டும். அப்படித்தான் ஈழத் தமிழர் அரசியலிலும் நடந்திருக்க வேண்டும் – ஆனால் அது நடக்கவில்லை. தங்களின் ஆற்றல் என்ன என்னவென்பதை அறியாத ஒவ்வொருவரும் தங்களின் கற்பனைகளை வெளியிட்டனர். இப்போதும் அது தொடர்கிறது.

யதீந்திரா

Share this article

More News