அவர் விடுத்துள்ள விசேட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“தமிழகத்தில் அரை நூற்றாண்டுக்குப் பின்னர் சினிமா துறை நடிகர் விஜய் முதல் முறையாகத் தேர்தலில் போட்டியிட்டு அதிகப்படியான இடங்களைப் பெற்றமை மட்டுமல்லாது, தமிழகத்தின் முதலமைச்சராக வரவுள்ளார். ஈழத் தமிழ் மக்கள் சார்பாக அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்பதுடன், ஈழத்தமிழர்களின் எதிர்காலம் தொடர்பாகவும், ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைகள் தொடர்பாகவும் விஜய் தமிழக முதலமைச்சர் என்ற அடிப்படையில் ஈழத் தமிழ் மக்களுக்காக உரத்துக் குரல் கொடுப்பார் என்று நம்புகின்றோம்.

அவருடைய ஆட்சிக் காலத்தில் ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இந்திய மத்திய அரசாங்கம் (டெல்லி அரசு) செய்ய வைக்க வேண்டும் எனவும் நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

அது மாத்திரமல்லாது தமிழக மக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் நியாயமான அளவு வாக்குகளைக் கொடுத்துள்ளார்கள். எனவே அவர்களது பங்களிப்பு என்பதும் ஈழத் தமிழ் மக்களைப் பொறுத்தவரை தேசியப் பிரச்சினைத் தீர்வு தொடர்பாக அவசியமாக இருக்கின்றது.

எனவே தமிழக சட்டமன்றத்தில் இரண்டாவது, மூன்றாவது இடங்களைப் பெற்றுக்கொண்ட தி.மு.க, அ.இ.அ.தி.மு.க ஆகியவற்றுக்கும் வாழ்த்துகளை ஈழத்தமிழ் மக்கள் சார்பாக ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி தெரிவித்துக் கொள்கிறது.”