எதிரிகளாக அல்ல பங்காளிகளாக செயல்பட வேண்டும்” பெய்ஜிங்கில் சீன அதிபர் ஷி ஜின்பிங் 

உலகம் முழுவதும் நிலவும் போர் மேகங்களுக்கு மத்தியில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு இன்று பெய்ஜிங்கில் நடைபெற்றது.

இதில், இரு நாடுகளும் மோதல் பாதையைத் தவிர்த்து ‘பங்காளிகளாக’ செயல்பட வேண்டும் என ஷி ஜின்பிங் அழைப்பு விடுத்துள்ளார்.

பெய்ஜிங்கில் உள்ள ‘கிரேட் ஹால் ஆஃப் தி பீப்பிள்’ (Great Hall of the People) வளாகத்தில், அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சீன ராணுவத்தின் கம்பீரமான அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட டிரம்ப், பின்னர் ஷி ஜின்பிங்குடன் மூடிய கதவுகளுக்குப் பின்னால் உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினார்.

உலகளாவிய மோதல் சூழலைச் சுட்டிக்காட்டிய ஷி ஜின்பிங், மூன்று முக்கியமான கேள்விகளை டிரம்பின் முன் வைத்தார்

வளர்ந்து வரும் ஒரு சக்தி, ஏற்கனவே இருக்கும் வல்லரசுடன் மோதி போரில் முடிவதைத் தவிர்த்து, புதிய உறவை உருவாக்க முடியுமா?

இரு நாடுகளும் இணைந்து சர்வதேசச் சவால்களை எதிர்கொண்டு உலகிற்கு அமைதியை வழங்க முடியுமா?

இரு நாட்டு உறவுகளிலும் புதிய மற்றும் அழகான அத்தியாயத்தை எழுத முடியுமா?

“தற்போதைய காலத்தின் இந்தக் கேள்விகளுக்கு வல்லரசு நாடுகளின் தலைவர்கள் என்ற ரீதியில் நாம் இணைந்து பதிலளிக்க வேண்டும்” என ஷி ஜின்பிங் வலியுறுத்தினார்.

மேலும், 2026 ஆம் ஆண்டு சீன-அமெரிக்க உறவுகளில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல் ஆண்டாக அமையும் எனத் தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஈரான் போர் மற்றும் தைவான் விவகாரம் எனப் பல முனைகளில் பதற்றம் நிலவி வரும் சூழலில், சீனாவின் இந்த ‘பங்காளர்’ அழைப்பு சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

டிரம்பின் இந்தப் பயணம், உலகப் பொருளாதாரத்திலும், பாதுகாப்புச் சூழலிலும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Share this article

More News