தமிழ் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் அழைக்கப்படாமல் யாழில் காணி விடுவிப்பு பற்றி கலந்துரையாடல்

வடக்கு மாகாணத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. எனினும், அந்த கலந்துரையாடலில் தமிழ் தேசியக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை தவிசாளர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் புறக்கணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

காணி விடுவிப்பு தொடர்பாக நாடாளுமன்றத்திலும் வெளியிலும் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வரும் தமிழ் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள், இப்பிரச்சனை பற்றி நன்கு அறிந்த தரப்பாக இருந்தபோதிலும், அவர்களின் கருத்துகள் கேட்கப்படாமல் ஆளும் கட்சி உறுப்பினர்களுடன் மட்டும் கலந்துரையாடல் நடத்தப்பட்டமை விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வலிகாமம் வடக்கு பகுதிகளில் இன்னும் கணிசமான அளவு காணிகள் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவை தொடர்பான முழுமையான தகவல்களை அறிந்த வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளர் இந்தக் கலந்துரையாடலுக்கு அழைக்கப்படவில்லை .

இதன் போது காணிகளை விடுவிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி, இராணுவத்தினருடனும் அரசின் உயர்மட்ட அதிகாரிகளுடனும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் மட்டுமே கலந்து பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாழ்ப்பாண மாவட்டத்தில் விடுவிக்கப்பட வேண்டிய காணிகள் குறித்து சுட்டிக்காட்டப்பட்ட போதிலும், அவற்றை விடுவிப்பதில் இராணுவம் தொடர்ந்து அலட்சியமாக இருப்பதை காணக்கூடியதாக இருந்தது.

இதனையடுத்து அமைச்சர் இ.சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர் கே.இளங்குமரன் மற்றும் யாழ் மாநகர சபை உறுப்பினர் ரு.கபிலன் உள்ளிட்டோர் ஒரு சிறுபகுதி காணிகளையேனும் விடுவிக்கும் படி இராணுவத்தினரிடம் வேண்டுகோள் விடுத்தனர். அனுர அரசு காணிகள் விடுவிக்கப்படும் என வாக்குறுதி அளித்து ஒன்றரை வருடங்கள் ஆகியும் பலாலி வீதி உள்ளிட்ட பல இடங்களில் இராணுவம் நிலங்களை இன்னும் ஒப்படைக்கவில்லை என்பதுதான் யதார்த்தமான உண்மை.

இந்த யதார்த்தம் யாழ் மாவட்டத்தில் இருந்து தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட NPP பா.உ க்களின் கையாலாகத்தன்மையே மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.

Share this article

More News