இலங்கையின் முக்கிய துறைமுகங்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க இந்தியாவும் சீனாவும் போட்டி போட்டுக்கொண்டு அனுர அரசை தத்தமது பக்கம் இழுக்க வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் கடும் பிரயத்தனங்களை ,மேற்கொண்டுவரும் நிலையில் துறைமுக அபிவிருத்தி என்ற பெயரில் அமரிக்காவை உள்ளே அனுமதிப்பதற்கான இந்த அனுர அரசின் நகர்வு ,சீனா மற்றும் இந்தியாவுடனான உறவில் பாதிப்பை உருவாக்குமா என்கின்ற கேள்வி எழுந்தள்ளது. இப்பின்னணியில்,
இலங்கையின் துறைமுகங்கள் மற்றும் கடல்சார் விநியோகச் சங்கிலித் துறையை அதிநவீன தொழில்நுட்பங்களுடன் அபிவிருத்தி செய்யும் நோக்கில், இலங்கை அரசாங்கம் மற்றும் தனியார் துறையின் பிரதிநிதிகள் அடங்கிய உயர்மட்டக் குழுவொன்று இந்த வாரம் அமெரிக்காவின் வொஷிங்டன் டி.சி. நகருக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளது.
அமெரிக்காவில் நடைபெறும் “இந்தியப் பெருங்கடல் துறைமுகங்கள் மற்றும் விநியோகச் சங்கிலிகளுக்கான அமெரிக்க மன்றத்தில்” பங்கேற்பதற்காகவே இந்தத் தூதுக்குழு அங்கு சென்றுள்ளது.
இலங்கையின் துறைமுகத்துறையை மேம்படுத்துவதற்காக மேம்பட்ட அமெரிக்கத் தொழில்நுட்பங்கள் மற்றும் நிபுணத்துவங்களை வழங்கும் முன்னணி அமெரிக்க நிறுவனங்களுடன் இலங்கைத் தூதுக்குழுவை இணைப்பதுவே இந்த விஜயத்தின் முதன்மை நோக்கமாகும்.
இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, துறைமுக விரிவாக்கம், டிஜிட்டல் மயமாக்கல் மாற்று வடிவம் மற்றும் துறைமுகங்களின் செயல்பாட்டுத் திறனை அதிகரித்தல், இலங்கைத் துறைமுகங்களின் உட்கட்டமைப்பு மேம்பாடுகளுக்கான அமெரிக்க நிதி முதலீடுகளைப் பெற்றுக்கொள்வது மற்றும் அமெரிக்க அரசாங்க அதிகாரிகள், சர்வதேசத் தொழில்துறைத் தலைவர்கள் மற்றும் அபிவிருத்திப் பங்காளிகளுடன் இணைந்து புதுமையான தீர்வுகளைக் கண்டறிதல்.ஆகிய விடயங்கள் குறித்து ஆராயப்படவுள்ளன.
முக்கிய உலகளாவிய கப்பல் போக்குவரத்துப் பாதைகளை இணைக்கும் ஒரு மூலோபாய மையமாக விளங்கும் இலங்கையின் பங்களிப்பை, இந்த கூட்டு முயற்சிகள் மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வர்த்தகத்தை வலுப்படுத்துதல், திறமையான விநியோகச் சங்கிலிகளுக்கு ஆதரவளித்தல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் முழுவதும் பகிரப்பட்ட பொருளாதார செழிப்பை மேம்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகளை ஆராய்வதன் மூலம், இலங்கையின் பொருளாதாரப் புத்துயிர்ப்புக்கு இந்த அமெரிக்க விஜயம் பெரும்ஸ்ரீ திருப்புமுனையாக அமையும் எனப் பொருளாதார விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.







