
யதீந்திரா
சில வாரங்களுக்கு முன்னர் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி, முல்லைத்தீவில் கூட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தது. மகாண சபை முறைமை மற்றும் அதன் அவசியம் தொடர்பில், உரையாடுவதுதான் அந்தக் கூட்டத்தின் நோக்கம். இந்த நிகழ்வில் உரையாற்றுமாறு அழைக்கப்பட்டிருந்தேன். நான் மாகாண சபையின் ஆதரவாளன், இன்றைய சூழலில், அதனை விட்டால் வேறு வழியில்லை என்று கருதுபவன். எனது எழுத்துக்களை பின்தொடர்பவர்கள் அனைவரும் இதனை அறிவர். ஏனெனில் வேறு விடயங்கள் பற்றி நம்பிக்கையூட்ட ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. எனக்கும் தெரியாத ஒன்றைப் பற்றி நான் எவ்வாறு வாதிட முடியும்? – இந்த அடிப்படையில் எனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டேன். அதே போன்று ஏனைய பேச்சாளர்களும் தங்களின் அபிப்பிராயங்களை தெரிவித்திருந்தனர். எனது உரையின் போது – ஒரு யுத்தத் தோல்விக்கு பின்னரான அரசியலை கையாளுகின்றோம் என்னும் புரிதல் அவசியம், என்று குறிப்பிட்டிருந்தேன். தோல்விக்கு பின்னரான – என்னும் வாதத்தை அங்கிருந்த சிலரால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
கேள்வி – பதில் நேரத்தில், விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னைநாள் உறுப்பினர் ஒருவர், இங்கே தோல்வியடைந்ததாக கூறப்பட்டது, நாங்கள் தோற்கவில்லை, எங்களைப் பார்த்து பயந்த வல்லரசுகள், எங்களுடைய போராட்டத்தை அழித்தது என்று குறிப்பிட்டார். முன்வரிசையில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் சிலரும் இருந்தனர். விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னைநாள் உறுப்பினர் ஒருவர், அவ்வாறு கூறியது என்னைப் பொறுத்தவரையில் ஆச்சரியமான ஒன்றல்ல – ஏனெனில் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்தவர்கள் எல்லாம் விடயஞானமுள்ளவர்கள் அல்லர். அவர்களில் பலருக்கு என்ன நடந்தது என்பதே சரியாகத் தெரியாது. ஒரு உத்தரவிற்கு கட்டுப்பட்டு செயற்பட்டவர்கள். மேலும் விடுதலைப் புலிகள் அமைப்பில் நீண்ட காலம் இருந்தவர்கள் பலர், எதுவும் பேசுவதில்லை. ஏனெனில் அவர்களுக்கு உண்மை தெரியும்.
ஒரு யுத்தம் பேரழிவில் முடிவுற்ற பின்னர், அது தொடர்பில் சொல்லப்பட்ட கதைகளை விழுங்கிக் கொண்டு, சிந்திப்பவர்களே இன்று முன்னாள் போராளிகள் என்னும் பெயரில் தங்களை வெளிப்படுத்துகின்றனர். இங்கு பிரச்சினை அவர்கள் அவ்வாறு சிந்திப்பது பற்றியதல்ல மாறாக, யுத்தத்திற்கு பின்னர் சரியானதொரு அரசியல் உரையாடலை முன்னெடுப்பதில் தமிழ் கட்சிகள் என்போர் அனைவருமே தோற்றுவிட்டனர் என்பதுதான்.
இறுதி யுத்தம், அந்த யுத்தத்திற்கு பின்னரான அரசியல் கையறு நிலைமை – இவை தொடர்பில் யதார்த்தங்களை முன்வைப்பவர்கள் மீது சீறிப் பாயும் போக்குத்தான் இப்போதும் காணப்படுகின்றது. உண்மைகளை விழுங்கிக் கொண்டு, பொய்களை வர்ணிப்பதையே அறிவு என்று எண்ணிக் கொள்ளும் போக்குத்தான் மேலோக்கியிருக்கின்றது. இப்போதும் துரோகிக் கதைகள், அரசியல் உரையாடல்களில் பெரும் தடையாக இருப்பதாக சில நண்பர்கள் சலிப்படைகின்றனர்.
உண்மைகளை கண்டு அச்சம் கொள்ளுவதும், உண்மைகளை உரைப்பவர்களை விரோதிகளாகப் பார்க்க முற்படுவதையும் காணும் போதெல்லாம், ஒரு வரலாற்றுச் சம்பவமே நினைவுக்கு வருகின்றது. பூமி சூரியனைச் சுற்றிவருகின்றது என்று கலிலியோ கலி வாதிட்ட போது, அது அப்போதைய கத்தோலிக்கச் திருச்சபையோடு முரண்படுகின்றது, வேதாகமத்தோடு மோதுகின்றது, என்றே பார்க்கப்பட்டது. இந்த நிலையில் அப்போது போப்பாண்டவராக இருந்த போப் எட்டாம் ஆர்பன் – கலிலியோவை அழைத்து, நீர் உமது கருத்தை மாற்றி எழுத வேண்டும் என்று கூறினார். அதற்கு பதிலளித்த கலிலியோ, ஜயா, நீங்கள் கூறுவது போன்றே செய்கின்றேன் என்று கூறிவிட்டு, இன்னொன்றையும் கூறினராம் – அதாவது, நான் மாற்றி எழுதிவிட்டால் பூமி சுற்றாமல் விட்டுவிடப் போவதில்லை. அந்த அடிப்படையில் அவருடைய புகழ்பெற்ற வாசம் – “ஆனால் அது சுழல்கிறது” என்று அவர் வாய்க்குள் முணுமுணுத்ததாகவும் வரலாற்றாளர்கள் கூறுகின்றனர்.
பின்னர், கலிலியோ அவருடைய கருத்தை அதிகாரபூர்வதாக திரும்பப் பெறுமாறு கட்டாயப்படுத்தப்பட்டு, வீட்டுக் காவலிலும் வைக்கப்பட்டார். நமது தமிழ்ச் சூழலில் இடம்பெறும் அரசியல் உரையாடல்களும் இப்படியான ஒன்றுதான். அதாவது, தாங்கள் உண்மைகளை புறக்கணித்துவிட்டால், அதுதான் நிரந்தரமானது என்று எண்ணிக் கொள்கின்றனர். ஒன்றை துரோகம் என்று தூற்றிவிட்டால் தாங்கள் வெற்றிபெற்றுவிட்டதாக கற்பனை செய்து கொள்கின்றனர். நிஜம் எதுவோ, அது எப்போதும் நிஜம்தான். நாங்கள் தோற்றுவிடவில்லை என்று சத்தம் போடுவதால், அது உண்மையாகிவிடாது.
அரசியலை கையாளுவதற்கான அடிப்படையே முதலில் யதார்த்தங்களை ஏற்றுக் கொள்வதுதான். அதன். வழித்தடத்தில் பயணிப்பதுதான் -கடந்த காலத்தை வழிகாட்டும் ஒரு ஆசானாக்கிக் கொள்வதுதான். சீனத் தத்துவ ஞானி, கன்பூசியஸ் கூறியது போன்று, நீங்கள் எதிர்காலத்தை வரையறுக்க விரும்பினால் கடந்த காலத்தை படியுங்கள். யதார்த்தங்களை புரிந்து கொண்டு, அதனை மக்களுக்கும் சொல்லுபவர்களால்தான் மக்கள் நன்மையடைய முடியும்.
இப்படி சிந்திக்கும் போது, இந்தியாவில், இஸ்ரேலில் இரண்டாயிரம் ஆண்டுகால கதைகளைக் கூறுகின்றார்களே – அப்படியென்றால், நாங்கள், ஏன் பழம் பெருமைகளை பேசக் கூடாது என்று கேட்பவர்களும் இருக்கின்றனர். அவைகள் பலமான அரசுகள். அவர்களின் பிரச்சினை வேறு. அதாவது, இருக்கும் அதிகாரத்தை எவ்வாறு பேணிப் பாதுகாப்பது என்பது பற்றியது. அதற்கு எதுவெல்லாம் கைகொடுக்கும் என்று அவர்கள் நம்புகின்றார்களோ, அவற்றையெல்லாம் ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துகின்றனர். எங்களுடைய பிரச்சினையோ தப்பிப் பிழைப்பது பற்றியது. எமது தூரநோக்கற்ற செயற்பாடுகளால் பலவற்றை இழந்து நிற்கும் நாம், எவ்வாறு இதிலிருந்து மீண்டு எழப் போகின்றோம் – அதற்கு என்ன வழிகள் இருக்கின்றன என்பதுதான் எங்களின் பிரச்சினை. எனவே நாங்கள் எவருடனும் எங்களை ஒப்பிட்டுக் கொள்ளக் கூடிய இனமல்ல – மாறாக, மற்றவர்களிடமிருந்து எதையெல்லாம் கற்றுக்கொள்ள முடியுமோ – அவற்றையெல்லாம் கற்றுக்கொள்ள வேண்டிய நிலையிலேயே நாம் இருக்கின்றோம்.
2009இற்கு பின்னரான அரசியல் உரையாடல்கள் பெருமளவிற்கு போலித்தனத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றது. அரசியல் கட்சிகளின் தலைவர்களும் சரி, புத்திஜீவிகள் என்போரும் சரி, கருத்துருவாக்கிகள் என்போரும் சரி – ஒரு அரசியல் போலித்தனத்திற்குள் தங்களை வலிந்து இணைத்துக் கொண்டிருகின்றனர். நான் இங்கு குறிப்பிட்ட கூட்டத்திலும் கூட, விடுதலைப் புலிகள் இருக்கின்ற போது, அவர்கள் இதனை ஏற்றுக் கொண்டனர் – அவர்கள் அப்படிக் கருதினர் என்று, எல்லாவற்றிலும் விடுதலைப் புலிகளுக்கு விசுவாசமானவர்களாக தங்களை காண்பித்துக் கொள்ளும் போக்கு மேலோங்கிக் காணப்படுகின்றது. இது எதற்காக?
விடுதலைப் புலிகள் ஆயுத வழியில் மட்டுமே நம்பிக்கை வைத்து இயங்கிய ஒரு அமைப்பு. எவ்வாறானதொரு அரசாங்கத்தை அமைக்கப் போகின்றீர்கள் என்று கேட்டதற்கு – யூகோஸ்லாவிய முறைமைக்கு அமைவான, ஒரு கட்சி ஆட்சியமைப்பு என்று, ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப காலத்திலேயே, பிரபாகரன் கூறியிருந்தார். விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் புரிதலை ஒரு வரியில் கூறுவதனால் இப்படிக் கூறலாம் ஒரு இறைவன் – அவனைப் பயபக்தியோடு போற்றும் மக்கள் கூட்டம் – இதுதான் விடுதலைப் புலிகள் இயக்கம் விரும்பியிருந்த ஆட்சி முறைமை. உண்மை இவ்வாறிருக்கின்ற போது எதற்காக போலித்தனத்தை காவிக் கொண்டு திரிய வேண்டும். விடுதலைப் புலிகளுக்கு விசுவாசமாக இருப்பது என்றால், பிரபாகரனின் நிலைப்பாட்டுக்கு விசுவாசமாக இருப்பதுதான் – இன்று எவராலும் அப்படியிருக்க முடியுமா? அப்படியே இருக்கத்தான் போகின்றீர்கள் என்றால், எப்படி?
விடுதலைப் புலிகள் அமைப்பு என்பது அடிப்படையில், அந்த அமைப்பின் தலைவருடைய விருப்பங்களும் புரிதல்களும், சிந்தனையும்தான். அவருடைய கணிப்புக்கள் தோற்றுவிட்டன. விடுதலைப் புலிகள் அமைப்பின் வழியில் இனி எவருமே பயணிக்க முடியாது. எனவே அந்த விடயம் முடிந்துவிட்டது. அதற்காக அவர்களை தூற்றுவதும் தவறானது. விடுதலைப் புலிகளின் தோல்வியோடு ஒரு விடயம் நிரூபிக்கப்பட்டுவிட்டது. அதாவது, தமிழ் ஆயுத இயக்கங்கள் அனைத்துமே தோற்றுவிட்டன. இப்போது அந்த வலராற்றிலிருந்து நாம் எதைக் கற்றுக் கொள்ளப் போகின்றோம் என்பது மட்டுமே நமக்கு முன்னாலுள்ள யதார்த்தம். இப்போது பிறிதொரு அரசியல் சூழல் நமக்கு முன்னால் இருக்கின்றது. அதனை எவ்வாறு எதிர்கொள்ளுவது, தற்போதைய நிலைமையை எவ்வாறு கையாண்டால், நாம் தப்பிப்பிழைக்க முடியும் என்று சிந்திப்பதும், செயற்படுதும்தான் புத்திசாதுர்யமானது.
தமிழ்ச் சூழலில் ஆக்கபூர்வமானதொரு அரசியல் உரையாடலை முன்னெடுக்க விரும்பினால், முதலில் அனைத்து கட்சிகளும் தங்களுடைய கடந்த கால முரண்பாடுகளை தூக்கியெறிந்துவிட்டு, ஒரு ஜக்கிய முன்னணியாக மாற வேண்டும். ஒட்டுக் குழு – ஒட்டாக் குழு என்று விவாதிக்கும் தகுதியுடன் எவரும் இங்கு இல்லை. ஆயுதப் போரில் ஈடுபட்ட அனைத்து இயக்கங்களுக்கும் ஒரு நரகாசுர பக்கம் உண்டு. இதில் எவரும் உத்தமர்கள் அல்லர். கூடக் குறைய என்று வேண்டுமானால் பேசிக்கொள்ளலாம் – அதுவும் தேவையற்றது. மிதவாதிகளான தமிழரசு கட்சியினரும், தமிழர் விடுதலைக் கூட்டணியினரும் மக்களுக்காக தங்கள் தசையை தராசில் போட்ட சிபிச் சக்கரவர்த்திகளும் அல்லர். உத்தம விவாதம் எவருக்கும் பொருந்தாது. காலம் தங்களுக்குச் சாதகமாக இருப்பதால், சிலர் தங்களை கதாநாயகர்களாகவும், மற்றவர்களை வில்லன்களாகவும் காண்பிக்க முற்படலாம், ஆனால் அனைவருடைய போலி முகத்திரையையும் காலம் கிழிக்கும், காலம் வரும்.
இந்தப் பத்தியாளரும், இன்னும் பலரும் நீண்டாகாலமாக வாதிட்டிருக்கின்றோம். ஒரு ஜக்கிய முன்னணியாகுங்கள். அதற்கு நேர்மையாக இருங்கள். தற்போதிருக்கும் மூத்த தலைவர்கள் என்போர் ஒதுங்கி, புதியவர்களுக்கு இடமளியுங்கள். ஆற்றலுள்ளவர்களை முன்னுக்கு கொண்டுவாருங்கள். அவர்கள் என்ன சாதி, எந்த மாவட்டம், எந்த ஊர், எவருடைய சொந்;தம் என்பதைக் கடந்து சிந்தியுங்கள். அதற்கு இணங்காதவர்களை வெளியேற்றுங்கள். இளைய தலைமுறையாடு அரசியல் உரையாடல் ஒன்றை ஆரம்பியுங்கள். கிராமங்கள் தோறும் நடைப்பயணம் மேற்கொள்ளுங்கள். மக்களுடன் உரையாடுங்கள்.
முதலில், தமிழ் அரசியல் தலைவர்கள் என்போர், ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும், எந்தவொரு அரசியல் நிலைப்பாட்டையும் பேணிப் பாதுகாப்பதற்கு முதலில் மக்கள் உங்களுடன் நிற்க வேண்டும். மக்கள் ஒரு வேளை கடந்த தேர்தலில், அலையில் அள்ளுண்டு போனது போன்று, சென்றுவிட்டால், அதன் பின்னர் எங்களுக்கான அரசியல் நிலைப்பாடு என்று கூறுவதில் எந்தப் பயனும் இல்லை. இதனை விடுத்து, சர்வதேச நீதி, இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் மோதல் வரும், அப்போது இந்தியாவிற்கு நாங்கள் தேவைப்படுவோம், என்றெல்லாம் கதைகள் புனையும் அரசியலால், எதுவும் நடக்காது. தமிழர்களின் மீட்பர்கள் தமிழர்களே தவிர, வேறு எந்தவொரு வெளியாரும் அல்லர்.







