கருணாகரன்
இலங்கையில் இரண்டு விதமான அகழ்வுப்பணிகள் நடக்கின்றன. ஒன்று, இலங்கை அரசு திட்டமிட்டுச் செயற்படுத்துகின்ற தொல்பொருள் அகழ்வுப் பணி. இது பௌத்த சிங்கள மேலாதிக்கத்தை விரிவாக்குவதற்கும் நிலைப்படுத்துவதற்குமான ஏற்பாடு. வடக்குக் கிழக்கு மாகாணங்களில்தான் இந்தப் பணி மும்முரப்படுத்தப்பட்டுள்ளது. இது தேவையில்லாத ஒரு பிரச்சினையும் கூட. இரண்டாவது, மனித உரிமை மீறல்களோடு தொடர்புடையது. காணாமலாக்கப்பட்டு அல்லது அரசியல் முரண்பாடுகள் காரணமாகக் கொன்று புதைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படும் மனிதப் புதைகுழிகளைத் தோண்டுவது.
இதில் மிகப் பெரிய புதைகுழியாக இருப்பது யாழ்ப்பாணம் – செம்மணிப் புதைகுழியாகும். இங்கே இதுவரையில் 417 மனித எலும்புக் கூடுகளும் பாதணிகள், விளையாட்டுப் பொருட்கள், ஆடைகள், கைப்பைகள் போன்ற ஏனைய தடயப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
இந்த அகழ்வினை அரசாங்கம் விரும்பவில்லை. ஆனாலும் அதனால் இதைத் தவிர்க்க முடியாதிருக்கிறது. காரணம், மக்களுடைய விழிப்புணர்வுப் போராட்டங்களும் சர்வதேச அழுத்தங்கள், அவதானிப்புகளுமாகும்.
இதனால் போருக்குப் பிந்தைய அரசியற் சூழலில், செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள், வெறுமனே சான்றுகளைத் தேடும் ஒரு தொழில்நுட்ப நடவடிக்கையாக இல்லாமல், இது பல தசாப்த காலங்களாக மூடிமறைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள், அரசியல் பழிதீர்த்தல்கள் பற்றிய உண்மைகளையும், கூட்டு மனவடுக்களையும் (Collective Trauma) கிளறி, அதன் மூலம் நீதிக்கான போராட்டங்களை நடாத்தக்கூடிய ஒரு தீவிர அரசியல் நிகழ்வாக மாறியுள்ளது.
இது 1990 களின் பிற்பகுதியிலிருந்து யாழ்ப்பாணக் குடாநாட்டில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களின் மௌன சாட்சியாக விளங்கும் பல விடயங்கள் இன்று மேலெழுந்து கொள்வதற்கு இது வாய்ப்பளித்துள்ளது. இதனால், இது சர்வதேச அழுத்தங்களுக்கும் உள்நாட்டுப் பேரினவாதப் போக்குகளுக்கும் இடையிலான ஓர் அரசியல் போர்க்களமாக மாறியுள்ளது எனலாம்.
பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் தொடர்ச்சியான போராட்டங்களும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) கண்காணிப்பும், இந்த அகழ்வுப் பணிகளுக்குச் சர்வதேசப் பரிமாணத்தை வழங்கியுள்ளன. ஆயினும், இலங்கையின் இடைக்கால நீதி (Transitional Justice) மற்றும் பொறுப்புக்கூறல் செயல்முறையானது, உண்மையான அரசியல் விருப்பத்துடன் நகர்கிறதா அல்லது வெறும் சர்வதேச மதிப்பைக் காப்பதற்கான ஒரு தற்காலிக அரசியல் சடங்காகச் சுருங்கிப் போகிறதா என்ற தார்மீகக் கேள்வியை இந்தச் செம்மணி விவகாரம் மீண்டும் உலக அரங்கில் எழுப்பியுள்ளது.
இலங்கையில் இதுவரையில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழிகளில் இது மிகப் பெரிய ஒன்றாகச் சொல்லப்படுகிறது. இதனால் தவிர்க்க முடியாமல் இந்த விடயத்தில் தானும் பொறுப்புடன் நடந்து கொள்கிறேன் என்று NPP அரசாங்கம் வெளிப்படுத்த முயற்சிக்கிறது. என்பதால்தான் தொடர்ந்து நடைபெற்றுவரும் மீட்புப் பணிகளையும் அந்த இடத்தையும் பார்ப்பதற்காக இலங்கையின் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, கடந்த 19.06.2026 அன்று செம்மணிக்கு விஜயம் செய்திருந்தார். அப்போது, “இரண்டு ஆண்டுகளுக்குள் அரசாங்கம் இதற்கான ஒரு நீதி விசாரணையை நடத்தி, உரிய தீர்வைத் தரும்” என்று அமைச்சர் கூறியிருக்கிறார். ஆனால், அப்படி நீதி விசாரணைகள் நியாயமான முறையில், நம்பகத்தன்மையோடு நடக்குமா என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை.
இலங்கையின் அரசியல் வரலாற்றில், தமிழ்பேசும் மக்களுக்கு இழைக்கப்பட்ட எத்தகைய அரசியல் அநீதிகளுக்கும் எத்தகைய நீதி வீசாரணைகளும் நேர்மையோடு நடத்தப்பட்டதுமில்லை, தீர்வோ நிவாரணமோ வழங்கப்பட்டதுமில்லை. எனவே ஹர்ஷன நாணயக்காரவின் வார்த்தைகளுக்கும் எத்தகைய உத்தரவாதங்களுமில்லை.
இதேவேளை இவ்வளவு தொகையான என்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. அதுவும் யாழ்ப்பாண நகரத்துக்கு அண்மையில். இருந்தாலும் அது யாழ்ப்பாணச் சமூகத்தையோ தமிழ்ச் சமூகத்தையே பெரிதாக உலுக்கியதாக இல்லை என்றே கூறவேண்டியுள்ளது. ஏனென்றால், இதைக் குறித்து யாழ்ப்பாணத்தில் பெரிய அதிர்வுகள் எதையும் காணவில்லை. இதெல்லாம்
நடந்த ஒரு விடயம். காலம் கடந்த பின் எலும்புக் கூடுகளைத் தோண்டி எடுப்பதால் என்ன பயன்?” என்று சிலர் கருதுலாம். என்பதால்தான் அவ்வப்போது வெளியாகிக் கொண்டிருக்கும் தடயச் செய்திகளை
ஊடகங்கள் புள்ளிவிவரங்களாக வெளியிட, அதைப் படித்துக் கடந்துபோகும் உளநிலையில்தான் பலரையும் காண்கிறோம். ஆனால், குறித்த உறவினர்களுக்கும் மனித உரிமையாளர்களுக்கும் மனித குலத்துக்கும் இது மிகப் பெரிய கவனத்திற்குரிய ஒன்றாகும்.
யாழ்ப்பாணத்தை 1994 இல் இலங்கை இராணுவம் ஆக்கிரமிப்புச் செய்த காலத்திலும் 2006 இல் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் முறிவடைந்தபோதும் பல நூற்றுக்கணக்கானோர் காணாமலாக்கப்பட்டனர்; கைது செய்யப்பட்டனர். இந்தக் கட்டுரையாளரின் நண்பர்கள், அவருக்குத் தெரிந்த குடும்பங்களின் உறுப்பினர்கள் கூட கடத்தப்பட்டும், காணாமல் ஆக்கப்பட்டும் உள்ளனர். அவர்களில் பலருடைய நிலை இன்றுவரையில் தெரியாது.
ஆனால், 1996இல் கிரிஷாந்தி என்னும் பாடசாலை மாணவியும் அவருடைய குடும்பத்தினரும் படையினரால் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பிரதான சந்தேக நபரான லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ செம்மணியில் 400 க்கு மேற்பட்டவர்கள் கொன்று புதைக்கப்பட்டனர் என்று தெரிவித்திருந்தார். இருந்தும் இதற்குப் பின்னர் கூட அந்தப் பகுதியில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கவில்லை.
2025 பெப்ரவரி மாதத்தில், நல்லூர் பிரதேச சபையினரால் செம்மணி – சிந்துபாத்தி மயானப் பகுதியில் வடிகால் அமைப்பு மற்றும் அபிவிருத்திப் பணிகளுக்காகக் குழிகள் வெட்டப்பட்டபோது, தற்செயலாகப் பல மனித எலும்புச் சிதிலங்கள் வெளியே வந்தன. அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளே பின்னர் வெளிவந்து கொண்டிருக்கும் இன்றைய உண்மைகள். இதைக் கவனப்படுத்துவதில் சில ஊடகர்களும் ஊடகங்களும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கம் மற்றும் தமிழ் சிவில் அமைப்புகள் போன்றன முக்கியமாக இருந்தாலும் சமூக அடிப்படையில் இது போதாது.
ஆனாலும் சில போராட்டங்களை மக்கள் அமைப்புகள் இணைந்து நடாத்தியுள்ளன. குறிப்பாக 2026 ஜூன் 19 அன்று நீதி அமைச்சர் செம்மணிக்குச் சென்றபோது, பாதிக்கப்பட்ட குடும்பங்கள் A9 பிரதான வீதியை மறித்து “நீதி இல்லாத நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு?” என்ற கேள்விகளை எழுப்பியிருந்தனர்.
இதற்குமுன் ‘சம உரிமைக்கான இயக்கம்’ போன்ற அமைப்புகள் தமிழ் மற்றும் சிங்கள முற்போக்காளர்களை ஒன்றிணைத்து யாழ்ப்பாணத்தில் போராட்டம் நடத்தி, செம்மணி உண்மைகளை மூடிமறைக்கக் கூடாது என வலியுறுத்தின. 2025 ஜூன் 25 இல் ஐநா மனித உரிமைகள் உயர் ஆணையர் வோல்கர் டர்க் (Volker Turk) செம்மணி மனித புதைகுழிப் பகுதிக்கு நேரில் விஜயம் செய்திருந்தார். அப்பொழுது மக்கள் போராட்ட இயக்கத்தால் “அணையா விளக்கு” போராட்டம் நடைபெற்றது. அவரது வருகையை ஒட்டி இளையோர் மற்றும் சிவில் சமூக அமைப்புகளால் ஜூன் 23 முதல் ஜூன் 25 வரை மூன்று நாட்களுக்குத் தொடர்ச்சியாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இருந்தாலும் இவை போதாது மட்டுமல்ல, தொடர்ச்சியற்றவையும் கூட.
ஆனால், இந்தப் புதைகுழி விவகாரத்தை தமிழ்த்தரப்புகள் சரியாகக் கையாண்டால், அது அரசாங்கத்துக்கு பாரிய நெருக்கடியைக் கொடுப்பது மட்டுமல்ல, இலங்கைப் படையினரின் மனித உரிமை மீறல்களுக்கான தண்டனையை அளிப்பதற்கான அடிப்படையையும் உருவாக்கும். ஏனென்றால், இது சட்டரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் பலமான ஒன்றாகியுள்ளது.
யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றம் இந்த இடத்தை அதிகாரப்பூர்வமாக ஒரு மனிதப் புதைகுழியாக பிரகடனப்படுத்தி, தொடர் அகழ்வுகளுக்கான சட்டபூர்வ உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அகழ்வுப் பணிகளுக்கான நிதிக்குக்கூட விரும்பியோ விரும்பாமலோ
அரசாங்கம் ஒப்புதல் அளித்திருக்கிறது. ஆகவே இவை இரண்டும் சட்டரீதியாகப் பலமானது. ஐ.நா. மனித உரிமையாளரின் கள விஜயமும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் அவதானிப்பும் சர்வதேசக் கவனத்திற்குரியவை. ஆகவே இது சர்வதேச ரீதியாகவும் கவனத்திற்குரியதாகிறது.
ஆனாலும் கடந்த காலங்களில் புதைகுழிகளை விசாரித்த நீதிவான்கள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டதும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) மந்தகதியான போக்கும் நடைமுறைத் தடைகளாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. அத்துடன், அரசு நிதியை விடுவிக்க தாமதித்ததால் 2025 செப்டம்பர் முதல் 07 மாதங்கள் அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன. ஆகவே என்னதானிருந்தாலும் அரசாங்கம் இந்த அகழ்வில் சூழ்ச்சித்தனமாகவே நடந்து கொள்கிறது என்று புரிகிறது.
என்பதால்தான் தமிழ் தேசியக் கட்சிகள் ஓரளவுக்கு இந்த விடயத்தில் ஒருமுகமாக நின்று குரல் கொடுக்க வேண்டியுள்ளது. இப்போது ஓரளவுக்கு இந்த நிலை உண்டு. ஆனால், அவற்றின் அழுத்தமும் வலுவும் போதாதுள்ளது. “செம்மணி மனிதப் புதைகுழிகள் தமிழினப் படுகொலைக்கான ஆதரமாக மாறக்கூடிய ஒன்றாகவும் அது ஒரு நீதி விவகாரமாகவும் இருப்பதால், இதனைத் தமிழ்த்தரப்பு உரிய வகையில் சர்வதேச விசாரணைக்கு அழுத்தம் கொடுத்தால், அது தமிழர்கள் மீது இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான நீதியைப் பெற்றுத் தருவதற்கான ஒரு திறப்பைத் தரும்” என்று தமிழரசுக் கட்சியின் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்திருக்கிறார். அம்னெஸ்டி இன்டர்நேஷனல் (Amnesty International) போன்ற அமைப்புகள் இதற்குப் பூரண ஆதரவு வழங்குகின்றன.
ஆனால், இலங்கையில் அதிகாரத்திலிருந்த அரசாங்கங்கள் இந்த அகழ்வில் ஆரம்பத்திலிருந்தே நேரடியான சர்வதேச தலையீடுகளை மறுத்து வருகின்றன. அத்துடன் தென்னிலங்கையின் பெரும்பான்மைவாத அரசியல் சக்திகளும், இராணுவக் கட்டமைப்பும் இத்தகைய அகழ்வுப் பணிகளைத் தங்களின் வீரியமிக்க ‘இராணுவப் பிம்பத்திற்கு’ (Military Image) ஏற்படும் அச்சுறுத்தலாகவே பார்க்கின்றன. இதனால், அகழ்வுப் பணிகளைத் தொடங்குவதில் காட்டும் வேகம், அதற்கு வழங்கப்படும் ஒத்துழைப்புகள் போன்றவை அதனைத் தர்க்கரீதியான இறுதிப் புள்ளிக்குக் கொண்டு சேர்ப்பதில் இருப்பதில்லை.
நீதிமன்ற உத்தரவுகள், நிபுணத்துவக் குழுக்களின் நியமனங்கள் என அனைத்தும் சட்ட ரீதியாக நகர்வது போலத் தோன்றினாலும், போதிய நிதி ஒதுக்கீடின்மை, தடயவியல் நிபுணர்களுக்கான பாதுகாப்புச் சவால்கள், நிர்வாகத் தாமதங்கள் போன்றவற்றின் மூலம் இந்த ஒட்டுமொத்த செயல்முறையும் உள்நாட்டிற்குள் முடக்கப்படுகிறது. இதற்கான விசாரணைகள் படைத்தரப்பின் மனித உரிமை மீறல்களில் கொண்டுபோய் நிறுத்தும் என்று இவை கருதுவதே இதற்கான காரணமாகும். இதனால், இது நாட்டின் இறையாண்மைக்கும் தேசிய பாதுகாப்பிற்கும் பாதிப்பு என தென்னிலங்கை அரசியல் தரப்புகள் வழமையைப்போலச் சொல்கின்றன.
சர்வதேச விசாரணைகளையும் தலையீடுகளையும் மறுப்பவர்கள், உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை விரைவுபடுத்தி, அதைச் சுயாதீன முறையில் நேர்மையாகவும் நீதியாகவும் நடத்திக் காட்ட வேண்டும். அதற்கு அவர்கள் தயாரில்லை. எனவேதான் நீதியான உள்நாட்டு விசாரணைக்கு வாய்ப்பில்லை என்று உறுதியாகச் சொல்கிறோம். ஏனென்றால், தமிழ்பேசும் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இதுவரையான எந்த அநீதிக்கும் எத்தகைய நீதியையும் நேர்மையான விசாரணைகளையும் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு நிவாரணமளிக்கவில்லை. ஆகவே உள்நாட்டு நீதிப்பொறிமுறையில் தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்து சர்வதேச நீதி விசாரணையையே கோர வேண்டியுள்ளது.
தற்போது நடைபெறுகின்ற இந்த அகழ்வுப்பணிகள் கூட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை (UNHRC), சர்வதேச மனித உரிமை அமைப்புகள் இலங்கை மீது செலுத்தும் அழுத்தங்களின் விளைவாகவே நடைபெறுகின்றன. இதனை மேலும் நாம் அழுத்தப்படுத்த வேண்டும். அது இயலும்.
நாடாளுமன்றத்திற்குள்ளும், உள்ளூர் மட்டத்திலும் அகழ்வுப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு, தடயவியல் நிபுணர்களின் பாதுகாப்பு மற்றும் சாட்சிகளின் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து சட்ட ரீதியான அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும்.
எந்தச் சூழலிலும் தமிழ்த்தேசியவாத அரசியற் கட்சிகள் இதனை வெறும் தேர்தல் கால பிரச்சாரப் பொருளாகவோ அல்லது உணர்ச்சி அரசியல் பேசுவதற்கான கருவியாகவோ சுருக்கிவிடக் கூடாது. பதிலாக இதை அவை தமிழர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அரசுக்குக் கொடுக்கும் அழுத்தமாகக் கையாள வேண்டும். இப்பொழுது தமிழ்த்தரப்புக்கு இவ்வாறான விடயங்களே அரசாங்கத்துக்கான அழுத்தத்தையும் சர்வதேச ரீதியான நெருக்கடியையும் கொடுக்கக் கூடிய பொறிகளாக உள்ளன. இவ்வாறான விடயங்களுக்குப் பொறுப்புக் கூறாமல் அரசு தவறுவது கடினமாகும். எனவே இதைப் புரிந்து கொண்டு தமிழ்த்தரப்பினர் பொறுப்போடும் விவேகத்தோடும் செயற்படுவது அவசியமாகும்.
நாம் மேற்படி விவரங்களுக்குப் பின்னுள்ள மேலும் சில ஆழமான உண்மைகளையும் உணர்வுகளையும் இங்கே பார்க்க வேண்டும். அதுதான் இந்த மாபெரும் மனித உரிமை மீறல் விடயத்தில் அக்கறையற்ற சமூகநிலையை மாற்றுவதற்கும் தமிழ் அரசியற் தரப்புகளின் அடுத்த கட்டச் செயற்பாடுகளுக்குத் தூண்டுவதற்கும் உதவும். அப்படிச் செய்யவில்லை என்றால், இந்த விவகாரமும் கால நீட்சியில் கைவிட்ட ஒன்றாகி விடும்.
உண்மையில், செம்மணி விவகாரத்தின் மிக உறைப்பான பக்கம் என்பது பாதிக்கப்பட்ட மக்களின் தரப்பில் தேங்கிக்கிடக்கும் ஆறாத துயரமும் ஏமாற்றமுமாகும். செம்மணி என்பது வெறும் ஒரு புவியியல் பகுதியோ அல்லது ஒரு குற்றவியல் நிருபணக் களமோ அல்ல; அது மூன்று தசாப்தங்களுக்கும் மேலாகத் தொடரும் பாதிக்கப்பட்ட மக்களுடைய கூட்டு மனவடுக்களின் (Collective Trauma) வாழும் சாட்சியமாகும்.
இதனால்தான் ஒவ்வொரு முறை செம்மணியில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்படும் போதும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாயாரும் உறவினர்களும் தங்களின் எஞ்சிய வாழ்நாளுக்குள் உண்மை தெரிந்துவிடாதா என்ற ஏக்கத்துடன் அந்த மண்ணை நோக்கி ஓடுகிறார்கள். மறுபக்கத்தில் இந்த அகழ்வாராய்ச்சிகள் அனைத்தும் முறையான சர்வதேசத் தரத்துடனோ அல்லது பாதிக்கப்பட்ட மக்களின் பங்களிப்புடனோ நடத்தப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடக்கம் முதலே வலுவாக உள்ளன.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவைப்படுவது அரசியல் லாபங்களுக்காக அவ்வப்போது நடத்தப்படும் கண்துடைப்பு நாடகங்கள் அல்ல. மாறாக, தங்கள் பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மை. அதற்கான நியாயம். அதற்கான நிலைமாறுகால நீதி (Transitional Justice) மட்டுமே. அதை அரசாங்கம் செய்வதற்கான எந்த நம்பிக்கையும் இல்லை. அதற்கான சாயல்களே கண்ணுக்குத் தெரியவில்லை.
இன்று செம்மணி மனிதப் புதைகுழி விவகாரமானது இலங்கையின் போருக்குப் பிந்தைய நல்லிணக்கச் செயல்முறையின் (Reconciliation) உண்மையான யோக்கியதையை உரசிப் பார்க்கும் ஒரு முக்கிய காரணியாக நமக்கு முன்னே உள்ளது. இதனை நாம் சவாலுக்குட்படுத்துவதே அரசியல் வெற்றியும் நீதியைப் பெறுவதற்கான வழியுமாகும்.
ஆகவே, மனிதப் புதைகுழிகளை அகழ்வது என்பது வெறும் எஞ்சிய தடயங்களை மீட்டெடுக்கும் ஒரு சடங்காக (Ritual) நின்றுவிடக் கூடாது. அது கடந்தகாலக் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலையும், பாதிக்கப்பட்ட சமூகத்திற்கான தார்மீக நீதியையும் நோக்கிய நேர்மையான பயணமாக மாற வேண்டும். மாற்றப்பட வேண்டும்.
உள்நாட்டு அரசியல் வாக்கு வங்கிக் கணக்குகளுக்காகவும், சர்வதேச சமூகத்தின் தற்காலிகக் கண் துடைப்பிற்காகவும் விசாரணைகளையும் அகழ்வுகளையும் அரசாங்கம் இழுத்தடிப்பது, பாதிக்கப்பட்ட மக்களின் கூட்டு மனவடுக்களை மேலும் ஆழமாக்குமே தவிர, ஒருபோதும் நிலையான அமைதியைக் கொண்டுவராது. முறையான சர்வதேசக் கண்காணிப்பு, தடயவியல் நிபுணத்துவம், அரசியல் தலையீடற்ற நீதித்துறை ஆகியவற்றின் மூலமே செம்மணியின் உண்மை வெளிவர முடியும்.
கடந்த காலத்தின் கொடூரமான பக்கங்களை நேர்மையுடன் எதிர்கொள்ளத் துணியாத எந்தவொரு நாடும், எந்தச் சமூகமும் ஆரோக்கியமான ஜனநாயக எதிர்காலத்தை நோக்கி நகர முடியாது. ஜனநாயகத்தை நோக்கி நகரமுடியாத எந்த நாடும் முன்னேற்றத்தை எட்டவும் முடியாது. அரசியல் அமைதியையும் வெற்றியையும் பெறவும் முடியாது. மட்டுமல்ல, வெளி அழுத்தங்கள், நிர்ப்பந்தங்களுக்குட்படாமல் சுயாதீனமாகப் பயணிக்கவும் முடியாது. நடந்தவற்றுக்குப் பரிகார நீதியைக் காண்பதென்பது உயரிய பண்பாட்டுச் செயலும் நீதியின் பாற்பட்ட மாண்புப் பணியுமாகும். எனவே, செம்மணி அகழ்வுகள் வெறும் அரசியல் சதுரங்கக் காய்களாக சுருக்கப்படாமல், தமிழ் மக்களின் தசாப்த கால நீதிக்கான போராட்டத்திற்கு நியாயமான பதிலை வழங்கும் ஒரு திருப்புமுனையாக அமைய வேண்டும். அதுவே, இந்தத் தீவில் உண்மையான நல்லிணக்கத்திற்கும் அமைதிக்கும் அடித்தளமாக அமையும். ஆனால் இந்த உண்மை தெரிந்தாலும் இலங்கை அரசோ, சிங்கப் பெரும்பான்மை மனப்பாங்கோ இதைச் செய்வதற்கு இடமளிக்காது. இதுதான் துயரமும் வெட்கக் கேடுமாகும். இதைக்குறித்துச் சிங்களச் சமூகத்தினர் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். (இவ்வாறு தமிழ்த்தரப்பும் பொறுப்புடன் சிந்திக்க வேண்டிய விடயங்களும் பரிகாரம் காணவேண்டிய பக்கங்களும் உள்ளன என்பதையும இந்தக் கட்டுரை ஒப்புரைக்கிறது).
ஆகவே, இதனை தமிழ் அரசியல் கட்சிகளும் இலங்கையின் மனித உரிமைவாதிகளும், தமிழ்ச் சிவில் சமூகமும் உரிய முறையில் முன்னெடுக்க வேண்டும். அதற்கான வேலைத்திட்டமொன்றை வரைந்து கொள்வது அவசியம். அதில், செம்மணி விவகாரம் தொடர்பான சாட்சியங்கள், முந்தைய நீதிமன்ற அறிக்கைகள், தற்போதைய அகழ்வுத் தரவுகளை எல்லாம் எந்தவிதமான அரசியல் கலப்புமின்றி, துல்லியமாக ஆவணப்படுத்த வேண்டும். எதிர்காலத்தில் சர்வதேச நீதிமன்றங்களில் இவை முதன்மைச் சான்றுகளாக மாற்றப்படக் கூடிய அடிப்படைகளை இந்த ஆவணம் கொண்டிருக்க வேண்டும். அத்துடன் இந்த விடயத்தில் அரசியல்வாதிகள் மேடை ஏறுவதை விட, முன்னிலைப்படுவதை விட அல்லது முன்னிலைப்படுத்தப்படுவதை விட பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உண்மையான கோரிக்கைகளையும் அவர்களின் கூட்டு மனவடுக்களையும் பொதுவெளிக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கும் வேலைகளைச் சிவில் அமைப்புகள் முன்னெடுக்க வேண்டும். இதில் ஊடகங்களும் சமூக வலைத்தளப் பதிவர்களும் பொறுப்புணர்வோடு செயற்படுவது அவசியம். அவரவருக்குத் தோன்றும் வகையிலோ அவரவர் கொண்டிருக்கும் அரசியல் விருப்பு வெறுப்புகளின் அடிப்படையிலோ செயற்படாமல் பாதிக்கப்பட்டோருக்கான நீதியைப் பெறுதல் என்ற அடிப்படையில் ஒரு கூட்டுச் செயற்பாட்டில் இருக்கிறோம் என்ற உணர்வுடன் செயற்படுவது அவசியமாகும்.
தமிழ் அரசியற் கட்சிகள் வெவ்வேறு அரசியல் அணிகளாகப் பிரிந்திருந்தாலும், மனிதப் புதைகுழி மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், நிலமீட்பு, அரசியற் கைதிகள் விடுதலை போன்றவற்றிலும் பாதிக்கப்பட்டோருக்கான நீதிகோரல், அரசியற் தீர்வு போன்றவற்றில் அனைத்துத் தரப்புகளும் ஒருமித்த குறைந்தபட்சக் கொள்கை அடிப்படையில் (Common Minimum Program) ஒன்றிணைந்து நிற்க வேண்டும்; குரல் கொடுக்க வேண்டும்.
ஏனென்றால், இலங்கையின் பேரினவாத ஆதிக்கச் சூழலும் தற்போதைய மனித உரிமைச் சூழலும் உள்நாட்டுப் பொறிமுறைகள் (Domestic Mechanisms) எல்லாவற்றையும் பலவீனமாக்குவன. எனவே, உள்ளூர் தடயவியல் துறையினருக்கு இருக்கும் அரசியல் மற்றும் நிர்வாக அழுத்தங்களை முறியடிக்க, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் மூலமாக சர்வதேச தடயவியல் நிபுணர்கள், சர்வதேசக் கண்காணிப்பாளர்களின் நேரடிப் பங்களிப்பைக் கோர வேண்டும். மனித உரிமை சட்டத்தரணிகள் ஊடாக இந்த அகழ்வுப் பணிகளை சுயாதீனமான நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் (Judicial Oversight) கொண்டு வருவதற்கான சட்டப் போராட்டங்களை தீவிரப்படுத்த வேண்டும்.
அடுத்ததாக, புலம்பெயர் மக்கள் தாங்கள் வாழும் நாடுகளின் (UK, கனடா, ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, ஆஸ்திரேலியா) நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வெளியுறவுக் கொள்கை வகுப்பாளர்கள் மூலம் செம்மணி அகழ்வு விவகாரத்தை சர்வதேச விவாதப் பொருளாக வைத்திருக்க வேண்டும்.
சுருக்கமாகக் கூறின், “உள்நாட்டில் சிவில் சமூகத்தின் ஆவணப்படுத்தல் + அரசியல் தரப்புகளின் சட்டப் போராட்டம் + புலம்பெயர் சமூகத்தின் சர்வதேச அழுத்தம்” என்ற இந்த மூன்று முனைகளும் இணையும் போதுதான், செம்மணி அகழ்வு விவகாரத்தை இலங்கை அரசு ஒரு சாதாரண சடங்காகக் கடந்துவிட முடியாதிருக்கும். இதுவே இந்த விவகாரத்தை ஒரு சர்வதேச அளவிலான, பெறுமதியான தீர்வை நோக்கி நகர்த்துவதற்கான சிறந்த வழியாகும்.
ஏனென்றால், 1990-களின் பிற்பகுதியிலிருந்து யாழ்ப்பாணக் குடாநாட்டில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களின் சாட்சியாகவே இந்தப் புதைகுழி பார்க்கப்படுகிறது. பல தசாப்தங்களாகத் தங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் தவிக்கும் குடும்பங்களுக்கு, இந்த அகழ்வுப் பணிகள் ஒரு தீர்க்கமான “உண்மை அறியும்” (Truth seeking) புள்ளியாக அமைகிறது.
ஆகவே செம்மணி அகழ்வு என்பது வெறும் மண்ணைத் தோண்டுவதோ, உக்காத எலும்புக்கூடுகளை மீட்டுப்பார்ப்பதோ அல்ல; அது தமிழ் மக்களின் கூட்டு மனவடுக்களையும் (Collective Trauma), இன்னும் ஆறாத போர்க்கால நினைவுகளையும் அரசியல் பெறுமானமாக்கி, தீர்வைக் காண்பதற்கான திறப்பை உருவாக்கும் ஒரு கருவியாகும். இந்தக் கருவியைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வது தமிழ்ச் சமூகத்தின் பொறுப்பும் திறனுமாகும். ஆம், இன்னொரு பொறுப்புணர்வின் முன்பாகவும் சவாலின் முன்பாகவும் தமிழ்ச்சமூகம் நிறுத்தப்பட்டுள்ளது. என்பதால், இன்னொரு சதுரங்க ஆட்டத்தில் தமிழர் தரப்பும் இலங்கை அரசும் நிற்கின்றன. வரலாறு இரண்டு தரப்பையும் நிறுத்தியுள்ளது.







