தமிழர் வரலாற்றை அழிக்கும் முயற்சி – கன்னியா வெந்நீருற்றில் புத்தவிகாரைக்கா அடிக்கல்!

 

திருகோணமலை கன்னியா வெந்நீருற்று பகுதியில் அடிக்கல் நாட்டப்பட்ட விவகாரம் புத்தவிகாரை அமைக்கப்படுவதற்கா? இது தமிழரின் வரலாற்றை அழிக்கும் முயற்சி என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

 

திருகோணமலை கன்னியா வெந்நீருற்று பகுதியில் தொல்பொருள் இடங்களை புனரமைப்பு செய்யும் நோக்குடன் இன்று அடிக்கல் நாட்டப்பட்டது.

 

தொல்பொருள் திணைக்களத்தினரால் இன்று காலை 10.20 மணியளவில் அடிக்கல் நாட்டப்பட்டது.

 

இதன்போது திருக்கோணமலை மாவட்ட அரசாங்க அதிபர், தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள், பொலிஸார் எனப் பலர் கலந்து கொண்டனர்.

 

கன்னியா வெந்நீர் ஊற்றுக்கு அருகில் உள்ள தொல்பொருள் ஆய்வு மேற்கொள்ளும் இடத்தில் புத்த விகாரை கட்டுவதற்காகவே அடிக்கல் நாட்டப்படவுள்ளது என வெளியான தகவலுக்கமைய இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

 

இதனால் தமிழர்களின் வரலாறு மழுங்கப்படவுள்ளதாக தெரிவித்து பல அரசியல் பிரமுகர்கள் விசனம் வெளியிட்டு வருகின்றனர்.

 

இது தொடர்பில் இலங்கைத் தமிழ் அரசு கட்சியின் உறுப்பினர் குமார் ஜெயக்குமாரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவிக்கையில்,

 

அனைவரையும் சமமாக நடத்துகிறோம் என்று கூறிக்கொண்டு, உள்மனதில் தனித்த அரசியல் நோக்கங்களை முன்னெடுத்த கடந்தகால அரசுகளைப் போலவே செயல்படும் எந்த அரசையும் நாம் எச்சரிக்கையுடன் அணுக வேண்டும் .

 

எமது அடையாளம், கலாசாரம், வரலாறு ஆகியவற்றை அழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் போதெல்லாம், எமது முன்னோர்கள் தலைமுறை தலைமுறையாகப் பாதுகாத்து வந்த தமிழர் பாரம்பரியமும் வரலாற்றுச் செல்வமும் நினைவுக்கு வருகிறது.

 

அந்த மரபையும், அதற்கான அறிவையும், அதனுடன் தொடர்புடைய எமது நிலங்களையும் பாதுகாத்து, வருங்காலத்தில் எமது பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளிடம் ஒப்படைப்பது எமது பொறுப்பாகும்.என்று தெரிவித்தார்.

 

இதேவேளை கன்னியா வெந்நீருற்றுப் பகுதியில் இன்று அடிக்கல் நாட்டப்பட்டைமை புத்த விகாரைக்கா என்று பல தரப்பிலும் கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

Share this article

More News