
1984 களில் கிராமம் கிராமமாக ஈழவிடுதலைப் போராட்டம் ஏன்? சமூகவிடுதலை யின் அவசியம் என்ன? சமூக விடுதலையும் ஈழதேசியமும் , மக்கள் அணிதிரளும் ஈழவிடுதலைப்போர், பெண்விடுதலை யின் அவசியம் என்பது பற்றியெல்லாம் நல்லாசிரியனாக அரசியல் வகுப்புகளை சலிக்காமல் நடத்திக்கொண்டிருந்தவர் தோழர் ரமணி என்கிற ஜோதிலிங்கம்.
எமது இயக்கமான ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியின் [ EPRLF] தோழர்களான சேகர், செழியன், தாஸ் ஆகியோரோடு பலதடவை அவரை நான் சந்தித்திருக்கிறேன்.
காலமாற்றங்களில் நீண்ட இடைவெளியில் நான் இலங்கை வந்தபோது அவரது பெயரோடு ஒட்டியிருந்த தோழர் ரமணி எனும் பெயர் விலகி தமிழ்த் தேசிய அரசியல் பாதைக்குள் தன்னை பிணைத்தபடி அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கமாகவே தனது அரசியல் பணிகளை தொடர்ந்து கொண்டிருந்தார்.
தற்பொழுது ஒரு சட்டத்தரணியாகவும் தன்னை தகவமைத்துக் கொண்டிருந்தார்.
மிகுந்த எளிமையான அமைதியான தோற்றமுடைய பண்புடைய தோழர் ஜோதிலிங்கம் அவர்களின் ஆய்வுக் கட்டுரைகள் தமிழ்த்தேசிய அரசியலுக்கு மிகுந்த பலம் சேர்ப்பனவாகவே அமைந்தவை. தமிழ்த்தேசியத்தின் மீது மாறாத பற்றுக்கொண்டிருந்த அதற்காக ஓயாது உழைத்த ஒரு உண்மைத் தோழனை தமிழ்தேசிய அரசியல் இழந்துள்ளது.
அவரது இழப்பில் துயருறும் ஒவ்வொருவரோடும் நாமும் இணைகின்றோம்.
அவரது ஆத்மா இறைமடி இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.
போய்வாருங்கள் தோழர் .உங்கள் நினைவுகள் எம்மோடு என்றும் இருக்கும்.
தோழர் குகன்







