அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கான சட்டமூலம் என்பவற்றுக்கு எதிராக பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை இணைந்து முன்னெடுப்பதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி என்பன இணங்கியுள்ளன.
இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி என்பவற்றின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு செவ்வாய்கிழமை (28) யாழில் உள்ள சுரேஷ் பிரேமசந்திரனின் இல்லத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சி சார்பில் அதன் சி.வி.கே.சிவஞானம் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி சார்பில் சுரேஷ் பிரேமசந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், இரட்ணலிங்கம், வேந்தன் மற்றும் சந்திரகுமார் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
இரு தரப்பினருக்கும் இடையிலான மாதாந்த சந்திப்புக்களின் நீட்சியாகவே இச்சந்திப்பு இடம்பெற்றதாகச் சுட்டிக்காட்டிய இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், உள்ளுராட்சி மன்றங்களில் இரண்டு தரப்புக்களின் உறுப்பினர்களும் இணைந்து செயலாற்றவேண்டும் என்ற அறிவுறுத்தலை இருதரப்பு உறுப்பினர்களுக்கும் வழங்குவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
அதேபோன்று அண்மையில் அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கான சட்டமூலம் என்பவற்றுக்கு எதிராக இருதரப்பினரும் இணைந்து பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுப்பது குறித்தும் இதன்போது இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை மாகாணசபைத்தேர்தல்கள் தொடர்பான பாராளுமன்ற விசேட செயற்குழுவினால் சகல அரசியல் கட்சிகளினதும் செயலாளர்களை வௌ;வேறு தினங்களில் சந்திப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், இதன்போது மாகாணசபைத்தேர்தல்கள் உடனடியாக நடாத்தப்படவேண்டும் என்றும், மாகாணசபைத்தேர்தல் முறைமை தொடர்பில் ஆராயும் செயன்முறையை சமாந்தரமாகத் தொடரமுடியும் என்றும் வலியுறுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.
மேலும் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம், மனிதப்புதைகுழி விவகாரம், மயிலத்தமடு-மாதவனை மேய்ச்சல் தரை பிரச்சினை, காணி விடுவிப்பு என்பன உள்ளடங்கலாக தமிழ் மக்கள் முகங்கொடுத்துவரும் பிரச்சினைகள் குறித்தும், அவற்றுக்குத் தீர்வுகாண்பதை இலக்காகக்கொண்டு ஒன்றிணைந்து செயலாற்றுவது குறித்தும் இச்சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







