இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கென அதிகாரிகளுக்குப் பரந்துபட்ட அதிகாரங்களை வழங்கும் அதேவேளை, நபர்களின் மனித உரிமைகளை மீறும் வகையில் அரசாங்கத்தினால் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கான சட்டமூலம் உடனடியாக வாபஸ் பெறப்படவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது.
இலங்கை சுற்றுலா
அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கான சட்டமூலம் தொடர்பில் சர்வதேச மன்னிப்புச்சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
அரசாங்கத்தினால் கடந்த 6 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கான சட்டமூலமானது பலவந்தமாகப் பெறப்பட்ட வாக்மூலத்தை நீதிமன்றத்தில் சாட்சியமாக ஏற்றுக்கொள்வதற்கும், சந்தேகநபர்களை விசாரணையின்றி இரண்டு ஆண்டுகள் வரை தடுப்புக்காவலில் வைப்பதற்கும், நீதிமன்ற நடவடிக்கைகள் பற்றி ஊடகங்கள் செய்தி வெளியிடுவதைத் தடுப்பதற்கும் இடமளிக்கக்கூடிய சரத்துக்களை உள்ளடக்கியுள்ளது.
அதுமாத்திரமன்றி பொலிஸார் பிடியாணையின்றி சோதனைகளை நடாத்துவதற்கும், அதிகாரிகளுக்கு தகவல்களை வழங்காத நபர்களுக்குத் தண்டனை அளிப்பதற்குமான பரந்துபட்ட அதிகாரங்களை இச்சட்டமூலம் அதிகாரிகளுக்கு வழங்குகிறது.
இச்சட்டமூலத்தின் உள்ளடக்கங்கள் சிறுபான்மையினரை இலக்குவைப்பதற்கும், எதிர்ப்புக்களை அடக்குவதற்கும் இலங்கை அரசினால் பல ஆண்டுகளாக முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டுவரும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் பல கூறுகளைப் பிரதிபலிக்கின்றன.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட அடக்குமுறைச் சட்டங்களின் வரிசையில் இந்த அசாதாரணமான சட்டமூலம் மிக ஆபத்தானதாகும். இது தண்டனைகளிலிருந்து விலக்களிக்கும் போக்கை ஆழப்படுத்துவதுடன், பலவந்தமாகப் பெறப்பட்ட வாக்குமூலங்களை சாட்சியங்களாகப் பயன்படுத்துதல், தன்னிச்சையான தடுப்புக்காவல், சித்திரவதைகளுக்கு உட்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு மீறல்களுக்கு வாய்ப்பளிக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கும் ஆபத்தைக் கொண்டிருக்கிறது.
இது இரகசிய விசாரணைகளுக்கு வழிகோலுவதுடன், பொலிஸாரால் அதிகாரங்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதைத் தடுப்பதற்கென உருவாக்கப்பட்ட சகல பாதுகாப்பு நடைமுறைகளையும் தகர்க்கிறது.
அதேபோன்று தொலைத்தொடர்பு, செய்மதி, டிஜிட்டல் மற்றும் தரவு சேவை வழங்குனர்களிடமிருந்து அழைப்புப் பதிவுகள், கணக்குகளின் இருப்பிட விபரங்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தரவுகளை நீதிமன்ற உத்தரவின்றி பொலிஸார் பெற்றுக்கொள்வதற்கும் இச்சட்டமூலம் அதிகாரம் அளிக்கிறது.
இது நபர்களின் தனியுரிமையை மீறுவதுடன் ஊடகவியலாளர்களின் தகவல் மூலங்கள், சட்டத்தரணிகளின் உரையாடல்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்வோர் மீதான கண்காணிப்பு உள்ளிட்ட மீறல்களுக்கு வழிவகுக்கும்.
இவ்வாறானதொரு பின்னணியில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கான சட்டமூலத்தை இலங்கை அரசாங்கம் முழுமையாக வாபஸ் பெறவேண்டும் என்றும், இவ்வாறான குற்றங்களை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் ஆக்கபூர்வமான பரந்துபட்ட கலந்துரையாடல்களில் ஈடுபடவேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.







