மாகாணசபை தேர்தலை விரைவில் நடத்துங்கள்

இலங்கையில் காலதாமதமாகி வரும் மாகாண சபைத் தேர்தலை மிகவும் விரைவாக நடத்த வேண்டும் என இந்திய அரசு இலங்கை அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது என்று இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்தார்.

 

இலங்கையின் அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் மாகாண சபைத் தேர்தல் குறித்து இந்திய அரசின் நிலைப்பாட்டை ஊடகங்களுக்குத் தெளிவுபடுத்தியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

 

இலங்கையின் உள்நாட்டு அரசியலில் நடக்கும் விடயங்கள் குறித்துக் கருத்து தெரிவிக்க முடியாது. இருப்பினும், நாங்கள் எப்போதும் இலங்கை அரசைக் கேட்டுக்கொள்கின்றோம். அதிகாரப் பரவலாக்கல் வழிமுறை உருவாக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் விருப்பம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

மேலும், இது இலங்கையின் சொந்த அரசமைப்பின் ஒரு பகுதி என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், ஒரு அண்டை நாடாகவும், நட்பு நாடாகவும் இலங்கை அரசுக்கு இதைத் தொடர்ந்து நினைவூட்டி வருவதாகவும் கூறினார். அத்துடன், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான துல்லியமான நேரத்தையும் முறையையும் இலங்கை மக்களே தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ்த் தலைவர்கள் மற்றும் எதிர்க்கட்சிப் பிரதிநிதிகளைச் சந்திப்பது குறித்துப் பேசிய இந்தியத் தூதுவர், “எதிர்க்கட்சித் தலைவர்கள் என்னைச் சந்திக்கும் போது, மாகாண சபைத் தேர்தல் விவகாரத்தை அரசிடம் வலியுறுத்துமாறு கேட்டுக்கொள்கின்றார்கள். அவர்களின் கருத்துக்களை நாங்கள் செவிமடுத்து, அரசுடனான சந்திப்புகளில் தொடர்ந்து இந்தக் கருத்துக்களை முன்வைத்து வருகின்றோம்” என்றார்.

 

இலங்கை அரசுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற தமிழ்த் தலைவர்களின் கோரிக்கை குறித்துப் பதிலளித்த அவர், “சமமான உறவும் பரஸ்பர மரியாதையும் கொண்ட இறையாண்மையுள்ள இரு நாடுகளுக்கு இடையே ‘அழுத்தம் கொடுத்தல்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது சரியாக இருக்காது. ஒரு நாடு மற்றொரு நாட்டுக்கு அழுத்தம் கொடுக்கக் கூடாது” என்றும் தெளிவுபடுத்தினார்.

 

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு குறித்துப் பேசிய அவர், இவை இலங்கை மக்களே தீர்மானிக்க வேண்டிய விவகாரங்கள் என்றும், ஒரு நட்பு நாடாகத் தேவையான ஆலோசனைகளை மட்டுமே இந்தியாவால் வழங்க முடியும் என்றும் கூறினார்.

 

இலங்கை மக்களின் இறையாண்மையை அனைவரும் மதிக்க வேண்டும் என்றும், மக்களின் விருப்பத்துக்கு ஏற்பவே தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஆட்சி செய்யும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதில் இந்தியாவின் கொள்கை மற்றும் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதைத் தூதுவர் சந்தோஷ் ஜா மீண்டும் உறுதிப்படுத்தினார்.

Share this article

More News