மாகாண சபைகளின் அதிகாரங்களைப் பாதுகாக்க, ஓர் ஆணைக்குழுவின் அவசியம்

தமிழக குரியன் ஜோசப் ஆணைக்குழுவும் இலங்கையின் அதிகாரப் பகிர்வும்

மாகாண சபைகளின் அதிகாரங்களைப் பாதுகாக்கவும், மத்திய–மாகாண உறவுகளைச் சீரமைக்கவும் ஓர் ஆணைக்குழுவின் அவசியம்

  1. முன்னுரை: அதிகாரப் பகிர்வு என்பது ஜனநாயகத்தின் அடிப்படை

ஒரு நாட்டின் ஜனநாயக ஆட்சி முறை என்பது மத்திய அரசாங்கம் ஒன்றின் மூலமாகவே அனைத்து அதிகாரங்களையும் நிர்வகிப்பதாக இருக்க வேண்டிய அவசியமில்லை. குறிப்பாக பல இனங்கள், மொழிகள், மதங்கள், பண்பாடுகள் மற்றும் பிராந்திய அடையாளங்களைக் கொண்ட நாடுகளில், மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கும் பிராந்தியத் தேவைகளுக்கும் ஏற்ப அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பது ஜனநாயக ஆட்சியின் முக்கியமான அம்சமாகும்.

அதிகாரப் பகிர்வு என்பது வெறுமனே நிர்வாக வசதிக்கான ஓர் ஏற்பாடு அல்ல. அது மக்களின் அரசியல் பங்கேற்பு, பிராந்திய அபிவிருத்தி, சமத்துவம், பொறுப்புக்கூறல் மற்றும் ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்தும் ஓர் அரசியலமைப்பு ஏற்பாடாகும்.

இந்தியாவில் மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான அதிகார உறவுகளை ஆராய்வதற்காகத் தமிழக அரசால் முன்னெடுக்கப்பட்ட நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையிலான ஆணைகுழுவின்  உருவாக்கமும், அதன் அறிக்கையும், பின்னர் அக்குழு கலைக்கப்பட்ட நிகழ்வும் இத்தகைய விவாதங்களுக்கு ஒரு முக்கியமான முன்னுதாரணமாக அமைந்துள்ளன.

இந்தியாவில் மாநிலங்களின் உரிமைகள் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட இந்த முயற்சியிலிருந்து இலங்கையும் பல முக்கியமான படிப்பினைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

  1. குரியன் ஜோசப் ஆணைக்குழுவின் வரலாற்றுப் பின்னணி

தமிழகத்தில் மாநில சுயாட்சிக்கான விவாதம் இன்றைய அரசியல் சூழலில் தோன்றிய ஒன்றல்ல. அதன் வரலாற்றுப் பின்னணி 1969ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் மு. கருணாநிதி தலைமையிலான திமுக அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட நீதிபதி பி.வி. ராஜமன்னார் குழுவிலிருந்து ஆரம்பமாகிறது.

மத்திய–மாநில உறவுகளை ஆராய்ந்து, மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்களையும் நிர்வாக சுயாட்சியையும் வழங்குவதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதே ராஜமன்னார் குழுவின் முக்கிய நோக்கமாக இருந்தது. அக்குழு 1971ஆம் ஆண்டு தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது. அதன் பரிந்துரைகள் மாநில சுயாட்சி தொடர்பான இந்திய அரசியல் விவாதங்களில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றன.

இதனைத் தொடர்ந்து இந்திய மத்திய அரசாங்கத்தினால் சர்க்காரியா ஆணைக்குழு (1983–1988), புஞ்சி ஆணைக்குழு (2007–2010) ஆகியன அமைக்கப்பட்டு மத்திய–மாநில உறவுகள் ஆராயப்பட்டன.

இந்தப் பின்னணியில், 2025ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் திகதி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசாங்கம், உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட ஆணைக் குழுவை அமைத்தது.

அக்குழுவின் உறுப்பினர்களாக:

  • நீதியரசர் குரியன் ஜோசப் – தலைவர்.
  • கே. அசோக் வர்தன் ஷெட்டி – ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி, இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்.
  • பேராசிரியர் எம். நாகநாதன் – தமிழக மாநிலத் திட்டக்குழுவின் முன்னாள் துணைத் தலைவர்.

ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இந்தக் குழுவின் முக்கிய நோக்கங்கள்:

  1. இந்திய அரசியலமைப்பின் மத்திய–மாநில அதிகாரப் பகிர்வு தொடர்பான ஏற்பாடுகளை மீளாய்வு செய்தல்.
  2. மாநிலங்களின் சட்டவாக்க, நிர்வாக மற்றும் நீதித்துறை சார்ந்த சுயாட்சியை உறுதிப்படுத்துவதற்கான பரிந்துரைகளை முன்வைத்தல்.
  3. காலப்போக்கில் மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்ட விடயங்களை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவருவதற்கான வழிமுறைகளை ஆராய்தல்.
  4. மத்திய அரசின் சட்டங்கள், கொள்கைகள், நிர்வாக உத்தரவுகள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் மாநிலங்களின் அதிகாரங்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை ஆராய்தல்.
  5. மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாத்துக்கொண்டே இந்தியாவின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் வலுப்படுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்குதல்.

இது தமிழகத்திற்கான பிரச்சினைகளை மட்டும் ஆராயும் குழுவாக அல்லாமல், இந்தியாவின் ஒட்டுமொத்தக் கூட்டாட்சிக் கட்டமைப்பையும் மீளாய்வு செய்யும் முயற்சியாக முன்னெடுக்கப்பட்டது.

  1. குரியன் ஜோசப் குழுவின் இடைக்கால அறிக்கை – அதன் முக்கியத்துவம்

இக்குழு தனது பணிகளை ஆரம்பித்தபோது 2026 ஜனவரி மாத இறுதிக்குள் இடைக்கால அறிக்கையையும், இரண்டு வருடங்களுக்குள் இறுதி அறிக்கையையும் சமர்ப்பிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஆய்வின் பரந்த தன்மை காரணமாக அறிக்கையைப் பல பகுதிகளாக வெளியிடுவதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

2026 பெப்ரவரி 16ஆம் திகதி இக்குழு தனது முதலாவது அறிக்கையை தமிழக முதலமைச்சரிடம் சமர்ப்பித்தது. பின்னர் அது சட்டமன்றத்திலும் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த அறிக்கையின் முதலாவது பகுதியில் பத்து அத்தியாயங்களும், சுமார் 408 அச்சிடப்பட்ட பக்கங்களும் இடம்பெற்றிருந்தன. ஆங்கிலத்திலும் தமிழிலும் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை பின்வரும் முக்கிய விடயங்களை உள்ளடக்கியிருந்தது:

  • இந்தியக் கூட்டாட்சிக் கட்டமைப்பும் மாநில சுயாட்சியும்.
  • ஆளுநர்களின் அதிகாரங்களும் மாநில அரசுகளுடனான உறவுகளும்.
  • மொழிக் கொள்கை.
  • கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளின் அதிகாரங்கள்.
  • சரக்கு மற்றும் சேவை வரி (GST) தொடர்பான மத்திய–மாநில நிதி உறவுகள்.
  • தொகுதி மறுவரையறை மற்றும் தேர்தல் தொடர்பான பிரச்சினைகள்.
  • அரசியலமைப்புத் திருத்தங்களின் தாக்கங்கள்.
  • அதிகாரப் பரவலாக்கமும் நிர்வாகப் பொறுப்புகளும்.

இந்த அறிக்கையின் முக்கியத்துவம், மாநில அரசுகளின் அதிகாரங்களைப் பாதுகாப்பது என்பது அரசியல் கோஷமாக மட்டும் இருக்காமல், அரசியலமைப்பு, சட்டம், நிர்வாகம் மற்றும் நிதி ஆகிய துறைகளின் அடிப்படையில் ஆராயப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியதாகும்.

மேலும், இந்த ஆய்வு இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் தமது கருத்துகளை முன்வைப்பதற்கான கேள்வித்தாளையும் ஆலோசனைச் செயல்முறையையும் உள்ளடக்கியிருந்தது.

முதலாவது அறிக்கைக்குப் பின்னர் எஞ்சிய ஆய்வுகளைத் தொடர்ந்து மேற்கொண்டு, அடுத்தடுத்த பகுதிகளை 2027ஆம் ஆண்டில் சமர்ப்பிப்பதற்கான திட்டமும் இருந்தது.

  1. ஆணைக்குழு கலைக்கப்பட்டது – பின்னணி மற்றும் விளைவுகள்

2026 நவம்பர் 6ஆம் திகதி தமிழக அரசாங்கம் வெளியிட்ட அரசாணையின் மூலம் நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையிலான ஆணைக்குழுவின் பணிகள் உடனடியாக நிறுத்தப்பட்டன.

இதற்குத் தமிழக அரசாங்கம் முன்வைத்த காரணம், 2026 ஆகஸ்ட் 7ஆம் திகதி மீளமைக்கப்பட்ட தமிழக சட்ட ஆணைக்குழுவுக்கு மத்திய–மாநில உறவுகள் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான உறவுகள் தொடர்பான ஆய்வுப் பொறுப்புகளும் வழங்கப்பட்டுள்ளதால், இரண்டு அமைப்புகளின் பணிகளிலும் ஒற்றுமையும், மீள்செயற்பாடும் இருப்பதாகும்.

மேலும், குரியன் ஜோசப் குழு சட்டப்பூர்வமாக உருவாக்கப்பட்ட நிரந்தர ஆணைக்குழு அல்ல; அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட உயர்மட்ட ஆய்வுக் குழு என்பதும் அரசின் விளக்கத்தில் குறிப்பிடப்பட்டது.

அதன் ஆவணங்கள் மற்றும் ஆய்வுப் பதிவுகளை மாநில சட்ட ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டது.

எனினும், இந்த முடிவு தொடர்பாக தமிழகத்தில் அரசியல் விவாதங்கள் எழுந்துள்ளன. குழுவின் முதலாவது அறிக்கை ஏற்கெனவே சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அதன் முழுமையான ஆய்வுப் பணிகள் முடிவடைவதற்கு முன்னரே குழுவைக் கலைத்தது ஏன் என்ற கேள்வி பல அரசியல் கட்சிகளாலும் எழுப்பப்பட்டுள்ளது.

இங்கு ஒரு விடயத்தைத் தெளிவுபடுத்த வேண்டும். குழு கலைக்கப்பட்டதால் அதன் முதலாவது அறிக்கை அழிக்கப்பட்டுவிட்டது என்றோ, அதன் பரிந்துரைகள் அனைத்தும் செல்லாதவையாகிவிட்டன என்றோ கூற முடியாது. முதலாவது அறிக்கை தொடர்ந்து பொதுவெளியில் உள்ளது. அரசாங்கத்தின் உத்தரவின்படி ஆவணங்கள் சட்ட ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

ஆனால், இக்குழு தொடர்ந்து இயங்கியிருந்தால் மேற்கொண்டிருக்கக்கூடிய இரண்டாம் மற்றும் மூன்றாம் பகுதிகளின் ஆய்வுகள், தனித்துவமான உயர்மட்டக் குழுவின் பெயரிலும் பொறுப்பிலும் நிறைவுபெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் எழும் முக்கியமான கேள்வி, ஒரு அரசாங்கம் மாறும்போது மாநில உரிமைகள் மற்றும் கூட்டாட்சிக் கட்டமைப்பு தொடர்பான நீண்டகால ஆய்வுகளும் அதன் தொடர்ச்சியும் அரசியல் அல்லது நிர்வாக மாற்றங்களுக்கு உட்பட்டு இடைநிறுத்தப்பட வேண்டுமா என்பதாகும்.

ஒரு ஜனநாயக நாட்டில் அரசாங்கங்கள் மாறலாம். ஆனால் அரசியலமைப்பு உரிமைகள், அதிகாரப் பகிர்வு மற்றும் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நிறுவனங்களின் தொடர்ச்சித்தன்மை பாதிக்கப்படக்கூடாது என்பதே இந்த அனுபவம் எழுப்பும் அடிப்படையான விவாதமாகும்.

  1. இலங்கையின் மாகாண சபை முறைமை – வரலாற்றுப் பின்னணி

இலங்கையில் அதிகாரப் பகிர்வு தொடர்பான விவாதம் தமிழகத்தைப் போலவே நீண்ட வரலாற்றைக் கொண்டது. குறிப்பாக இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வின் ஒரு பகுதியாக 1987 ஜூலை 29ஆம் திகதி இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனவுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட இந்திய–இலங்கை ஒப்பந்தம் முக்கியமான வரலாற்று நிகழ்வாகும்.

இந்த ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டு, 1987ஆம் ஆண்டு மாகாண சபை முறைமை உருவாக்கப்பட்டது.

இதன் மூலம் இலங்கையின் ஒன்பது மாகாணங்களுக்கும் மாகாண சபைகளை உருவாக்குவதற்கான அரசியலமைப்பு ஏற்பாடு செய்யப்பட்டதுடன், மத்திய அரசாங்கம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்கள் என மூன்று நிர்வாக அடுக்குகள் உருவாக்கப்பட்டன.

அரசியலமைப்பின் ஒன்பதாவது அட்டவணையில் மூன்று அதிகாரப் பட்டியல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன:

  1. மாகாண சபைப் பட்டியல் – மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள்.
  2. மத்திய அரசு  பட்டியல் – மத்திய அரசாங்கத்திடம் உள்ள அதிகாரங்கள்.
  3. பொதுப்பட்டியல் – மத்திய அரசாங்கமும் மாகாணங்களும் தொடர்புடைய அதிகாரங்கள்.

கல்வி, சுகாதாரம், விவசாயம், உள்ளூராட்சி, வீதி அபிவிருத்தி உள்ளிட்ட பல துறைகள் மாகாண நிர்வாகத்துடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன.

ஆனால், அரசியலமைப்பில் அதிகாரங்கள் குறிப்பிடப்பட்டிருப்பது மட்டும் அவை நடைமுறையில் முழுமையாகப் பயன்படுத்தப்படுவதற்கான உத்தரவாதமாக அமையவில்லை.

மாகாண சபைகளின் அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவதில் மத்திய அரசாங்கம், ஆளுநர்கள், அமைச்சுகள், அரச அதிகாரிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கிடையில் பல்வேறு அதிகாரத் தொடர்புகளும் சிக்கல்களும் காணப்படுகின்றன.

இதுவே இலங்கையில் மத்திய–மாகாண உறவுகளை முழுமையாக ஆராய வேண்டிய தேவையை உருவாக்குகிறது.

  1. இலங்கையில் மாகாண சபைகளின் அதிகாரப் பகிர்வில் காணப்படும் அடிப்படைப் பிரச்சினைகள்

இலங்கையின் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்கியிருந்தாலும், அவற்றின் நடைமுறைச் செயற்பாடுகள் தொடர்பாக பல பிரச்சினைகள் தொடர்கின்றன.

6.1. ஆளுநரின் அதிகாரங்களும் மாகாண நிர்வாகமும்

மாகாண ஆளுநர் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகிறார். அரசியலமைப்பின் ஏற்பாடுகளின்படி மாகாணத்தின் நிறைவேற்று அதிகாரங்கள் ஆளுநர் ஊடாகவும் முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவையின் ஊடாகவும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

இதனால் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாண அரசாங்கத்திற்கும் ஜனாதிபதியால் நியமிக்கப்படும் ஆளுநருக்கும் இடையில் உறவுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது முக்கியமான கேள்வியாக உள்ளது.

ஆளுநர், இந்தியாவில்்உள்ளது போல்  ஒரு மாகாணத்தின்  பெயரளவிலான, அரசியலமைப்புத் தலைவராக இருந்து, இலங்கை ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ பிரதிநிதியாகச் செயல்பட, உண்மையான நிர்வாக அதிகாரம் மாகாண முதலமைச்சருக்கும் அமைச்சரவைக்கும் உரியதாகவும், மத்திய அரசுக்கும் மாகாண சபைக்கும் இடையே ஒரு பாலமாகச் செயல்படுவதாக இருக்க வேண்டும்.

ஆளுநரின் அரசியலமைப்புப் பொறுப்புகள், மாகாண அமைச்சரவையின் ஆலோசனைகள், முதலமைச்சரின் நிர்வாகப் பொறுப்புகள் ஆகியவற்றுக்கிடையில் தெளிவான நடைமுறை வரையறைகள் அவசியமாகும்.

6.2. மாகாணப் பட்டியல் மற்றும் பொதுப்பட்டியல்

மாகாண சபைப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரங்கள் எந்த அளவுக்கு மாகாணங்களால் சுயமாகப் பயன்படுத்தப்படுகின்றன? பொதுப்பட்டியலில் உள்ள விடயங்களில் மத்திய அரசுக்கும் மாகாண அரசுக்கும் இடையிலான பொறுப்புகள் எவ்வாறு தீர்மானிக்கப்படுகின்றன?

இவை தொடர்பாக தெளிவான சட்ட மற்றும் நிர்வாக வழிகாட்டுதல்கள் அவசியம்.

அதிகாரங்கள் ஒன்றுக்கொன்று முரண்படும்போது அல்லது மத்திய அமைச்சுகள் மாகாணங்களின் அதிகார எல்லைக்குள் தலையிடும்போது அவற்றைத் தீர்ப்பதற்கான சுயாதீனமான பொறிமுறையும் தேவைப்படுகிறது.

6.3. நிதி அதிகாரங்களும் வளப் பகிர்வும்

அதிகாரப் பகிர்வு என்பது நிர்வாகப் பொறுப்புகளைப் பகிர்வதுடன் முடிவடைவதில்லை. அந்தப் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான நிதி வளங்களும் பகிரப்பட வேண்டும்.

மாகாணங்களுக்கு வழங்கப்படும் நிதி ஒதுக்கீடுகள், அபிவிருத்தி நிதிகள், வருவாய் திரட்டும் அதிகாரங்கள் மற்றும் நிதி ஆணைக்குழுவின் பரிந்துரைகள் ஆகியவை நடைமுறையில் எவ்வாறு செயல்படுகின்றன என்பது விரிவாக ஆராயப்பட வேண்டும்.

போதுமான நிதி அதிகாரங்கள் இல்லாமல் மாகாணங்களுக்கு பொறுப்புகளை வழங்குவது, அதிகாரப் பகிர்வின் நோக்கத்தைப் பலவீனப்படுத்தக்கூடும்.

6.4. மத்திய அரசின் அமைச்சுகளுக்கும் மாகாண அமைச்சுகளுக்கும் இடையிலான உறவுகள்

கல்வி, சுகாதாரம், விவசாயம், வீதி அபிவிருத்தி போன்ற துறைகளில் மத்திய அமைச்சுகளுக்கும் மாகாண அமைச்சுகளுக்கும் இடையில் அதிகார எல்லைகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான முரண்பாடுகள் எழலாம்.

இத்தகைய பிரச்சினைகளுக்குத் தெளிவான தீர்வுகள் இல்லாதபோது நிர்வாகத் தாமதங்களும் அதிகார மோதல்களும் ஏற்படுவதுடன், அதன் பாதிப்பு நேரடியாகப் பொதுமக்களையே சென்றடைகிறது.

6.5. மாகாண சபைத் தேர்தல்கள் இல்லாத நிலை

2014ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையில் மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறவில்லை. 2017ஆம் ஆண்டின் தேர்தல் திருத்தச் சட்டம் மற்றும் தொகுதி எல்லை நிர்ணயம் தொடர்பான முடிக்கப்படாத சட்டச் செயல்முறைகள் தேர்தல்கள் நடத்தப்படுவதில் தடையாக இருந்து வருகின்றன.

இதன் விளைவாக ஒன்பது மாகாணங்களிலும் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் இல்லாத நிர்வாக நிலை நீடிக்கிறது.

இது மாகாண சபைகளின் ஜனநாயகப் பிரதிநிதித்துவத்தையும் அதிகாரப் பகிர்வின் நடைமுறை நோக்கத்தையும் பாதிக்கும் முக்கியமான பிரச்சினையாகும்.

  1. இலங்கைக்கு குரியன் ஜோசப் ஆணைக்குழுவைப் போன்ற ஓர் உயர்மட்ட ஆணைக்குழு ஏன் அவசியம்?

தமிழகத்தில் உருவாக்கப்பட்ட குரியன் ஜோசப் குழுவின் அனுபவம் இலங்கைக்கு ஒரு முக்கியமான நிறுவனப் பாடத்தை வழங்குகிறது.

இலங்கையில் மாகாண சபை முறைமை உருவாக்கப்பட்டு சுமார் நான்கு தசாப்தங்கள் கடந்துவிட்டன. இக்காலத்தில் அரசியல், சமூக, பொருளாதார மற்றும் நிர்வாகச் சூழல்கள் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்துள்ளன.

ஆனால், 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட அதிகாரப் பகிர்வு முறைமை எவ்வளவு தூரம் நடைமுறையில் செயல்படுத்தப்பட்டுள்ளது, அதன் குறைபாடுகள் என்ன, அவற்றை எவ்வாறு நிவர்த்தி செய்யலாம் என்பன தொடர்பாக அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய முழுமையான தேசிய ஆய்வு அவசியமாகிறது.

இலங்கையில் இதற்காக உருவாக்கப்படும் ஆணைக்குழு பின்வரும் விடயங்களை மையப்படுத்தி ஆய்வு செய்ய வேண்டும்.

7.1. 13ஆவது திருத்தத்தின் முழுமையான மீளாய்வு

13ஆவது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மாகாண அதிகாரங்கள் நடைமுறையில் எந்த அளவுக்குச் செயல்படுத்தப்பட்டுள்ளன என்பதை ஆராய வேண்டும். நடைமுறையில் முடக்கப்பட்டுள்ள அல்லது செயல்படுத்தப்படாத அதிகாரங்களையும் அவற்றுக்கான காரணங்களையும் கண்டறிய வேண்டும்.

7.2. மத்திய–மாகாண அதிகார எல்லைகளைத் தெளிவுபடுத்துதல்

மத்திய அரசாங்கத்திற்கும் மாகாண அரசாங்கங்களுக்கும் இடையிலான அதிகாரப் பொறுப்புகளைத் தெளிவுபடுத்தி, தேவையற்ற நிர்வாக முரண்பாடுகளைத் தவிர்ப்பதற்கான சட்ட மற்றும் நிர்வாக ஏற்பாடுகளைப் பரிந்துரைக்க வேண்டும்.

7.3. ஆளுநர் முறைமையை மீளாய்வு செய்தல்

ஆளுநரின் அரசியலமைப்புப் பொறுப்புகள், அதிகார வரம்புகள் மற்றும் மக்களால் தெரிவுசெய்யப்படும் மாகாண நிர்வாகத்துடனான உறவுகள் குறித்து விரிவான பரிந்துரைகளை முன்வைக்க வேண்டும்.

7.4. மாகாணங்களின் நிதி சுயாட்சியை வலுப்படுத்துதல்

மாகாணங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிதி ஒதுக்கீடுகள், நிதி ஆணைக்குழுவின் பரிந்துரைகள், மாகாண வருவாய் அதிகாரங்கள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களுக்கான நிதி நடைமுறைகள் ஆகியவற்றை மீளாய்வு செய்ய வேண்டும்.

7.5. பொதுப்பட்டியலின் அதிகாரங்களை மறுவரையறை செய்தல்

மத்திய அரசாங்கமும் மாகாணங்களும் இணைந்து செயற்பட வேண்டிய பொதுப்பட்டியலில் உள்ள விடயங்கள் தொடர்பாகத் தெளிவான சட்ட ஏற்பாடுகளையும் பொறுப்புப் பகிர்வுகளையும் உருவாக்க வேண்டும்.

7.6. மாகாணங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்

மாகாணங்களுக்கிடையிலான வளப் பகிர்வு, நீர், விவசாயம், போக்குவரத்து, கல்வி, சுகாதாரம் மற்றும் பொருளாதார அபிவிருத்தி போன்ற விடயங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான பொறிமுறைகளைப் பரிந்துரைக்க வேண்டும்.

7.7. அனைத்து இனங்களினதும் பிராந்திய உரிமைகளையும் கருத்துகளையும் உள்ளடக்குதல்

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மட்டுமன்றி மத்திய, ஊவா, சபரகமுவ, வடமத்திய, தெற்கு, மேற்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் தேவைகளையும் உள்ளடக்கிய தேசிய அணுகுமுறை அவசியம்.

குறிப்பாக வடக்கு–கிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகள், மலையகத் தமிழ் மக்களின் பிராந்திய மற்றும் சமூகப் பிரச்சினைகள், முஸ்லிம் மக்களின் அரசியல் மற்றும் நிர்வாகப் பிரதிநிதித்துவம் ஆகியவையும் உரிய முக்கியத்துவத்துடன் ஆராயப்பட வேண்டும்.

  1. தற்போதைய நாடாளுமன்றத் தெரிவுக்குழுவும் முன்மொழியப்படும் தேசிய உயர்மட்ட ஆணைக்குழுவும் – நோக்கத்திலும் அதிகார வரம்பிலும் உள்ள வேறுபாடுகள்

இலங்கையில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கான தேர்தல் முறைமை தொடர்பாக ஆராய்வதற்கென தற்போதைய நாடாளுமன்றத்தினால் ஒரு தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு 2026 பெப்ரவரி மாதம் நியமிக்கப்பட்டதுடன், அமைச்சர் விஜித ஹேரத் அதன் தலைவராகச் செயற்படுகிறார்.

இத்தெரிவுக்குழுவின் பிரதான நோக்கம், மாகாண சபைத் தேர்தல்களை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்துவது என்பதை ஆராய்ந்து, அதற்கான பரிந்துரைகளை நாடாளுமன்றத்திடம் சமர்ப்பிப்பதாகும். குறிப்பாக, 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட கலப்பு விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமையை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான தொகுதி எல்லை நிர்ணயப் பணிகள் நிறைவுபெறாததால் ஏற்பட்டுள்ள சட்ட மற்றும் நிர்வாகத் தடைகளைத் தீர்ப்பது இதன் முக்கிய கவனமாக உள்ளது.

பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவம், தேர்தல் முறைமைக்கான மாற்றங்கள் உள்ளிட்ட சில தொடர்புடைய விடயங்களும் இக்குழுவின் கலந்துரையாடல்களில் இடம்பெறுகின்றன.

மாகாண சபைத் தேர்தல்களை மீண்டும் நடத்துவதற்கான சட்ட வழிமுறைகளை ஆராய்வதில் இத்தெரிவுக்குழு வகிக்கும் பங்களிப்பு முக்கியமானது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இருப்பினும், அதன் பணிப்பொறுப்பையும் முன்மொழியப்படும் தேசிய உயர்மட்ட ஆணைக்குழுவின் பணிப்பொறுப்பையும் ஒன்றாகக் கருத முடியாது.

இதற்கான அடிப்படைக் காரணம், இவ்விரு அமைப்புகளின் ஆய்வு நோக்கங்களும் அதிகார வரம்புகளும் முற்றிலும் வேறுபட்டவை என்பதாகும்.

தற்போதைய நாடாளுமன்றத் தெரிவுக்குழு பிரதானமாக மாகாண சபைத் தேர்தல்களுக்கான தேர்தல் முறைமையைத் தீர்மானிப்பதையும், அதற்கான சட்டத் தடைகளை நீக்குவதற்கான பரிந்துரைகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால், நாம் முன்மொழியும் தேசிய உயர்மட்ட ஆணைக்குழுவின் நோக்கம் அதைவிடப் பரந்ததாகும்.

அதாவது, இலங்கையின் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் முழுமையான நடைமுறைப்படுத்தல், மாகாண சபைகளுக்கு அரசியலமைப்பால் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் உண்மையான நிலை, மத்திய அரசாங்கத்திற்கும் மாகாண அரசாங்கங்களுக்கும் இடையிலான அதிகார உறவுகள், ஆளுநர்களின் அதிகார வரம்புகள், நிதி மற்றும் நிர்வாக சுயாட்சி, மத்திய அமைச்சுகளுக்கும் மாகாண அமைச்சுகளுக்கும் இடையிலான பொறுப்புப் பகிர்வு, மாகாணங்களுக்கிடையிலான ஒத்துழைப்பு மற்றும் அதிகார முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான நிரந்தரப் பொறிமுறைகள் எனப் பல்வேறு அம்சங்களை முழுமையாக ஆராய்வதே தேசிய ஆணைக்குழுவின் நோக்கமாக இருக்க வேண்டும்.

மேலும், தற்போதைய நாடாளுமன்றத் தெரிவுக்குழு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஒரு அரசியல் மற்றும் சட்டமன்ற ஆய்வுக் குழுவாகும். அதேவேளை, முன்மொழியப்படும் தேசிய ஆணைக்குழு அரசியலமைப்பு, சட்டம், நிர்வாகம், பொருளாதாரம் மற்றும் நிதி ஆகிய துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களையும், ஒன்பது மாகாணங்களின் பிரதிநிதிகளையும், பல்வேறு இன மற்றும் சமூகப் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய சுயாதீனமான பல்துறை ஆய்வு அமைப்பாக இருக்க வேண்டும்.

தேர்தல் முறைமையைத் தீர்மானிப்பது ஒரு விடயம்; மாகாணங்களுக்கு அரசியலமைப்பால் வழங்கப்பட்ட அதிகாரங்கள் நடைமுறையில் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பதை ஆராய்ந்து, மத்திய–மாகாண உறவுகளைச் சீரமைப்பது முற்றிலும் வேறுபட்ட மற்றொரு விடயமாகும்.

எனவே, தற்போதைய நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் பணிகளை முன்மொழியப்படும் தேசிய ஆணைக்குழுவுக்கு மாற்றாகக் கருத முடியாது. அதேபோன்று, தேசிய ஆணைக்குழு அமைக்கப்படுவது தற்போதைய தெரிவுக்குழுவின் பணிகளைத் தேவையற்றதாக்குவதுமில்லை. இவ்விரு அமைப்புகளும் ஒன்றுக்கொன்று மாற்றீடாக அல்லாமல், வெவ்வேறு நோக்கங்களைக் கொண்ட, ஒன்றுக்கொன்று துணைபுரியும் அமைப்புகளாகச் செயற்பட வேண்டும்.

மாகாண சபைத் தேர்தல்களை விரைவாக நடத்துவதற்கான சட்ட மற்றும் தேர்தல் நடைமுறைகளைத் தற்போதைய நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஆராய்ந்து தீர்வுகளை முன்வைக்க வேண்டும். அதேவேளை, மாகாண சபைகள் மீண்டும் செயற்படத் தொடங்கிய பின்னரும் அவற்றின் அதிகாரங்கள் முழுமையாகவும் தடையின்றியும் நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துவதற்கான நீண்டகால அரசியலமைப்பு மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்களை முன்மொழிய தேசிய உயர்மட்ட ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டும்.

இவ்விரு செயல்முறைகளும் இணையாக முன்னெடுக்கப்படும்போதுதான் இலங்கையின் மாகாண சபை முறைமை வெறுமனே தேர்தல் நடத்தப்படும் ஓர் அமைப்பாக இல்லாமல், உண்மையான அதிகாரப் பகிர்வையும் ஜனநாயகப் பிராந்திய நிர்வாகத்தையும் உறுதிப்படுத்தும் அரசியலமைப்பு நிறுவனமாக வளர்ச்சியடைய முடியும்.

9.முன்மொழியப்படும் ஆணைக்குழுவின் கட்டமைப்பும் செயற்பாட்டு முறையும்

இலங்கையில் இத்தகைய ஆணைக்குழு அமைக்கப்படும்போது அது ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் அல்லது ஓர் இனத்தின் கருத்துகளை மட்டும் பிரதிபலிக்கும் அமைப்பாக இருக்கக்கூடாது.

அது அரசியலமைப்பு நிபுணர்கள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், நிர்வாகத் துறை நிபுணர்கள், பொருளாதார வல்லுநர்கள், கல்வியாளர்கள், மாகாண நிர்வாக அனுபவமுள்ளவர்கள் மற்றும் அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களைக் கொண்டிருக்க வேண்டும்.

மேலும்:

  • அனைத்து ஒன்பது மாகாணங்களிடமிருந்தும் கருத்துகள் பெறப்பட வேண்டும்.
  • முதலமைச்சர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், ஆளுநர்கள் மற்றும் மாகாண நிர்வாக அதிகாரிகளின் கருத்துகள் பெறப்பட வேண்டும்.
  • அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் பொதுமக்களிடம் ஆலோசனைகள் நடத்தப்பட வேண்டும்.
  • வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் விசேட மக்கள் கருத்தறியும் அமர்வுகள் நடத்தப்பட வேண்டும்.
  • ஆய்வின் இடைக்கால அறிக்கை பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்பட வேண்டும்.
  • இறுதி அறிக்கை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும்.

முக்கியமாக, இக்குழு ஒரு தற்காலிக அரசியல் நியமனமாக இல்லாமல், குறிப்பிட்ட சட்ட அதிகாரங்களுடனும் காலவரையறையுடனும் உருவாக்கப்பட வேண்டும். அரசாங்கம் மாறினாலும் அதன் ஆய்வுப் பணிகள் தடையின்றித் தொடர்வதற்கான நிறுவனப் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

10.மாகாண சபைகள் – இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு மட்டுமல்ல, தேசிய அபிவிருத்திக்கான நிர்வாகக் கட்டமைப்பும் ஆகும்

இலங்கையில் மாகாண சபை முறைமை குறித்து பேசும்போது, அது தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினையுடன் மட்டுமே தொடர்புடையது என்ற குறுகிய பார்வையைத் தவிர்க்க வேண்டும்.

மாகாண சபைகள் என்பது நாட்டின் ஒன்பது மாகாணங்களிலும் வாழும் மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடைய நிர்வாக அமைப்பாகும்.

ஒரு மாகாணத்தின் கல்வித் தேவைகள், சுகாதார வசதிகள், விவசாயப் பிரச்சினைகள், கிராமப்புற வீதிகள், உள்ளூராட்சி, பிராந்தியப் பொருளாதார அபிவிருத்தி போன்றவை அந்தந்தப் பிராந்திய மக்களின் தேவைகளை நன்கு அறிந்த நிர்வாகத்தின் மூலம் திட்டமிடப்படும்போது, மக்கள் பங்கேற்பும் பொறுப்புக்கூறலும் மேம்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

அதிகாரப் பகிர்வு என்பது நாட்டைப் பிரிப்பதற்கான ஏற்பாடு அல்ல. மாறாக, பல்வேறு பிராந்தியங்களின் தேவைகளையும் உரிமைகளையும் அரசியலமைப்பு ரீதியாக அங்கீகரித்து, நாட்டின் ஒற்றுமையை ஜனநாயக அடிப்படையில் வலுப்படுத்தும் ஆட்சிமுறை ஏற்பாடாகவும் அமைய முடியும்.

குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகள், நிர்வாக உரிமைகள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி ஆகியவற்றை ஆராய்வதற்கு மாகாண சபை முறைமை முக்கியமான அரசியல் தளமாக விளங்குகிறது.

அதேவேளை, மத்திய மாகாணத்தில் வாழும் மலையகத் தமிழ் மக்களின் காணி, வீடமைப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளும் மாகாண நிர்வாகத்தின் அதிகாரங்கள் மற்றும் மத்திய அரசின் பொறுப்புகள் ஆகியவற்றுடன் தொடர்புடையவை.

எனவே, அதிகாரப் பகிர்வு தொடர்பான தேசிய ஆய்வு என்பது எந்தவொரு சமூகத்திற்கும் மட்டும் உரியதல்ல; இலங்கையின் அனைத்து மக்களுக்கும் உரிய ஜனநாயக மற்றும் நிர்வாகத் தேவையாகும்.

11.முடிவுரை: அரசாங்கங்கள் மாறலாம்; அதிகாரப் பகிர்வு தொடர்பான தேசியப் பொறுப்பு தொடர வேண்டும்

தமிழகத்தில் நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையிலான உயர்மட்டக் குழு உருவாக்கப்பட்டதும், அதன் முதலாவது அறிக்கை வெளியிடப்பட்டதும், பின்னர் அதன் ஆய்வுப் பணிகள் நிறைவடைவதற்கு முன்னரே அது கலைக்கப்பட்டதும் அதிகாரப் பகிர்வு தொடர்பான ஆய்வுகளின் தொடர்ச்சித்தன்மை எவ்வளவு முக்கியமானது என்பதை வெளிப்படுத்துகின்றன.

இந்தியாவின் மாநிலங்கள் எதிர்கொள்ளும் மத்திய–மாநில உறவுகள் தொடர்பான பிரச்சினைகளுக்கும் இலங்கையின் மத்திய–மாகாண உறவுகள் தொடர்பான பிரச்சினைகளுக்கும் அரசியலமைப்பு மற்றும் அரசியல் வேறுபாடுகள் இருக்கலாம். இருப்பினும், அதிகாரப் பகிர்வு நடைமுறையில் எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஆய்வு செய்வதற்கான சுயாதீனமான, பல்துறை நிபுணத்துவம் கொண்ட நிறுவனத்தின் தேவை இரு நாடுகளுக்கும் பொதுவானதாகும்.

இலங்கை இன்று பொருளாதார மறுசீரமைப்பு, தேசிய நல்லிணக்கம், இனங்களுக்கிடையிலான நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்புதல் மற்றும் ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்துதல் போன்ற பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது.

இந்தச் சூழலில், 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மாகாண சபை முறைமையை மீளாய்வு செய்வதும், அதன் குறைபாடுகளை அடையாளம் காண்பதும், மத்திய–மாகாண அதிகார உறவுகளைச் சீரமைப்பதும் காலத்தின் தேவையாகும்.

இலங்கை அரசாங்கம் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதித்துவத்துடனும், அனைத்து மாகாணங்களின் பங்கேற்புடனும், அரசியலமைப்பு மற்றும் நிர்வாக நிபுணர்களை உள்ளடக்கிய ஒரு சுயாதீனமான உயர்மட்ட ஆணைக்குழுவை அமைக்க முன்வர வேண்டும்.

அந்த ஆணைக்குழு வெறுமனே அறிக்கைகளைத் தயாரிக்கும் அமைப்பாக இருக்காமல், அதிகாரப் பகிர்வை நடைமுறைப்படுத்துவதற்கான சட்ட, நிர்வாக, நிதி மற்றும் அரசியலமைப்பு மாற்றங்களைப் பரிந்துரைக்கும் தேசிய நிறுவனமாகச் செயற்பட வேண்டும்.

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதும், மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளின் மூலம் மாகாண நிர்வாகத்தை மீண்டும் செயற்படுத்துவதும் இந்தச் செயற்பாட்டின் உடனடி ஜனநாயகத் தேவையாகும். அதேவேளை, தேர்தல்கள் நடத்தப்படுவது மட்டுமே அதிகாரப் பகிர்வின் முழுமையான தீர்வாகாது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண அரசாங்கங்கள் தமக்கு அரசியலமைப்பால் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கான நடைமுறை உத்தரவாதங்களும் அவசியம்.

ஒரு நாட்டின் ஒற்றுமை என்பது அதன் அனைத்து அதிகாரங்களும் ஒரே மையத்தில் குவிக்கப்படுவதால் உருவாகுவதில்லை. மாறாக, அந்த நாட்டின் பல்வேறு இனங்கள், மொழிகள், பிராந்தியங்கள் மற்றும் சமூகங்கள் தங்களுடைய உரிமைகள் மதிக்கப்படுகின்றன என்ற நம்பிக்கையுடன் ஒரே அரசியல் கட்டமைப்புக்குள் இணைந்து வாழ்வதன் மூலமே அது வலுப்பெறுகிறது.

எனவே, குரியன் ஜோசப் ஆணைக்குழுவின் அனுபவத்தை இலங்கை ஒரு ஒப்பீட்டு முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு, தனது வரலாற்று, அரசியல் மற்றும் அரசியலமைப்புச் சூழலுக்கு ஏற்ற வகையில் மத்திய–மாகாண உறவுகளை மீளாய்வு செய்யும் தேசிய ஆணைக்குழுவை அமைப்பது குறித்து தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும்.

அதிகாரப் பகிர்வு என்பது ஒரு தரப்பின் வெற்றியோ மற்றொரு தரப்பின் தோல்வியோ அல்ல. அது ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையையும், தேசிய நல்லிணக்கத்தையும், அனைத்து மக்களினதும் சம உரிமைகளையும் உறுதிப்படுத்தும் ஓர் அரசியல் பொறுப்பாகும்.

மத்திய–மாகாண உறவுகளை மீளாய்வு செய்யும் தேசிய ஆணைக்குழுவை அமைப்பது குறித்து , தமிழ், முஸ்லிம், மலையக கட்சிகள் தமக்குள் ஓர் கருத்து ஒற்றுமையை ஏற்படித்தி பின்னர் கூட்டாக சிங்கள எதிர்கட்சிகளின் ஆதரவையும் பெற்று , தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் அர்த்தமுள்ள பேச்சு வார்தைகளை நடாத்துவதற்கு ஆவன செய்ய வேண்டும்.

யோகா வளவன்

Share this article

More News