2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பல்கலைக்கழக ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாளை புதன்கிழமை (25) நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் உள்ளடக்கிய வகையில் ஒருநாள் பணிப்புறக்கணிப்புடன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் இணைத் தலைவர் தம்மிக்க எஸ். பிரியந்த தெரிவித்தார்.
அத்துடன், எதிர்வரும் டிசம்பர் மாதம் 01 மற்றும் 02ஆம் திகதிகளில் அடையாளப் பணிப்புறக்கணிப்புடன் கூடிய மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
‘2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாகப் பல்கலைக்கழக ஊழியர்களின் பிரச்சினைகளுக்கும் நீண்டகாலக் கோரிக்கைகளுக்கும் உரிய தீர்வுகள் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தோம்.
எனினும், எமது எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படவில்லை. இதனால், எமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் நாளை (25) புதன்கிழமை ஒட்டுமொத்த பல்கலைக்கழகக் கட்டமைப்பையும் உள்ளடக்கிய வகையில் ஒருநாள் பணிப்புறக்கணிப்புடன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கின்றோம்.
அதேவேளை, இந்தப் போராட்ட நடவடிக்கையுடன் எமது எதிர்ப்பை மட்டுப்படுத்திக்கொள்ளப் போவதில்லை. எதிர்வரும் டிசம்பர் மாதம் 01 மற்றும் 02ஆம் திகதிகளில் அடையாளப் பணிப்புறக்கணிப்புடன் கூடிய மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுப்பதற்கும் தற்போது திட்டமிட்டுள்ளோம்.
பல்கலைக்கழக ஊழியர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தைத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம். எமது கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கத்தின் கவனத்தை ஈர்ப்பதற்கும், அவற்றுக்கான உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதற்கும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.
இதற்கு முன்னரும் எமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்கலைக்கழகக் கல்விசாரா ஊழியர்கள் நவம்பர் 18ஆம் திகதி ஒருநாள் அடையாளப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர். எனினும், அந்த நடவடிக்கையினால் எமது பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வு கிடைக்கவில்லை.
எனவே, தற்போது ஒட்டுமொத்த பல்கலைக்கழகக் கட்டமைப்பையும் ஒன்றிணைத்து இந்தப் பணிப்புறக்கணிப்பு மற்றும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளோம். எமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்பட வேண்டுமென்பதுடன், அதனை வலியுறுத்தும் வகையில் எதிர்வரும் டிசம்பர் 01 மற்றும் 02ஆம் திகதிகளிலும் மாபெரும் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.







