இலங்கையின் அரசியல், சமூக, பொருளாதார மாற்றங்கள் ஒரு விசித்திரமானதும் கவர்ச்சிகரமானதுமான வடிவத்தில் அரசால் முன்னெடுக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில், அதனுடைய உண்மைத் தன்மையை மக்கள் அறிந்துகொள்ள வேண்டியதன் அவசியம் ஏற்பட்டுள்ளது. இன்று இணையதளம் மற்றும் சமூக வலைதளங்கள் என்பன இளைஞர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபல்யமான தொடர்பாடல் சாதனமாக இருப்பதன் காரணத்தால் நாங்கள் மீண்டும் எமது இணையதளத்தை செயற்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
தமிழ் பரப்பில் இணையதளங்களும் சமூக வலைத்தளங்களும் நூற்றுக்கணக்கில் பல்கிப் பெருகி இருக்கின்றன. அவரவர் தமக்கேற்றவாறு செய்திகளைத் திரிபுபடுத்துவதும் வாசகர்களைக் கவரும் நோக்கில் செய்திக்குப் பொருத்தமற்ற, பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய தலைப்புகளைக் கொடுப்பதும், பொய்யான பெயர்களில் மறைந்திருந்து, தவறான கருத்துகளை பரப்புவது போன்ற பல நடவடிக்கைகள் இருக்கின்ற நிலையில், உண்மையையும் சரியான பார்வையையும் செய்தியின் உண்மையான பின்புலத்தையும் மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கின்ற பொறுப்பும் கடமையும் பொறுப்பு வாய்ந்த ஓர் அரசியல் கட்சி என்ற அடிப்படையில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கு இருக்கின்றது. இந்த இணையதளமானது அவ்வாறான கருத்துகளை சரியான வடிவத்தில் முன்னெடுக்க வேண்டும் முன்னெடுக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
தமிழ் மக்கள் மத்தியில் சரியான தலைமைத்துவம் இல்லை என்று புலம்புவோரும், தமிழ் மக்கள் மத்தியில் ஐக்கியம் இல்லை என்று ஒதுங்கி நின்று விமர்சிப்பவர்களும் சரியான கருத்துகளை இனங்கண்டும் சரியான தலைமைத்துவத்தை இனங்கண்டும் அவற்றை அங்கீகரித்து ஆதரவளிப்பது கிடையாது. இந்த இணையதளமானது மேற்கண்ட தவறுகளிலிருந்து விலகி, மக்கள் சரியானவற்றைத் தேர்ந்தெடுத்து அதனை அங்கீகரித்து அதனை முன்னெடுத்துச் செல்வதற்காக ஓரணியில் திரளுகின்ற பணியினை இவ்விணையதளம் முயற்சிக்கும் என நம்புகிறேன்.
ஜனநாயக சக்திகள், முற்போக்கு சக்திகள் இன்றைய காலகட்டத்திற்குத் தேவையான தமது ஆக்கபூர்வமான ஆக்கங்களையும் கருத்துகளையும் இவ்விணையதளத்தில் பதிவிட முன்வரவேண்டுமென எதிர்பார்க்கின்றோம். மேலும், காத்திரமான ஆரோக்கியமான விவாதங்களும் விமர்சனங்களும் தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள வழிவகுக்கும் என்ற அடிப்படையில் அதற்கான களத்தையும் இவ்விணையதளம் ஏற்படுத்த வேண்டும் என விரும்புகின்றேன்.
இவ்விணையதளம் வெற்றிகரமாக செயற்பட வேண்டும் என்பதுடன், இதனை வழிநடத்தும், செயற்படுத்தும் அனைவருக்கும் எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும் நன்றிகளும் உரித்தாகுக.
சுரேஸ் க.பிரேமச்சந்திரன்
தலைவர்
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி







