
EPRLF அரசியல் கட்சியா ? அரசியல் சக்தியா?
அறிய விரும்புவோர்
கொஞ்சம் பொறுமையோடு இதை படியுங்க. பிறகு முடிவுக்கு வாங்க.
முக்கியமாக எமது தோழர்களும் ஆதரவாளர்களும் இத முதல் படியுங்க.
ஈழத் தமிழ் போராட்ட வரலாற்றில் EPRLF அமைப்பின் பங்களிப்பு, அதன் சாதனை மற்றும் அதன் பின்னடைவுகள் குறித்து ஒரு சமநிலையான வரலாற்று பார்வையாக இதை முன்வைக்க விளைகிறேன்.
1980களில் உருவான ஈழவிடுதலை இயக்கங்களில் EPRLF ஒரு தனித்துவமான இடத்தை மக்கள் மத்தியில் பிடித்திருந்தது.
அதன் தலைவர்
கே. பத்மநாபா மார்க்சிய-லெனினியக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவராக இருந்ததனாலும் , அவரோடு இணைந்து பயணித்த தற்போதைய தலைவரான சுரேஸ் பிரேமச்சந்திரன் உட்பட்ட தலமைத் தோழர்களும் அக்கொள்கை வழியே கட்சிக் கட்டமைப்புகளையும் வெகுஜன அமைப்புகளையும் உருவாக்கி போராட்டத்தை முன்னெடுத்தமையுமே பிரதான காரணமாகும்.
புலிகள் உட்பட்ட மற்றைய இயக்கங்கள் “ஆயுதப் போராட்டமே ஒரே வழி, தேசியவிடுதலையினூடான
தனிநாடே முதன்மை இலக்கு” என்ற ஒற்றை இலக்கில் பயணித்தபோது,……
EPRLF ஆனது
‘சமூகவிடுதலையுடன் கூடிய தேசியவிடுதலைப்போராட்டமே ஈழதேசத்தின் முழுமையான விடுதலைக்கான ஒரேவழி என்றவகையில் தனது அரசியலை முன்னோக்கி நகர்த்தி சென்றது.
இடையில் ஏற்பட்ட கசப்பான அரசியல் அறமற்ற நிகழ்வுகளால் விடுதலைப்போராட்டமே திசைமாறியது.
அதன் விளைவு….
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் (1987) அடிப்படையில்13வது திருத்தச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட மாகாண சபை முறையை தமிழ் இயக்கங்களிலேயே முதன்முதலில் துணிச்சலுடன் ஏற்றுக்கொண்டது EPRLF தான்.
வடக்கு – கிழக்கு இணைப்பு,
தமிழ் மக்களின் நீண்டகால கோரிக்கையான “தாயகம்” (வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் இணைப்பு) என்பதை நடைமுறையில் சாத்தியமாக்கி, PLOTE இயக்கப் போராளிகளால் மீளமைக்கப்பட்ட ENDLF இயக்கத்தின் துணையோடு வடக்கு- கிழக்கு இணைந்த மாகாண சபையின் முதலாவது ஆட்சிப்பொறுப்பையும் ஏற்றுக்கொண்டது.
தமிழ் மக்களின் வரலாற்றில் “மாகாண சபை” என்ற ஒரு தன்னாட்சி அலகை சட்டப்பூர்வமாகப் பெற்று, அதில் அமர்ந்த பெருமை EPRLF- ENDLF கூட்டமைப்பையே சாரும்.
EPRLF-ஐ வெறும் ஆயுத இயக்கமாகப் பார்க்காமல், ஒரு அரசியல் சக்தியாகப் பார்ப்பதற்குப் பின்வரும் காரணங்கள் சாதகமாக அமைகின்றன.
*இன்றுவரை இலங்கை அரசியலமைப்பில் தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வு பற்றிப் பேசும் ஒரேயொரு சர்வதேச உடன்படிக்கை மற்றும் சட்ட வடிவம் 13வது திருத்தம்தான்.
இதை நடைமுறைக்குக் கொண்டுவர EPRLF தனது அரசியல் இருப்பைப் பணையம் வைத்தது.
மக்களாட்சிப் பாதையை நோக்கி ஆயுதப்போராட்டத்திலிருந்து தற்காலிகமாக விலகி, ஜனநாயகத் தேர்தல்களில் பங்கேற்று, நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்க முடியும் என்பதை அது நிரூபித்துக் காட்டியது.
இருப்பினும், EPRLF-இன் இந்த நகர்வு முழுமையான வெற்றியைத் தராமல் போனதற்கும், தமிழ் மக்களிடையே அது தற்காலிகமாகப் பலவீனமடைந்ததற்கும் சில முக்கியமான காரணங்களும், விமர்சனங்களும் உள்ளன
*மாகாண அரசு அமைக்கப்பட்ட
போது, அதற்கு இலங்கை அரசு முழுமையான அதிகாரங்களை வழங்கவில்லை (குறிப்பாக காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள்). பிரேமதாச அரசு மாகாண சபையை முடக்க நினைத்தபோது, EPRLF இந்திய அரசை முழுமையாக நம்பியிருந்தது. இதனால் தமிழ் மக்கள் மத்தியில் அவர்கள் “இந்தியாவின் தத்தெடுக்கப்பட்ட பிள்ளைகள்” என்ற பிம்பத்தைப் பெற்றனர்.
*இந்தியப் படை வெளியேறும் சூழல் உருவானபோது, மாகாண சபையைப் பாதுகாக்க EPRLF மற்றும் ENDLF இணைந்து “தமிழ் தேசிய இராணுவம்” (Tamil National Army – TNA) என்ற அமைப்பை உருவாக்கின. இதில் தமிழ் இளைஞர்கள் பலவந்தமாக இணைக்கப்பட்டதாகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இது மக்களின் ஆதரவை அவர்கள் இழக்க ஒரு முக்கிய காரணியானது.
*இந்திய அமைதிப்படை முழுமையாக வெளியேற மாகாண சபை முறிவடையும் நிலைக்கு வந்தபோது, 1990 இல் முதலமைச்சர் அவசரமாக “சுயாதீன ஈழப் பிரகடனத்தை” அறிவித்தார். இது சட்டரீதியாக எந்தப் பலனையும் தராமல், மாகாண சபை கலைக்கப்படுவதற்கும், EPRLF தலைவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கும் மட்டுமே வழிவகுத்தது.
பின்னர் 2006 இல் இலங்கை உச்ச நீதிமன்றம் வடக்கு-கிழக்கு இணைப்பைச் செல்லாது என்று அறிவித்தது வேறுகதை. தற்போதைய ஆட்சியாளர்களின் முக்கிய கட்சி ஒன்றின் பங்கு இருந்ததாகவும் பேச்சு உண்டு.
எனது இந்தப்பதிவின் நோக்கத்தை நிறைவு செய்வதற்கு ஏதுவாக;
நீண்ட நெடிய ஈழவிடுதலைப்போரில் வெற்றிகள் , தோல்விகள், சாதனைகள், தியாகங்கள் என நீண்ட அந்த போராட்டத்தை 2009 இல் இலங்கை அரசு சர்வதேச பலத்தோடு தோற்கடித்து முடித்து வைத்த புலிகளின் ஆயுதப் போராட்டத்தையும் – EPRLF இன் அந்தக் குறுகியகால அரசியல் போராட்டத்தையும் சிறிய ஒப்பீடு செய்யவேண்டிய சூழல்
எனக்குள்ளது
**எல்.டி.டி.ஈ (LTTE) யின் ஒரே இலக்கு
சமரசமற்ற தமிழீழம் என்கிற தனிநாடு.
ஆனால் ஈ.பி.ஆர்.எல்.எஃப் (EPRLF) இன் இலக்கு காலத்தின் சூழ்நிலையால் தற்காலிகமாக
(தந்திரோபாயமாக) மக்களின் உடனடித்தேவையைக் கருத்தில் கொண்டு அதிகாரப் பகிர்வுடன் கூடிய சுயாட்சி (மாகாண சபை எனமாறியது
** புலிகளின் பலம் இராணுவ ரீதியாக பிரம்மாண்டமாகவும் உலகையே வியக்க வைத்த மரபுவழிப் படை மற்றும் கட்டுப்பாடு என இருந்தபோது
EPRLF இன் பலம் அதன் அரசியல் தத்துவம், வெகுஜன அமைப்புகள் மற்றும் சர்வதேச (இந்திய) ஆதரவு என வளர்ந்திருந்தது
இறுதியில் இவற்றின் விளைவுகளை நோக்கினால்..
முள்ளிவாய்க்கால் பேரழிவோடு ஆயுதப் போராட்டம் முடிவடைந்தது.
மாகாண சபை தற்காலிகமாக வீழ்ந்தாலும், அதன் கட்டமைப்பு (13வது திருத்தம்) இன்றும் அரசியல் சட்டப்புத்தகத்தில் உள்ளது.
ஆக இந்த ஒப்பீடானது புலிகளின் மண்டியிடா வீரத்தை அவமதிப்பது அல்ல. அவர்களது வீரவரலாறு தவறுகளையும், சாதனைகளையும் அதிகம் கொண்ட தனித்துவமான ஒன்றாகும் என்பதில் மாற்றுக்கருத்து பலருக்குமிருக்காது.
எனது நோக்கம் வரலாற்று ரீதியாக நடந்த ,மிக முக்கியமான, பலரும் மறந்துபோன அல்லது மறக்கடிக்கப்பட்ட ஓர் உண்மையை கூறுவதும், எனது கட்சியான
EPRLF ஐ ஓர்’சாதாரண அரசியல் கட்சி என நினைத்திருப்போருக்கும் அது ஓர் ஆக்கபூர்வமான அரசியல் சக்தி என்பதை நிறுவுவதற்குமே அன்றி வேறல்ல.
விரும்பியோ விரும்பாமலோ இந்த உண்மையை இன்று எல்லோரும் ஏற்றுக்கொண்டுதானே ஆகவேண்டும்..
ஆம்;
ஆயுத வெற்றிகள் நிரந்தரமான அரசியல் தீர்வைத் தராதபோது, மிகக் குறைந்த அதிகாரங்களைக் கொண்ட மாகாண சபை முறையே இன்றுவரை தமிழ் மக்களின் கைகளில் இருக்கும் ஒரே சட்டப்பூர்வ பலனாக எஞ்சியுள்ளது.
அந்த வகையில், EPRLF மற்றும் அதன் தலைவர் பத்மநாபா எடுத்த முடிவு தொலைநோக்குப் பார்வையில் தமிழ் மக்களுக்கு ஒரு ஆட்சிக் கட்டமைப்பை உருவாக்கிக் கொடுத்தது என்பதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக அன்றைய அரசியல் சூழல், இலங்கை அரசின் ஏமாற்றுப் போக்கு,மற்றும் தமிழ் இயக்கங்களுக்கு இடையிலான சகோதரப் படுகொலைகள் தந்த பலவீனங்கள் ஆகியவை EPRLF எனும் அந்த ‘ஆக்கபூர்வமான அரசியல் சக்தியை’ முழுமையான இலக்கை அடைய விடாமல் தடுத்துவிட்டன என்பதே நிதர்சனமாகும்.
தோழர்.குகன்







