அனுர அரசு நீதித்துறையை சுயாதீனமாக்க முயல்கிறதா? அரசு சார்பானதாக்க முயல் கிறதா?

நீதிபதிகளின் சேவைக்கால வயதெல்லையை நீடிப்புச் செய்யும் முயற்சிகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியாளர் இறங்கியுள்ளனர். இதனை எதிர்க்கட்சிகள் எதிர்த்துக் குரல் கொடுப்பது மட்டுமன்றி இலங்கையின் ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிதியிடம் தலையிடக்கோரி முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் மனுவும் கையளிக்கப்பட்டுள்ளது. இங்கு இரு பரிமாணங்களில் இவ்விடயத்தை பகுப்பாய்வு செய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். ஒன்று நீதித்துறையின் சுயாதீனத்தன்மையை வரலாற்று ரீதியாக நோக்குதல். மற்றையது இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு நடுநிலையாக செயற்படுதல். மேற்கண்ட அடிப்படைகளில் இலங்கையின் நீதித்துறையின் வரலாற்றை நோக்கினால் இரண்டு முக்கிய அம்சங்களை இலகுவாக காண முடியும்.

நீதித்துறை மிகப்பெருமளவுக்கு ஆட்சியாளர் சார்ந்து செயற்படுவது. மிகக்குறிப்பாக இலங்கையில் நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சிமுறை அறிமுகப்படுத்தப்பட்ட பின் இப்போக்கு மிகத் துலாம்பரமாகவே தெரிகிறது.

நீதித்துறை சிங்கள பௌத்த மேலாதிக்க . சித்தாந்தங்களின்பால் சட்டங்களை வளைத்தும் நெளித்தும் திரிபுபடுத்தியும் செயற்படுத்தல்.

நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறையை இலங்கைக்கு அறிமுகப்படுத்தி அதன் முதல் ஜனாதிபதியாக செயற்பட்ட ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் பிரபலம் மிக்க கூற்று ‘என்னால் ஆணைப் பெண்ணாக்கவோ அல்லது பெண்ணை ஆணாக்கவோ முடியாதே தவிர மீதிஅனைத்தையும் செய்ய முடியும்||. இக்கூற்றானது இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதி ஆட்சிமுறையானது ஓர் சர்வாதிகாரிக்கு ஈடானது என்பதை பறைசாற்றுவதாகும். ஜனநாயக ஆட்சி முறையில் மூன்று முக்கிய அம்சங்கள் உள்ளன.

சட்டவாக்கம்

நிறைவேற்றதிகாரம்

நீதித்துறை.

இவை ஒன்றை ஒன்று மேலாதிக்கம் செலுத்த முடியாது. அதேவேளை ஒன்றிலொன்று தங்கி செயற்படும் துறைகளாகும். இதனை அதிகாரப் பகிர்வும் சமநிலையும் என அரசியலிற் குறிப்பிடுகிறnhம்.

இங்கு சட்டவாக்கம் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் சட்டங்களை உருவாக்குவதும் பழைய சட்டங்களை மாற்றுதல் ஆகிய செயற்பாடுகளைக் குறிக்கும். இது நாடாளுமன்றத்திற்கு உரியதான செயற்பாடாகும்.

நிர்வாகம் அல்லது நிறைவேற்று அதிகாரம் என்பது உருவாக்கப்பட்ட சட்டங்களை நடைமுறைப்படுத்தலாகும். இது ஜனாதிபதி, அமைச்சரவை, அதிகாரிகளுக்குரித்தான செயற்பாடாகும்.

இறுதியாக நீதி. இது சட்டங்களை நிர்வகித்தல், சட்ட மீறல்களுக்கு தீர்வு கண்டு நீதி வழங்குதல்,சட்டங்கள் அரசியல் யாப்புக்கு முரணாக இருக்கும் பட்சத்தில் அவற்றை இரத்துச் செய்தல் மற்றும் அரசியல் யாப்பையும் சட்டங்களையும் வியாக்கியானம் செய்தல் ஆகியன.

இம்மூன்றும் ஒன்nறhடொன்று மிக நெருக்கமாக தொடர்புபட்ட அதேவேளை ஒன்றின் மீதொன்று மேலாதிக்கம் செலுத்த முடியாத சுயாதீனத்தன்மை கொண்ட பிரிவுகளாகும். இவற்றின் சுயாதீனத்தன்மை எந்தளவுக்கு பாதிக்கப்படுகிறதோ அல்லது எந்தளவுக்கு ஒன்றன் மீதொன்று ஆதிக்கம் செலுத்த முடிகிறதோ அந்தளவு ஆட்சியின் ஜனநாயகப் பண்பு பாதிக்கப்பட்டு சர்வாதிகாரப் பண்பு தலைதூக்கும்.

இவ்வரசியற் செயற்முறையின் புரிதலிலிருந்து ஜே.ஆர். ஜெயவர்த்தனாவின் கூற்றை நோக்கினால், சட்டவாக்கம் என்கையில், நிறைவேற்றதிகாரம் என்கையில், நீதித்துறையும் என்கையில் என்னால் எதுவும் செய்ய முடியும் என்பதையே அது வெளிப்படுத்துகிறது. உதாரணமாக

1994 நாடாளுமன்றத் தேர்தலில் யாழ் கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் தீவகம் தவிர ஏனைய பிரதேசங்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. எனவே மாவட்டத்திற்கான தேர்தல் தீவகத்தில் சில ஆயிரம் வாக்காளர் இருந்த நிலையில் பெரும் முறைகேடான வகையில் நடைபெற்றது. இவ்வகையில் EPDP ஒன்பது ஆசனங்களைப் பெற்றது. முறைகேடான இத்தேர்தலை நிராகரிக்கக் கோரி EPRLF வழக்குத் தொடர்நதது. ஒரு வருடத்திற்கு மேலாக நடைபெற்ற இவ்வழக்கு முடிவுக்கு வந்து தீர்ப்பு வழங்கும் நிலையை எட்டியிருந்தது. சரத் என். சில்வா நீதிபதியாகவிருந்தார். தீர்ப்பு EPRLFக்கு சாதகமாக அமையவிருந்தது. இக்காலகட்டத்தில் சந்திரிகா தலைமையிலான அன்றைய ஆட்சிக்கு பெரும்பான்மை இருக்கவில்லை. எனவே EPDP நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்பட்டது. எனவே EPDP நாடாளுமன்ற உறப்பினர்களின் உறுப்புரிமையை பாதுகாக்க வேண்டிய தேவை சந்திரிக்காவிற்கு ஏற்பட்டது. அதனால் தீர்ப்பு வழங்கும் முன்னரே சரத் என் சில்வா பதவியுயர்வு வழங்கப்பட்டு உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதி வழக்கை மீண்டும் ஆரம்பத்திலிருந்து விசாரிக்க வேண்டும் என்று கூறியதுடன் அடுத்த ஓரிரண்டு அமர்வுகளிலேயே வழக்காளி மன்றுக்கு வர தாமதமான காரணத்தைக்காட்டி வழக்கைத் தள்ளுபடி செய்தார்.

ஒரு வருடத்திற்கு மேலாக பெருமளவு சாட்சிகள் அழைக்கப்பட்டு விசாரணைகள் குறுக்கு விசாரணைகள் நடைபெற்று முடிவுக்கு வந்த ஓர் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கை சந்திரிக்காவின் ஆட்சியைப் பலப்படுத்துவதற்காக நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அப்போதைய அரசியல் யாப்பு மற்றும் நீதி அமைச்சராக பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்முலம் நீதித்துறை என்கையில் என்ற ஜே.ஆரின் கூற்றை சந்திரிக்காவும் நிருபித்தார்.

மேலும் மகிந்த ராஜபக்ச ஆட்சியில் திசநாயகம் என்னும் தமிழ் ஊடகவியலாளர் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் 21ன் பிரகாரம் கைது செய்யப்பட்டு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். ஐம்பது பிரதிகள் மட்டுமே அச்சிடப்படுகின்ற ஆங்கில சஞ்சிகையான நோர்த் ஈஸ்ற் ஹெரால்டு (North-East Herold) என்ற தனது ஆங்கில சஞ்சிகையில் மூன்று ஆண்டுக்கு முன்னர் எழுதிய கட்டுரையில் கிழக்கில் இறுதி யுத்தம் நடைபெற்ற போது அரசாங்கம் கிழக்கு மாகாண மக்கள் தொகையை குறைத்துக்காட்டி அதற்கேற்ப குறைவான உணவும் மருந்தும் அனுப்பி மக்களைப் பட்டினிக்குள்ளாக்கி அந்தப் போரை நடத்தியதாக அக்கட்டுரை அமைந்திருந்தது. இது இனங்களுக்கிடையில் பிளவை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டது என்பதே குற்றச்சாட்டாகும். இவ்விடயம் சர்வதேச கவனத்தை ஈர்த்து அரசுக்கெதிரான கண்டனங்கள் எழுந்தன. சர்வதேச அழுத்தம் காரணமாக வேறுவழியின்றி திசநாயகத்திற்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது. அவ்வேளையில் ஜனாதிபதி உதிர்த்த கூற்று,நான் நினைத்தால் ஒருவரைக் குற்றவாளியாக்கி உள்ளே தள்ளவும் முடியும். குற்றவாளியை நல்லவனாக்கி வெளியே விடவும் முடியும் என்பதாகும். இதன் முலம் நீதித்துறையும் என்கையில் தான் இருக்கிறது என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்தினார்.

மறுபுறம் ராஜபக்ச ஆட்சியில் பசில் ராஜபக்ச பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகவிருந்தார். இவர் திவிநெகும (கிராம மீளெழுச்சி) என்ற சட்டத்தை நிறைவேற்ற முயன்றார். ஆனால் அச்சட்டம் மாகாணசபைக்குரித்தான உள்ளுராட்சி மன்றங்களின் சில அதிகாரங்களைப் பறிப்பதாக அமைந்திருந்தது. இதனால் அன்று உச்சநீதிமன்ற பிரதம நீதியரசராகவிருந்த ஷிராணி பண்டாரநாயக்க இச்சட்டமூலம் மாகாண அதிகாரங்களைப் பறிப்பதாக உள்ளதால் ஒன்பது மாகாணங்களினதும் ஒப்புதல் தேவை எனக்கூறினார். அவ்வேளையில் வடக்கு மாகாணம் ஆளுனர் ஆட்சியின் கீழ் நிர்வகிக்கப்பட்டிருந்தது. 8 மாகாண முதல்வர்களின் ஒப்புதல் பெற்ற பசில் வடக்குக்கு ஆளுனரிடமிருந்து ஒப்புதல் பெறுவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனை நிராகரித்த ஷிராணி பண்டாரநாயக்க ஆளுனர் ஜனாதிபதியால் நியமிக்கப்படுபவர். மக்களால் தெரிவு செய்யப்பட்டவர் அல்ல. எனவே அவரது ஒப்புதல் ஏற்கப்பட முடியாது என்றார். அண்ணா மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி. தம்பி பசில் அமைச்சர்,நாடாளுமன்றத்தில் அவர்கள் கட்சிக்கு பெரும்பான்மை இருந்தது. எனவே நிறைவேற்றுத்துறை (ஜனாதிபதி) உத்தரவின் பேரில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான ஷிராணி பண்டாரநாயக்கவிற்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வந்து அவரை பதவியிலிருந்து தூக்கியெறிந்தார்கள். இது நீதிபதிகள் ஆட்சியாளருடன் ஒத்துப்போகாவிட்டால் அல்லது சுயாதீனமாக செயற்பட முயற்சித்தால் பதவி பறிக்கப்படும் என்ற மிகப்பெரும் எச்சரிக்கையாகும். எனவே நீதித்துறை ஜனாதிபதியின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகிறது என்பதை இது துலாம்பரமாக வெளிப்படுத்துகிறது. இவை சில உதாரணங்கள் மட்டுமே.

இன்றைய ஆட்சிக்கு முன்னரான காலம் வரை இரண்டு கட்சிகளே மாறி மாறி ஆட்சிக்கு வந்தன. எனவே அவர்களால் நியமிக்கப்பட்டவர்கள் ஏதோ ஓர் வகையில் முன்னை ஆட்சியாளர்களைச் சார்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். புதிய ஆட்சியின் கீழ் உள்ள நீதிபதிகளும் முன்னைய ஆட்சியாளர்களால் நியமிக்கபட்டவர்களே. எனவே தற்போதைய ஆட்சியாளர்களுக்கு சாதகமான நீதித்துறையாக மாற்ற வேண்டுமெனின் இன்றுள்ள நீதிபதிகளைக் கவர வேண்டும். அவர்களின் சேவைக்கால வயதெல்லையை நீடிப்பதென்பது அனைத்து நீதிபதிகளுக்கும் பிடித்தமானதே. இதனை செய்வதன் மூலம் நீதிபதிகளை தம்வசப்படுத்துவதே இன்றைய ஆட்சியாளரின் நோக்கமாகும்.

இதன்மூலம் தமது ஆட்சிக்காலத்தில் தமது தேவைக்கும் விருப்பத்திற்குமேற்ப நீதித்துறை செயற்பட வேண்டும் என்பதும் தாம் ஆட்சியை இழந்தாலும் நீதித்துறையில் தமக்கு சார்பானவர்களை உருவாக்கி வைக்க வேண்டும் என்பதே காரணமாகும்.

இங்கு நோக்க வேண்டியது யாதெனில் ‘முறைமை மாற்றத்திற்கு வாக்களியுங்கள் எனக்கோரி ஆட்சிக்கு வந்த அனுர ஆட்சி, நீதித்துறையின் அரசு சார்பற்ற சுயாதீனத்தன்மையை வலுப்படுத்தும் முயற்சிகளுக்கு முரணாக முன்னைய ஆட்சியாளர்கள் எவ்வாறு நீதித்துறையை ஆட்சியாளரின் பிடிக்குள் வைத்திருந்தார்களோ அதேபோல் தாமும் நீதித்துறையை தமது பிடிக்குள் வைத்திருக்க விரும்பும் முன்னைய ஆட்சிகளின் நீட்சியாகவே பார்க்க முடிகிறது.

நீதித்துறை இன, மத பேதம் பார்க்காது எந்தளவுக்கு நடுநிலையுடன் செயற்படுகிறது என்றால் மிகப்பெருமளவுக்கு சிங்கள பௌத்த பெரும்பான்மைத்துவ சிந்தனையின் அடிப்படையிலும் மேலாதிக்கவாத கோட்பாட்டின் அடிப்படையிலுமே செயற்படுகிறது என்பதற்கும் நீண்ட பட்டியல் உண்டு எனினும் அதனைப் புரிந்துகொள்ள ஒருசில உதாரணங்களை நோக்கலாம்.

கதிர்காமம் கந்தன் கோவில் இலங்கையின் தொன்மையான கோவில்களில் ஒன்று. இது அருணகிரிநாதரின் பாடல் பெற்ற சைவத்திருத்தலம் ஆகும். இது சைவ ஆகம முறைப்படி கட்டப்பட்டு, பூசை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டிய தலம். ஆனால் இங்கு கப்றாளை என்ற பெயரில் சிங்களவர்களின் கைகளிலேயே கோவில் உள்ளது. இது இலங்கைவாழ் சைவ மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் செயலாகும். எனவே இக்கோவிலை சைவ ஆகம முறைப்படி நடைமுறைப்படுத்துவதற்கு கோவிலை தமது பொறுப்பில் தர வேண்டும் என சில கோயில் குருக்கள்மார் வழக்குத் தொடுத்தனர். இங்கு மத உரிமை தொடர்பில் அரசியல் யாப்பு வழங்கியிருக்கும் உரித்தின்; அடிப்படையில் தீர்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அந்த கோவில் அமைந்திருக்கும் நிலம் வழக்காளிகளுக்கு சொந்தமில்லை என்பதால் அவர்கள் அக்கோவிலுக்கு உரிமைகோர முடியாதென நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பானது நீதிமன்றத்தின் பௌத்த மத சார்பையும் சைவமத வெறுப்பையும் அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.

1998 யூன் 10ம் திகதி திருகோணமலை சுதந்திரபுரம் கிராமம் இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டு எறிகணைகள் மற்றும் துப்பாக்கிகளால் மக்கள் விரட்டி விரட்டிக் கொல்லப்பட்டனர். இதில் பல நூறுபேர் பலியாயினர். இதில் ஈடுபட்ட இராணுவத்தினர்க்கெதிரான வழக்கில் இராணுவத்தின் மீதே குற்றம் என்பதை அரச தரப்பு சட்டத்தரணிகள் ஏற்றுக்கொண்டனர். அதனடிப்படையில் இவ்வின அழிப்புத்தாக்குதலுக்குரிய தண்டனை வழங்காமல் ஜூரீகள் எனப்படும் சில சிங்கள பௌத்த இனவாதிகளின் முடிவை ஏற்று மரணதண்டனை பெற வேண்டிய கொலைஞர்கள் விடுதலை செய்யப்பட்டனர். தமிழர்களைக் கொன்று குவித்த முப்படைகள் தொடர்பான எந்த வழக்கிலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. இது இலங்கை நீதித்துறை ஆழமான இனவாத சிந்தனைகளில் கட்டியெழுப்பப் பட்டுள்ளமையை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துகின்றது.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் வெளிப்பாடுகளில் ஒன்றான இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தை பிரித்து தமிழ் மக்களைப் பிரித்தாளவும் வடக்கு கிழக்கை, சிங்கள பௌத்த மயமாக்கவும் வழிதிறந்த வழக்கை நடத்தியது இன்றைய ஆட்சியாளர்களாகும். பதினெட்டு ஆண்டுகளாக இணைக்கப்பட்டிருந்த வடக்கு கிழக்கு மாகாணங்களைப் பிரித்து தீர்ப்பளித்தது சரத் என். சில்வா என்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாவார். அப்போது ஜனாதிபதியாக இருந்தவர் மகிந்த ராஜபக்ச ஆகும். இது மகிந்த ராஜபக்சவும் இன்றைய ஆட்சியாளர்களும் தேனிலவில் இருந்த காலமாகும். எனவே இன்றைய ஆட்சியாளர்களுக்கு ஜனாதிபதியின் நீதிமன்றத்தின் மீதான செல்வாக்கை பயன்படுத்த முடிந்தது. இவ்வழக்கில் நீதிமன்றம் இந்திய இலங்கை ஒப்பந்தத்தையோ இன நல்லிணக்கத்தையோ நாட்டு நலனையோ எதனையும் கணக்கிலெடுக்காமல் தமிழர்களின ஆட்சியை உடைத்து பலவீனப்படுத்தி சிங்கள பௌத்தத்தினுள் கரைத்துவிடும் திட்டத்துடனேயே இணைப்பு துண்டிக்கப்படும் தீர்ப்பு வழங்கப்பட்டது. இது நீதித்துறை எந்தளவிற்கு இனவெறியின்பாற்பட்டு செயற்படுகிறது என்பதை வெளிப்படுத்தும் இன்னோர் முக்கிய சான்றாகும். அன்று தேன்நிலவில் இருந்த மொட்டுக்கட்சியும் திசைகாட்டியும் இன்று இரு துருவங்களாகி விட்டன. இன்றைய ஆட்சியாளரின் திட்டங்களிலொன்றான மகிந்த ராஜபக்சவின் மொட்டுக்கட்சி முக்கியஸ்தர்களின் ஊழல் கொலை வழக்குகளை முன்னெடுக்க நீதித்துறையின் ஒத்துழைப்பு அவசியமாகிறது. எனவே ஏற்கனவே அரசு சார்பாகவும் சிங்கள பௌத்த நலன் சார்பாகவும் செயற்படும் நீதித்துறையை மேலும் அந்த சகதிக்குள் அமிழ்த்தி தமது நலன் காக்கும் தொடர்ச்சியே நீதிபதிகளின் சேவைக்கால வயதெல்லை மாற்றும் முயற்சியாகும்.

கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன்

Share this article

More News