அன்பிற்கினிய தமிழ் மக்களே!

அன்பிற்கினிய தமிழ் மக்களே!

வைகாசி 23ம் திகதி மக்கள் விடுதலை முன்னணி (JVP) யின் செயலாளர் ரில்வின் சில்வா அவர்கள் யாழ்ப்பாணத்தில் NPP/JVP யின் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்துள்ளார். அதன் பின்பு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த வருடம் மாகாணசபைத் தேர்தலை நடத்த முடியாதென்றும் வரவுசெலவுத் திட்டத்தில் அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி (10,000 கோடி) ‘ரித்வா
புயலால்’ பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணத்திற்காக எடுக்கப்பட்டுவிட்டது என்றும் இப்பொழுது நியமிக்கப்பட்டிருக்கும் பாராளுமன்ற தெரிவுக் குழுவின் அறிக்கையை பொறுத்து அடுத்த வருடம் அதைப் பற்றி சிந்திக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

ஜனாதிபதியோ அமைச்சர்களோ மாகாணசபைத் தேர்தல் நிதி வேறு தேவைக்கு எடுக்கப்பட்டு விட்டதாக இதுவரை கூறவில்லை. ஆனால் ஆளும் கட்சியின் செயலாளர் அந்தப் பணம் வேறு தேவைக்காக எடுக்கப்பட்டு விட்டதாக கூறுகின்றார். இதனுடைய பொருள் என்ன? ஜனாதிபதியோ அமைச்சர்களோ வெளிப்படுத்தாத ஒரு விஷயத்தை கட்சி செயலாளர் வெளிப்படுத்துகின்றார் என்னும்பொழுது ரிஸ்வின்.பி.சில்வாவே சகல விடயங்களையும் கையாள்வதாகத் தோன்றுகின்றது.

நிதியைக் கையாளும் முழு அதிகாரமும் பாராளுமன்றத்திற்கே இருக்கின்றது. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் பல மில்லியன் உதவிகள் செய்திருக்கின்றன. அரசும் அனர்த்த நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தாராளமாக உதவி செய்யலாம். ஆனால் மாகாணசபைத் தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை பாராளுமன்றத்திற்கு அறிவிக்காமலோ அல்லது அந்த நிதியானது வேறு தேவைக்காக எடுக்கப்பட்டுவிட்டது என்பதை இதுவரை அறிவிக்காமல் இருப்பதற்கான காரணம் என்ன என்பதை இனியாவது அரசு வெளிப்படுத்த வேண்டும்.

மாகாணசபைத் தேர்தலை நடத்த அரசு அச்சப்படுகின்றது. இதை இயன்றவரை பிற்போடவே அரசு முயற்சிக்கின்றது. தேர்தல் நடந்தால் நாம் தோற்கடிக்கப்பட்டு விடுவோம் என்ற அச்சம் ஒரு பக்கம் இருக்க தமிழ் மக்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்க இப்பொழுதுள்ள அரசு விரும்பவில்லை என்பது வெளிப்படையான உண்மை. சிங்கள பௌத்த பெரும்பான்மை ஆளுகைக்குள் தமிழ் மக்கள் இருக்க வேண்டும் என்பதும்> அம்மக்கள் படிப்படியாக அழித்தொழிக்கப்படவேண்டும் என்பதுமே அவர்களது எண்ணமாக இருக்கின்றது. முன்னிருந்த அரசாங்கங்களின் அதே மனநிலைதான் இவர்களுக்கும் இருக்கின்றது.

யுத்தம் முடிந்து 17 வருடங்கள் முடிந்துவிட்ட நிலையிலும் வடக்கு – கிழக்கு எங்கும் ஆக்கிரமிப்பு இராணுவ முகாம்கள் இருக்க வடக்கு கிழக்கு எங்கும் சட்ட விரோதமான முறையில் புதிய புதிய பௌத்த கோயில்கள் அங்கு சிங்கள குடியேற்றங்கள் என தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு-கிழக்கு மாகாணங்களில் சிங்கள குடியேற்றங்களைக் கொண்டுவந்து அவர்களது பிரசன்னத்தையே பெரும்பான்மையினராக்கும் முயற்சி. இது இனவாதம் இல்லாமல் வேறென்ன?

பல லட்சம் மக்களின் உயிரிழப்புகளுக்குப் பின்னர் இந்தியாவின் முயற்சியினால் கிடைத்த தமிழர்களுகுரித்தான இந்த மாகாண சபை முறை கூட இல்லாமல் போய் விடுமோ என்ற அச்சம்தான் தமிழ் மக்கள் மத்தியில் இன்று ஆரம்பித்துள்ளது. பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஓரிரு தமிழ் பிரதிநிதிகளைத் தவிர ஏனையோர் மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக மௌனம் காப்பவர்களாகவே உள்ளார்கள்.

எமது மௌனமும் எமக்கு மத்தியில் உள்ள ஒற்றுமையின்மையும் அரசாங்கத்திற்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்கின்றது. அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை வைக்காவிட்டாலும் மாகாணசபை அதிகாரங்களை மீளப் பறித்தெடுத்தாலும் தமிழர்களுக்கு அதனால் பாதிப்பில்லை என்று முட்டாள்தனமான இந்த நிலையில் சில தமிழ் அரசியல் கட்சிகள் இருப்பதும் அவ்வாறான கருத்துக்களை தமிழ் மக்களுக்குள் விதைப்பதும் மிகவும் கொடுமையான செயலாகும்.

தமிழ் ஊடகத்துறையில் இருக்கக் கூடிய பத்திரிகையாளர்களோ அல்லது பல்கலைக்கழக விரிவுரையாளர்களோ பேராசிரியர்களோ கூட இவ்வாறான பாதிப்புகளை கண்டு கொள்ளாமல் கடந்து செல்வது மாத்திரமல்ல அழிவின் எல்லைக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் எமது தமிழ் மக்கள் காப்பாற்றப்பட வேண்டுமெனின் அவர்களுக்குரிய அதிகாரங்களை அவர்கள் கையில் எடுக்க வேண்டும் என்ற அடிப்படையை புரிந்துகொள்ளாமல் அவர்கள் நடந்து கொள்வதென்பது வருத்தமளிக்கக் கூடியதாகவே உள்ளது.

இவை ஒரு புறமிருக்க எமது தமிழ் அரசியல் தலைமைகள் வடபகுதி மக்களின் உண்மையான பிரச்சனைகளைத் தீர்க்கத் தவறிவிட்டனர் என்றும் பிமல் ரத்நாயக்க புலம்பியிருக்கின்றார்.

நீங்கள் 22 வருடம் அரசியல் செய்து சிங்கள? தமிழ் முஸ்லீம் மக்களுக்கு என்னவற்றையெல்லாம் வெட்டிக் கிழித்தீர்கள். இப்பொழுது அதிகாரத்திற்கு வந்திருக்கின்றீர்கள். அதிகாரத்திற்கு வந்து 1 1/2 வருடம் கடந்துவிட்டது. இலங்கையில் என்ன பிரச்சனைகளைத் தீர்த்தீர்கள்?

பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்தீர்களா?
வேலையில்லாப் பிரச்சினைகளைத் தீர்த்தீர்களா?
வாழ்க்கைச் செலவு உயர்வை கட்டுப்படுத்தினீர்களா?
நீங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியது போல் புதிய அரசியல் யாப்பைக் கொண்டு வரமுயற்சித்தீர்களா?
அல்லது மாகாண சபைத் தேர்தலையாவது நடத்தினீர்களா?
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு-கிழக்கை புனரமைக்க ஏதாவது பிரத்தியேக திட்டங்கள் உங்களிடம் உள்ளதா?
காணிகளை விடுவித்தீர்களா?

குறைந்தது தேசிய இனப் பிரச்சனைக்குத் தீர்வுகாண ஏதாவது முயற்சிகள் செய்தீர்களா?
எந்த நிதி அதிகாரமும் இல்லாத தமிழ் அரசியல் தலைமைகள் எவ்வாறு மாகாண சபையை கொண்டு பிரச்சினைகளைத் தீர்ப்பார்கள் என்று எதிர்பார்க்கின்றீர்கள். தேர்தல் நடத்த வேண்டும் அவர்களிடம் அதிகாரத்தைக் கொடுக்க வேண்டும். அவர்களது பிரதேச அபிவிருத்திக்கு மாகாண சபைகளுக்கு பக்க பலமாக இருக்க வேண்டும். இவற்றை விடுத்து ஏதோ நீங்கள் சாதனைகள் புரிந்த மாதிரியும்  தமிழ் தலைமைகளே இன்னும் பிரச்சினைகளைத் தீர்க்க விருப்பமற்றவர்கள்

என்று கோணத்திலும் பேசுவது அர்த்தமற்றது.

வடபகுதி அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்ல இடையூறாக இருப்பது இந்த அரசாங்கம்தான். வடபகுதியில் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கவும் அதனை அபிவிருத்தி செய்யவும் தயங்குகிறீர்கள். பலாலி விமான நிலையத்தை விஸ்தரித்து பெரிய பயணிகள் விமானங்கள் இறங்கக் கூடிய சூழ்நிலையை உருவாக்குமாறு கோரியும் நீங்கள் அதனை நிராகரித்து வருகின்றீர்கள். பலாலி விமான நிலையம் விஸ்தரிக்கும் பட்சத்தில் புலம் பெயர் தமிழ் மக்களின் வருகையும் தென்னிந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகையும் பல மடங்கு அதிகரிக்கும். அதே போல் K.K.S துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட்டால் வடக்கிற்கு தேவையான பொருட்கள் இந்தியாவிலிருந்து நேரடியாக இறக்குமதி செய்ய முடியும் என்பதுடன் கொழும்பிலிருந்து கடல் மார்க்கமாக வெகுவிரைவாக பொருட்களைக் கொண்டு வரமுடியும். ஆனால் இவற்றை இனாமாக செய்வதாக இந்தியா முன்வந்த போதும் நீங்கள் அதை தடைசெய்து வருகின்றீர்கள். இந்த லட்சணத்தில் வடக்கு அபிவிருத்தி பற்றி பேச உங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது.

அன்பிற்கினிய தமிழ் மக்களே!

NPP/JVP யின் பசப்பு வார்த்தைகளைக் கேட்டு ஏமாந்தது போதும். எமது அபிவிருத்தியை நாமே செய்ய வேண்டும். எங்களுக்கு அபிவிருத்தியை கொண்டு வருகின்றோம் என்று கூறுவதெல்லாம் வெறும் வாய் சவடால்தான். ஆகவே மாகாண சபை அதிகாரத்திற்காக அதன் தேர்தலுக்காக நாம் தொடர்ச்சியாக போராடுவதை தவிர எமக்கு வேறு வழியில்லை.

மறுமடலில் சந்திக்கும் வரை
உங்கள்
சுரேஷ் பிரேமச்சந்திரன்

Share this article

More News