
இலங்கையில் தமிழ் மக்களின் வரலாறு என்பது நீண்ட கால வரலாறு. இயக்கர்,நாகர் காலம் என்பது தமிழ் மக்களின் காலம் என்பதில் இருந்து தமிழ் மக்களின் வரலாறு பேசப்படுகிறது. ஆனால் ஈழத்தமிழ் வரலாறு என்பது அதற்கு முற்பட்டதாகவும் இருக்கலாம். இவற்றை சரியானமுறையில் ஆய்வு செய்ய ஈழத்தமிழ் மக்களுக்கு அதிகாரம் இல்லை. புராதன இடங்களை ஆய்வு செய்யவும் புராதன சின்னங்களை ஆய்வு செய்யவும் சிங்கள பௌத்த அரசுக்கும் பௌத்த பிக்குகளுக்கும்தான் இலங்கையில் அதிகாரம் உண்டு.
எனவே இலங்கையின் வரலாறு என்பது சிங்கள பௌத்த வரலாறாக காட்டுவதற்கு இலங்கை அரசு ஆரம்பத்தில் இருந்தே முயற்சித்து வந்திருக்கின்றது. இதனை நிறைவேற்றுவதற்கு கற்பனை கதைகளை வரலாறுகளாகத் திணித்தும் புனைகதைகளை உருவாக்கியும் இது வரை முயற்சித்து வருகின்றது.
ஆனால் இப்பொழுது அண்மைக்காலத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்று தம்மை அழைத்துக் கொள்ளக்கூடிய கஜேந்திரன்,கஜேந்திரகுமார் போன்றவர்கள் ‘விடுதலைப் புலிகள் தனிநாட்டுக்காகப் போராடவில்லை தமிழ்த் தேசத்துக்காகத்தான் போராடினார்கள்’ என்று புதியதொரு புலுடாக்கதையை அவிழ்த்துவிட ஆரம்பித்துள்ளனர். அதாவது ‘இலங்கை என்பது ஒரு நாடு. அந்நாட்டிற்குள் இரண்டு தேசங்கள் உண்டு. ஒன்று தமிழ்த் தேசம் மற்றையது சிங்கள தேசம். விடுதலைப் புலிகளோ அன்றி பிரபாகரனோ இந்த தமிழ்த் தேசத்திற்காகத்தான் போராடினார்கள்!! ஆனால் இந்த தேசம் தனிநாடல்ல. அந்த தேசம் என்பது இலங்கை நாட்டின் ஒரு பகுதி, அந்த ஒரு பகுதிக்குள்ளேதான் புலிகள் போராடினார்கள் என்ற புதிய வியாக்கியானத்தை கொடுப்பதற்கு கஜேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றோர்கள் முயற்சித்து வருகின்றனர்.
இலங்கை என்பது தமிழ் மன்னர்களாலும், சிங்கள மன்னர்களாலும்,பல்வேறுபட்ட சிற்றரசர்களாலும் ஆளப்பட்டு வந்தது மாத்திரமல்ல,சோழப் பேரரசுகள்,பாண்டியப் பேரரசுகளாலும் ஆளப்பட்டு வந்திருக்கின்றது. பின்னர் கடந்த 500 ஆண்டு காலத்தில் போர்துக்கேயர், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர்களாலும் ஆளப்பட்டு வந்திருக்கின்றது. கண்டியில் விக்கிரம ராஜசிங்கன், வன்னியில் பண்டார வன்னியன்,யாழ்ப்பாணத்தில் சங்கிலியன், திருகோணமலையில் குளக்கோட்டன் போன்றவர்கள் இறைமை கொண்ட தமிழ் மன்னர்களாக ஆட்சி செலுத்தி வந்துள்ளனர். இவர்களை தோற்கடித்துத்தான் ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்கள்
இந்த நாட்டை கைப்பற்றினார்கள்.
1836ம் ஆண்டு நிர்வாக வசதிக்காக வடக்கு-கிழக்கு தமிழ் பிராந்தியமானது தென்பகுதியுடன் இணைக்கப்பட்டு முழு இலங்கையையும் ஒரே நிர்வாகத்தின்கீழ் ஆங்கிலேயர்கள் கொண்டு வந்தார்கள் என்பதே இலங்கையின் வரலாறு. ஆனால் ஆங்கிலேயர்கள் இந்த நாட்டைவிட்டு வெளியேறிய பொழுது முழு ஆட்சி அதிகாரத்தையும் சிங்களத் தரப்பிடமே விட்டுச் சென்றனர் என்பதும்,இதனால் தமிழ் மக்கள், சிங்கள ஆட்சியாளர்களால் பல்வேறுபட்ட ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர் என்பதும் அண்மைக்கால வரலாறு.
இலங்கை சுதந்திரமடைந்ததும் தமிழ் மக்களது தாயக பூமியான வடக்கு கிழக்கு மாகாணங்களானது, விவசாய அபிவிருத்தி என்ற பெயரில் சிங்கள ஆக்கிரமிப்பிற்கு உட்பட்டது. கிழக்கில் அல்லை, கந்தளாய் பிரதேசங்களும்> வடக்கில், வவுனியாவை ஒட்டிய பதவியா போன்ற பிரதேசங்களும் தொலைதூர சிங்கள பிரதேசத்து மக்களால் குடியேற்றத்துக்கு உள்ளாக்கப்பட்டன. அவர்களுக்கு வயல் நிலங்களும், வீட்டு நிலங்களும் பகிர்ந்தளிக்கப்பட்டன. அங்கிருந்த தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டனர். நில ஆக்கிரமிப்பை மறைக்க ஒரு சில இடங்களில் தமிழர்களுக்கும் சில துண்டு நிலங்கள் கொடுக்கப்பட்டாலும் கூட அவர்களும், இனக் கலவரங்களில் வெட்டிக் கொல்லப்பட்டும் அப்பிரதேசங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டும் வந்தனர்.
இவ்வாறுதான் 95வீதம் சிங்கள மக்களைக் கொண்ட அம்பாறை தேர்தல் தொகுதியும் உருவாக்கப்பட்டது. இதுபோலவே திருகோணமலையில் கந்தளாய் குடியேற்றத்தை உள்ளடக்கி சேருவில தேர்தல் தொகுதி உருவாக்கப்பட்டது. எனவே பெரும்பான்மை தமிழர் பிரதேசங்களை சிங்கள மயப்படுத்தல் என்பது அவர்களது முதலாவது குறியாக இருந்தது. அது இன்றும் தொடர்கின்றது.
பின்னர் சிங்களம் மாத்திரம் அரச கரும மொழி என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் இந்நாட்டுத் தமிழர் அனைவரும் சிங்களம் கற்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இலங்கையில் வேலைவாய்ப்புக்கோ அரசுடன் தொடர்பாடல்களை வைத்துக் கொள்ளவோ கட்டாயம் சிங்களம் கற்க வேண்டும் என்ற நிலை உருவாக்கப்பட்டது. இதுவும் போதாது என்பதால் தமிழ் மாணவர்கள் சிங்கள மாணவர்களை விட அதிக புள்ளிகள் பெற்றாலே பல்கலைக்கழகம் போகலாம் என சட்டங்கள் உருவானது.
மொத்தத்தில் தமிழ் மக்கள் தமது நிலத்தை இழந்து,மொழியை இழந்து, கல்வியை இழந்து,தமது தனித்துவத்தையே இழந்த போதுதான், 1976ம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியினரால் வட்டுக்கோட்டை பிரகடனம் மேற்கொள்ளப்பட்டது. வட்டுக்கோட்டை பிரகடனம் என்ன கூறுகின்றது ‘ஆங்கிலேயரிடம் இழந்து போன தமிழ் மக்களின் இறையாண்மையை மீண்டும் பெற்றுக்கொள்வது’ அதுவேதான் தமிழீழப் பிரகடனமாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
தமிழீழம் என்பது தனிநாடே தவிர கஜேந்திரகுமார் கூறுவது போன்று சிறீலங்கா என்ற நாட்டிற்குள் வாழ்வதற்கான பிரதேசம் அல்ல. தந்தை செல்வா அவர்களின் 1977ம் ஆண்டு பொதுத் தேர்தலானது தமிழீழத்திற்கான வாக்கெடுப்பாகவே பிரகடனப்படுத்தப்பட்டது. அன்று தந்தை செல்வா, அமிர்தலிங்கம் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் தமிழீழப் பிரகடனம் தொடர்பாக பேசி உள்ளார்கள். இவற்றை பாராளுமன்றப் பதிவேடுகளில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
ஆனாலும் தமிழீழத்தைப் பெற்றுக் கொள்வதற்கான வழிமுறைகளை தமிழர் விடுதலைக் கூட்டணி முன்னெடுக்காமல் மாவட்ட அபிவிருத்திச் சபை போன்ற அற்ப பதவிகளுக்குள் தமிழர் விடுதலைக் கூட்டணி முடங்க முற்பட்ட பொழுது தனிநாட்டைப் பெற்றுக்கொள்ள ஆயுதப் போராட்டம்தான் ஒரேவழி என்பதை ஏற்றுக் கொண்ட தமிழ் இளைஞர்கள் தமக்கிடையே பல ஆயுதக் குழுக்களை நிறுவி போராட்டத்தை முன்னெடுத்தனர். இதில் தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF),தமிழீழ விடுதலை இயக்கம் (TELO),ஈழப்புரட்சி அமைப்பு (EROS),தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் (PLOTE) ஆகியவைகள் முக்கியமானவை. இவர்கள் எல்லோரும் தனிநாட்டுக்காகவே ஆயுதப் போராட்டத்தை நடத்தினார்கள்.
கஜேந்திரகுமார் கூறுவது போன்று இலங்கை என்ற நாட்டிற்குள் வாழ்வதற்கல்ல.
தமிழீழ விடுதலைப்புலிகள் தமது இயக்கத்தின் கோஷமாக முன்வைத்ததும் ‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’ என்பதே. ‘விடுதலைப் புலிகள் தமிழீழத் தனியரசு’ என்று கூறவில்லை. ஆகவே தமிழீழம் என்பது தனிநாடல்ல என்ற புதிய கண்டு பிடிப்பொன்றையும் புதிய வியாக்கியானம் ஒன்றையும் கஜேந்திரகுமார் கூறுகின்றார். போராட்ட காலகட்டத்தில் இலங்கையிலிருக்காது இங்கிலாந்துக்கு படிக்கச் சென்றவர் போராட்டம் முடிவிற்கு வந்த பின்னர்தான் இலங்கைக்கு வந்தார்.
இவர்கள் இப்பொழுது வரலாற்றை திரிபு படுத்துவதன் நோக்கம் என்ன? எதிர்கால சமுதாயத்திற்கு எதனை கடத்த விரும்புகின்றார்கள். தாங்கள்தான் புலிகளின் வாரிசுகள் என்று கூறுபவர்கள்; ஏன் வரலாற்றை மறைக்க முற்படுகின்றார்கள்? பல இயக்கங்களைச் சார்ந்த பல்லாயிரம் போராளிகளும் லட்சக்கணக்கான பொது மக்களும் கொல்லப்பட்டதும் தமிழீழம் என்ற தனிநாட்டிற்காக அல்லாமல் வேறெதற்காக?
தமிழ்த் தரப்புகள் அனைத்தும் ஒருமித்துப் பிரேரித்த திம்புக் கோட்பாடுகள் என்பது என்ன? தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம், வடக்கு-கிழக்கு என்பது தமிழர்களின் மரபுவழித்தாயகம்; அவர்கள் தம்மைத் தாமே ஆட்சிசெய்யக் கூடிய சுயநிர்ணய உரிமையைக் கொண்டவர்கள். இந்த வகையில் தாம் தனிநாட்டிற்கு உரித்தானவர்கள் என்பதையே LTTE, EPRLF, TELO, EROS, PLOTE போன்ற அனைத்து தரப்பினரும் கூறினர். வரலாறு இப்படி இருக்க இந்த வரலாற்றை திரிக்க வேண்டிய மாற்ற வேண்டிய என்ன தேவை இவர்களுக்கு வந்தது.
இன்றைய கால கட்டத்தில் வராத ஒரு அரசியல் சாசனத்தில் சமஷ்டி உள்ளடக்கப்பட வேண்டும் என தமிழகம் வரை சென்று கோரிக்கையை முன்வைப்பவர்கள் இருக்கின்ற மாகாணசபை அதிகாரங்கள் பிடுங்கப்படும் போது தமக்கும் அதற்கும் சம்மந்தம் இல்லை என்ற தோரணையில் வாய மூடி மௌனிகளாக இருப்பவர்கள் தமிழ் மக்கள் தனிநாட்டுக்காக போராடவில்லை என்று சொல்வதெல்லாம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாசாங்குத்தனமான தேசியத்தையே தோலுரித்துக் காட்டுகின்றது.
ஈழப் போராட்டம் ஆரம்பமான 1976க்கும் இன்றைக்குமிடையில் 50 வருடங்கள் உருண்டோடி விட்டன. போராட்ட ஆரம்ப காலகட்ட உலகமும் இன்றைய உலகமும் மிக மிக வித்தியாசமானவை. ரஷ்யா, சீனா உட்பட்ட கம்யூனிச நாடுகளும் திறந்த பொருளாதாரக் கொள்கைக்கு உட்பட்டதுடன், உச்ச பட்ச தொழில்நுட்ப வளர்ச்சி, விடுதலைப் போராட்டங்களை பயங்கரவாத தாக்குதல்களாகப் பார்க்கும் தன்மை போன்றநிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா,சோவியத் யூனியன் தலைமையிலான இரு துருவ அரசியலில் இருந்து உலகம், அமெரிக்காவின் ஒரு துருவ அரசியலுக்குள் (Unipolar) தள்ளப்பட்டமை, உலக ஒழுங்குகள் மாறியமை போன்ற பல சம்பவங்கள் இந்த 50 ஆண்டுகளுக்குள் நடைபெற்று விட்டன.
இந்த நிலையில் தமிழ் மக்களின் யதார்த்த சூழல்களைப் புரிந்து கொண்டு செயல்படுவதற்கான கால கட்டமாகவே இக்கால கட்டத்தை நாம் அணுக வேண்டும். இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் இலங்கையின் முக்கியத்துவத்தை இந்தியா, அமெரிக்கா, சீனா போன்ற வல்லரசுகள் விளங்கிக் கொண்டுள்ளன. இந்து சமுத்திரப் பிராந்தியத்தை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் முயற்சி, தமக்கு மிக அருகில் இருக்கக் கூடிய இலங்கை சீனாவுடனோ, அமெரிக்கா போன்ற வல்லரசுகளுக்கு ஆதரவாகவோ செயற்படக் கூடாது என்று இந்தியாவின் கரிசனை,அதற்காக இலங்கைக்கான உதவிகள் கடன்கள் என்று பல மில்லியன் டாலர்களை இந்தியா அள்ளி வழங்குகிறது. ஆனால்; NPP அரசும் JVP கட்சியும் சீனாவுடன் மிக இறுக்கமான உறவுகளை கட்டி வளர்த்து வருகின்றன. இவ்வாறான ஒரு சூழலில்தான் ஈழத்தமிழரும் தமது இருப்பிற்கும், உரிமைக்காகவும் தொடர்ந்து போராடுகின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
மாகாண அதிகாரங்களைப் பெற்று வடக்கு-கிழக்கை பொருளாதாரத்தில் பலமுள்ள மாகாணங்களாக மாற்றுவதும் அதனூடாகத் தொடர்ச்சியாக மேலதிக அதிகாரங்களுக்காகப் போராடுவதே இன்று எமக்கு முன்னால் உள்ள ஒரு இலக்காகும். இன்றுள்ள தலைமுறைக்கு அதனைப் பெற்றுக் கொடுத்து அடுத்ததலைமுறை அதனை முன்னெடுத்துச்செல்ல வழிகாட்ட வேண்டும்.
அதே சமயம் இந்த நாட்டில் நாம் வாழ முடியாத சூழ்நிலை இருந்ததென்பதும் அதற்காக எமது நாட்டை நாமே நிர்மாணிக்க வேண்டிய தேவை இருந்ததென்பதும் அதற்காக ஏறத்தாழ 35 ஆண்டுகள் பல லட்சம் உயிர்களைப் பலி கொடுத்துப் போராடினோம் என்பதும் ஆனால் பல்வேறு பட்ட காரணிகளால் எமது போராட்டம் தோற்கடிக்கப்பட்டது என்பதும் வரலாறு. இந்த வரலாறு திரிக்கப்பட வேண்டும் என்பதுமல்ல மறைக்கப்பட வேண்டும் என்பதுமல்ல. இவை உண்மையாகவும் நேர்மையாகவும் அடுத்த சந்ததிக்கு சொல்லப்பட வேண்டும்.
தமிழ் மக்கள் தனிநாட்டுக்காக போராடினார்கள் என்பது உலகறிந்த உண்மை. அதனை மூடி மறைக்க முற்படும் பொழுதுதான் இவர்களது சகல நடவடிக்கைகளின் மீதும் சந்தேகம் தோன்றுகின்றது. தமிழ் மக்களின் சந்தேகத்தை போக்க வேண்டியது கஜேந்திரகுமார் போன்றோரின் கடமை. மீண்டும் மறுமடலில் சந்திப்போம்.
தோழமையுடன் சுரேஸ் பிரேமச்சந்திரன்







