கனடா சுகாதாரக் கட்டமைப்புகளின் ஒப்பீடும், இலங்கையின் மத்திய , மாகாண சபைகளுக்கு முன்வைக்கப்படும் புதிய சுகாதார நிர்வாக முன்மொழிவும்

~ யோகா வளவன் 

1. முன்னுரை: மாகாண சுகாதார நிர்வாகத்தின் எதிர்காலமும் அதிகாரப் பகிர்வின் அவசியமும்:

 

இலங்கையில் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள், அவற்றின் நடைமுறைச் செயற்பாடுகள் மற்றும் அதிகாரப் பகிர்வின் எதிர்காலம் தொடர்பான விவாதங்கள் மீண்டும் முக்கியத்துவம் பெற்றுள்ள இன்றைய அரசியல் சூழலில், சுகாதாரத்துறையின் நிர்வாகக் கட்டமைப்பு குறித்தும் ஆழமான கவனம் செலுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

 

குறிப்பாக, 2026 நவம்பர் 12ஆம் திகதி ஜனாதிபதியும் நிதிஅமைச்சருமான அனுரகுமார திசாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையில், மாகாண சபைகளின் கீழ் நிர்வகிக்கப்படும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய வடக்கு மாகாணத்தின் நான்கு மாவட்ட பொது வைத்தியசாலைகளையும், கம்பஹா மற்றும் அவிசாவளை மாவட்ட பொது வைத்தியசாலைகளையும் மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவருவதற்கான முன்மொழிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

குறித்த பிரதேச மக்களின் கோரிக்கைகளுக்கு அமைவாகவும், தேசிய மட்டத்திலான வைத்தியசாலைகளுக்கு இணையான மருத்துவச் சேவைகளை வழங்கும் நோக்கிலும் இந்த மாற்றம் முன்மொழியப்படுவதாக ஜனாதிபதி தனது வரவு செலவுத் திட்டஉரையில் குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிட்டதற்கு இணங்க மேற்படி மாவட்டங்களில் மக்கள் மத்தியில் கருத்து கணிப்பு ஏதாவது நடாத்தப்பட்டதாக தகவல்கள் ஏதும் இல்லை.

 

மக்களுக்கு உயர்தரமான மருத்துவச் சேவைகளை வழங்கவேண்டும் என்ற நோக்கம் நிச்சயமாக முக்கியமானதாகும். ஆனால், அந்த நோக்கத்தை அடைவதற்காக மாகாணசபைகளின் கீழுள்ள வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கத்தின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருவது மட்டுமே ஒரே வழிமுறையா என்ற அடிப்படையான கேள்வி எழுகின்றது.

 

ஒரு வைத்தியசாலையின் வினைத்திறன் என்பது அது மத்திய அரசாங்கத்தின் கீழ் இயங்குகின்றதா அல்லது மாகாணசபையின் கீழ் இயங்குகின்றதா என்பதனால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. அதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு, நிர்வாகச் சுயாதீனம், பொறுப்புக்கூறல், மருத்துவப்பணியாளர் முகாமைத்துவம், வளங்களின் முறையான பயன்பாடு மற்றும் சேவைகளின் தரம் ஆகியவையே அதன் செயற்பாட்டுத் திறனைத் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாகும்.

 

இலங்கையின் தற்போதைய நிர்வாகக் கட்டமைப்பில், போதனா வைத்தியசாலைகள் மற்றும் மத்திய சுகாதார அமைச்சின் கீழுள்ள ஏனைய வைத்தியசாலைகளுக்கு அப்பால், கணிசமான எண்ணிக்கையிலான பொதுவைத்தியசாலைகள் மாகாண சபைகளின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருகின்றன. அவற்றின் மருத்துவச் சேவைகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசாங்கமும் முக்கிய பங்காற்றிவருகின்றது. எனவே, மத்திய அரசாங்கத்தின் நிதிப்பங்களிப்புடன் மாகாண சபைகளின் நிர்வாகத்தின் கீழேயே தரமான இலவச மருத்துவச் சேவைகளை வழங்குவதற்கான வாய்ப்பு ஏற்கனவே இலங்கையின் கட்டமைப்பில் காணப்படுகின்றது.

 

இந்தப் பின்னணியில், மாகாண சபைகளின் கீழுள்ள வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கத்தின் நிர்வாகத்தின்கீழ் கொண்டுவருவதற்குப் பதிலாக, அவற்றுக்கு உரிய நிதி, நிர்வாக அதிகாரம் மற்றும் தொழில்முறைச் சுயாதீனத்தை வழங்கி, வினைத்திறனுடன் இயங்கக்கூடிய நிறுவனங்களாக மாற்றுவதற்கான மாற்று வழிமுறைகளை ஆராய்வது அவசியமாகின்றது.

 

இதற்கான ஒரு முக்கியமான சர்வதேச முன்னுதாரணமாக கனடாவின் சுகாதார நிர்வாக முறையைக் குறிப்பிட முடியும்.

 

கனடாவில் மருத்துவச் சேவைகள் பொதுமக்களுக்கு அரச நிதியுதவியுடன் இலவசமாக வழங்கப்படுகின்றன. மத்திய அரசாங்கம் தேசிய மருத்துவக் கொள்கைகள், தரநிலைகள் மற்றும் நிதிப் பங்களிப்புகளை வழங்குகின்ற அதேவேளை, மாகாண அரசாங்கங்கள் தங்களது மருத்துவக் காப்புறுதித்திட்டங்களின் ஊடாக சுகாதாரச் சேவைகளை நிர்வகிக்கின்றன. மேலும், அங்குள்ள பல பொதுவைத்தியசாலைகள் தங்களுக்குரிய நிர்வாகச்சபைகளின் கீழ், அரசாங்கத்தின் நிதி மற்றும் ஒழுங்குமுறைக் கண்காணிப்புடன் செயற்பாட்டுச் சுயாதீனத்தைப் பெற்று இயங்குகின்றன.

 

இத்தகைய நிர்வாக முறைமை, அரசாங்கத்தின் நிதிப்பொறுப்பையும் வைத்தியசாலைகளின் நிர்வாகச்சுயாதீனத்தையும் ஒன்றுக்கொன்று முரணற்ற வகையில் இணைத்துச் செயற்படுத்த முடியும் என்பதை எடுத்துக்காட்டுகின்றது.

 

எனவே, கனடாவின் இந்த அனுபவத்தை இலங்கையின் அரசியல், பொருளாதார மற்றும் நிர்வாகச் சூழலுக்கு ஏற்ப எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பதையும், மாகாணசபைகளின் கீழுள்ள வைத்தியசாலைகளுக்கு நிர்வாகச்சுயாதீனம் வழங்கி, மாகாண மருத்துவக் காப்புறுதிமுறையொன்றை உருவாக்குவதன் மூலம் இலவச மருத்துவச்சேவையை மேலும் வினைத்திறனுடன் வழங்க முடியுமா என்பதையும் இக்கட்டுரை ஆராய்கின்றது.

 

இங்கு முன்வைக்கப்படும் அடிப்படையான வாதம், மத்திய அரசாங்கம் இலவச மருத்துவச் சேவைக்கான தனது நிதிப்பொறுப்பையும் தேசியக் கொள்கை வகுக்கும் அதிகாரத்தையும் தொடர்ந்து பேணிக்கொண்டு, மாகாணசபைகளுக்கு அவற்றின் பொறுப்பிலுள்ள வைத்தியசாலைகளைத் திறம்பட நிர்வகிப்பதற்கான அதிகாரங்களையும் வளங்களையும் வழங்க முடியும் என்பதாகும்.

 

இது வெறுமனே சுகாதார நிர்வாகம் தொடர்பான ஒரு மாற்று முன்மொழிவு மட்டுமல்ல. 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக உருவாக்கப்பட்ட அதிகாரப் பகிர்வுமுறைமையை நடைமுறை வாழ்க்கையில் அர்த்தமுள்ளதாக்குவதற்கும், மாகாண சபைகள் மக்களின் அடிப்படைத் தேவைகளைத் திறம்பட நிறைவேற்றக்கூடிய ஜனநாயக நிர்வாக நிறுவனங்களாக வளர்ச்சியடைவதற்கும் தொடர்புடைய ஒரு முக்கியமான கொள்கை விவாதமாகும்.

 

2. இலங்கையின் தற்போதைய சுகாதார நிர்வாக முறை:

 

இலங்கையில் 1987ஆம் ஆண்டு இந்திய – இலங்கை ஒப்பந்தத்தைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்ட 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக சுகாதாரத்துறையின் ஒரு பகுதி மாகாண சபைகளுக்கு அதிகாரப் பகிர்வுசெய்யப்பட்டது.

இதன் அடிப்படையில், சுகாதாரத்துறையில் இரண்டு நிர்வாகக்கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டன.

அ. மத்திய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் வைத்தியசாலைகள்

• தேசிய வைத்தியசாலைகள்.

• போதனா வைத்தியசாலைகள்.

• விசேட மருத்துவ வைத்தியசாலைகள்.

• மத்திய சுகாதார அமைச்சின் கீழ் நேரடியாக நிர்வகிக்கப்படும் ஏனைய வைத்தியசாலைகள்.

ஆ. மாகாண சபைகளின் கீழ் இயங்கும் சுகாதார நிறுவனங்கள்

• மாவட்ட மற்றும் பிரதேச மட்டத்திலான அடிப்படை வைத்தியசாலைகள்.

• பிரதேச வைத்தியசாலைகள்.

 

• ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பு நிலையங்கள்.

 

• பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகங்கள்(MOH).

 

• மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் கீழுள்ள ஏனைய நிறுவனங்கள்.

 

இங்கு ஒரு விடயத்தைத் தெளிவுபடுத்த வேண்டும். இலங்கையில் போதனா வைத்தியசாலைகள் மட்டுமே மத்திய அரசின் கீழ் இல்லை. மாகாண பொது வைத்தியசாலைகள் மற்றும் தெரிவுசெய்யப்பட்ட மாவட்ட பொதுவைத்தியசாலைகள் உள்ளிட்ட சில பெரிய நிறுவனங்களும் மத்திய சுகாதார அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் உள்ளன. எனவே, நிர்வாகப் பொறுப்பு வைத்தியசாலையின் வகை மற்றும் அரசாங்கத்தின் ஒப்படைக்கப்பட்ட அதிகாரத்தைப் பொறுத்துமாறுபடுகிறது.

 

ஆனால், இந்த நிர்வாகப் பிரிவினை இருந்தபோதிலும், மாகாண சபைகளின் கீழுள்ள வைத்தியசாலைகளிலும் பொதுமக்களுக்கு இலவச மருத்துவச் சேவைகள் வழங்கப்படுகின்றன.

 

இதற்கான நிதி மத்திய அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடுகள், நிதி ஆணைக்குழுவின் ஊடான மாகாண நிதிப் பகிர்வு மற்றும் மாகாணங்களின் சொந்த வருவாய்கள் போன்ற வழிகளில் கிடைக்கின்றது. மத்திய சுகாதார அமைச்சும் சில வளங்களை நேரடியாக வழங்குகின்றது.

 

இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விடயம்:

 

இலங்கையில் இலவச மருத்துவச் சேவையை வழங்குவதற்கு மத்திய அரசாங்கத்தின் நேரடி வைத்தியசாலை நிர்வாகம் மட்டுமே ஒரே வழிமுறை அல்ல. மாகாண நிர்வாகத்தின் ஊடாகவும் மக்களுக்கு இலவச மருத்துவச் சேவைகளை வழங்குவதற்கான அடிப்படைக் கட்டமைப்பு ஏற்கனவே இருக்கின்றது.

 

இது கனடாவின் சுகாதார நிர்வாக முறையுடன் ஒப்பிட்டுப்பார்ப்பதற்கு மிகவும் முக்கியமான அடிப்படையாகும்.

 

3. கனடாவின் இலவச மருத்துவக் காப்புறுதி முறை:

 

கனடாவின் சுகாதாரக் கட்டமைப்பு உலகில் முக்கியமான பொதுநிதியுதவி அடிப்படையிலான மருத்துவ முறைகளில் ஒன்றாகும்.

 

கனடாவில் மருத்துவச் சேவைகள் தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் தங்களது பணத்தைச் செலுத்திப் பெறும்முறையில் அமைக்கப்படவில்லை. மாறாக, அரசாங்கத்தின் வரிவருவாயின் ஊடாகப் பொதுமக்களுக்கான மருத்துவக்காப்புறுதி வழங்கப்படுகின்றது.

 

கனடாவின் மருத்துவ முறை மூன்று முக்கிய அடிப்படைகளில் இயங்குகின்றது.

 

1. மத்திய அரசாங்கத்தின் பொறுப்பு

 

மத்திய அரசாங்கம் Canada Health Act என்ற சட்டத்தின் ஊடாக தேசிய அளவிலான அடிப்படை விதிமுறைகளை நிர்ணயிக்கின்றது.

 

அத்துடன், மாகாண அரசாங்கங்களுக்கு Canada Health Transfer என்ற நிதிப் பரிமாற்றத் திட்டத்தின் ஊடாகநிதியுதவியும் வழங்குகின்றது.

 

2. மாகாண அரசாங்கங்களின் பொறுப்பு

 

ஒவ்வொரு மாகாணமும் தனக்குரிய பொதுமக்கள் மருத்துவக்காப்புறுதித் திட்டத்தைக் கொண்டுள்ளது.

 

உதாரணமாக, ஒன்ராறியோ மாகாணத்தில் OHIP (Ontario Health Insurance Plan) என்ற மருத்துவக் காப்புறுதித் திட்டம் நடைமுறையில் உள்ளது.

 

பிரிட்டிஷ் கொலம்பியாவில் Medical Services Plan (MSP) நடைமுறையில் உள்ளது.

 

அல்பேர்ட்டாவில் Alberta Health Care Insurance Plan (AHCIP) நடைமுறையில் உள்ளது.

 

இத்திட்டங்களின் ஊடாகத் தகுதியுள்ள குடியிருப்பாளர்கள் மருத்துவ ரீதியாக அவசியமான வைத்தியசாலை மற்றும் மருத்துவர் சேவைகளைப் பொதுநிதியில் பெற்றுக்கொள்கின்றனர்.

 

3. வைத்தியசாலைகளின் நிர்வாகச் சுயாதீனம்

 

கனடாவின் முக்கியமான சிறப்பம்சங்களில் ஒன்று, மருத்துவக்காப்புறுதியை நிர்வகிக்கும் அரசாங்க அமைப்புக்கும் வைத்தியசாலையின் அன்றாட நிர்வாகத்துக்கும் இடையில் பொறுப்புகள் பிரிக்கப்பட்டிருப்பதாகும்.

 

இதன் மூலம் ஒவ்வொரு வைத்தியசாலையும் தனது நிர்வாகக்குழுவின் ஊடாகப் பணியாளர் நிர்வாகம், வளங்களைப் பயன்படுத்துதல், சேவை மேம்பாடு, செலவுக் கட்டுப்பாடுபோன்றவற்றில் செயற்பாட்டு முடிவுகளை எடுக்கக்கூடிய நிலைஉருவாகின்றது.

 

இதனால் அரசாங்கத்தின் பொறுப்பு இல்லாமல் போவதில்லை. மாறாக, அரசாங்கம் நிதி வழங்குதல், தரக் கட்டுப்பாடு, சட்டஒழுங்குமுறை மற்றும் கண்காணிப்பு ஆகியவற்றைத்தொடர்ந்து மேற்கொள்கின்றது.

 

4. குடும்ப வைத்தியர்கள் மற்றும் Walk-in Clinic சேவைகள் – மாகாணக் காப்புறுதித் திட்டத்தின் பங்களிப்பு

 

கனடாவின் பொதுமருத்துவக் கட்டமைப்பில் குடும்பவைத்தியர்கள் (Family Doctors) மற்றும் Walk-in Clinics முக்கிய பங்காற்றுகின்றன. பொதுமக்கள் தங்களது உடல்நலப் பிரச்சினைகளுக்காக குடும்ப வைத்தியர்களை அணுகுவதுடன், முன்பதிவு இன்றியும் Walk-in Clinics மூலம் மருத்துவ ஆலோசனைகளையும் அடிப்படைச்சிகிச்சைகளையும் பெற்றுக்கொள்ள முடியும். இச்சேவைகள் மாகாண மருத்துவக் காப்புறுதித் திட்டத்தின் கீழ் உள்ளடக்கப்படும் மருத்துவச் சேவைகளாக இருந்தால், தகுதியுள்ள நோயாளிகள் நேரடியாகக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. அதற்குரிய மருத்துவச் சேவைக்கட்டணத்தை வைத்தியர்கள் அல்லது கிளினிக்குகள் சம்பந்தப்பட்ட மாகாணக் காப்புறுதித் திட்டத்திடமிருந்து பெற்றுக்கொள்கின்றன. இதன் மூலம் அனைத்து மருத்துவச்சேவைகளையும் அரச வைத்தியசாலைகளில் மட்டுமே வழங்கவேண்டிய நிலை ஏற்படுவதில்லை. தனியார் மருத்துவர்களும் அரசின் பொதுமருத்துவக் காப்புறுதிக் கட்டமைப்புடன் இணைந்து மக்களுக்கு மருத்துவச் சேவைகளை வழங்கமுடிகிறது. இதுவே கனடாவின் பொதுமருத்துவக்கட்டமைப்பில் காணப்படும் முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும்.

 

4.கனடாவில் வைத்தியசாலைகளின் சுயாதீன நிர்வாகம்.

 

உதாரணமாக, ஒன்ராறியோவில் பொதுவைத்தியசாலைகள் பெரும்பாலும் தங்களது நிர்வாகச் சபைகளைக் கொண்ட சுயாதீனக் கூட்டுத்தாபனங்களாக (Independent not – for- profit Corporations) இயங்குகின்றன. அவை இலாப நோக்கமற்ற நிறுவனங்களாகும். அவற்றின் அன்றாட நிர்வாக முடிவுகளை அந்தந்த வைத்தியசாலைகளின் நிர்வாகச் சபைகள் மேற்கொள்கின்றன.

 

மறுபுறத்தில், Ontario Health என்பது மாகாண அரசாங்கத்துடன் தொடர்புடைய Crown Agency ஆகும். இது சுகாதாரச் சேவைகளின் ஒருங்கிணைப்பு, நிதி நிர்வாகம் மற்றும் திட்டமிடல் போன்ற பொறுப்புகளை வகிக்கின்றது.

 

கனடாவின் ஏனைய மாகாணங்களில் சுகாதார அதிகாரசபைகள், பிராந்திய சுகாதார நிறுவனங்கள் மற்றும்Crown Corporations போன்ற பல்வேறு நிர்வாக வடிவங்கள் காணப்படுகின்றன.

 

இதிலிருந்து இலங்கை கற்றுக்கொள்ள வேண்டிய அடிப்படைப் பாடம்:

 

அரசாங்கம் மருத்துவச் சேவைக்கான நிதியையும் பொதுக்கொள்கையையும் கட்டுப்படுத்தலாம். அதேவேளை, வைத்தியசாலைகளின் அன்றாட நிர்வாகம் தொழில்முறைத்திறனுடன் சுயாதீனமாக இயங்குவதற்கும் வாய்ப்பளிக்கலாம்.

 

இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல.

 

5. இலங்கை – கனடா சுகாதார நிர்வாக முறைகளின் ஒப்பீடு:

 

இரு நாடுகளிலும் பொதுமக்களுக்கு அரசாங்கத்தின் நிதியுதவியுடன் இலவச மருத்துவச் சேவைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் அவற்றின் நிர்வாக முறை மற்றும்பொறுப்புப் பகிர்வில் சில வேறுபாடுகள் உள்ளன.

 

விடயம் இலங்கை கனடா

மருத்துவச்சேவையின் அடிப்படை அரச நிதியிலான இலவசமருத்துவம் அரச நிதியிலான பொதுக்காப்புறுதி

மத்திய அரசின்பங்கு தேசியக் கொள்கை, நிதி, மத்தியவைத்தியசாலைகள் தேசியத் தரநிலைகள், நிதிப்பங்களிப்பு

மாகாண அரசின்பங்கு மாகாணவைத்தியசாலைகள்மற்றும்சுகாதாரநிறுவனங்கள் மருத்துவக் காப்புறுதிமற்றும்சுகாதாரச் சேவைநிர்வாகம்

நிதி மூலம் மத்திய ஒதுக்கீடு, மாகாணவருவாய் மத்திய மற்றும் மாகாணவரிவருவாய்கள்

வைத்தியசாலைநிர்வாகம் பெரும்பாலும் அரசநிர்வாகக்கட்டமைப்பு மாகாணத்துக்கேற்பசுயாதீனநிர்வாகச் சபைகள்அல்லதுசுகாதாரஅதிகாரசபைகள்

மருத்துவக்காப்புறுதி தனியானமாகாணஅடிப்படையிலானபொதுக்காப்புறுதிஅட்டை முறை இல்லை ஒவ்வொருமாகாணத்துக்கும்தனியானபொதுக் காப்புறுதித்திட்டம்

சேவையைப்பெறுவதற்கானஅடிப்படை அரசவைத்தியசாலைகளில்இலவசச்சேவை காப்புறுதி உள்ளடக்கியமருத்துவச்சேவைகளுக்குபணம்செலுத்தவேண்டியதில்லை

நிர்வாகக்கண்காணிப்பு மத்திய மற்றும் மாகாணசுகாதாரநிர்வாகங்கள் மத்திய சட்டத்தரநிலைகளுடன்மாகாணக்கண்காணிப்பு

இங்கு கவனிக்க வேண்டியது, கனடாவின் மருத்துவக்காப்புறுதி என்பது தனியார் காப்புறுதி நிறுவனங்கள் மூலம் இயங்கும் வணிகக் காப்புறுதி முறை அல்ல. இது அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் பொதுக் காப்புறுதி முறை.

 

அதாவது, மருத்துவச் சேவையைப் பெறும்போது நோயாளி தனது மருத்துவச் செலவைத் தனிப்பட்ட முறையில் செலுத்த வேண்டியதில்லை. அரசின் பொதுக் காப்புறுதித் திட்டம் அதன் செலவை ஏற்றுக்கொள்கின்றது.

 

இதுவே இலங்கையில் அறிமுகப்படுத்துவதற்குப் பரிசீலிக்கக்கூடிய முக்கியமான அம்சமாகும்.

 

6. இலங்கையிலும் மாகாண மருத்துவக் காப்புறுதித்திட்டத்தை உருவாக்க முடியுமா?

 

முடியும். அதற்கான நிர்வாக மற்றும் அரசியலமைப்பு அடித்தளம் ஏற்கனவே ஒரு அளவுக்கு இலங்கையில் இருக்கின்றது.

 

இலங்கையின் ஒன்பது மாகாணங்களும் தங்களுக்குரிய சுகாதார நிர்வாகத்தைக் கொண்டுள்ளன. அவற்றின் கீழ் வைத்தியசாலைகள், சுகாதாரப் பணியாளர்கள், பிரதேச சுகாதாரத் திணைக்களங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிறுவனங்கள் இயங்குகின்றன.

 

இந்தக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தி, கனடாவின் அனுபவத்திலிருந்து பொருத்தமான அம்சங்களை உள்வாங்கி, மாகாண மருத்துவக் காப்புறுதித் திட்டங்களை உருவாக்குவது சாத்தியமான ஒரு கொள்கை முன்மொழிவாகும்.

 

இதனை ஐந்து கட்டங்களாகச் சிந்திக்கலாம்.

 

6.1. ஒவ்வொரு மாகாணத்துக்கும் தனியான பொதுமருத்துவக் காப்புறுதித் திட்டம்:

 

ஒவ்வொரு மாகாண சபையும் தனது மாகாண மக்களுக்கான பொதுமருத்துவக் காப்புறுதித் திட்டத்தை உருவாக்கலாம்.

 

உதாரணமாக:

 

• வடக்கு மாகாண மருத்துவக் காப்புறுதித் திட்டம்.

 

• கிழக்கு மாகாண மருத்துவக் காப்புறுதித் திட்டம்.

 

• மத்திய மாகாண மருத்துவக் காப்புறுதித் திட்டம்.

 

• ஊவா மாகாண மருத்துவக் காப்புறுதித் திட்டம்.

 

• ஏனைய மாகாணங்களுக்கும் அவற்றுக்குரிய திட்டங்கள்.

 

இந்தத் திட்டங்கள் இலாப நோக்கமற்ற அரச பொதுக்காப்புறுதி அமைப்புகளாக இருக்க வேண்டும்.

 

ஒவ்வொரு குடிமகனுக்கும் மருத்துவக் காப்புறுதி அடையாள அட்டை அல்லது இலத்திரனியல் மருத்துவ அடையாளம் வழங்கப்படலாம்.

 

அதன் மூலம் அவர் தனது மாகாணத்திலுள்ள அரச வைத்தியசாலைகளில் மருத்துவச் சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

 

குறிப்பாக, வறுமையில் வாழும் மக்கள், முதியவர்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் குறைந்தவருமானமுடைய குடும்பங்கள் எந்தவொரு நிதிச் சுமையுமின்றி மருத்துவச் சேவைகளைப் பெறுவதை உறுதிப்படுத்தவேண்டும்.

 

6.2. மத்திய அரசாங்கத்தின் நிதிப் பொறுப்பு தொடரவேண்டும்:

 

இங்கு ஒரு முக்கியமான கொள்கை முன்வைக்கப்படவேண்டும்.

 

மாகாண சபைகளுக்கு மருத்துவ நிர்வாக அதிகாரங்களை வழங்குவது என்பது, மத்திய அரசாங்கம் சுகாதாரத்துறைக்கான தனது நிதிப் பொறுப்பிலிருந்து விலகிக்கொள்ள வேண்டும் என்பதல்ல.

 

மாறாக, கனடாவைப் போல மத்திய அரசாங்கம் தேசிய அளவில் நிதிப் பங்களிப்பையும் தரநிலைகளையும் உறுதிப்படுத்த வேண்டும்.

 

இலங்கையில் மத்திய அரசாங்கம் தற்போது மாகாண சுகாதாரத்துறைக்கு ஒதுக்கும் நிதியைத் தொடர்ந்து வழங்கவேண்டும். அந்த நிதி வெறுமனே மாகாண அரசியல் நிர்வாகத்தின் விருப்பத்திற்கேற்ப அல்லாமல், பின்வரும் காரணிகளின் அடிப்படையில் பகிரப்பட வேண்டும்:

 

• மாகாணத்தின் மக்கள் தொகை.

 

• வறுமை மற்றும் பொருளாதார நிலை.

 

• நோய்களின் பரவல் மற்றும் மருத்துவத் தேவைகள்.

 

• வைத்தியசாலைகளின் எண்ணிக்கை மற்றும் சேவைத்தேவை.

 

• புவியியல் ரீதியான தூரம் மற்றும் போக்குவரத்துச் சிரமங்கள்.

 

• முதியோர் மற்றும் குழந்தைகளின் எண்ணிக்கை.

 

• விசேட மருத்துவத் தேவைகள்.

 

இதன் மூலம் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மாகாணங்களும் தரமான மருத்துவச் சேவைகளை வழங்குவதற்கான நிதியைப் பெற முடியும்.

 

இது மிகவும் முக்கியமானது. ஏனெனில் யுத்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு போன்ற மாகாணங்களின் நிதிவளங்கள் தென் மாகாணங்களின் வளங்களுடன் சமமாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. எனவே, சமத்துவமான சேவையை உறுதிப்படுத்துவதற்கு தேவையின் அடிப்படையிலான நிதிப் பகிர்வு அவசியம்.

 

6.3. வைத்தியசாலைகளுக்கு நிர்வாகச் சுயாதீனம் வழங்குதல்:

 

இலங்கையின் தற்போதைய சுகாதார நிர்வாகத்தில் காணப்படும் ஒரு முக்கியமான பிரச்சினை, வைத்தியசாலைகளின் பல நிர்வாகத் தீர்மானங்களும் மேல்மட்ட நிர்வாக அனுமதிகளையும் நடைமுறைகளையும் சார்ந்திருப்பதாகும்.

 

இதனால் சில நேரங்களில்:

 

• அவசரமாகத் தேவைப்படும் மருத்துவ உபகரணங்களைப் பெற்றுக்கொள்வதில் தாமதம்.

 

• சிறிய பராமரிப்புப் பணிகளுக்குக்கூட நிர்வாகச்சிக்கல்கள்.

 

• பணியாளர் பற்றாக்குறையைச் சமாளிப்பதில் சிரமம்.

 

• மருத்துவப் பொருட்கள் மற்றும் மருந்து விநியோகத்தில் தாமதம்.

 

• வைத்தியசாலையின் தேவைகளுக்கு ஏற்ப நிதியைப் பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகள்.

 

போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

 

இதற்குத் தீர்வாக ஒவ்வொரு முக்கிய வைத்தியசாலைக்கும் சுயாதீன நிர்வாகச் சபையை உருவாக்கலாம்.

 

இந்த நிர்வாகச் சபையில் பின்வருவோர் இடம்பெறலாம்:

 

• மருத்துவ நிர்வாக நிபுணர்கள்.

 

• வைத்தியசாலைப் பணிப்பாளர்.

 

• மருத்துவ மற்றும் தாதியர் பிரதிநிதிகள்.

 

• நிதி மற்றும் கணக்கியல் நிபுணர்கள்.

 

• பொதுச் சுகாதார நிபுணர்கள்.

 

• சமூகப் பிரதிநிதிகள்.

 

இந்த நிர்வாகச் சபை வைத்தியசாலையின் வரவு செலவுத்திட்டத்தை நிர்வகித்தல், சேவைத் தரத்தை உயர்த்துதல், பணியாளர் நிர்வாகத்தை மேம்படுத்துதல், மருத்துவ உபகரணங்களைப் பராமரித்தல் மற்றும் நோயாளிகளின் தேவைகளை அடையாளம் காணுதல் போன்ற பொறுப்புகளை ஏற்கலாம்.

 

இவ்வாறான வைத்தியசாலைகள் இலாப நோக்கமற்ற பொதுநிறுவனங்களாக இயங்க வேண்டும்.

 

இங்கு கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தின் அனுபவத்தைப் பின்பற்றலாம். அங்கு பொதுவைத்தியசாலைகளின் நிர்வாகச்சபைகள் அன்றாட நிர்வாக முடிவுகளை எடுக்கின்றன. ஆனால் அவை அரசாங்கத்திற்கும் Ontario Health அமைப்புக்கும் பொறுப்புக்கூற வேண்டியவை.

 

எனவே, இலங்கையில் மாகாண சுகாதார அமைச்சின் நிர்வாகப் பொறுப்பையும் வைத்தியசாலைகளின் அன்றாடச்செயற்பாட்டுச் சுயாதீனத்தையும் பிரித்துச் சிந்திப்பது பயனுள்ளதாக இருக்கும்.

 

6.4. மாகாணங்களுக்கு இடையிலான மருத்துவச் சேவைப்பரிமாற்றம்:

 

கனடாவின் மருத்துவக் காப்புறுதி முறையில் ஒரு மாகாணத்தில் காப்புறுதி பெற்றவர், மற்றொரு மாகாணத்திற்குச் சென்றாலும் விதிகளுக்கு உட்பட்டு மருத்துவக் காப்புறுதிப் பாதுகாப்பைப் பெற முடியும்.

 

இதேபோன்ற ஏற்பாட்டை இலங்கையிலும் உருவாக்கலாம்.

 

உதாரணமாக, வடக்கு மாகாணத்தில் மருத்துவக் காப்புறுதிபெற்ற ஒருவர் கொழும்பில் அவசர மருத்துவச் சிகிச்சை பெறவேண்டிய நிலை ஏற்பட்டால், அவரது மருத்துவச் செலவை சம்பந்தப்பட்ட மாகாணங்களுக்கிடையிலான காப்புறுதி அல்லது நிதிச் சமரச முறையின் ஊடாகத் தீர்த்துக்கொள்ளமுடியும்.

 

அதேபோன்று, கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் வடக்குமாகாணத்தில் சிகிச்சை பெற்றாலும் அவரது காப்புறுதி செல்லுபடியாக வேண்டும்.

 

இதன் மூலம் மாகாண எல்லைகள் மக்களின் மருத்துவ உரிமைகளுக்குத் தடையாக இருக்காது.

 

6.5. மத்திய மற்றும் மாகாண வைத்தியசாலைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு:

 

மாகாண சபைகளின் கீழுள்ள வைத்தியசாலைகள் தனித்தனியாக இயங்கும் நிறுவனங்களாக மாறிவிடக்கூடாது.

 

அவை தேசிய சுகாதாரக் கட்டமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்க வேண்டும்.

 

உதாரணமாக, ஒரு பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைபெறும் நோயாளிக்கு மேலதிக விசேட சிகிச்சை தேவைப்பட்டால், அவரை மாகாண பொது வைத்தியசாலை அல்லது மத்திய அரசாங்கத்தின் கீழுள்ள போதனா வைத்தியசாலைக்கு அனுப்பும் ஒழுங்கமைக்கப்பட்ட முறை இருக்க வேண்டும்.

 

இதற்காக:

 

• ஒருங்கிணைந்த நோயாளர் பதிவேடு.

 

• மாகாணங்களுக்கு இடையிலான மருத்துவத் தகவல்பரிமாற்றம்.

 

• பொதுவான மருத்துவத் தரநிலைகள்.

 

• ஒருங்கிணைந்த அவசர அம்புலன்ஸ் சேவை.

 

• தேசிய அளவிலான மருத்துவப் பரிந்துரை முறை.

 

போன்றவற்றை உருவாக்க வேண்டும்.

 

இதன் மூலம் மாகாண நிர்வாகம் வலுப்பெறுவதுடன் தேசியமருத்துவக் கட்டமைப்பின் ஒருமைப்பாடும் பாதுகாக்கப்படும்.

 

6.6 தனியார் மருத்துவக் கிளினிக்குகளைப் பொதுமருத்துவக் காப்புறுதித் திட்டத்துடன் இணைத்தல்

 

இலங்கையிலும் தற்போது தனியார் மருத்துவப் பயிற்சியில்(Private Practice) ஈடுபடும் மருத்துவர்கள் நடத்துகின்ற சிறிய மருத்துவக் கிளினிக்குகளை அரசின் பொதுமருத்துவக் காப்புறுதித் திட்டத்துடன் இணைக்கும் முறையை அறிமுகப்படுத்த முடியும். இதன்படி, அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்கள் மற்றும் கிளினிக்குகள், அரசின் மாகாண மருத்துவக் காப்புறுதித் திட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்டு, தகுதியுள்ள பொதுமக்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனைகளையும் அடிப்படைச் சிகிச்சைகளையும் வழங்கலாம். அதற்குரிய சேவைக் கட்டணத்தை அரசு அல்லது சம்பந்தப்பட்ட மாகாணக் காப்புறுதி நிறுவனம் நேரடியாக மருத்துவர்களுக்கும் கிளினிக்குகளுக்கும் வழங்கும். இவ்வாறான ஒரு முறை நடைமுறைப்படுத்தப்பட்டால், அனைத்து மருத்துவர்களும் அரச சேவையில் மட்டுமே பணியாற்ற வேண்டிய அவசியமின்றி, தனியார் மருத்துவர்களின் சேவைகளையும் பொதுமக்களின் நலனுக்காகப் பயன்படுத்தமுடியும். இதனால் அரச வைத்தியசாலைகளில் ஏற்படும் நோயாளர் நெரிசலும் மருத்துவர்களின் பணிச்சுமையும் குறைவதுடன், கிராமப்புறங்கள் உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் மருத்துவச் சேவைகளை மக்களுக்கு அண்மித்த இடங்களில் வழங்குவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும். இதன் மூலம் அரச மற்றும் தனியார்மருத்துவத் துறைகளை ஒன்றுக்கொன்று போட்டியிடும்அமைப்புகளாகப் பார்க்காமல், அரசின் பொதுமருத்துவக்காப்புறுதிக் கட்டமைப்பின் கீழ் ஒன்றிணைந்து செயற்படும் சேவை வழங்குநர்களாக மாற்ற முடியும். எனினும், இதற்கானமருத்துவத் தரநிலைகள், சேவைக் கட்டணங்கள், தரக்கண்காணிப்பு, நோயாளர் பாதுகாப்பு மற்றும் முறைகேடுகளைத் தடுக்கும் ஒழுங்குமுறைகள் அரசால் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

 

6.7.பொருளாதார வளங்களும் சுகாதார நிதி ஒதுக்கீடும்: கனடாவிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

 

இலங்கையின் சுகாதார நிர்வாகத்தை மறுசீரமைப்பது பற்றிப்பேசும்போது, நாட்டின் பொருளாதார வளங்களையும் சுகாதாரத்துறைக்கு ஒதுக்க

Share this article

More News