செம்மணிப் புதைகுழிகளின் மேல் சோமவன்ச ராஜபக்ஸ-சுரேஷ் பிரேமசந்திரன்

செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பில் உண்மைகளை முழுமையாக வெளிக்கொணரவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்கச் செய்யவும் சர்வதேச விசாரணை அவசியம் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (EPRLF) தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (20.06.2026) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,

இந்த செம்மணி புதைகுழிகள் விவகாரம் தொடர்பாக நேற்றைய தினம் நீதி அமைச்சர் அவர்கள், அந்த செம்மணி புதைகுழி இடத்திற்கு விஜயம் செய்து, இந்த விசாரணைகள் சரியான முறையில் நடத்தப்படும் என்று சொன்ன சில உறுதிமொழிகளை கொடுத்துவிட்டும் சென்றிருக்கின்றார். ஒரு விடயத்தை நாங்கள் இங்கு தெளிவாக பார்க்க வேண்டும்.

கிரிஷாந்தி கொலை தொடர்பாக அந்த நேரத்தில் பல்வேறுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு, அதில் சோமவன்ச ராஜபக்ஷ என்பவர் ஒரு தூக்குத் தண்டனை கைதியாக இன்றும் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கின்றார். அவர் அன்று தொடக்கம் சொல்கின்ற விஷயம், இந்த செம்மணி பிரதேசத்தில் பல்வேறுபட்ட இடங்களில் நாங்கள் பல நூற்றுக்கணக்கான சடலங்களை புதைத்திருக்கிறோம், தான் அதனை இனங்காட்டி, இடங்களை காட்ட முடியும் என்ற பல கருத்துக்களை அவர் கடிதம் மூலம் தனது மனைவியூடாகவும் சரி, அவர் பொதுவெளியிலும் சரி பல விடயங்களைச் சொல்லியிருக்கின்றார்.

அன்று அவருக்கு மரண தண்டனை கொடுத்த பொழுதும் அவர் அதைச் சொல்லியிருக்கின்றார். சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்த பொழுது, அவரது கருத்துக்களை ஏற்று ஏனைய இடங்களில் எங்கெங்கு புதைகுழிகள் இருக்கிறது என்பதை அவர் அறிய முற்படவில்லை. இப்பொழுதும் கூட அவர் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார். மனித உரிமைகள் ஆணையம் அவரைப் போய் சந்தித்திருக்கிறது. அவர் மனித உரிமை ஆணையத்திற்கு சில கருத்துக்களைக் கூறியிருக்கின்றார். மனித உரிமை ஆணையம் ஆயினும் என்னென்ன விடயங்களை அவர் கூறியிருக்கிறார் என்பதை அவர்கள் வெளியிடவில்லை.

ஆனாலும் கூட அவர் என்ன சொல்கின்றார்? “இந்த செம்மணி பிரதேசத்தில் நாங்கள் வெறுமனே ஒரு கருவிகள் மாத்திரம்தான். நாங்கள் அங்கு எங்களுக்கு ஒரு சென்றி பொயின்ட் (entry point/centre point), பார்க்கிற ஆட்களாகத்தான் நாங்கள் இருந்தோம். ஆனால், பல நூறு பேர் அவருக்கு மேல்மட்டத்தில் உள்ளவர்களால் கைது செய்யப்பட்டு, இவர்களைப் புதைக்கும்படி கொண்டுவந்து சடலங்களை அங்கு கொடுத்ததாக” அவர் பல சந்தர்ப்பங்களில் கூறியிருக்கின்றார்.

ஆகவே, இப்பொழுது ஒரு முக்கியமான விடயம், வெறுமனே செம்மணி மயானத்துக்குள் இப்பொழுது கண்டுபிடித்த சடலங்கள் மாத்திரமல்ல, இன்னும் பல இடங்களில் இந்த புதைகுழிகள் இருக்கலாம் என்பது ஒரு முக்கியமான விடயம். ஆகவே, இப்பொழுது இதனைச் செய்து கொண்டிருக்கக்கூடியவர்களோ, இந்த அரசாங்கம் முக்கியமாக அல்லது மனித உரிமை அமைப்புக்கள் முக்கியமாக, இந்த சோமவன்ச ராஜபக்ஷ என்று சொல்லி இப்பொழுது சிறைச்சாலையில் இருக்கக்கூடிய இந்த தூக்குத் தண்டனை கைதியை, அவரை யாழ்ப்பாணம் வரவழைத்து எங்கெங்கெல்லாம் இந்த புதைகுழிகள் இருக்கிறது, அவருக்குத் தெரிந்த புதைகுழிகள் – அவர் கொழும்புத்துறையில் இருக்கிறதென்று சொல்லியிருக்கிறார், அரியாலையில் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார், செம்மணியில் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார் – ஆகவே, இவற்றைக் கண்டுபிடிப்பதற்கான வழிமுறைகள் இருக்கிறது. அதனைச் செய்த அல்லது அதனைப் பார்த்த, அதனுடன் சம்பந்தப்பட்டவர் இன்னும் சிறைச்சாலையில் இருக்கின்றார்.

ஆகவே, இவை முழுமையாகச் செய்யப்பட்டால் மாத்திரம்தான் முக்கியமாக பல விடயங்கள் வெளியில் வரும் என்ற ஒரு உண்மையான நிலவரம் இருக்கின்றது. ஆகவே, அந்த விடயங்களை முதலாவதாகச் செய்வதற்கு இங்கு இருக்கக்கூடிய மனித உரிமை அமைப்புக்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் அதற்காகப் பாராளுமன்றத்திலும் சரி, வெளியிலும் சரி முக்கியமாக குரல் கொடுக்க வேண்டும். இது செம்மணி புதைகுழியுடன் அடங்கிப் போகக்கூடிய ஒரு விவகாரமாய் இருக்காது.

இரண்டாவது விடயம், ஏற்கனவே மன்னாரில் எடுக்கப்பட்ட 200-க்கும் மேற்பட்ட அந்த எலும்புக்கூடுகள் என்பது, இன்றுவரை அது தொடர்பான விசாரணைக்கு என்ன நடந்தது என்பது பொதுமக்களுக்குத் தெரியாது. அது ஒரு மூடுமந்திரமாகப் போய்விட்டது. அதேபோல் இப்பொழுது 400 எலும்புக்கூடுகளை நெருங்குகிற நிலையில், இப்பொழுது செம்மணி புதைகுழி விவகாரம் மிகப்பெரிய ஒரு பூதாகாரமான விவகாரமாக இருக்கின்றது. இவை எல்லாம் இந்த எலும்புக்கூடுகள் எல்லாம் எடுத்துப் பக்குவப்படுத்தப்பட்ட பின்பு இதனுடைய விசாரணை எவ்வாறு நடைபெறப் போகிறது?

இந்த அரசாங்கம் ஒரு புதிய அரசாங்கமாக இருந்தாலும்கூட, இவர்கள் தங்களது இராணுவ அதிகாரிகளையும், தங்களது இராணுவத்தையும் காப்பாற்றுவதற்காகத்தான் செயற்படுவார்களே தவிர, இவர்கள் உண்மையைக் கண்டறிவதற்குச் செயற்பட மாட்டார்கள். இவர்கள் எதிர்க்கட்சியில் இருந்தபொழுது இராணுவத்திற்காக ஆட்களைச் சேர்த்துக்கொடுத்து, தமிழ் மக்களுடைய விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகச் செயற்பட்டவர்கள் என்பதுதான் இப்பொழுது ஆளுந்தரப்பில் இருக்கக்கூடியவர்கள்.

ஆகவே, இவர்கள் வந்து செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பாக மக்களுக்கு ஒரு நீதியைப் பெற்றுக்கொடுப்பார்கள் என்று நிச்சயமாக எதிர்பார்க்க முடியாது. ஆகவே, அந்த நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமாக இருந்தால், அதற்கான முதலாவது விடயம் வந்து அதற்கான தொழில்நுட்பம் (Technology) இலங்கையில் இருக்கிறதா என்று சொன்னால் நிச்சயமாக இல்லை. இது எப்பொழுது தாக்கப்பட்டது? இது எத்தனை வருடத்திற்கு முற்பட்டது? ஆகவே, இதில் இருக்கக்கூடிய அடையாளங்களை வைத்துக்கொண்டு இது எவ்வாறு கண்டுபிடிப்பது போன்ற பல விஷயங்களைச் செய்வதற்கான அந்த தொழில்நுட்பம் என்பது இலங்கையினுடைய வசம் இல்லை.

ஆகவே, இது சரியான ஒரு நீதியை, தீர்வை நோக்கிப் போக வேண்டுமாக இருந்தால், அதற்கான ஒரு சர்வதேச விசாரணையை நாங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். அந்த சர்வதேச விசாரணைக்கு இலங்கை அரசாங்கம் சம்மதம் தெரிவித்து, சரியான ஒரு விசாரணைக்குழுவை – அது இலங்கை, இலங்கையில் இருக்கக்கூடிய ஆட்களை உள்ளடக்க முடியுமாக இருந்தால் அவரையும் உட்படுத்தி ஒரு சர்வதேச விசாரணையாக இது அமைவதனூடாக மாத்திரம்தான் – காணாமல் போனவர்கள் அல்லது தங்களது பிள்ளைகளுக்கு அல்லது தங்களது உற்றார் உறவினருக்கு என்ன நடந்தது என்று தெரியாதவர்களுக்குக் குறைந்தபட்ச ஒரு விசாரணையை, ஒரு நீதியைப் பெற்றுக்கொடுக்க முடியும் என்பது மாத்திரமல்லாமல், இவை எதிர்காலத்தில் நடக்காமல் இருப்பதற்கான வழிமுறைகளையும் கண்டறிய முடியும்.

இந்த விசாரணையினூடாக இரண்டு பேருக்குத் தண்டனை கொடுப்பது மாத்திரமல்ல, இனிமேல் எதிர்காலத்தில் இந்த நாட்டில் இவ்வாறான இனப்படுகொலைகள் நடக்காமல் இருப்பதற்கான வழிமுறைகளையும் இந்த விசாரணைகள் என்பது ஏற்படுத்தப்பட வேண்டும், ஏற்படுத்த வேண்டும் என்பது அது ஒரு முக்கியமான விடயம். ஆகவே, அந்த வகையில் நாங்கள் இரண்டு விடயம் இருக்கின்றது: ஏனைய இடங்களில் இருக்கக்கூடிய அந்த புதைகுழிகளைக் கண்டுபிடிக்கச் சிறைச்சாலையில் இருக்கக்கூடிய அந்த மரண தண்டனை கைதியினூடாக அதனைச் செயற்படுத்த வேண்டும். அதனை மனித உரிமை அமைப்புக்கள், சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள், இங்கு இருக்கக்கூடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இவை தொடர்பாக மிக அதிகபட்சமாக குரல் கொடுக்க வேண்டும் என்றும் நாங்கள் கேட்டுக்கொள்ள விரும்புகின்றோம். என தெரிவித்தார்.

Share this article

More News