தடுமாறும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையும் தடம் மாறும் உலக ஒழுங்கும்

ஒரு மாதத்தைக் கடந்து தொடர்ந்து நடைபெற்ற வளைகுடா யுத்தம் இரண்டு வாரகால தற்காலிக போர் நிறுத்தத்தை எட்டியுள்ளது. ஒருபுறம் தற்காலிக யுத்த நிறுத்தம் தேவையில்லை, தனது நிபந்தனைகளை ஒப்புக்கொண்டால் நிரந்தர போர் நிறுத்தத்தை மேற்கொள்ளலாம் என்பது ஈரானின் நிலைப்பாடாக இருந்தது. மறுபுறம் ஹோமுஸ் நீரிணையைத் திறந்து சுதந்திர கப்பல் போக்குவரத்திற்கு வழிவிடவில்லையெனில் குறிப்பிட்ட தேதிக்குள் ஈரானையே அழிப்பேன் எனக் கூறுவதும், பின்னர் காலக்கெடுவை தாமாகவே நீடிப்பதும் என மிரட்டல் நாடகம் ஆடிக்கொண்டிருந்தது அமெரிக்கா. அமெரிக்க மிரட்டல் தொடரும்வரை இஸ்ரேல் மீதும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மற்றும் பொருளாதார நிலைகள் மீதும் தொடர் தாக்குதல்களை மேற்கொண்டது ஈரான்.

ஈரானைப் பணிய வைத்து ஈரானில் பொம்மை அரசை ஸ்தாபிக்கும் நோக்குடனான அமெரிக்காவினதும் இஸ்ரேலினதும் கணக்குகள் படுபிழையாகி இன்றுவரை வளைகுடாவின் சட்டாம்பிள்ளை போல் செயற்பட்ட இஸ்ரேல் முடமாக்கப்பட்டு, வளைகுடாவின் புதிய அதிகார மையமாக ஈரான் எழுச்சி பெற்றுவிட்டதான நிலைமை ஏற்பட்டுள்ளது. இரண்டாம் உலக யுத்தத்தைத் தொடர்ந்து புதிய இருபெரும் வல்லரசுகளாக நேரெதிர் கோட்பாடுகளைக் கொண்டவையாக அமெரிக்காவும் சோவியத் யூனியனும் எழுச்சி பெற்றன. இரு வல்லரசுகளின் பின்னாலும் உலகம் இரண்டுபட்டு நின்றது. இது **”இருதுருவ உலக ஒழுங்கு”** என அழைக்கப்பட்டது.

சோவியத் வீழ்ச்சியைத் தொடர்ந்து ரஷ்யா பலவீனமான நிலையில் இருந்தது. அமெரிக்கா தலைமையிலான வட அத்திலாந்திக் ஒப்பந்த நாடுகள் (**NATO**) என்ற சக்தியே உலகைக் கட்டுப்படுத்தும் இராணுவ சக்தியாகவும், அமெரிக்காவே இதன் அரசியல் ராஜதந்திர சக்தியாகவும் தொடர்ந்தது. இதனை தனித்துருவ அல்லது **”ஒற்றைத்துருவ உலக ஒழுங்கு”** என அழைக்கப்பட்டது. ஆனால் குறுகிய காலத்திலேயே ஒருபுறம் சீனா தன்னை சக்தி மிக்க வல்லரசாக வளர்த்துக்கொண்டது. ரஷ்யா மீண்டும் தன்னைக் கட்டியெழுப்பி அமெரிக்காவுக்கு சவாலான ஓர் சர்வதேச சக்தியாக மீளமைத்துக்கொண்டது.

இந்தியாவின் ஆறுதலான ஆனால் உறுதியான தளங்களிலான வளர்ச்சியும் அமெரிக்காவின் கட்டுப்பாடுகளை மீறி தனித்துவமாக செயற்படும் வல்லரசுகள் உருவாகி விட்டன. அவை மேலும் சில பலமிக்க நாடுகளை இணைத்து **BRICS** என்ற சர்வதேச பொருளாதார அமைப்பை உருவாக்கும் முயற்சியில் உள்ளன. **BRICS** என்பது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாபிரிக்கா, எகிப்து, எதியோப்பியா, இந்தோனேசியா, ஈரான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் கூட்டணியின் ஆங்கில சுருக்கமாகும். இது அமெரிக்க தலைமைக்குச் சவாலாக சர்வதேச வர்த்தக ரீதியாக பெருமளவில் பயன்படுத்தப்படும் அமெரிக்க டொலருக்கு மாற்றாக புதிய நாணயத்தை அறிமுகப்படுத்தும் திட்டத்துடன் உள்ளன.

இந்த **BRICS** அங்கத்துவ நாடுகளில் இந்தியா, சீனா மட்டுமே உலகின் 40 சதவீத மக்களைக் கொண்டுள்ளன. இப்பதினொரு நாடுகளும் சேர்த்து 50 சதவீதத்திற்கு மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்டவை என்பதாலும் பல்வேறு வளங்களையும் வளர்ச்சியையும் கொண்டவை என்பதாலும் அமெரிக்க டொலருக்கு மாற்றான தமக்கான நாணயத்தில் வெற்றிகரமாக சர்வதேச வர்த்தகத்தைத் தொடர முடியும். இது அமெரிக்காவின் தனித்தலைமைக்கு கடும் சவாலாகும். எனவே **BRICS** அமைப்பை உடைத்து தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரவே டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவுடனான உலக வர்த்தகத்தின் மீது கடுமையான வரிச் சுமைகளை உயர்த்தினார்; இந்தியர்களை வெளியேற்றினார்.

ஆனால் ரஷ்யா தன்னுடன் வர்த்தகம் செய்வோர் ரஷ்ய நாணயமான ரூபிளில் செய்யலாம் என அறிவித்தது. சீனா இந்திய வல்லுநர்களுக்கு தான் வேலை கொடுப்பதாக அழைத்தது. இவ்வெதிர் நிலைப்பாடுகள் அமெரிக்காவைப் பெருமளவு பின்வாங்க வைத்தது. எனவே அமெரிக்காவின் ஒற்றைத் தலைமைக்கு பாரிய சவால் உருவாகிவிட்டதையே இது வெளிப்படுத்துகிறது. இத்தகைய பின்னணியிலேயே இஸ்ரேல் தவறான கணிப்பீட்டின் அடிப்படையில் ஈரானுடனான போருக்குள் அமெரிக்காவை இழுத்துவிட்டது.

சில மாதங்களுக்கு முன்னர் ஈரானில் ஜனநாயக மாற்றத்துக்கான உள்நாட்டு எழுச்சி அவ்வரசால் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட்டது. உள்நாட்டில் அரசுக்கெதிரான உணர்வு வளர்ந்திருப்பதால் அதன் உச்சத்தலைவர்களை அழித்துவிட்டால் ஜனநாயகத்திற்கான போராட்டக் குழுவிலிருந்து ஓர் பொம்மை ஆட்சியை ஸ்தாபித்து ஈரானை தமது கட்டுப்பாட்டில் முழுமையாக வைத்திருக்கலாம், இஸ்ரேல் தொடர்ந்தும் வளைகுடாவின் சட்டாம்பிள்ளையாக இருக்கலாம், **BRICS** பலவீனப்படும், அமெரிக்காவின் தலைமையிலான உலக ஒழுங்கு தொடரும் என்ற கணிப்பிலேயே ஈரானின் உச்சத்தலைவர்கள் கொல்லப்பட்ட முதல் தாக்குதல் நடைபெற்றது.

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே தொடர்ந்து வந்த பதற்றங்களை நீக்கும் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறும் போதே ஈரானின் உச்சத்தலைவர்களைக் கொல்லும் தாக்குதல் நடைபெற்றது என்பதை மனதிற்கொள்ள வேண்டும். இது இரண்டாம் உலக யுத்தத்தின் முன் ஹிட்லர் பல நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டே அந்நாடுகளைக் கைப்பற்றும் தாக்குதல்களை நடத்திய பாணியை ஒத்ததாகும். அமெரிக்க இஸ்ரேல் கணிப்புக்கு முரணான ஈரானின் எந்த தலைவர் அல்லது தலைமை அதிகாரிகள் கொல்லப்பட்டாலும் ஈரானின் எதிர்த்தாக்குதல்கள் அதிகரித்ததே தவிர குறையவில்லை.

மேலும் அமெரிக்காவையும் இஸ்ரேலையும் எப்படித் தாக்குவது, எத்தகைய ஆயுதங்கள் பயன்படுத்த வேண்டும் என்பவற்றில் ஈரான் தெளிவாகவே சிந்தித்து அதற்கு தன்னை தகவமைத்துக் கொண்டமை இஸ்ரேல் அமெரிக்க உளவுத்துறைக்குக்கூட தெரியவில்லை. இஸ்ரேல் தனக்கெதிராக எந்த நாடும் தாக்குதல் தொடுக்க முடியாது, தனது நாட்டின் மீது “இரும்புக்கவசம்” எனப்படும் 5 அடுக்கு வான்வழி தாக்குதல் எதிர்ப்பு கவசங்களைக் கொண்டிருக்கிறோம் என மார்தட்டிக்கொண்டிருந்தது. அமெரிக்காவும் பல்வேறு மிரட்டல்களைத் தொடர்ந்து கொண்டேயிருந்தது. நீண்டகாலமாக ஈரான் மீது பொருளாதாரத் தடை விதித்திருந்தது. எனவே இவற்றிலிருந்து மீள கடுமையான யுத்தத்திற்கு முகம் கொடுத்தே இதனைக் கடக்க முடியும் என்ற தூர நோக்கை ஈரான் கொண்டிருந்தது.

இக்கணக்குகளின் அடிப்படையிலேயே யார் கொல்லப்பட்டாலும் ஆட்சி தொடரும் வகையில் பல அடுக்குகளில் தலைமை தெரிவுகளையும் மாகாண மட்டங்களிலான தலைமைப் பிரிவுகளையும் அதேபோல் இராணுவத் தலைமை அடுக்குகளையும் சுயாதீனமான பிரிவுகளையும் கொண்டதாக தனது அரசியல் இராணுவ நிர்வாகக் கட்டமைப்பை ஈரான் தயார் செய்திருந்தது. மேலும் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அரணை உடைத்து தாக்குதலை நடத்தும் வகையிலான தொகையான பல்வகை மிஸைல்கள் (**Missiles**) மற்றும் ஆளில்லா விமானக் குண்டுகளையும் பயன்படுத்தியமை இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அரணை உடைத்து தலைநகரையும் ஏனைய முக்கிய தளங்களையும் அழித்துவிட்டது. ஈராக், குவைத், கட்டார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளில் இருந்த அமெரிக்க படைத்தளங்கள் மற்றும் பொருளாதார நிலைகள் பெருமளவு அழிந்தன.

இஸ்ரேல், அமெரிக்கா ஆகியவற்றின் ஒவ்வோர் தாக்குதலுக்கும் பலமான பல மடங்கு மறுதாக்குதல்களை ஈரான் தொடர்ந்தது. ஈரானுக்கு ஆதரவாக ரஷ்யா, சீனா ஆகிய வல்லரசுகள் வெளிப்படையாகவே முன்வந்தமையும் இஸ்ரேலையும் அமெரிக்காவையும் கலங்க வைத்தது. வளைகுடாப் போர் சந்தடி சாக்கில் தனது பக்கத்து எதிரி நாடான கியூபாவை கைப்பற்றும் நோக்குடன் கியூபாவுக்கான கடல் பாதையை மூடிவிட்டதாக அமெரிக்கா அறிவித்தது. யாரும் கியூபாவுடன் வர்த்தகம் செய்ய விடமாட்டேன் என ட்ரம்ப் அறிவித்தார். அவரது அறிவித்தலை அலட்சியம் செய்து “முடிந்தால் தடுத்துப்பார்” என ரஷ்ய எண்ணெய் கப்பல் கியூபா சென்றது. ரஷ்ய எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா தாக்கியிருப்பின் இரு நாடுகளுக்குமிடையிலான நேரடி யுத்தத்திற்கு இது வழிவகுத்திருக்கும். மொத்தத்தில் ஈரானிடமும் ரஷ்யாவிடமும் கூட அமெரிக்கா தோற்றுவிட்ட நிலையிலேயே இன்று பேச்சுவார்த்தை அரங்குக்கு வந்திருக்கிறது.

ஈரானின் 10 அம்ச நிபந்தனைகளுள் முக்கியமானவை:

 

1. வளைகுடா நாடுகளில் (மத்திய கிழக்கு பிராந்தியத்தில்) இருந்து அமெரிக்கத் தளங்களை முற்றாக வாபஸ் பெற வேண்டும்.

2. ஈரானுக்கெதிரான அனைத்து தடைகளும் நீக்கப்படுவதுடன் முடக்கப்பட்ட ஈரானின் சொத்துக்கள் அனைத்தும் விடுவிக்கப்பட வேண்டும்.

3. ஹோமுஸ் நீரிணை மீதான ஈரானின் கட்டுப்பாட்டையும் முகாமைத்துவத்தையும் தொடர அனுமதிக்க வேண்டும். யுரேனியத்தை வளப்படுத்தும் தனது திட்டத்தை அங்கீகரிக்க வேண்டும்.

4. உடனடியாக நிரந்தரமாக ஈராக், லெபனான், யேமன் ஆகிய நாடுகளுடனான போரும் நிறுத்தப்பட வேண்டும்.

5. தனது மீள்கட்டுமானத்திற்கான நிதியைப் பெறும் பொருட்டு ஹோமுஸ் நீரிணையைக் கடக்கும் ஒவ்வோர் கப்பலும் 2 மில்லியன் அமெரிக்க டொலரை செலுத்துவதற்கு ஈரான் திட்டமிட்டுள்ளது.

அமெரிக்காவைப் பொறுத்தவரை இவை ஏற்றுக்கொள்ளப்பட்டால் மத்திய கிழக்குப் பிராந்தியத்தின் தலைமை நாடாக ஈரானை அங்கீகரித்ததாக ஆகும். இப்பிராந்தியத்தில் அமெரிக்காவின் பிடி இல்லாமற் போகும். இஸ்ரேல் சட்டாம்பிள்ளையாக அமெரிக்காவின் பலமான தளமாக செயற்பட முடியாது. அமெரிக்கா ஈரானிடம் தோற்றுவிட்டதான சர்வதேச பிம்பம் உருவாகும். நேற்றைய அமெரிக்கா இன்றில்லை; ஈரான் நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் இன்றைய அமெரிக்கா நாளை இருக்காது.

ஈரானைப் பொறுத்தவரை இந்த யுத்தம் அமெரிக்காவை **NATO** விடமிருந்தும் தனிமைப்படுத்தியதுடன் அமெரிக்காவின் நட்பு நாடுகளே பகிரங்கமாக விமர்சிக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. வளைகுடாவில் அமெரிக்கத் தளங்கள் அழிக்கப்பட்டுவிட்டதுடன் எதிர்காலத்திலும் அவை இருந்தால் பாதுகாப்பு கடினமே என்பதை ஈரான் நிரூபித்திருக்கிறது. இஸ்ரேலை தளமாக வைத்து வளைகுடாவை கட்டுப்படுத்தும் திட்டத்தை ஈரான் பெருமளவு பலவீனப்படுத்தியிருக்கிறது.

 

மொத்தத்தில் வளைகுடாவில் அமெரிக்காவின் பிடியும் அல்லது செல்வாக்கும் இஸ்ரேலின் பாதுகாப்பான இருப்பும் கேள்விக்குள்ளாகியுள்ளது என்பது தெளிவு. வளைகுடாவில் மாறிவரும் அதிகார சமநிலையும் இது **BRICS** அமைப்பை மேலும் சர்வதேச அளவில் பலப்படுத்துவதும், அமெரிக்கா தலைமையிலான உலக ஒழுங்கின் சரிவிற்கும் **BRICS** தலைமையிலான எழுச்சிக்கும் கட்டியம் கூறுவதாகவே கொள்ள முடியும்.

கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன்

Share this article

More News