தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி.) ஆட்சியை புரிந்துகொள்ளல்

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) ஆட்சிப்பொறுப்பேற்று ஏறத்தாழ ஒன்றரை வருடமாகிறது. ஜனநாயக அரசியல் கட்டமைப்பில் ஓர் ஆட்சியைப் புரிந்துகொள்ள பின்வரும் விடயங்களை பகுப்பாய்வு செய்வதனூடாக சாத்தியமாகும்.
1. கட்சியின் கொள்கை (இடதுசாரி? வலதுசாரி? நலன்புரி அரசு ஆகியன)
2. செயற்பாடுகள் (கொள்கை நடைமுறைப்படுத்தப்படுகிறதா?)
3. கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமானவையும் அவற்றை செயற்படுத்தும் அளவும் தரமும்.

பிரித்தானியரிடமிருந்து ஆட்சியதிகாரம் சிங்கள அரசியல் சமூகத்திற்கு கைமாற்றப்பட்டதிலிருந்து இன்றைய தேசிய மக்கள் சக்தி என்ற பெயருடன் அனுரகுமாரதிசநாயக்க ஆட்சியேற்கும் வரை ஐக்கிய தேசியக்கட்சியும் சிறிலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் அக்கட்சியை உடைத்து உருவான பொதுஜன பெரமுனவுமே மாறிமாறி ஆட்சி செய்து வந்தனர். இவ்விரு கட்சிகளும் நாட்டின் பொருளாதார அபிவிருத்தி, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதனையும் ஏற்படுத்த முடியவில்லை. மாறாக பெருமளவு நிதிமோசடி அரச எதிர்ப்பாளர்களை மாற்றுக்கருத்தாளர்களை அளித்தல் மற்றும் உருப்படியான திட்டங்களற்ற செலவுகளால் பெருந்தொகை விரயங்கள் என மக்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்து வந்தனர். வடக்கு – கிழக்கைப் பொறுத்தவரை பிரித்தானிய காலனித்துவவாதிகள் வெளியேறியதிலிருந்து மாறிமாறி ஆட்சி செய்த சிங்களக் கட்சிகள் இலங்கைத் தீவின் வரலாற்றை மாற்றி எழுதும் நோக்குடன் இத்தீவை ஓர் பூரண சிங்கள – பௌத்த நாடாக்கும் செயற்திட்டங்களையும் சட்டங்களையும் தொடர்ச்சியாக செயற்படுத்தியே வந்தனர். இலங்கையின் ஆதிக்குடிகளான தமிழர்கள் செறிந்து (மிகப்பெரும்பான்மையாக) வாழ்ந்துவந்த வடக்கு – கிழக்கு மாகாணங்களை மையப்படுத்திய கட்சிகளை உருவாக்கி சிங்கள – பௌத்த தீவாக மாற்றும் செயற்திட்டங்களை எதிர்த்து தமிழ் மக்களின் உரிமைகளை அதிகாரப்பகிர்வு மூலம் நிலைநாட்டும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர். எனவே கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் வரை வடக்கு – கிழக்கு மக்கள் மிகப்பெருமளவில் தமிழ்த் தேசிய வேட்பாளர்களையே தமது உரிமைகளுக்காக ஆதரித்து வந்தனர்.

ஜனதா விமுக்தி பெரமுன எனப்படும் மக்கள் விடுதலை முன்னணி கடந்த ஜனாதிபதி தேர்தல் வரை ஜே.வி.பி. என்ற அதற்குரிய பெயரிலேயே இயங்கி வந்தது. சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு 22 நாடாளுமன்ற ஆசனங்களைப் பெற்ற சந்தர்ப்பம் தவிர ஏனைய அனைத்துத் தேர்தல்களிலும் ஒன்றிலிருந்து மூன்றுவரையான ஆசனங்களையே வென்று நாடாளுமன்றத்தில் அங்கத்துவம் பெற்றனர். சந்திரிக்கா ஆட்சியில் இன்றைய ஜனாதிபதி அனுரகுமார விவசாய அமைச்சராக குறுகிய காலம் செயற்பட்டு பதவியை ராஜினாமா செய்தார். நாடாளுமன்றத்தில் ஜே.வி.பி. பெரும்பாலும் ஆட்சியாளர்களின் நிதிமோசடிகள் மற்றும் முறைகேடுகள் பற்றியே அதிகம் பேசி வந்தனர்.

பயங்கரவாதத்தடைச்சட்டத்தை (புலிகள் அழிக்கப்பட்ட பின்) எதிர்த்து வந்தனர். ஆனால் விவசாய அமைச்சர் பதவியைத் திறம்பட பாவித்து இலங்கையை விவசாய உற்பத்தியில் ஓர் முழுமையான தற்சார்பு நாடாகக் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கோ ஓர்மமோ இவரிடம் காணப்படவில்லை. அப்பதவியின் மூலம் தனது நிர்வாகத்திறனை வெளிப்படுத்துவதற்கு மாறாக அர்த்தமற்ற காரணத்திற்காக பதவியை ராஜினாமா செய்தார். எனவே ஜனாதிபதியாகும் வரை நிர்வாகத்திறனைக் காண்பிக்கவில்லை. மேலும் ஜே.வி.பி. ஒரு மாகாண சபையைக்கூட தனியாகவோ கூட்டாகவோ வென்று நிர்வகித்ததில்லை. இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை பெரும் வன்முறையூடாக எதிர்த்தவர்கள், 18 ஆண்டுகள் இணைக்கப்பட்டு ஒரே அலகாக செயற்பட்ட வட – கிழக்கு மாகாணசபையை நீதிமன்றத்தினூடாக பிரித்தவர்கள். எனினும் இவை சாதாரண தமிழ்மக்கள் மத்தியிலோ புதிய தலைமுறை வாக்காளர் மத்தியிலோ போதியளவு பிரபலமாகவில்லை.

காரணம் வடக்கு – கிழக்கில் ஜே.வி.பி.க்கு ஆதரவுத்தளம் எதுவும் இருக்கவில்லை. ஆட்சியில் இருக்கவில்லை. எனவே அவர்களது தமிழின எதி;ப்பு பிரச்சாரங்கள் வடக்கு – கிழக்கில் நடைபெறவில்லை. மேலும் தமிழ்த்தலைமைகள் இனமோதல் தீர்வு நோக்கி காத்திரமான திட்டங்களை வகுத்து செயற்படாமல் வாய்ப்பந்தல் போடுபவர்களாக தொடர்ததும் தமக்குள் பிளவுண்டு நின்றதும் தமிழ் வாக்காளர்களில் ஓர் பிரிவின் மத்தியில் மாற்றத்தை நோக்கி சிந்திக்க வைத்தது. ஆக பாரம்பரிய சிங்களத் தலைமைகளில் சிங்கள மக்கள் விரக்தியடைந்ததும் தமிழ் தலைமைகளில் தமிழ் மக்கள் ஓர் பிரிவினர் விரக்தியடைந்தும் ஜே.வி.பி. (தேசிய மக்கள் சக்தி)க்கு ஓர் சந்தர்ப்பம் கொடுத்தால் என்ன என இருந்தும் சிந்திக்க வைத்தது. இனமோதலுக்கு தீர்வு காண்போம், இனவாதம் – மதவாதமற்ற நாட்டைக் கட்டியெழுப்புவோம், பயங்கரவாதச்சட்டத்தை நீக்குவோம், ஓராண்டுக்குள் மாகாணசபைத் தேர்தலை நடத்துவோம் என நீண்ட வாக்குறுதிப் பட்டியலைத் தமிழ்மக்களுக்கும் ஊழலற்ற போதைவஸ்து அற்ற அழகிய நாட்டை உருவாக்குவோம். முன்னைய அரசியல்வாதிகள் கொள்ளை அடித்த மக்கள் பணத்தை மீட்டு இலங்கையின் வெளிநாட்டுக்கடன்களை அடைப்போம், வங்குரோத்தடைந்திருக்கும் பொருளாதாரத்தை மாற்றி பொருளாதார சுபீட்சத்தை ஏற்படுத்துவோம் என ஓர் நீண்ட பட்டியலை பொதுவாகவும் (குறிப்பாக சிங்கள வாக்காளரைக் கவர்வதற்காகவும்) வாக்குறுதி அளித்தனர்.

இதனடிப்படையிலேயே மிகப் பெருமளவு சிங்கள வாக்குகளையும் (மூன்று வீதத்திலிருந்து 47 வீதமான உயர்ச்சி) ஏறத்தாழ 25 வாக்குகளை வடக்கிலும் சற்றுக் குறைவாக கிழக்கிலும் பெற்று 2ஃ3 பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது ஜே.வி.பி. முன்னைய ஆட்சியாளர்கள் தங்கு நிலை முதலாளித்துவக்கட்சிகளாகவும் மதவாதம் இனவாதத்தை தேர்தலில் வெற்றி பெறும் கருவிகளாகப் பயன்படுத்தும் பிற்போக்கு வாதிகளாகவும் இருந்தனர். ஆனால் ஜே.வி.பி. தன்னை ஆரம்பத்திலிருந்தே ஓர் இடதுசாரியாக வெளிப்படுத்தி வந்த கட்சி. இடது சாரித்துவத்தின் முக்கிய அடிப்படைக் கோட்பாடுகள் சில.

1. தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தலும் ஓர் தேசமாக அவர்களை ஏற்றுக்கொள்ளுதலும்
2. மதசார்பின்மையை ஊக்குவித்தலும் கடைப்பிடித்தலும்
3. சுயசார்பு பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு முன்னுரிமை கொடுத்தல்

இவை தொடர்பில் ஜே.வி.பி.யின் கொள்கையும் செயற்பாடும் எத்தகையது? ஐக்கிய நாடுகள் சாசனத்தின் பிரகாரம் தமிழ்மக்கள் இந்த நாட்டில் ஓர் தனித்தேசிய இனமாகும். 75 ஆண்டுகாலமாக தமிழ்த்தலைமைகள் இவ்வங்கீகாரத்தைக் கோரி பல்வகைப் போராட்டங்களைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் ஜே.வி.பி.யோ அவர்கள் தலைமையிலான தேசிய மக்கள் சக்தியோ இதனை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. மாறாக தமிழின அழிப்பு செயற்திட்டங்களையே மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஓர் இடதுசாரிக்கட்சி மதத்திற்கு முன்னுரிமை கொடுக்காது. மாறாக மதங்களை சமமாக மதிக்கும். மதவாதம் எந்தவகையிலும் தலைதூக்க விடாது. ஆனால் ஜே.வி.பி. பௌத்த மேலாதிக்கவாதத்துக்கு அனுசரணையாக செயற்படுவதுடன் பௌத்தர்கள் வாழாத மாற்று மத்தினர் செறிந்து வாழும் இடங்களில் பௌத்த ஆக்கிரமிப்புகளுக்கு பாதுகாப்பும் வளங்கலும் வசதிகளும் ஏற்படுத்திக்கொடுக்கின்றனர்.

1. சைவக்கோவில்களை அழித்து புத்தகோவில் கட்டுதல்
2. தமிழர் தனியார் நிலங்களில் புத்த கோவில் கட்டுதல்
3. தொல்லியல் ஆய்வு இடங்களை ஆக்கிரமித்து புத்தகோவில் கட்டுதல் என அனைத்துவகை சட்டவிரோத ஏனைய மதவிரோத செயற்பாடுகளைத் தொடர்ந்து செயற்படுத்தி வருகின்றது. ஆக சிங்களவரல்லாதோரை அடிமைகளாக்கும் கோட்பாடே தொடர்கிறது. சுயசார்பு பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப மிக அடிப்படையானது உணவுத்தன்னிறைவு 140 கோடி மக்களைக் கொண்ட இந்தியாவும் 138 கோடி மக்களைக் கொண்ட சீனாவும் உணவுத் தேவைகளில் தன்னிறைவடைந்து பெருமளவுக்கு ஏற்றுமதியும் செய்கின்றனர்.

ஆனால் அடிப்படையில் விவசாய நாடான இலங்கை பெருமளவு விவசாய உற்பத்திப்பொருட்களையே இறக்குமதி செய்கிறது. ஜே.வி.பி.ஃ என்.பி.பி. ஆட்சி இவ்விடயத்தில் ஓர் அடியைக் கூட இதுவரை முன்னே வைக்கவில்லை. விவசாய அபிவிருத்தியே முன்னெடுக்க முடியாதவர்கள் தொழில்துறை வளர்ச்சியை முன்னெடுக்க முடியுமா?

சிங்கள மேலாதிக்கவாத பௌத்தமதவாத செயற்திட்டங்களை முன்னெடுப்பவர் இடதுசாரிகளாக இருக்க முடியாது. ஏன் ஜனநாயகவாதியாகக்கூட இருக்க முடியாது. ஏனெனில் ஜனநாயகம் என்பது குரலற்றோரின் குரலாகும். ஆனால் இங்கு இடதுசாரிகள் குரல்களை நசுக்கும் செயற்திட்டங்களையே நடைமுறைப்படுத்துகின்றனர். இன்னோர் வகையில் ஆட்சியின் இயலுமையை கணிப்பதாயின் அவர்களது தேர்தல் வாக்குறுதிகள் செயற்படுத்தப்படுகிறதா?

1. நாம் ஆட்சிக்கு வந்தால் 1 வருடத்திற்குள் மாகாணசபைத் தேர்தல் நடத்துவோம்.
2. மைத்திரி ஆட்சியில் பாதியில் நிற்கும் இனமோதல் தீர்வுத்திட்டத்தை முடித்து நிரந்தர தீர்வுக்கு வழிவகுப்போம்.
3. பயங்கரவாத தடைச்சட்டத்தை உடன் நீக்குவோம்.
4. முன்னைய ஆட்சியாளர் கொள்ளையடித்து வெளிநாடுகளில் முதலிட்டிருக்கும் பணத்தை மீட்டு இலங்கையின் வெளிநாட்டுக்கடன்களை அடைப்போம்.
5. ஊழலற்ற ஆட்சியை நிறுவுவோம்.
6. ஊனமுற்ற பொருளாதாரத்தை நிமிர்த்துவோம்.

மாகாணசபைத் தேர்தல் ஒன்றரை வருடமாகியும் இன்னும் நடத்தவில்லை மட்டுமல்ல, நடத்தாமலிருப்பதற்கான காரணங்களைத் தேடுபவர்களாகவே உள்ளனர். பழைய முறைத்தேர்தலா? புதியமுறைத் தேர்தலா? என்பதற்கு முடிவுகளை இன்னும் தொடங்கவில்லை. பழைய முறையில் தேர்தல் நடத்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஆதரவளிக்க முன்வந்தமையால் வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் வாக்களிக்க வழிசெய்ய வேண்டும் என காலம் கடந்த புதிய காரணத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.

மைத்திரி ஆட்சியில் பாதியிலிருக்கும் தீர்வு முயற்சியை முடிக்க வேண்டுமானால் அரசியலமைப்பு சபை உருவாக்கப்பட வேண்டும். ஆனால் புதிய அரசியல் யாப்பு உருவாக்குவதற்கான அடிப்படை விடயங்களே இன்னும் கண்டுகொள்ளப்படவில்லை. மேலும் ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா புதிய அரசியல் யாப்பில் மாகாணசபை முறை இருக்காது என்று கூறும் அதேவேளை அதற்குப் பதிலாக எத்தகைய தீர்வு முன்வைக்கப்படும் என்பதற்குப் பதில் கூற மறுக்கிறார். ஆக புதிய அரசியல்யாப்பு வருமோ என்பது கேள்வி. வந்தாலும் மாகாணசபையும் ஒழிக்கப்பட்டு நவீன அடிமைகளாகப்படும் சமிக்ஞைகைகளே காட்டப்படுகின்றன.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதாக வாக்குறுதி வழங்கி வாக்குப்பெற்று ஆட்சிக்கு வந்ததும் இருந்ததை விட கொடிய சட்டத்தை முன்வைக்கும் அளவுக்கு கொடியவர்களாக மாறியுள்ளனர். இடதுசாரித்துவம் அடக்குமுறை அற்ற ஒடுக்குமுறை அற்ற நல்லாட்சி வழங்குகின்ற ஓர்கோட்பாடாகும். ஆனால் இலங்கையை ஆளும் இடதுசாரிகள்? தமது நல்லாட்சி மீது நம்பிக்கை அற்றும் தமது மக்களுக்கெதிரான கொடிய சட்டங்களை உருவாக்குவது எந்தவகை இடதுசாரித்துவம். தனது நாட்டு மக்களின் மனித உரிமைகள் அடிப்படை உரிமைகளையே சர்வசாதாரணமாக மறுதலிக்கும் இக்கொடிய புதிய பயங்கரவாதத் தடைச்சட்டம் மனிதாபிமானம் மிகுந்த இடதுசாரிக்கொள்கை சர்வாதிகாரத்தை ஊக்குவிப்பது இலங்கையில் விந்தை.

ராஜபக்சக்கள் நாட்டைச் சூறையாடி வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் பணங்களை மீட்டு இலங்கையின் வெளிநாட்டுக்கடன் அடைப்போம் என்று கூறியவர்களால் இன்றுவரை ராஜபக்சர்கள் மீது போதிய காத்திரமான கட்டுப்பாடுகளை விதிக்க முடியவில்லை. எவரையும் கைது செய்ய முடியவில்லை. ஒரு ரூபாய் தாளும் மீட்க முடியவில்லை. பொதுமக்களுக்கு போக்குக்காட்ட கீழ்மட்ட ஊழல்வாதிகள் சிலர் கைது செய்யப்பட்டாலும் அதனால் அரசாங்கம் மேலும் செலவு செய்கிறதே தவிர எதனையும் மீட்கவில்லை.

‘ஊழலற்ற ஆட்சி நிறுவுவோம்”
ஊழல் என்பது வெறும் கையூட்டு பெறுவது மட்டுமல்ல நியமன முறைகேடுகள் நிர்வாக முறைகேடுகள், ஆட்சியதிகாரத்தைக் கட்டி வளர்க்க பயன்படுத்துவதும் ஊழலின் பல்வேறு வடிவங்கள்தான்.

தனியார் நிலத்தில் புத்தகோவில் கட்டி அதனை அகற்ற மறுப்பது ஊழலில்லையா?
மக்களின் ஏழ்மை ஒழிப்பிற்கும் வாழ்வாதார வளர்ச்சிக்கும் கிராம அபிவிருத்திக்கும்
1. மக்களால் தெரிவு செய்யப்பட்ட உள்ளுராட்சி அமைப்புகள் இருக்கின்றன.
2. சமுர்த்தி அலுவலர்கள் சமுர்த்தி வங்கி செயற்பாடுகள் இருக்கின்றன.
3. அபிவிருத்தி அலுவலர்கள் இருக்கின்றனர்.
4. சனசமூக நிலையங்களும் சமூக அபிவிருத்தி அலுவலர்களும் உள்ளனர்.
5. அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளனர்.
6. கிராம அபிவிருத்திச்சங்கம் மாதர் கிராம அபிவிருத்திச்சங்கம் உள்ளன.
7. கிராம அலுவலர் உள்ளார்.

இவை அனைத்தையும் ஓரம்கட்டி பிரஜாசக்தி என்ற பெயரால் ஆளுங்கட்சி நியமிக்கும் ஒருவர் தலைமையில் ஓர் குழுவை உருவாக்கி அவர்கள் சொற்படி கிராம அபிவிருத்தித்திட்டம் நடத்த முற்படுவது நிர்வாக முறைகேடில்லையா? இந்த அமைப்புகள் அனைத்திற்கும் அரசாங்கம் மக்கள் வரிப்பணத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பெரும் நிதியைச் செலவிடுகின்றது. இது விரயமில்லையா? அனைத்திற்கும் மேலாக மக்களின் வரிப்பணத்தில் தேசிய மக்கள் சக்தி என்ற கட்சியை வளர்க்க முற்படும் இத்திட்டம் ஊழலில்லையா? ஜனநாயக விரோதமில்லையா?

மாகாணசபைத் தேர்தலை நடத்தாமல் வடக்கு மாகாணத்தில் ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை நிழல் அமைச்சரவை செயற்பட அனுமதித்தல் சட்டவிரோதமில்லையா? ஊழலில்லையா? வடக்கு மாகாணத்தில் மட்டும் இதனை செயற்படுத்தல் வடக்கில் கட்சி வளர்க்க மாகாண சபையைக் குறுக்கு வழியில் பயன்படுத்தும் சட்ட மற்றும் ஜனநாயக மீறலில்லையா? இனவெறியின் பாற்பட்டதில்லையா?

‘ஊனமுற்ற பொருளாதாரத்தை நிமிர்த்துவோம்”.
1. ஒன்றரை ஆண்டுகளில் ஏற்றுமதி வருவாயை ஆதரிக்கவோ இறக்குமதிச் செல்வாக்கை குறைக்கவோ ஒரு திட்டமேனும் செயற்படுத்தப்படவில்லை.
3. ரணில் ஆட்சி போலவே கடன்கள் உதவிகளில் தான் சமாளிக்கப்படுகிறது. கடன்கள் கூடியுள்ளதே தவிர குறையவில்லை. பொருளாதாரம் இன்னும் முடமாகவே இருக்கின்றது. மாற்றமில்லை.
மாற்றத்திற்காக வாக்களிக்கக் கேட்டு ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடங்களாகியும் மாற்றம் எதுவும் கண்ணுக்குப் புலப்படவில்லை.

இடதுசாரித்துவம் அல்ல குறைந்தப்பட்சம் ஜனநாயகப் பண்புகளுக்கு மதிப்பளிக்கும் தன்மையே இல்லை.

முன்னையவர்களுக்கும் தனக்கும் என்ன வேறுபாடு என்பதை இவற்றுக்கு பதில்சொல்வதன் மூலம் ஜனாதிபதி மக்களுக்கு விளக்க வேண்டும்.

கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன்
முன்னாள் கல்வி அமைச்சர்
வடக்கு மாகாணம்

Share this article

More News