
யாழ்ப்பாணம் குப்பிளானைப் பூர்வீகமாகக் கொண்ட அமரர் சி.அ. ஜோதிலிங்கம் அவர்கள் ஏறத்தாழ நாற்பது வருடங்களாக எனது நண்பர். ஈழ விடுதலை போராட்டத்தின் ஆரம்பகால கட்டத்தில் தோழர் ரமணியாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியுடன் இணைந்து ஒரு சோஷலிச ஈழத்தை நிறுவுவதற்காக முன்னின்று உழைத்த போராளிகளில் ஒருவர். யாழ்ப்பாணத்து செம்மண் பிரதேசங்களில் கிராமிய தொழிலாளர்களை ஒன்று திரட்டுவதிலும் அவர்களை அரசியல் மயப்படுத்துவதிலும் எம்முடன் இணைந்து செயற்பட்டவர். பெண்விடுதலை, சாதி ஒழிப்பு போன்ற விடயங்களிலும் அவர் முன்னணியில் நின்று செயற்பட்டார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அவர் ஒரு மாணவனாக இருந்த காலத்திலும், பின்னர் ஆசிரியராக, சட்டத்தரணியாக பரிணாம வளர்ச்சிபெற்ற காலத்திலும் தமிழ் தேசியத்தின்பால் அக்கறை உள்ளவராக, அதில் தனது ஆழமான கருத்துகளைத் தெரிவிப்பராக, தமிழ் மக்கள் மத்தியில் ஒரு கருத்துருவாக்கியாக அவர் செயற்பட்டு வந்துள்ளார். மேலும் தமிழ் மக்களின் அரசியல் பொருளாதார வளர்ச்சி தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் முகமாக சமூக விஞ்ஞான ஆய்வு மையம் என்ற ஒரு நிறுவனத்தை நிறுவி அதன் இயக்குனராகவும் செயற்பட்டு வந்தார். அவரது பத்தி எழுத்துகள் ஏதேனும் ஆக்கபூர்வமான கருத்தை உள்ளடக்கியிருக்கும் என்ற ஆவலில் அனைவரையும் விரும்பிப் படிக்க வைத்தன.
பல்வேறுபட்ட அச்சுறுத்தல்கள், அடக்குமுறைகள் இருந்தபொழுதும் ஏனையோரைப்போல் நாட்டை விட்டு வெளியேறாமல் துணிச்சலாக நின்று தனது கருத்துகளை தொடர்ந்தும் இறுதிவரை சொல்லிவந்தவர் நண்பர் ஜோதிலிங்கம். அவருக்கும் எனக்கும் இடையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கருத்து முரண்பாடுகள் இருந்துள்ளன. இந்தியாவின் பங்களிப்பு, சர்வதேச நிலவரங்கள் போன்ற பல விடயங்களில் பல்வேறு விவாதங்கள் எமக்குள் இருந்தபொழுதிலும்கூட தமிழ் தேசியத்தின் பால் அவர் வைத்திருந்த உறுதியான நிலைப்பாட்டை யாரும் கேள்விக்குள்ளாக்க முடியாது.
தோழர் சி.அ. ஜோதிலிங்கம் (ரமணி) அவர்களுக்கு ஈபிஆர்எல்எப் ன் அரசியல் நிலைப்பாட்டில் அவ்வப்போ விமர்சனம் இருந்திருக்கின்றது. ஆனால் அதே விமர்சனத்தில் எப்போதும் மரியாதையும் இருந்திருக்கின்றது. கடுமையான அரசியல் முரண்பாடுகளுக்குள்ளும் , நட்பும் உறவும் இருக்க முடியும் என்பதாகவே எமது உறவு இருந்திருக்கிறது. அவரோ நானோ எங்களது கருத்துகளை விட்டுக்கொடுத்ததில்லை. அதுதான் அந்த நட்பின் அழகு.
அன்னாரின் சிந்தனையையும் செயலையும் நினைவில் நிறுத்தி அவருக்கு பிரியாவிடை கொடுப்போம். ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியானது அவருக்கு தனது அஞ்சலிகளை செலுத்துவதுடன் அன்னாரின் குடும்பத்தினர், நண்பர்கள், தோழர்கள் அனைவருடனும் எமது துயரங்களைப் பகிர்ந்துகொள்கிறது.
சுரேஷ் க.பிரேமச்சந்திரன். தலைவர் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி.







