
1978 இல் ரொனி டிமெல் புதிய நிதி அமைச்சராக பொறுப்பேற்று இருந்தார். அவரை சந்தித்த தெங்கு பனம்பொருள் கூட்டுறவு சங்க சமாசத்தின் உறுப்பினர்கள் இலங்கையில் தென்னைக்கு ஓர் தென்னை அபிவிருத்தி சபை இருப்பது போல எமது பிரதான மூல வளமான பனைக்கும் பனன அபிவிருத்தி சபை ஒன்றை நிறுவ வேண்டியதன் அவசியம் பற்றி வலியுறுத்தினார்கள்.
இதற்கு வலுச்சேர்க்கும் விதத்தில் முன்னாள் நீதியரசர் அமரர் துன்னாலை செல்லையா அவர்கள் தலைமையில் பல கல்விமான்களும் இணைந்து பனை அபிவிருத்தி சம்பந்தமாக அரசுக்கு சமர்ப்பித்திருந்த அறிக்கை ஒன்றும் இச்சந்தர்ப்பத்தில் அதற்கு பேருதவியாக அமைந்தது.
இதற்கான முயற்சியில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பூரணமாக ஒத்துழைப்பை வழங்கினர். குறிப்பாக
தலைவர் அமிர்தலிங்கம் அவர்கள் தனது முழு அரசியல் பலத்தையும் பயன்படுத்தினார்.
கூட்டுறவு சங்கங்களினதும்,
அதன் அங்கத்தவர்களான
பனைத் தொழில் வல்லுநர்களின் வாழ்வு மேம்பாட்டுக்குமான, வழிகாட்டியாக, உற்பத்தி நிபுணத்துவம், ஆராய்ச்சி, அபிவிருத்தி, சந்தைப்படுத்தல்,பனைவள அபிவிருத்தி, போன்றவற்றை முனைப்புடன் செயல்படுத்த வேண்டிய அவசியம் கருதியும், பனம்பொருள் உற்பத்தியில் ஈடுபடுவோருக்கு, ஊக்கமளிக்கும் நோக்கமாகவும், அமைச்சர்களையும் பல உயர் அதிகாரிகளையும் சந்தித்து விளக்கப்பட்டது.
இதன் விளைவாக பனை அபிவிருத்தி சபையை உருவாக்குவது என்ற முடிவை
ஒரு தனியான சட்டவாக்கம் மூலம் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தமிழ் மக்களுக்கு கிடைத்த பொருளாதார வெற்றியாக அன்று கருதப்பட்டது.
இதன் பேறாக 1978 ஆம் ஆண்டு ஆவணி மாதம்’ பனம் பொருள் அபிவிருத்தி சபை’ உருவாகியது. இதன் முதல் தலைவராக அனைவராலும் அன்று மதிக்கப்பட்ட தொழிற்சங்க வாதியும், அறிஞருமான திரு கே. சி. நித்யானந்தா அவர்கள் நியமிக்கப்பட்டார்.
துரதிஷ்டவசமாக எதிர்பாராத விதமாக அவர் குறுகிய காலத்தில் மறைந்து விட்டார். அவருடைய மறைவு அக்காலகட்டத்தில் பேரிழப்பாக கருதப்பட்டது.
தெங்கு பனம் பொருள் கூட்டுறவு சங்கங்களின் வேண்டுகோளின் படியே இந்த சபை உருவாக்கப்பட்டதனால் இந்தச் சபையை இலங்கை அரசின் சார்பில் உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்திய நிகழ்வுக்கு சங்க அங்கத்தவர்கள் அனைவரும் அழைக்கப்பட்டு இருந்தனர்.
சங்க அங்கத்தவர்களை பார்த்து “உங்களுக்காகவே உங்கள் சமூக முன்னேற்றத்துக்காகவே இந்த அரும்பெரும் பனை வளத்தின் அபிவிருத்திக்காக, தென்னை வளத்துக்கு தனிச்சபை இருப்பதுபோல சகல அதிகாரங்களும் கொண்ட சபையாக நியமிக்கப்படுகிறது” என்று பலத்த கரகோஷங்களுக்கு மத்தியில் வெளிப்படுத்தினார் அப்போதைய பெருந்தோட்டத்துறை அமைச்சர் எம்.டி.எச் ஜெயவர்த்தனா அவர்கள்.
இதற்கிடையில்…..
சங்ககங்களின் சாதனைச் செயல்பாடுகளை கொஞ்சம் தொட்டுவரலாம்.
‘சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி விடை கொடுக்க மாட்டான்’ என்பது போல யாழ் செயலகத்திலே அந்தச் சமூக மக்களின் உயர்வையும் பொருளாதார வளர்ச்சியும் விரும்பாத ஒரு சில அதிகாரிகள், ஒரு போத்தல் கள்ளுக்கு 15 சதவீதம் வரி என்று சங்கங்களையோ சமாசத்தையோ கலந்தாலோசிக்காமல் மிகவும் ரகசியமாக தீர்மானித்து முடிவெடுத்தார்கள். “வடபகுதியில் சாதி ஒழிந்து வருகிறது என்று கூறுகிறார்கள். ஆனால் அது நாகரிகமான முறையில் வளர்ந்து வருவதைத்தான் நாம் காண்கிறோம் என சங்கத்தினரும் தொழிலாளிகளும் மனம் வருந்திபுலம்பியது இன்னும் எனக்கு நினைவில் இருக்கிறது. சாதித் திமிர் பிடித்த தமிழ் அதிகார வர்க்கத்தால் எவ்வாறு மிதித்து நசுக்கப்பட்டது அந்தச் சமூகம் என்பதற்கு இந்த வரி பிரச்சனை ஒரு நல்ல உதாரணமாக அப்போது பேசப்பட்டது. அந்தச் சமூகத்தின் வளர்ச்சியை தடுக்கும் ஒரு கொடூர செயலாகவே அந்தச் சமூக மக்கள் இதை கருதினர்.
ஆனாலும் அவர்கள் விடாப்பிடியாக முழு சக்தியை ஒன்று திரட்டி ஒரே குரலாக நின்று பேச்சுவார்த்த ரீதியிலும் வற்புறுத்தலாகவும் மேலிடத்திடம் கேட்டுக் கொண்டது மட்டுமல்ல மீண்டும் நிதியமைச்சரைச் சந்தித்து தமது நிலையை விளக்கியதன் விளைவாக 15 சதவீதம் வரியானது 10 சதவீதமாக குறைக்கப்பட்டது. இந்த வரிக்குறைப்பின் பின்னர் இந்த சங்கங்களினது வரிப்பழு ஆண்டு ஒன்றுக்கு சுமார் 20 லட்சம் ரூபாயாக குறைந்தது.
சங்கங்களின் வளர்ச்சியில் ‘ தொழிலாளர் விபத்து நிதியும் ஓய்வூதிய திட்டமும்’ ஒரு பெரிய சாதனையாகும். 1980ல் சமாசம் தனது முக்கிய பணியாக தொழிலாளர்களுக்கான இந்த விபத்து ஓய்வூதிய திட்டத்தை உருவாக்கிட திடசங்கற்பம் பூண்டது. அப்போது இத்திட்டத்தை ஏளனம் செய்தோர் ஏராளம். கூட்டுறவு அதிகாரிகள் உட்பட பலர் இதை ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். ஆனால் சமாசத்தினர் சோர்ந்து விடாமல் எப்படியும் இத்திட்டத்தை தொடங்கியே தீருவதென முடிவெடுத்து அப்போதைய பிரதமர் பிரேமதாசா அவர்களை அணுகி வெற்றி கண்டார்கள். பிரதமரை நேரில் சந்தித்து நிலமைகளை விளக்கி இதற்கான அங்கீகாரம் பெற்றார்கள். பின்தங்கிய மக்களுக்கு இத்திட்டம் அவசியமான ஒன்று என்பதை உணர்ந்து கொண்ட பிரதமரை ‘புறக்கணிக்கப்பட்ட மக்களின் மனோ வலியை புரிந்து கொள்ளக்கூடிய குடும்பத்தில் பிறந்தவர் அல்லவா?’ என பாராட்டி மகிழ்ந்தனர் சங்கத்தினர். அதுமட்டுமல்ல அவர்களது அழைப்பை ஏற்றுக் கொண்டு யாழ்ப்பாணம் வந்து இத்திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்து வைப்பதற்கு சம்மதம் வழங்கினார் பிரதமர்.இது அன்று பாரிய சாதனையாக பார்க்கப்பட்டது.அந்த சமூகத்தின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி அது எனலாம்.
மீண்டும் பனம்பொருள் அபிவிருத்திச்சபைக்கு வருவோம்.
சபையின் முதல் தலைவரின் மறைவினத்தொடர்ந்து சபையை நடத்துவதற்கு திறன்வாய்ந்த தலைவர்கள் இல்லை என்றோர் நிலை இருந்தது.
பனை அபிவிருத்திச் சபைக்கு தகுதியான ஒரு தலைவரை நியமிக்க வேண்டும் என்ற குரல் எல்லா மட்டங்களிலும் ஒலித்தது. முண்டியடித்துக் கொண்டு பல அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் தமக்கு நியமனம் கேட்டு முட்டி மோதினர். இதன் தொடர்ச்சியாக பிரதமரின் காரியாலயத்தில் ஒரு அவசரக் கூட்டம் நடைபெற்றது .அடுத்த நாள் பத்திரிகைகளில் வந்த செய்தி தலைப்பை அப்படியே தருகிறேன்.
“பிரபல சமூக சேவையாளரும் தெங்கு பனம் பொருள் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் செயலாளரும் கச்சேரி திட்டமிடல் அதிகாரியுமான திரு. கணபதி நடராஜா இலங்கை பனை அபிவிருத்தி சபையின் தலைவராக அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார்.”
தகுதியான ஒருவர் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டார் என்று அனைவரும் குறிப்பிட்டனர்.
இதை விசேடமாக இங்கே நான் குறிப்பிட்டதன் காரணம் அவர் எனது தந்தை என்கிற பெருமிதமும் இலங்கை வரலாற்றில் ஒரு சபையின் தலைவர் தொடர்ந்து 12 ஆண்டுகள் பதவியிலிருந்தார் என்பதும் “அவர் தலைவராக இருந்த காலம் பனம்பொருள் அபிவிருத்திச்சபையின் பொற்காலம்” என்றும் இன்றும் அந்த சமூக மக்கள் நன்றியோடு
அப்பா குறித்து சிலாகித்து என்னோடு உரையாடு வதும் என் வரம்.
திரு. க நடராசா பதவியேற்ற நாளில் இருந்து பனம்பொருள் அபிவிருத்தி சபையின் பணிகள் மிகவும் வேகம் பெற்றன. புதிய புதிய அபிவிருத்தித் திட்டங்கள் உருவாகின.
தெங்கு பனம் பொருள் கூட்டுறவு சங்கங்களும் பனம் பொருள் அபிவிருத்திச் சபையும் இணைந்து ஒரே நேர்கோட்டில் பயணித்தன.
தொழிலாளிகள் உற்சாக மிகுதியில் திளைத்த காலமது.
அக்காலத்தில் திக்கம் வடிசாலை கணபதி நடரசாவின் மிகப் பெரிய சாதனையாக எழுந்து நின்றது.
1986இல் பனை அபி விருத்தி சபையின் மூலம் திக்கம் என்னும் ஊரில் மூன்று பரப்பு நிலத்தை விலைக்கு வாங்கி உற்பத்தி நிலையம் என்ற பெயரில் ஒரு கட்டிடத்தை கட்டி னார். இதே காலத்தில் குறிப்பாக 1986 இல் யாழ் கச்சேரி திட்டமிடல் பிரிவின் உதவியுடன் திக்கம் சாராய வடிசாலை அமைக்கும் பணி துணிகரமாக ஆரம்பிக்கப்பட்டது. பனை அபிவிருத்திச் சபையும் யாழ் திட்டமிடல் இலாகவும் சமாசமும் பல்வேறு வகையில் ஒன்று இணைந்து ஒத்துழைத்தார்கள்.
பாரிய வடிசாலை தொகுப்பை பலலட்சம் செலவில் கட்டி முடித்தார்கள். உற்பத்தி நிலையம் அமைந்த காணியுடன் இணைந்து அரசநிலத்தை அவர்கள் அனுமதியோடு சுவீகரித்துக் கொண்டனர். இத்திட்டம் முடிவடையும்போது வடிசாலையின் பெறுமதி 30 மில்லியன் ரூபாவாக இருந்தது.
தற்போது இந்த வடிசாலை இயங்கவில்லை என்றும் தவறான மனிதர்களின் பொறுப்பற்ற செயல்களினால் தொழிலாளர்களின் அந்தச் சொத்து தனியார் நிறுவனம் ஒன்று விற்கப்பட்டதாகவும் அதற்கெதிராக பனைத்தொழில் வல்லுனர்கள் பல்வேறு வழிகளில்போராடி புதிய அரசின் ஆதரவோடு
தமது சொத்தை மீட்டுவிடும் நிலையை எட்டியுள்ளதாக அறிந்து மகிழ்ச்சிகொள்கிறது மனம்.
வடக்கு மாகாணத்தின் மிகப்பெரிய வளம் பனை. இது தமிழனின் தனி அடையாளம் என்று பலரும் வாயால் கொண்டாடுகிறார்கள். ஆனாலும்
அதன் பயனறிந்து அதனை தமது உயிர்மூச்சாக நினைத்து காத்துவரும் காவல் தெய்வங்கள் பனைத்தொழிலாளர்கள். இவர்களை சாதிய பாகுபாட்டுக்குள் திணித்து இழிவுபடுத்தி ஒடுக்கி வைத்திருந்த சாதீயதிமிர்பிடித்த அந்த அதிகாரவர்க்கத்திடமிருந்து விடுதலை பெற்று இன்று சுதந்திர மனிதர்களாக கூட்டுறவு வாழ்வினை மேற்கொண்டு வருகிறார்கள்.
முன்னேறி வரும் இந்த நவீன உலகத்தில் பனைத்தொழிலாளர்களின் வாழ்விலும் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டுவர வேண்டியிருக்கிறது. அதற்கு அவர்களுக்கு வரமாகக் கிடைத்தது பனைவளம். அருகி வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கையை பெருக்க பனைவளத்தின் பயன்களை விஞ்ஞானபூர்வமாக உயர்த்த வேண்டியுமுள்ளது.
இதை ஒரு கீழ்நிலைச்சமூகம் சார்ந்த தொழிலாக கருதாமல் எவரும் ஓர் அறுவடை போன்று இத்தொழிலை செய்ய முன்வரவேண்டும். அப்போதுதான் இதன் பெறுமதியை மக்கள் உணரத் தொடங்குவார்கள்
இது ஒட்டு மொத்த இலங்கை தேசத்தின் பொருளாதார வளமும் கூட.
நாம் நினைப்பது நிறைவேற இன்னும் நிறையத்தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.
பனைத்தொழிலாளர்களின் பயணங்கள் நிச்சயம் தொடரும்.
இத்தோடு எங்கள் தொடர் நிறைவு.
கற்பகன்






