மகிந்த ராஜபக்ஸ, அவரது மனைவி இருவரும் ஒரே நாளில் அடுத்தடுத்து மருத்துவமனையில் அனுமதி

இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மனைவியான
ஷிரந்தி ராஜபக்ஸ, கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் தலைமையகம் தெரிவித்துள்ளது.

 

சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான சேனக பல்லெதென்ன இது தொடர்பில்  பேசுகையில், விசேட மருத்துவர் ஒருவரின் பரிந்துரையின் பேரில் ஷிரந்தி ராஜபக்ஸ இன்று (அக்டோபர் 12) கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்
லப்பட்டதாகத் தெரிவித்தார்.
“சிறைச்சாலை மருத்துவமனையின் விசேட மருத்துவர் ஒருவரின் பரிந்துரையின் பேரில் ஷிரந்தி ராஜபக்ஸ இன்று கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த இதய நோய் நிபுணர் ஒருவர், அவரை கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்குமாறு பரிந்துரைத்தார். அதற்கிணங்க, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்,” என்று சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
இதே வேளை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி இன்று காலை (அக்டோபர் 12) தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவருக்குப் பல மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவரது ஊடகப் பேச்சாளரான சட்டத்தரணி மனோஜ் கமகே ஊடகங்களிடம் தெரிவித்தார்.
“முன்னாள் ஜனாதிபதி ஆபத்தான நிலையில் இருப்பதாகப் பரவும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை. அவர் அத்தகைய ஆபத்தான நிலையில் இல்லை. அவரது வய
தைக் கருத்தில் கொண்டு, மருத்துவப் பரிசோதனைகளுக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவரது உடல்நிலையைப் பரிசோதித்துத் தேவையான முடிவுகளை எடுப்பார்கள். அவர் ஆபத்தான நிலையில் இருக்கிறார், மனதளவில் உடைந்து போயிருக்கிறார் என்பன போன்ற செய்திகள் பொய்யானவை. மனதளவில் உடைந்து போகக்கூடியவர் அல்ல அவர். அதுதான் இந்த அரசாங்கத்திற்குத் தேவைப்படும் ஒரு பண்பு. எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் மஹிந்த ராஜபக்ஸ. இன்று காலையிலும் நான் அவருடன் பேசினேன். இந்த செய்திகள் அனைத்தும் பொய்யானவை,” என்று சட்டத்தரணி மனோஜ் கமகே கூறினார்.

 

ஷிரந்தி ராஜபக்ஸ ஏன் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்?
‘சிறிலியா சவிய’ அறக்கட்டளைக்குச் சொந்தமான வங்கிக் கணக்கு ஒன்றில் தேசிய சேமிப்பு வங்கி 100 லட்ச ரூபாயை வரவு வைத்தது தொடர்பான ஊழல், ஊழலுக்கு உடந்தையாக இருத்தல் மற்றும் குற்றவியல் ரீதியாக நிதியைத் தவறாகப் பயன்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் ஷிரந்தி ராஜபக்ஸ கைது செய்யப்பட்டார். லஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு ஷிரந்தி ராஜபக்ஸஷ மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் அப்போதைய தலைவர் பிரதீப் காரியவசம் ஆகியோரை அக்டோபர் 5-ஆம் தேதி கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தியது.
ஷிரந்தி ராஜபக்ஸவை அக்டோபர் 13-ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது; அதேவேளையில், தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவர் பிரதீப் காரியவசம் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு நாளை (அக்டோபர் 13) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Share this article

More News