ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) திறக்குமாறு இந்தியா வலியுறுத்து!

மத்திய கிழக்கில் போர் தொடங்கியதிலிருந்து ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் திறக்குமாறு இந்தியா வலியுறுத்தியுள்ளது.

இந்த மோதல் வலயத்தில் தனது குடிமக்களை இழந்த ஒரே நாடு இந்தியா தான் என்பதையும் அந்நாட்டு அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

மத்திய கிழக்கு பிராந்திய நிலைமை குறித்து பிரித்தானியா ஏற்பாடு செய்திருந்த பன்னாட்டு ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியா இதனைத் தெரிவித்துள்ளது.

சர்வதேச கடல் வழித்தடங்களில் பாதுகாப்பான மற்றும் தடையற்ற போக்குவரத்தை உறுதிப்படுத்துவதன் முக்கியத்துவத்தை இந்தியா இதன்போது வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், 60க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்ற இந்த மெய்நிகர் கூட்டத்தில் இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி,

“இந்த நெருக்கடி இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வளைகுடா பகுதியில் வணிகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் மாலுமிகளை இழந்த ஒரே நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய பதற்றத்தைத் தணிக்க இராஜதந்திரம் மற்றும் பேச்சுவார்த்தை மட்டுமே ஒரே வழி.” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கப்பல் போக்குவரத்து தலைமை இயக்குநரகத்தின் (DGS) தரவுகளின்படி, ஹோர்முஸ் நீரிணையில் சிக்கிக்கொண்ட வெளிநாட்டு கொடியுடன் கூடிய கப்பல்களில் பணியாற்றிய மூன்று இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டிருப்பதால் உலகளவில் மசகு எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

உலகின் மிகப்பெரிய எண்ணெய் இறக்குமதியாளர்களில் ஒன்றான இந்தியா, தனது பொருளாதார நலன்களைப் பாதுகாக்க இப்பகுதியில் அமைதி திரும்புவது அவசியம் என மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, வளைகுடா நாடுகளில் சுமார் 10 மில்லியன் இந்தியர்கள் வசிக்கின்றனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், இந்தியத் தூதரகங்கள் அவர்களுடன் தொடர்ச்சியான தொடர்பில் இருப்பதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுவரை இந்த மோதல்களில் 8 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர், ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கிடையில், ஈரானில் தங்கியிருந்த 204 இந்தியர்கள் அஜர்பைஜான் தரை எல்லை வழியாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். வரும் நாட்களில் மேலும் பலர் நாடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this article

More News