இலங்கையில் மருந்து விநியோகச் சங்கிலியில் அதிகரித்து வரும் அழுத்தம் காரணமாக, அத்தியாவசிய மற்றும் உயிர்காக்கும் மருந்துகளைத் தடையின்றி அணுகுவதை உறுதி செய்யும் நாட்டின் திறன் பாதிக்கப்படும் என்று இலங்கை மருந்துத் தொழில்துறை சம்மேளனம் (SLCPI) எச்சரித்துள்ளது.
தற்போதைய நெருக்கடியைத் தடுப்பதற்கு உடனடி மற்றும் நடைமுறைச் சாத்தியமான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், தனியார் மற்றும் பொது சுகாதாரத் துறைகளில் மருந்துப் பற்றாக்குறை தீவிரமடையும் என்றும், இது நோயாளிகள், மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களைச் சொல்லொணாத் துயரத்திற்கு உள்ளாக்கும் என்றும் அந்தச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பில் அந்த சம்மேளனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
உலகளாவிய விநியோகச் சங்கிலி செலவுகள், எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள 38 சதவீத உயர்வு, 40 சதவீதத்திற்கும் அதிகமான சரக்குக் கட்டண அதிகரிப்பு மற்றும் மருந்து மூலப்பொருட்களின் விலையில் ஏற்பட்டுள்ள 70 சதவீத உயர்வு போன்றவை மருந்துத் துறையை நிலைகுலையச் செய்துள்ளன. அத்துடன் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்திருப்பதுடன், இறக்குமதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் ஏற்படும் தாமதங்கள் மற்றும் விலை மீளாய்வு செயன்முறைகளில் உள்ள இழுபறிகள் மருந்து விநியோகத்தை மேலும் சீர்குலைத்துள்ளன.
மருந்துகள் சாதாரண தயாரிப்புகள் அல்ல, அவை அவசர சிகிச்சை மற்றும் நாள்பட்ட நோய் மேலாண்மைக்கு இன்றியமையாதவை என வலியுறுத்தியுள்ள வணிகச் சபை, தற்போதைய சூழலில் சிறிய தாமதங்கள் கூட பாரிய பற்றாக்குறையாக மாறும் அபாயம் உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
முறையான விநியோகம் பாதிக்கப்படும் போது, தரமற்ற அல்லது சட்டவிரோத மருந்துகள் சந்தைக்குள் நுழைந்து நோயாளிகளின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே, இறக்குமதி உரிமச் செயலாக்கத்தில் உள்ள தாமதங்களை நீக்கி, அதிகரித்துள்ள போக்குவரத்து மற்றும் உற்பத்திச் செலவுகளைக் கருத்திற்கொண்டு மருந்து விநியோகச் சங்கிலியை ஸ்திரப்படுத்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ளுடுஊPஐ வலியுறுத்தியுள்ளது.
இப்போதே ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்கத் தவறினால், இது ஒரு தேசிய சுகாதார நெருக்கடியாக மாறும் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள சம்மேளனம், பாதுகாப்பான மற்றும் தரமான மருந்துகள் இலங்கையர்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்யத் தாம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.







