
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அநுரகுமார திசாநாயக்கவை ஜனாதிபதியாகவும், அவரது கட்சியான தேசிய மக்கள் சக்தி (NPP)யை மூன்றில் இரண்டுக்கும் மேற்பட்ட பெரும்பான்மையுடன் ஆட்சிக் கட்டிலில் அமர வைத்திருந்தீர்கள். அவர்கள் வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களுக்கு பல்வேறுபட்ட உறுதிமொழிகளை அள்ளி வழங்கியிருந்தார்கள்.
அவற்றில்,
a. பதவியேற்று ஒரு வருடத்திற்குள் மாகாணசபைத் தேர்தல் நடத்துதல்.
b. புதிய அரசியல் சாசனம் உருவாக்குதல்.
c. முப்படையினரால் சட்டவிரோதமாக எடுக்கப்பட்ட காணிகளை விடுவித்தல்.
d. அரசியல் கைதிகளை விடுதலை செய்தல்.
e. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இல்லாதொழித்தல்.
இவ்வாறு அவர்களது பட்டியல் நீண்டு செல்கின்றது. ஆனால் வருகின்ற செப்டம்பர் 12ஆம் திகதியுடன் இரண்டு வருடங்களைப் பூர்த்தி செய்யும் ஜனாதிபதி அவர்கள், இதுவரை இதில் எந்த உறுதிமொழியையும் நிறைவேற்றவில்லை.
அண்மையில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும், வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய ஆறு கட்சிகள் இணைந்து, தமிழ் பேசும் மக்களின் பொதுப் பிரச்சினைகளைக் கையாள்வதற்காக புதிய அரசியல் தளம் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
மேற்கண்ட அணிகள் தமக்குள் இருக்கக்கூடிய மூன்று முக்கியப் பிரச்சினைகளை இனங்கண்டு, அவற்றைத் தீர்க்கலாம் என ஆலோசித்தனர்.
a. மாகாணசபைத் தேர்தல்கள் கடந்த பல வருடங்களாக நடத்தப்படவில்லை. எனவே, இந்த மாகாணசபைத் தேர்தல்கள் உடனடியாக நடத்தப்பட வேண்டும்.
b. வடக்கிலும் கிழக்கிலும் முப்படையினரால் அபகரிக்கப்பட்ட மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும். மலையகத்தில் அம்மக்களுக்கு உறுதியளிக்கப்பட்ட காணிகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
c. புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்பட்டு, தமிழ் பேசும் மக்களுக்கு அதிகபட்ச அதிகாரப் பகிர்வு என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
மேற்கண்ட மூன்று விடயங்களும் பொதுவாக இந்த ஆறு கட்சிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, இவற்றைத் தீர்க்கும் முகமாக முதலில் ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசுவதாகவும், அதைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் தூதரகங்களைச் சந்தித்து எமது இம்மூன்று கோரிக்கைகளின் அவசியத்தை விளக்குவதாகவும் தீர்மானிக்கப்பட்டது.
இதன் பிரகாரம், ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி (03.08.2026) காலை ஜனாதிபதி அவர்களையும், மாலை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களையும், 4ஆம் திகதி தூதரகங்கள் சந்திப்பின் நிமித்தம் இந்தியத் தூதுவர் திரு. சந்தோஷ் ஜா அவர்களையும் சந்தித்துப் பேசினோம்.
இதில் ஜனாதிபதியவர்கள் உடனடியாகத் தேர்தலை நடத்துவோம் என்றோ அல்லது காணிகளை குறிப்பிட்ட கால எல்லைக்குள் விடுவிப்போம் என்றோ எந்த உத்தரவாதத்தையும் தர மறுத்துவிட்டார். மாறாக, மிக மிக நழுவல் போக்குடன் நடந்து கொண்டதோடு மட்டுமல்லாமல், அவர் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் முடிகின்ற நிலையில்கூட, அவர் கொடுத்த உறுதிமொழிகளில் ஒரு சிலவற்றையாவது தீர்த்து வைப்பார் என்று எதிர்பார்த்த பொழுதிலும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் எதிர்த்தரப்பில் இருப்பதால், தேர்தல் நடத்த வேண்டும் என்றும், காணி, பொலிஸ் அதிகாரம் உட்பட 13ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதற்கு தான் ஆதரவாக இருப்பதாகவும் கூறினார். அவர் ஆளும் தரப்பாக மாறினால் என்ன செய்வார் என்பது இப்பொழுது கூற முடியாது.
மாகாணசபை முறைமை இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்படவும், அதிகாரங்கள் பகிரப்படவும் இந்திய–இலங்கை ஒப்பந்தமே மூல காரணமாகும்.
இந்த நிலையில், மாகாணசபைத் தேர்தலை நடத்தும்படி இலங்கையை வலியுறுத்த இந்தியாவிற்கு ஓர் தார்மீகக் கடமை இருக்கின்றது என்ற அடிப்படையில், இது தொடர்பாக இலங்கை அரசுக்கு இந்தியா இயன்ற வரையான அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும் எனக் கோரினோம்.
5ஆம் திகதி (05.08.2026) இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் திரு. விக்ரம் மிஸ்ரி அவர்கள் ஒரு நாள் பயணமாக இலங்கைக்கு விஜயம் செய்து, ஜனாதிபதி, வெளியுறவு அமைச்சர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்க்கட்சிகள் போன்ற பல தரப்பினரையும் சந்தித்துப் பேசினார்.
இவருக்கும் எமது கோரிக்கை தொடர்பாகத் தெளிவுபடுத்தப்பட்டது. இதன் காரணமாக, “இலங்கை அரசு மிக விரைவில் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதை இந்தியா விரும்புகின்றது” என்ற செய்தியை இந்திய வெளியுறவுச் செயலாளர் ஜனாதிபதி அவர்களுக்கு வலியுறுத்திக் கூறியதாகவும், இந்தியத் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு இது கசப்பான மருந்தாக இருந்தாலும், இச்செய்தி சொல்லப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை இந்தியா எடுத்திருப்பதானது, இந்தியாவின் அண்மைக்கால அண்டை நாடுகளின் வெளிவிவகாரக் கொள்கைகளில் மாற்றங்கள் ஏற்பட்டு வருவதையே காட்டுகின்றது.
அன்பிற்கினிய தமிழ் மக்களே!
இந்திய–இலங்கை ஒப்பந்தம் 1987இல் ஏற்படுத்தப்பட்ட பொழுது, அதனைத் தற்காலிகத் தீர்வாக ஏற்றுக்கொண்டு, இந்தியாவின் துணையுடன் முன்னேறிச் செல்வது என்ற தீர்மானத்தையே அன்றைய தினம் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி எடுத்திருந்தது.
இடைக்கால அரசு ஒன்றை அமைக்கும்படி விடுதலைப்புலிகளை இந்தியாவும் ஜே.ஆர். ஜெயவர்தனாவும் அழைத்த போது, நாம் அதற்கு ஆதரவாக இருந்தோம். ஆனால் அன்று அது நிறைவேறவில்லை. மாறாக, இந்திய அமைதிப் படையுடன் (IPKF) ஓர் யுத்தம் ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், இந்திய–இலங்கை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த EPRLF அழைக்கப்பட்டது. இந்த நிலையில், இரண்டு முன்நிபந்தனைகளின் அடிப்படையில் அதை நாம் ஏற்றுக்கொண்டோம்:
1. வடக்கு மாகாணமும் கிழக்கு மாகாணமும் இணைக்கப்பட்டு ஒரே அரசியல் நிர்வாக அலகாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
2. வடக்கு–கிழக்கு மாகாணத்தின் தலைநகராக திருகோணமலை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
இவை ஏற்றுக்கொள்ளப்பட்டதன் அடிப்படையில், வடக்கு–கிழக்கு மாகாணத்திற்கான முதலாவது தேர்தல் நடத்தப்பட்டு, EPRLF ஆட்சி அதிகாரத்திற்கு வந்தது.
அது மாத்திரமல்லாது, மாகாண அரசின் செயலகம், அமைச்சுகளுக்கான கட்டடங்கள் எனப் பல விடயங்கள் மிக வேகமாக நடைமுறைப்படுத்தப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகப் பட்டதாரிகள் தெரிவு செய்யப்பட்டு, மூன்று மாதப் பயிற்சிக்குப் பின்னர் திட்டமிடல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர்.
‘குடிமக்கள் தொண்டர் படை (Citizen Volunteer Force)’ என்ற பெயரில் பொலிஸ் படை உருவாக்கப்பட்டது. அதற்கு இந்தியாவின் CRPF என அழைக்கப்படும் பொலிஸ் பிரிவு பயிற்சிகளை வழங்கியது.
ஆனால் இவ்வாறு முன்னேற்றங்கள் இருந்தாலும், இந்திய இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலும், இந்திய இராணுவத்தை வெளியேற்ற பிரேமதாச எடுத்துக்கொண்ட நரித்தந்திரமான முயற்சிகளும் நிலைமையை மாற்றின.
வடக்கு–கிழக்கு மாகாணசபைக்கு பாதுகாப்பு அளிக்க மறுத்தது மாத்திரமல்லாமல், அதற்கு எதிராகச் செயற்பட்டோருக்கு ஆயுதங்களையும் நிதியையும் அள்ளி வழங்கினார்.
இந்தியாவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து இந்திய அமைதிகாக்கும் படையும் வெளியேறியது. மீண்டும் 1990ஆம் ஆண்டில் இருந்து இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தம் ஆரம்பமாகியது.
2009ஆம் ஆண்டு வரை ஏறத்தாழ 19 ஆண்டுகள் அந்த யுத்தம் தொடர்ந்தது. 2009இல் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட, யுத்தத்தில் வென்றதாக இலங்கை இராணுவம் வீரமுழக்கம் இட்டது. பால் சோறு பொங்கிச் சாப்பிட்டு மகிழ்ந்தார்கள்.
யுத்தத்திற்குப் பின்னர் தமிழ் மக்களை ஏமாற்றும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. மகிந்த ராஜபக்ஷ அரசுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 17 சுற்றுப் பேச்சுகளை நடத்தியது. ஆனால் ஒரு அங்குலமும் நகரவில்லை.
பின்னர் ரணில்–மைத்திரி ஆட்சியில் புதிய அரசியல் சாசனம் உருவாக்கும் முயற்சி நடைபெற்றாலும், அதுவும் ஆளும் தரப்பால் கிடப்பில் போடப்பட்டது.
அதன்பின்னர் பல்வேறு உறுதிமொழிகளைக் கொடுத்து அநுரகுமார திஸாநாயக்க ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தாலும், அவரும் மாகாணசபைத் தேர்தலை நடத்தாமல், தமிழருக்கு அதிகாரப் பகிர்வு தேவையில்லை என்ற மனநிலையிலேயே செயற்பட்டு வருகின்றார்.
இந்த நிலையில்தான் கடந்த ஒரு வருடமாக மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும், 13ஆவது அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்ட அனைத்து அதிகாரங்களும் மாகாணங்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும் எனவும் EPRLF மாவட்டம் தோறும் கருத்தரங்குகளை ஆரம்பித்தது.
பின்னர் ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணியையும் இணைத்து, பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், புலமைசார் அறிஞர்கள், சிவில் அமைப்புகள், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் எனப் பலரின் ஒத்துழைப்புடன் மாகாணசபைத் தேர்தலின் அவசியத்தைப் பேசுபொருளாக்கினோம்.
தமிழ் அரசியல் பரப்பில் ஒரு சாரார் இதை எதிர்த்தாலும், இன்று சட்டபூர்வமாக தமிழரின் கைவசம் இருக்கும் ஒரு தீர்வாக மாகாணசபைகளே இருக்கின்றன.
1988இல் EPRLF இந்த மாகாணசபையை உருவாக்க விட்டால், அதுகூட மிஞ்சி இருக்குமா என்பது சந்தேகமே.
இன்று தமிழ், முஸ்லிம், மலையகக் கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து இதனை ஒருபடி மேலே கொண்டு சென்று, ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர், இந்தியத் தூதுவர், இந்திய வெளியுறவுச் செயலாளர் எனப் பலரைச் சந்தித்து…
பலரைச் சந்தித்து அதன் அவசியத்தை விளக்கியது மாத்திரமல்லாமல், மாகாணசபைத் தேர்தல்களை விரைவில் நடத்தும்படி இந்திய அரசு இலங்கைக்கு எடுத்துச் சொல்லும் அளவிற்கு இது வளர்ச்சி அடைந்துள்ளது.
எனவே, அன்பிற்கினிய தமிழ் மக்களே!
எமது கைகளில் அதிகாரங்கள் இருந்தாலே நாம் எம்மை வளப்படுத்திக் கொள்ள முடியும். அபிவிருத்திகளை முன்னெடுத்துச் செல்ல முடியும்.
எனவே, மாகாணசபைத் தேர்தலின் அவசியத்தைப் புரிந்து கொண்டு, எல்லோரும் இணைந்து அதற்கு அழுத்தங்களை கொடுப்போம்.
மீண்டும் மறுமடலில் சந்திக்கும் வரை,
அன்புடன்,
சுரேஷ் பிரேமச்சந்திரன்






