
யதீந்திரா
இந்தியா மீண்டும் ஒரு முறை, மாகாண சபைத் தேர்தல் தொடர்பிலும், அரசியலமைப்பின் பதின்மூன்றாவது திருத்தச்சட்டம் தொடர்பிலும் வலியுறுத்தியிருக்கின்றது. இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய வெளியுறவுச் செயலர் விக்கிரம் மிஸ்ரி, ஜனாதிபதி அனுரவிடம் இதனை வலியுறுத்தியிருக்கின்றார். இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. இது இந்தியாவின் அறிவிக்கப்பட்ட நிலைப்பாடு. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அந்த நிலைப்பாட்டை அறிவிப்பது ஒரு ராஜதந்திர அணுகுமுறை. ஆனால் அதற்கு சமாந்தரமாக தமிழர் பக்கத்தில் எதுவும் நடக்காது விட்டால், இந்தியாவின் ராஜதந்திர அழுத்தங்களால் எதுவும் நடந்துவிடப் போவதில்லை. வெறும் உதட்டளவு விடயமாகவே தமிழர் விவகாரம் சுருங்கிப் போகும். இப்போதே அவ்வாறான நிலைமைதான் காணப்படுகின்றது.
இங்கு ஒரு விடயத்தை சுட்டிக்காட்ட வேண்டும். இந்திய வெளியுறவுச் செயலர் தமிழ் கட்சிகளுடனும் பேசியிருந்தார். இதன் போது, தமிழ் கட்சிகளும் வழமைபோல் பேசின, அவரும் வழமைபோல் பேசினார். ஆனால் இந்த சந்திப்புக்கு முன்னர், தமிழ் கட்சிகள் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஸ் ஜாவை சந்தித்திருந்தனர். இதன் போது, அவர் ஒரு விடயத்தை கூறியிருக்கின்றார். அதாவது, தனது வடக்கு விஜயத்தின் போது, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மத்தியில் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் பேசினர் ஆனால் கட்சிகள் அல்லாதவர்கள் என்னை சந்தித்த போது, அவர்கள் மாகாண சபை பற்றி பேசவில்லையே – அதில் ஒருவர் மட்டும்தான் பேசியதைக் காண முடிந்தது. பெரும்பாலானவர்கள் இந்த விடயத்தில் கரிசனையை காண்பிக்கவில்லையே. எல்லோரும் ஒன்றாக நிற்காது விட்டால், எவ்வாறு இந்த விடயத்தை கையாளுவது? என்று கேட்டிருக்கின்றார்.
சிவில் சமூக அமைப்புக்களாக தங்களை அடையாளப்படுத்துவர்களில் பெரும்பாலானவர்கள் மேற்குலக அரசுசாரா நிறுவனங்களின் உதவிகளை பெறுபவர்கள் – அவர்களிடம் மேற்குலக அழுத்தங்கள் தொடர்பான கற்பனை உண்டு. அவர்களில் பெரும்பாலானவர்கள், உலக அரசியல் எவ்வாறு மாறியிருக்கின்றது என்பதை அறியாதவர்கள். அதற்கான முயற்சியும் எடுக்காதவர்கள். இதில், சுவிஸ் தூதரக நிதியாதரவில் சமஸ்டி பற்றி போதனைகள் செய்வோரும் உண்டு. இவர்கள் அரசியலமைப்பின் பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்தை தீண்டத் தகாத ஒன்றாகவே சொல்லி வருகின்றனர். அதற்கு எதிராக பேசுபவர்களை மறைமுகமாக ஆதரிப்பதும், ஊக்குவிப்பதும் இவர்களுடைய சிவில் சமூகப் பணிகளில் முதன்மையானது.
தமிழ் சிவில் சமூக அமையம் என்னும் யாழ் மைய அமைப்பு இவ்வாறான பிரச்சாரங்களை கடந்த காலங்களில் செய்திருந்தது.
இது போதாது என்று சில புலம்பெயர் தனிநபர்களின் கதைகளை விழுங்கிக் கொண்டு, பிரிந்து செல்வதற்கான சர்வஜன வாக்கெடுப்பு தொடர்பில் பேசுவோரும் உண்டு – இதில் துறவுநிலை நபர்களும் உண்டு. இவ்வாறானவர்கள் அனைவருமே தங்களை தமிழ் சிவில் சமூகமாகவே அடையாளப்படுத்திக் கொள்கின்றனர் ஆனால் தாங்கள் என்ன கூறுகின்றோம், அதனை அடைவதற்கு என்ன வழிமுறையுண்டு – அதற்காக தங்களால் போகக் கூடிய தூரம் என்ன – இது பற்றி இவர்கள் பேசியதில்லை. ஒரு அறிக்கையை வெளியிடுவது, யாழ் ஊடக அமையத்தில் ஒலிவாங்கிகளுக்கு முன்னால் அமர்வது – ஆகக் கூடினால், ஒரு சிலருடன் வீதிகளில் நின்று சத்தமிடுவது. ஆனால் இவற்றை அரசாங்கமோ ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. அரசாங்கத்தை பொறுத்தவரையில் இவ்வாறான சிறிய நடவடிக்கைகளை சட்டம் ஒழுங்கு என்னுமடிப்படைலேயே கையாளுகின்றது. ஒரு ராஜதந்திரி முன்னர் ஒரு முறை என்னிடம் கேட்டிருக்கின்றார் – உங்களுடைய ஆட்கள் போராட்டம், போராட்டம் என்று அடிக்கடி உச்சரிக்கின்றனர் ஆனால் ஒன்றையும் காணவில்லையே – அவர்கள் கூறும் போராட்டம் என்ன?
இதற்கு மேல், இவ்வாறு தங்களை சிவில் சமூகப் பிரமுகர்களாக அடையாளப்படுத்திக் கொள்பவர்களோ, இன்னொன்றையும் செய்கின்றனர். அதாவது, தங்களின் போலியான பிரச்சாரங்களை கேள்விக்குள்ளாக்கக் கூடிய ஆளுமைமிக்கவர்களை தூதரக அதிகாரரிகள் சந்திக்காத வகையிலும் பார்த்துக் கொள்கின்றனர். தங்களுடைய தனிப்பட்ட தொடர்புகளை பயன்படுத்தி, இவர்கள் மட்டும்தான் சிவில் சமூகம் என்னும் தவறான பார்வையை தூதரகங்களுக்கு வழங்குகின்றனர். குறிப்பாக சுவிஸ் தூதரகத்துடன் தொடர்புடைய சிவில் சமூக நபர்கள், தங்களைத் தாண்டிப் போய்விடாத வகையிலும் பார்த்துக் கொள்கின்றனர். உள்ளுர் மட்டத்தில் விடயங்களை கையாளுபவர்களை வார்த்தைகளால் வசியப்படுத்தி, அவர்கள் மற்றவர்களை நோக்கிப் போகாதவாறு பார்த்துக் கொள்கின்றனர். இவ்வாறானவர்களும், இவ்வாறானவர்களால் பரிந்துரைக்கப்படுபவர்களும்தான் யாழ்ப்பாணத்தில் சிவில் சமூக அபிப்பிராயங்களை கட்டுப்படுத்துகின்றனர்.
இவர்கள் அனைவருமே அரசியல் தீர்வு விடயத்தில் அரசியலமைப்பின் பதின்மூன்றை தீண்டத்தகாத ஒன்றாக காண்பிப்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். இது இவர்களது புரிதலில் செய்கின்றனரா அல்லது இதற்கு பின்னால் இந்திய வெறுப்பு வாதம் ஒழிந்திருக்கின்றதா?
ஏனெனில் தமிழ் கட்சிகள் ஒன்றுபட வேண்டும், ஒரு குரலில் பேச வேண்டும் என்று புதுடில்லி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. ஒரு காலத்தில் அனைத்து கட்சிகளையும் திம்புவில் ஒன்றாக அமர்த்தியதும் இந்தியாதான். அன்றைய அரசியல் சூழலில் அதனை இந்தியாவால் வெளிப்படையாக முன்னெடுக்க முடிந்தது. அன்றைய பிராந்திய அரசியல் சூழலும் அதற்கு சாதகமாக இருந்தது ஆனால் இன்றைய நிலையில் இந்தியாவினால் அவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாது. ஆனாலும் தமிழ் கட்சிகள், ஒரு குரலில் நிற்க வேண்டியதன் அவசியத்தை இந்தியா வலியுறுத்தி வருகின்றது.
இவ்வாறானதொரு நிலையில்தான், மேற்படி சிவில் சமூகத்தினரின், தவறான வழிகாட்டுதல்களால், சுவிஸ் தூதரகம் அவ்வாறான நகர்வு ஒன்றை முன்னெடுக்க முயற்சித்தது. ஒரு வேளை சுவிஸ் தூதரகம் அதில் ஈடுபட்டிருந்தால் மிகவும் மோசமான அவமானத்தை எதிர்கொண்டிருக்கும் பின்னர், நிலைமையை புரிந்து கொண்டு அவர்களாகவே வெளியேறிவிட்டனர்.
கொழும்பிலுள்ள சட்டத்தரணிகள் சிலரும், தமிழ் கட்சிகளை ஒன்றுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டமை, உங்களுக்கு நினைவிருக்கலாம். அதிலுள்ள ஒருவரை எதேச்சையாக சந்தித்த போது, அந்த முயற்சி பற்றி கேட்டிருந்தேன், அவர் சொன்னார், தமிழ் கட்சிகளை எப்படி ஒற்றுமைப்படுத்த முடியும் – அந்தளவிற்கு நாங்கள் மடையர்களா ஆனால் புதிய அரசியல் யாப்பு என்று ஏதேனும் வந்தால், அப்போது எல்லோருமாக இணைந்து, இதுதான் நாங்கள் கேட்பது என்று கூறுவதற்கு ஒரு ஆவணம் இருந்தால் நல்லதுதானே – அதனைத்தான் செய்ய முயற்சித்தோம் என்றார். தமிழ் கட்சிகளை ஒன்றுபடுத்த வேண்டும் என்னும் அவல ஆசை சுவிஸ் தூதரகத்திற்கு எப்படி வந்தது என்று நான் அடிக்கடி யோசித்துப் பார்ப்பதுண்டு. எப்படிப் பார்த்தாலும் பதில் தட்டுப்படவில்லை. தமிழ் கட்சிகளை ஒன்றுபடுத்துவது என்னும் கதையை கேட்கும் போதெல்லாம், கவிஞர் புதுவை இரத்தினதுரை ஒரு முறை கூறிய விடயம்தான் நினைவுக்கு வருவதுண்டு. மச்சான் எப்படா, தமிழர்கள் ஒன்றுமையாக இருந்திருக்கின்றார்கள். தமிழர் வரலாறு முழுவதுமே சேரன், சோழன் பாண்டியன் என்று அடிபட்டதுதானே நம்முடைய வரலாறு.
இந்தப் பினணியில் யோசித்தால், தமிழர்கள் எப்போது ஒரு குரலில் பேசுவது, எப்போது நிலைமைகளில் மாற்றங்கள் ஏற்படுவது? அப்படியே அதிசயமாக ஒன்றுபட்டாலும் யதார்த்தபூர்வமான விடயங்களில் ஒன்றுபடுவதற்கு மாறாக, விசித்திர உலக வாதங்களில் ஒன்றுமையை காண்பிப்பார்கள். இதுதான் நிலைமை என்றால் தமிழர் அரசியலில் மாற்றங்கள் ஏற்படுமா – நிச்சயமாக அதற்கு வாய்பில்லை. சுருக்கமாகக் கூறுவதனால், இன்றைய அரசியல் நிலைமையை புரிந்து கொண்டு, இன்றைய சூழலில் எது சாத்தியமோ அதனை நோக்கி மக்களை ஓரணிப்படுத்தக் கூடிய, ஒரு அரசியல் தலைமை எழுச்சியுற்றால் மட்டும்தான் தமிழர் அரசியல்வாழ்வில் மாற்றம் சாத்தியப்படும். அதுவரையில் எதுவும் மாறாது..






