யாழ்ப்பாணத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (EPDP) அலுவலகங்களை இலக்குவைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் தொடர்ச்சியாகச் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்தவகையில், யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை கரம்பொன் பகுதியில் அமைந்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அலுவலகத்தில் இன்று (20) விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கொழும்பிலிருந்து வருகை தந்த விசேட குற்றப் புலனாய்வுக் குழுவினரே இந்தச் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நீதிமன்றத்தின் தேடுதல் அனுமதியைப் பெற்று, அதற்கமைய இந்தச் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், எந்த முறைப்பாடு அல்லது விசாரணையின் அடிப்படையில் இந்தச் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
இதேவேளை, யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்திலும் அதன் வளாகத்திலும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நேற்று (19) பல மணிநேரம் தீவிர சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது, டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகம் மற்றும் அதனைச் சூழவுள்ள வளாகம் முழுவதும் அதிகாரிகளால் விரிவான தேடுதல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டது.
பல மணிநேரம் நீடித்த இந்தச் சோதனையின் நிறைவில், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா முன்னிலையில், கட்சியின் அலுவலக நிர்வாகப் பொறுப்பாளரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் பதிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில், நேற்று யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியிலுள்ள அலுவலகத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, இன்று ஊர்காவற்றுறை கரம்பொன் பகுதியிலுள்ள கட்சி அலுவலகத்திலும் சோதனை முன்னெடுக்கப்படுகின்றமை கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்தச் சோதனை நடவடிக்கைகளின் முடிவுகள் மற்றும் அவற்றுக்கான காரணங்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடமிருந்து மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.







