
தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவுக்கு எதிராக கருணா அம்மான் என்கின்ற, தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் கிழக்கு மாகாணத் தளபதி விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் (CID) வழங்கிய வாக்குமூலம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் இருந்த சதித்திட்டம் குறித்த வழக்கு விசாரணைகள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தொடர்பில் கருணா பல திடுக்கிடும் தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனக்கு போலி கடவுச்சீட்டு வழங்கி லண்டனுக்கு அனுப்பிவிட்டு பின்னர் அங்கே தன்னை கைது செய்யச் சதி செய்ததாக சுரேஷ் சலே மீது கருணா குற்றம் சாட்டியுள்ளதுடன், இராணுவப் புலனாய்வு நிதி மோசடிகள் குறித்தும் தகவல்களை வெளியிட்டுள்ளார் .
இதேவேளை மருத்துவமனையில் உள்ள சுரேஷ் சலே விசாரணைகளுக்கு ஒத்துழைக்க மறுப்பதுடன், உணவு உட்கொள்ளாமல் இருப்பதோடு கைப்பேசிக் கடவுச்சொற்களையும் வழங்க மறுப்பதாக CID நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.







