மாகாண கல்வி அதிகாரங்களை பறிக்கும் அனுரவின் ஆட்சியின் சட்டவிரோத திட்டங்கள்…!

“மாற்றத்திற்காக வாக்களியுங்கள்” என்ற தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி.) கோஷத்திற்குள் இனமோதலுக்கு தமிழ் மக்கள் விரும்பும் தீர்வும் உள்ளடங்குகிறது என்ற நம்பிக்கையில் தமிழ் மக்களில் கணிசமானோர் வாக்களித்தனர். தமிழ் மக்கள் போராடிப் பெற்ற மாகாண சபையை நாம் பாதுகாப்போம் என்கிற அநுரகுமாரவின் தேர்தல் பிரச்சாரங்களும், அதற்கு மேலாக தான் ஆட்சிக்கு வந்தே இனமோதல் தீர்வுக்கு மைத்திரிபால சிறிசேன ஆட்சியில் நடைபெற்று முடிவுறாமல் இருந்த செயற்பாட்டை முடிவுறுத்தி புதிய அரசியல் யாப்பினூடாக நிரந்தர தீர்வு தருவேன் என்ற பிரச்சாரங்களும் அநுரவின் “மாற்றம்” என்பது நிரந்தர தீர்வையும் உள்ளடக்கியது என்ற தமிழ் மக்களின் நம்பிக்கைக்கு காரணமாக அமைந்தது.

ஆனால் இந்த நம்பிக்கைகள் கானல் நீராகிக் கொண்டிருப்பதை மட்டுமல்ல அதற்கு மேலாக இருப்பவற்றையும் பறிக்கும் இனவெறிச் செயற்பாடுகளையே வெளிப்படுத்திக் கொண்டு வருகின்றது. கடந்த சில மாதங்களாக கல்வித்துறையில் (பாடசாலைக் கல்வி) அடுத்தடுத்து பல திட்டங்களை அறிவித்து வருகின்றது இந்த ஆட்சி.

“முதலிக் கல்வி மறுசீரமைப்பு புதிய கல்வித்திட்டம், மாணவர் மதிப்பீட்டில் மாற்றம், ஆசிரியர் வாய்மை விருத்தியில் மாற்றம், பாடசாலைகளை மூடுவதில் மூடுமந்திரமான திட்டங்கள் என பலவற்றை உள்ளடக்கியதே கல்வி மறுசீரமைப்பு என வெளிப்படுத்தப்பட்டது. மாற்றம் எதுவாயினும் கல்வி மாகாணத்திற்குப் பகிரப்பட்ட விடயம். 13ம் திருத்தச் சட்டத்தின் பின் தேசியப் பாடசாலை என்ற பெயரால் மத்திய அரசு கையகப்படுத்திய மாகாணத்திற்குரிய பாடசாலைகள் சட்டவிரோதமாகப் பிடுங்கப்பட்டவை. அரசியல் யாப்பினூடாக மாகாணத்திற்குப் பகிரப்பட்ட அதிகாரத்தை ஜனாதிபதி கூட மீற முடியாது.

ஆனால் அரசியல் யாப்பையும் சட்டத்தையும் மீறியே வடக்கில் 24 பாடசாலைகளும் இலங்கை முழுவதுமாக 350க்கு மேற்பட்ட பாடசாலைகளும் மத்திய அரசால் பறிக்கப்பட்டது. மேலும் 650 வரையிலான பாடசாலைகளை (வடக்கில் மட்டும் 50 பாடசாலைகள்) பறித்து 1000 பாடசாலைகளை தேசியப் பாடசாலையாக்க மத்திய அரசு முற்பட்டபோது, பாடசாலைகள் மாகாணத்திற்குரியவை என்றும் அவற்றை மத்திய அரசு கையகப்படுத்த முனைவது அரசியல் யாப்பிற்கும் சட்டத்திற்கும் முரணானது என்றும் எனவே மாகாண அதிகாரங்களைப் பறிக்கும் மத்தியின் இச்சட்ட விரோத செயற்பாடு நிறுத்தப்பட வேண்டும் என்றும் இக்கட்டுரை ஆசிரியராகிய நான் 2022ம் ஆண்டு மே மாதத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தேன். 2023 இல் நிர்வாக ரீதியாக இக்கைப்பற்றல் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டு விட்டது.

ஆனால் நீதிமன்றத்தில் அதுபற்றி அரசு தரப்பு வக்கீல் ஏதும் கூறவில்லை. சில மாதங்களின் முன் 1000 தேசிய பாடசாலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த தற்போது சட்டம் இல்லை என்பதை ஒப்புக்கொண்டு நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர். இது அரசாங்கத்திற்கு ஓர் பாடமாக இருந்திருக்க வேண்டும். நீதியின்பாற்பட்ட அரசியல் யாப்பையும் சட்டங்களையும் மதிக்கின்ற இனவாதமற்ற ஆட்சியாக இருந்தால் இந்த வழக்கின் தன்மையைப் புரிந்து தமது தவறை உணர்ந்து மீண்டும் இத்தகைய தவறு நிகழாமல் மாகாண அதிகாரங்களைப் பாதுகாக்கும் வகையில் சட்டங்களையும் திட்டங்களையும் உருவாக்க வேண்டும். மாறாக, ‘மாகாண சபை முறையைப் பாதுகாப்போம்’, ‘எமது ஆட்சியில் இனவாதத்திற்கு இடமில்லை’, ‘சட்டத்தின்படியே ஆட்சி செய்வோம்’ என தினசரி தேவாரம் போல் பேசி வரும் இவர்கள் அவற்றிற்கெதிரான திட்டங்களை உருவாக்கி செயற்படுத்திக் கொண்டே இப்பொய்களையே கூறி வருவதுதான் மிக அபத்தமானது.””தற்போது,

“முன்பள்ளி தொடர்பான தேசியக் கொள்கையை நடைமுறைப்படுத்துவோம்”
“கல்வி மறுசீரமைப்பைக் கொண்டு வருவோம்”
“மாகாண மற்றும் தேசிய பாடசாலைகளுக்கு 3600 பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்போம்”
என மாகாணத்திற்குரியதான அனைத்து அதிகாரங்களையும் சட்டவிரோதமாக சர்வாதிகாரத்தனமாக தமது கையில் எடுத்துள்ளது ‘மாற்றத்திற்கான ஆட்சி’. முன்பள்ளி விடயத்தைப் பொறுத்தவரை முன்னர் அவை உள்ளூராட்சி சபைகளினாலேயே நடத்தப்பட்டு வந்தன. அதற்கு முன்னர் முன்பள்ளிகள் பாடசாலைகளின் ஓர் அங்கமாக ‘அரிவரி’ என்ற பெயரில் செயற்பட்டு வந்தது. கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பெருமளவு முன்பள்ளிகள் தனியார் மற்றும் ஜனசமூக நிலையங்கள், கோவில் நிர்வாகங்கள் உட்பட பொது அமைப்புகளால் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கான ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகள் மாணவர் தொகையைப் பொறுத்து அவற்றை நடத்துபவர்களால் வழங்கப்பட்டது. எனவே அவற்றின் தரங்களும் பெரும் மாறுபாடுகளைக் கொண்டதாக அமைந்தது. எனவே இவ்வாசிரியர்களுக்கான ஊதியத்தை ஒழுங்குபடுத்தல், முன்பள்ளிகளின் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் ஏனைய வசதிகளை உத்தரவாதப்படுத்தல், ஆசிரியர்களின் குறைந்தபட்ச தகுதியை உத்தரவாதப்படுத்தல் எனப் பல தேவைகள் எழுந்தன. எனவே இவற்றை ஒழுங்குபடுத்தும் பொருட்டு வடக்கு மாகாண சபை தனது கல்வி அமைச்சின் ஓர் அங்கமாக 15 ஆண்டுகளுக்கு முன் முன்பள்ளி பிரிவை ஓர் பணிப்பாளரின் கீழ் செயற்படுத்தத் தொடங்கியது.”
“2015ம் ஆண்டு முன்பள்ளி கல்வி நியதிச்சட்டம் ஒன்றை உருவாக்கி (இராணுவம் நடத்தும் முன்பள்ளி உள்ளூராட்சி நடத்தும் முன்பள்ளி தவிர) அனைத்தையும் பதிவு செய்வதும் அதற்குரிய ஆசிரியர்களுக்கான குறைந்தபட்ச தகுதியைப் பெறுவதற்கு கால அவகாசமும் வழங்கி அத்தகுதியைப் பெறுவதற்கான ஏற்பாடுகளை வழங்கியும் செயற்படுத்தி வருவதுடன் 2014ம் ஆண்டிலிருந்து மாகாண சபை மாதம் 6 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கி வருகின்றது. இவை அதிகரிக்கப்பட வேண்டும் என்பது ஒருபுறமிருக்க மாகாண சபை ஏற்கனவே சட்டம் உருவாக்கி முன்பள்ளி கல்வியை மாகாண மட்டத்தில் ஒழுங்குபடுத்தி செயற்பட்டு வருகின்றது என்பதே யதார்த்தம்.

கிழக்கு மாகாண சபையும் தனது கல்வி அமைச்சின் கீழ் இதற்கான ஓர் பிரிவை உருவாக்கி செயற்படுத்தி வருகின்றது. தென் மாகாணங்களிலேயே இது ஓர் கையாளப்பட வேண்டிய பிரச்சனையாக உள்ளதெனில் தமது திட்டங்களை அங்கே மட்டும் செயற்படுத்தலாம். மாறாக வடக்கு – கிழக்கில் சட்டரீதியாக செயற்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் இவ்விடயத்திற்கு முரணாக அரசாங்கம் செயற்படுவது சட்டவிரோதம் மட்டுமன்றி முன்பள்ளிகளை ஒழுங்குபடுத்தி கட்டமைப்பாக செயற்படுத்திக்கொண்டிருக்கும் செயற்பாடுகளில் குழப்பம் விளைவிப்பதுமாகும்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வடக்கு மாகாண சபை இவ்வாசிரியர்களுக்கு 6000 ரூபாய் சம்பளம் வழங்கி வருகின்றது. ஆனால் தென்னிலங்கை மாகாணங்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னரே கொழும்பு அரசாங்கம் 6000 ரூபாய் கொடுக்கத் தொடங்கியுள்ளது என்பதை குறிப்பிட வேண்டும். மேலும் அடிப்படைத் தகுதி பெற்ற ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கும் அதேவேளை ஏனையவர்களை அடிப்படைத் தகுதிகளைப் பெற ஊக்குவித்தும் வருகின்றது. ஆனால் தகுதி பெறாத ஆசிரியர்கட்கு கொழும்பு 6000 ரூபாய் சம்பளம் கொடுக்க முன்வரும்போது தமது அடிப்படைத் தகுதிகளை வளர்க்க எவரும் முன்வர மாட்டார்கள். இதனால்

“1. முன்பள்ளித் துறை வடக்கு மாகாணத்தில் வீழ்ச்சியடையச் செய்யும். 2. தகுதிவாய்ந்த ஆசிரியர்கட்கும் தகுதி பெறாத ஆசிரியர்கட்கும் ஒரே சம்பளம் என்கிற நிலையைத் தோற்றுவித்து முரண்பாடுகளை வலுப்படுத்துவதாக அமையும்.

எனவே சட்டவிரோதமான இக்கொள்கை நிறுத்தப்பட வேண்டும். அல்லது வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கு இக்கொள்கை செயற்படுத்தக் கூடாது.

அடுத்து கல்வி மறுசீரமைப்பு விடயத்தை எடுத்துக்கொண்டால் கல்வி மாகாணத்திற்குப் பகிரப்பட்ட விடயம். எனவே மறுசீரமைப்பு தொடர்பாக மத்திய அரசு வேண்டுமானால் சில வழிகாட்டல்களை வழங்கலாமே தவிர தமது விளக்கத்திற்கும் விருப்பத்திற்கும் ஏற்ப ஓர் திட்டத்தை உருவாக்கி அனைத்து மாகாணத்தின் மீது திணிக்க முடியாது. மாகாணத்திற்கு மாகாண தனித்துவமான பிரச்சனைகள் தேவைகள் உண்டு. அனைத்தும் பொதுமைப்படுத்த முடியாது. கல்வி மாகாணங்களுக்குப் பகிரப்பட்டதே கல்வியிலும் இனவாதம் தலைதூக்கியதால்தான். எனவே,

மறுசீரமைப்புக்கான வழிகாட்டல்களை வேண்டுமானால் மாகாணங்களுக்கு வழங்கலாம். அவற்றை பயன்படுத்துவதை மாகாணங்கள் தீர்மானிக்கும்.
பகிரப்பட்ட அதிகாரங்கள் தொடர்பில் தேசிய கொள்கை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்படின் குறைந்தபட்சம் ஒன்பது மாகாண கல்வி அமைச்சர்களின் அல்லது அவர்களது பிரதிநிதிகளின் ஆலோசனைகள் உள்வாங்கப்பட்டு அவர்களது ஒப்புதலுடனேயே நடைமுறைப்படுத்தப்படலாம்.
பெரும்பான்மை மாகாணம் ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாத மாகாணங்கள் மீது அதனைத் திணிக்க முடியாது.
தேர்தலை நடத்தாமல் மக்கள் பிரதிநிதியின் ஆட்சியை இல்லாமல் செய்து ஜனநாயகம் என்ற பெயரால் மாகாண அதிகாரங்களை மத்தியின் கையிலெடுக்க முடியாது. எனவே தேர்தலை நடத்தி மாகாண அரசுகள் அமையும் வரை இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது.

இறுதியாக மாகாண மற்றும் தேசிய பாடசாலைகளுக்கு வரையறுக்கப்பட்ட மற்றும் திறந்த போட்டிப் பரீட்சையூடாக பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு அல்லது விண்ணப்பம் கோரல் தொடர்பாக, பட்டதாரி ஆசிரியர்களை உள்ளீர்க்கும் அதிகாரம் மாகாண சபைகளுக்குரியதாகும். இதுவே தொடர்ச்சியான செயற்பாடாகவும் இருந்து வருகின்றது. வடக்கு மாகாண கல்வி நியதிச்சட்டம் 2015 இன் பிரகாரம் “கல்வியியற் கல்லூரிகள் பல்கலைக்கழகங்களில் பட்டதாரி மற்றும் டிப்ளோமா பெற்றவர்களில் கற்பித்தலுக்குத் தகுதியானவர்களை உள்ளீர்ப்பதற்கான விதிகளை உருவாக்கும் பொறுப்பு மாகாண கல்வி அமைச்சருக்குரியது. மாகாண கல்வி அமைச்சர் இல்லாதவிடத்து அதாவது மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஆட்சி இல்லாதவிடத்து மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவே பட்டதாரி ஆசிரியர்களை உள்ளீர்க்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். எனவே மாகாண அதிகாரங்களைக் கணக்கிலெடுக்காமல் மாகாண பாடசாலைகளுக்கான ஆசிரியர்களை உள்ளீர்க்கும் செயற்பாடு சர்வாதிகாரத்தனமானது.

எனவே மாகாண சபைத் தேர்தலை நடத்தி அங்கு மக்களாட்சிகள் உருவாக்கப்படும் வரை இச்சட்டவிரோத செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும். ஆசிரியர் பற்றாக்குறையை நீக்கி மாணவர் கல்வியைப் பாதிக்காது செயற்பட பொறுத்திருக்க முடியாது. எனவே பட்டதாரி ஆசிரியர்களை உள்வாங்கும் விடயத்தில் மாகாண பாடசாலைகளுக்கான உள்ளீர்ப்பு அதிகாரத்தை மாகாணங்களிடமே விட்டு விட வேண்டும். அதற்குரிய நிதியை வழங்க வேண்டும். தேசியப் பாடசாலைகளுக்கு மத்திய அரசு நியமிக்கலாம்.”

கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன்
முன்னாள் கல்வி அமைச்சர்
வடக்கு மாகாணம்

Share this article

More News